TNPSC Thervupettagam

கவிதைதான் குற்றம் - டாரின் டட்டூர் என்ற பாலஸ்தீன கவிதைக்குரல்!

October 12 , 2024 44 days 74 0

கவிதைதான் குற்றம் - டாரின் டட்டூர் என்ற பாலஸ்தீன கவிதைக்குரல்!

  • நேற்றுடன் பத்தாண்டு முடிந்துவிட்டது. இதே நாள்,  2015-ல், நள்ளிரவு கடந்து, 3.30 மணியளவில், எதிரிகள் சற்றும் எதிர்பார்க்காததொரு பொழுதில் பரம இரகசியமாக அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து கொரில்லாத் தாக்குதல் நிகழ்த்தப் போவதுபோல–இஸ்ரேலிய ஜியோனிஸ்ட் ஆக்கிரமிப்பு அதிகாரிகளது (Israeli Zionist occupation authorities) கொடுங்கரமாகச் செயல்பட்டுவரும் எல்லைக் காவல் (Border Guards) அணியினர் புடைசூழ, நாஸரேத் காவல்துறையின் ரோந்து வாகனங்கள், அந்நகரின் அருகிலுள்ள அல் ரய்னே (Al-Reineh) என்றதொரு சிறு கிராமத்தை முற்றுகையிட்டன. அமைதி போர்த்து நின்ற ஒரு வீட்டைச் சுற்றி வளைத்தன அப்படைகள். இன்னும் விடியாத இரவையும்,உறங்கி விழிக்காத அவ்வீட்டினர் அனைவரையும் அதிர்ந்துபோகச் செய்து வீட்டின் கதவுகளைத் தகர்த்து அதிரடியாக நுழைந்தது எதேச்சதிகாரம்.

நுழைந்த அதிகாரம்

  • வழக்கமான மரபுகள் அத்தனையையும் கனத்த பூட்ஸ் கால்களால் மிதித்து நசுக்கியவாறே, தயக்கம் ஏதுமின்றி அவ்வீட்டில் பெண்கள் உறங்கும் பகுதிக்குள்ளும் புகுந்து துழாவத் தொடங்கியது. அதிகாரச் சீருடை அணிந்திருந்த அதிகாரிகள் எவரது சீருடையிலும் அடையாளங் காட்டக்கூடிய ‘பெயர் பட்டி’ (Name Badge) காணப்படவில்லை. அந்த அகாலத்தில், இவ்வளவு களேபரங்களை, அவ்வீட்டில் நிகழ்த்திக் கொண்டிருந்த அதிகாரப் பிரதிநிதிகளிடம் அவ்வீட்டைச் சோதனையிடவோ, குறிப்பிட்ட யாரையாவது கைது செய்யவோ எந்த ஆவணமும் கிடையாது. யாரும் கேட்கவும் முடியாது. ஏனென்றால், அந்த வீட்டார்  பாலஸ்தீன அரேபியர்கள்.
  • எக்குற்றமும் செய்தறியாத அவ்வீட்டார் எவருக்கும்,என்ன நடக்கிறது? இரவு கழிவதற்குள் இப்படித்தடாலடியாக நுழைந்து வீட்டிற்குள் உறங்குபவர்களைப் பதைபதைக்க வைக்கிறார்களே ஏன்? யாரைத்தேடி வந்தது அந்த அதிகாரப்படை? யாராவது அஞ்சத்தக்க தீவிரவாதியைத் தேடித் தவறான முகவரிக்கு வந்து விட்டார்களா  என்ன? என்ற சந்தேகங்களும் வினாக்களும் வார்த்தைகளாக வெளியில் வர இயலாமல் முடங்கி முட்டி நிற்பது அவர்களது முகங்களில் தெரிய,கலவரப்பட்டு உறைந்து நிற்கிறார்கள் வீட்டினர்.
  • ஒருவழியாகப் ‘பேர்’ பெற்றிருக்கும் எல்லைப் படையின் அதிகாரி ஒருவரின் கனத்த குரல் உடைக்கிறது அச்சூழலில் உறைந்து கிடந்த அமைதியை. அவர் உச்சரித்த பெயரைக்கேட்டு உடைந்து நொறுங்கினர் வீட்டாரனைவரும். அதிகாரி உரக்கச் சொன்ன பெயர்- யாருமே எதிர்பார்க்காத - அக்கம் பக்கத்தில் ‘அமைதியான பெண்’ என அறியப்பட்டிருந்த - (அப்போது) 33 வயதுள்ள, பொறியியல் பட்டதாரியான  அந்த வீட்டுப்பெண் ஒருவரது பெயர். அந்தப்பெண், டாரின் டட்டூர் (Dareen Tatour).(அந்த அரேபிய மொழிப்பெயர் டாரின் ரற்றூர் என்றும் மொழிபெயர்ப்பாகியுள்ளது.)
  • வீட்டினுள்ளே, பெண்கள் உறங்கும் பகுதியில், ஏதுமறியாது - அப்போது நடப்பது எதனையும் எள்ளளவும் எதிர்பாராமல் - உறங்கிக் கொண்டிருந்த அந்தப்பெண்ணை அதிர்ச்சியுற எழுப்பி இழுத்து வருகிறார்கள் படையினர். அவரென்ன தீவிரவாதியா? ஏதாவது வன்முறையில் ஈடுபட்டவரா? இல்லையே. அந்தச் சமயம்வரை அவர் எந்தக் கிளர்ச்சிகளிலும் போராட்டங்களிலும் கூடத் தனிப்பட்ட முறையில் கலந்துபங்கேற்றதில்லை. பள்ளிக்கல்வி முடித்தவுடன் ஏற்பட்ட தன்னார்வத்தால் புகைப்படக்கலைப் (Photography) பயிற்சி பெற்றிருந்த ஒரு புகைப்படக்காரர் என்ற முறையில், அவர் வாழ்கின்ற நாஸரேத் மாவட்டப் பகுதிகளில் நிகழ்ந்த ஓரிரு போராட்ட நிகழ்வுகளில் புகைப்படம் எடுத்திருக்கிறார், அவ்வளவுதான். அதற்காகவா இத்தனையும்? ஒன்றும் புரியவில்லை அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும்.
  • கலையாத உறக்கத்தோடு காவல்படையால் இழுத்து வரப்பட்ட அந்த வீட்டின் அமைதிப்பெண் டாரின் டட்டூரைத் தீவிரவாதியாகவே கருதிக் கைவிலங்கிட்டுக் காவல் வாகனத்திற்குள் வலுக்கட்டாயமாத் தள்ளி ஏற்றிக்கொண்டு – வீட்டிற்குள் அவரது படுக்கை அறையில் கைப்பற்றப்பட்ட லேப்டாப், ஸ்மார்ட்போன் முதலியவற்றுடன் - அப்பெண்ணை எங்கு, எதற்காகக் கொண்டுசெல்கிறோம் என்று (அடிப்படையாக,முறைப்படி வழங்கப்படவேண்டிய)எந்தத் தகவலுங்கூட வீட்டிலுள்ளவர்களுக்குத் தராமல், உறங்கும் ஊர் விழித்துக் கொள்ளும் முன்பே அங்கிருந்து விரைந்தன முற்றுகைப்படை வாகனங்கள். அந்த வாகனங்கள் அலைக்கழிப்பதுபோல அங்கும் இங்கும் சுற்றி நாஸரேத் காவல்நிலையத்தின் பின் ஒரு ஒதுக்குப்புறமான வாகன நிறுத்துமிடத்தில் பல மணி நேரமாக நிறுத்திவைக்கப்பட்டு அப்பெண்ணை இறங்க வைக்காமல் இடையூறு செய்தும் அவரைத் ‘தீவிரவாதி’ என்று குறிப்பிட்டுக் கிண்டலுங் கேலியும் செய்து வதைப்புக்குள்ளாக்கினர்.

சரி, யார் இந்த டாரின் டட்டூர்?

  • மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால், அப்போது (2015-ல்) அவரது ஊர், அல்லது அதிகம்போனால் அவ்வூருக்கருகிலிருந்த நாஸரேத் நகருக்கு அப்பால் அதிகம் அறியப்படாதிருந்த ஒரு பாலஸ்தீனப் பெண் கவிஞர், புகைப்படக்காரர். அவ்வளவுதான்.
  • ஆனால், அன்று நடைபெற்ற அதிரடிக் கைது நிகழ்வு; அதனால் அவருக்கு விளைந்த சிறைவாசக்கொடுமைகள்; சொந்த ஊருக்கப்பால், கடும் நிபந்தனைகளுடன் இருக்க விதிக்கப்பட்ட  தனிமை வீட்டுச்சிறை; தொடரப்பட்ட நீதிமன்ற வழக்குகள்; வழக்குகளுக்கு மூலகாரணங்களாகச் சேர்க்கப்பட்ட (மிக அசாதாரண) விசயங்கள்; ஒருதலைப்பட்ட நாஸரேத் மாவட்ட நீதிமன்ற விசாரணைகள்; விசாரணைகளின் போக்கு; நீதிமன்றத்தில் நடந்த பிற நிகழ்வுகள்; விசாரணை முடிவில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை; மேல்முறையீடு; அதன்மீதான தீர்ப்பு  முதலியன யாவும்அவர்மீது அதீத ஊடக வெளிச்சம் பாய்ச்சப்பட உதவின.
  • பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள், கருத்துரிமைக்கான உலகளாவிய செயலமைப்புகள், சமூக ஊடகங்கள், ஆர்வத்தோடு புதிதாகச் சேரந்த ஆதரவாளர்கள் எனப் பலவகைக் குழுக்கள், இயக்கங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் கவனத்தையும், ஈடுபாட்டையும் நேரடிச் செயல்பாடுகளையும் ஈர்த்தன. அவற்றின் கூட்டு விளைவாகத் தற்போது - டாரின் டட்டூர் உலகறிந்த பாலஸ்தீனக் கவிஞராக, பெண்ணுரிமைப் போராளியாக, எதேச்சாதிகார எதிர்ப்பாளராக, கவிதையைப் போராட்டக் கருவியாக வடிவமைத்துக்கொண்ட புதுமை கண்டவராக, துணிச்சல்மிக்க பாலஸ்தீனப் பெண் எனும் சர்வதேச அடையாளமாக அவரை மாற்றியிருக்கிறது.
  • 2015 வரை அமைதியான சிறு கிராமத்து பெண் புகைப்படக்காரர் டாரின் டட்டூர், சில மாதங்களுக்கு முன் (மார்ச் 7,2024) ஒரு பேட்டியில் (International Association of Democratic Lawyers (IADL) அமைப்பின் March 2024 special issue of the International Review of Contemporary Law,), ‘’எனது கவிதைகளில் பாலஸ்தீனம் என்பது நானே; நானே பாலஸ்தீனம்  ( (Palestine in my poems is me and I am Palestine)’’ என்று நிமிர்ந்து முழங்கும் நிலையடைந்துள்ளார்.
  • ‘நாடகன்று நிற்கும் என் சாளரம் வழியே பாடுகிறேன்’ (I Sing From the Window of Exile) என்ற கவிதைத் தொகுதிக்காக, 2023 ஆண்டிற்கான பாலஸ்தீன புத்தக விருது (The Palestine Book Awards 2023 – Creative AwardWinner); கருத்துச் சுதந்திரத்திற்காக, (Freedom of Expression) நார்வே - ஓஸ்லோ விருது (2020); அதே விசயத்திற்காக (Freedom of Expression) ஆக்ஸ்பாம் நோவிப் /பென் (OXFAM Novib/PEN) அமைப்புகள் வழங்கும் சர்வதேச விருது (2019); அநீதிக்கெதிராகத் தீரமுடன் கவிதைகளால் களமாடியதற்காக டேனிஷ் நாட்டுப் பரிசு (Danish Carl Scharenberg PrizeFor standing against injustice through herpoetry- 2017); புகழ்பெற்ற ஹிப்ரூ மொழி இணைய இதழான ‘மாயன்’ (Maayan) நிறுவியிருக்கும் ‘போரட்டங்களில் புதுமை’க்கான பரிசு (Prize for creativity in struggle-2016) என வரிசையாக டாரின் டட்டூருக்கான சர்வதேச அங்கீகாரங்கள், விருதுகள்,பரிசுகள் குவிந்துவருகின்றன.

எதற்காக நடந்ததாம் மறக்க இயலாத அந்த 2015 அக் 11 தடாலடி?

  • அந்தநாள் விடியுமுன் நடந்தேறிய அசாதாரண அதிரடி நிகழ்வுக்கான காரணங்கள் பல வாரங்கள் கழிந்தே - 2015 நவம்பர் 2-ல், நீதிமன்ற வழக்குப் பதியப்பட்டுத்தான் வெளியுலகிற்குத் தெரியவந்தது. அதுவரை அந்நாள் - அக் 11 - நிகழ்வுகளின் மேல் மர்மம்தான் அடர்ந்து கிடந்தது.
  • வாங்க... தாமதமாக உலகிற்குத் தெரியவந்த அந்தக் காரணங்களைக் காணலாம்.

முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட காரணம் டாரின் தனது முகநூல் பக்கத்தில் இட்டதொரு பதிவு. அதன் பின்புலம் இது:

  • நாஸரேத்தைச் சேர்ந்த, மூன்று குழந்தைகளுக்குத் தாயான, உயிரியல் துறைப் பட்ட மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்த  பாலஸ்தீனியப் பெண் இஸ்ரா அபெத் (Israa Abed). அவர், அக்டோபர் 9, 2013-ல் அபுலா (Afula) என்ற ஊரின் பேருந்து நிலையத்தில், தனது ஊருக்குத் திரும்பக் காத்திருந்தபோது கையில் ஒரு சிறு கத்தி வைத்திருப்பதைக் கண்ட இஸ்ரேலியப் படைவீர்ர் ஒருவர், காரணமில்லாமல் அப்பெண்மீது சந்தேகப்பட்டு எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், துப்பாக்கியால்  சுட்டார். காரணமேதும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த  பேருந்து நிலையத்தில் இஸ்ரா அபெத் இரத்தம் சொட்டத் தரையில் விழுந்து கிடக்கும் படங்களும் வீடியோக்களும் பல ஊடகங்களில் வெளியானதுதான். அப்படித் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கீழேகிடந்த அந்தப் பாலஸ்தீனப் பெண் இஸ்ரா அபெத்தின் படத்தை இணைத்து, ஜூலை 2014-ல்,டாரின் அவரது முகநூல் பக்கத்தில், ‘நான்தான் அடுத்த உயிர்த் தியாகி’ (“I will be the next martyr”) என்ற பொருள்பட, அராபிய மொழியில் பதிவிட்ட ஸ்டேட்டஸ் (status) வாசகம் ஒரு காரணம்.
  • இரண்டாவதாகக் குறிக்கப்பட்டாலும்,முக்கியக் காரணம் என முன்வைக்கப்பட்டது யூடியூப் (YouTube) தளத்தில், (அராபிய மொழியில்“Qawem ya sha’abi, qawemhum” என்ற தலைப்பிட்டு) ‘எதிர்த்து நில்லுங்கள் என் மக்களே, அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’ (“Resist My People, Resist Them”) என்று டாரின் வெளியிட்டதொரு கவிதை.
  • எத்தனையோ வகை ( கடத்தல் குற்றம், கொலைக் குற்றம், திருட்டுக்குற்றம் என்பனபோன்ற எண்ணற்ற வகைக்) குற்றங்கள் பற்றிய வழக்குகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கவிதைதான் டாரின் டட்டூரின் குற்றமானது (Committing the crime of poetry), விந்தையானது!
  • குற்றங்களெனக்  குறிப்பிடப்பட்ட முகநூல் ஸ்டேட்டஸ் பதிவாலும், முகநூல் மற்றும் யூடியூப் சமூக ஊடகங்களில் வெளியிட்ட (“Resist My People, Resist Them”-‘ எதிர்த்து நில்லுங்கள் என் மக்களே, அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’ - கவிதை மூலமாகவும், டாரின் டட்டூர் நாட்டில் வன்முறையைத் தூண்டிவிடுகிறார் (Inciting Violence) என்று அறிவிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு புனையப்பட்டது.
  • யூட்யூப்பில் வெளியிடப்பட்ட வீடியோவில்- பின்புலத்தில், குற்றத்திற்கு முதன்மைக் காரணமான (அரபு மொழிக்) கவிதையைத் தன் குரலில் டாரின் டட்டூர் வாசிக்க, பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை (West Bank) பகுதியில் சில்வாட் (Silwad) என்ற கிராமத்தில் பாலஸ்தீனக் கிளர்ச்சியாளர்களுக்கும் மேற்குக் கரைப்பகுதியை நிரந்தரமாக ஆக்கிரமித்துள்ள (இஸ்ரேலியப்) படையினருக்கும்   -அவ்வப்போது வழக்கமாக-நடைபெறும் மோதல்களில் ஒன்றைக் காணொளிக் காட்சிகளாக விரிக்கிறது அந்த வீடியோ, நடுநிலையாகவும், உண்மையாகவும் பார்த்தால் டாரின் டட்டூரின் அந்த (“Resist My People, Resist Them” - ‘எதிர்த்து நில்லுங்கள் என் மக்களே, அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’) கவிதையில் எந்த வன்முறைத் தூண்டுதலும் இல்லை. மிகக் கடுமையானவை என்று சனநாயகக் கருத்துடையவர்களால் விமர்சிக்கப்படும்  இஸ்ரேலிய அரசுச்சட்டங்களின்படி கூட– நேரடியாகக் குற்றமாகக் கருதப்படஉரிய கருத்தோ வாசகமோ அக்கவிதையில் இல்லவே இல்லை என்பதே வெளி்ப்படை.
  • ஆனால், அக்கவிதை பாலஸ்தீன இளைஞர்கள் ஆக்கிரமிப்புப் படையினருடன் மோதல்மேற்கொள்ளும் வீடியோ காட்சிகளின் பின்புலத்தில் கவிஞரால் வாசிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில்கொண்டு, அக்கவிதை தீவிரவாதத்தை முன்நிறுத்துகிறது;தீவிரவாத அமைப்பினை ஆதரிக்கிறது, வன்முறையைத் தூண்டுகிறது. ஆதலால்,குற்றத்திற்கு முதன்மைக் காரணமான கவிதையை எழுதி, வாசித்து, வீடியோவாக வெளியிட்ட கவிஞர் டாரின் டட்டூர் ‘பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு (the security of the region) கடும் அச்சுறுத்தலாக’ உள்ளார் என்று வரிந்து கட்டிக்கொண்டு வழக்குப் புனைந்தனர் காவல்துறையும் அரசின் வழக்குரைஞர்களும் இணைந்து.
  • வழக்கமாக, இதுபோன்ற சமூக ஊடகப்பதிவுகள் தொடர்பான வழக்குகளில் யாரேனும் கைது செய்யப்பட்டால்,வழக்கு நடைபெறும் காலத்தில், வழக்கில் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளிக்கும்வரை,வீட்டுக்காவல் (House arrest with restrictions on outside movements) அனுமதிக்கப்படும். ஆனால், டாரின் டட்டூருக்கு அவ்வாறு வீட்டுக்காவல் வழங்குவதை அரசுத்தரப்பு / காவல்துறை கடுமையாக எதிர்த்து நின்று இழுத்தடித்ததால்,வீட்டிலிருந்து இழுத்துவரப்பட்ட அக்.11, 2015 முதல், கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை கடுமையான சூழல்கள் நிலவுகிற, அப்பகுதியிலுள்ள  (Jalameh, Sharon and Damoun) மூன்று வெவ்வேறு சிறைச்சாலைகளில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாற்றி, மாற்றி அடைக்கப்பட்டிருக்கும் நிலை ஏற்பட்டது. வீட்டுக்காவல் கேட்டு மனுச்செய்யவும், அம்மனுக்கள் மீது நடைபெறும் விசாரணைகளுக்கு ஒவ்வொருமுறையும் நீதிமன்றம் வரும்போது வேறு வேறு சிறைகளிலிருந்து அல்லற்பட்டுவரும் நிலை அவருக்கு ஏற்படுத்தப்பட்டது.
  • ஒருவழியாக ஜனவரி 14, 2016-ல் அவருக்கு நீதிமன்றத்தால்- வழக்கின் தீர்ப்புவரை- வீட்டுக்காவல் அனுமதிக்கப்பட்டது. அப்போதும் அரசுத்தரப்பு முழுமூச்சுடன் குறுக்கிட்டு, டாரின் டட்டூரை அவரது ஊரில், சொந்தவீட்டில் வீட்டுக்காவலில் இருக்க அனுமதிக்கக்கூடாது. அங்கிருந்து வெகுதொலைவில், தனிமையில், செல்போன், இணைய வசதி ஏதும் இல்லாமல் ஒரு இடத்தில், காவலர் கண்காணிப்புடன், அதையும் மீறி அவர் எங்காவது சென்றால்கூட அதைக்கண்டறிய உதவ அவரது இடது காலில் ஒரு எலெக்ட்ரானிக்கருவி ஒன்றை (An electronic device attached to her ankle supervising her movements) எப்போதும் அகற்றாமல் அணிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகளை விதிக்குமாறு காவல்துறையும் அரசு வழக்குரைஞரும் வற்புறுத்தியதால், நாஸரேத் நீதிமன்றம் அந்த நிபந்தனைகளை எல்லாம் விதித்தது. உடனடியாக வேறுவழியின்றி, மாற்றி மாற்றி வேறு வேறு சிறைகளில் உழலும் அவலத்திலிருந்து தற்காலிக விடுதலையாவது இருக்கட்டும் எனத் தன்மீது விதிக்கப்பட்ட  நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார் டாரின்.
  • சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் டெல் அவிவ்(Tel Aviv) நகருக்கருகே, கிர்யட் ஓனோ (Kiryat Ono) என்றபுறநகர்ப் பகுதியொன்றில் இன்டர்நெட் வசதியற்ற ஒரு சிறிய குடியிருப்பைத் தனது தமையன் வாடகைக்கு ஏற்பாடு செய்துதர முடிந்ததால் அங்கு மாற்றப்பட்டார் டாரின். வீட்டின் வெளியில் எப்பொழுதும் தப்பாத காவல் கண்காணிப்பு உறுதி; அவரது இடது கணுக்காலில் அகற்ற முடியாதவாறு பொருத்தப்பட்ட வேவுபார்க்கும் எலெக்ட்ரானிக் கருவி. சொந்த ஊரை, சொந்த வீட்டை, பழகிய இடங்களை விட்டு – நாடு கடத்தப்பட்டது போன்ற அந்நியமானதொரு தொலைவில் - வசதிகளற்ற ஒரு சிறிய வீட்டைவிட்டு எங்கும் வெளியில் செல்ல முடியாத கண்காணிப்பு; செல்போன், இணையவழியாகக்கூட வெளியுலகத் தொடர்பேதுங்கொள்ள வழியுமற்ற சூழல் – அதற்குத் தனிமைச்சிறைவாசமே இருந்திருக்கலாம் என்ற நிலை.
  • அந்நிலையை மாற்ற விரும்பித் தனது சொந்த ஊரில் வீட்டுச்சிறையிருக்க அனுமதி வேண்டிப் பலமுறை நீதிமன்றத்தில் மனுச்செய்தபோதும் ஒவ்வொரு முறையும் அரசுத்தரப்பின் வலுவான எதிர்ப்பால் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. ஆறு மாதங்களான பின்னர் வீட்டுச்சிறைவாசத்தைச் சொந்த ஊருக்கு டாரின் மாற்றித் தொடர நீதிமன்றம் கனிந்தது. இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பின்- ஏறத்தாழ ஏழுமாதங்களுக்குப் பிறகு- 2016, ஏப்ரல் 13ல்தான் நாஸரேத் நீதிமன்றத்தில் வழக்கின் முதல் நாள் கேட்பு (hearing)- ‘வாய்தா- தொடங்கியது. இதற்கிடையில் அவரை உடனே விடுதலை செய்யவேண்டும் எனப் பென் (PEN International), ஆம்னெஸ்டி (Amnesty International) போன்ற பல அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் இயக்கங்களைத் தொடங்கின.பல சமூக ஊடகங்களிலும் டாரீனை விடுதலைசெய்யக் கோரிக்கைகள் இடைவிடாது இடம்பெற்றன.
  • சேர்த்துப் பார்க்கும்போது, 2015 முதல் டாரின் டட்டூர் காவல் பிடியில்தான் இருக்கிறார். பலமுறை அவருக்குப் பிணை (bail) மறுக்கப்பட்டது. ஜனவரி 2016 முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இடைப்பட்ட காலத்தில் அவரது கவிதையோ வேறு எந்தப்படைப்போ வெளியிடப்படக்கூடாதெனும் தடை அவர்மீது விதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு செல்போன், இணையத் தொடர்புகளும் மறுக்கப்பட்டிருந்தது. குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு சுமார் இரண்டரை ஆண்டுகள் கழிந்து, மே 3, 2018ல், டாரின் டட்டூர் மீது சுமத்தப்பட்ட  கவிதையின் மூலம் வன்முறையைத் தூண்டுதல்  (incitement to violence), தீவிரவாத அமைப்புக்கு ஆதரவளித்தல் (‘supporting a terrorist organization’) ஆகிய குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு ஐந்து மாதச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ( நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கு விவரங்கள் தனியே விரிவாக எழுதத் தக்கவை.)
  • நீதிமன்றத்தால் 2018ல் இறுதித் தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னரே, ஒரு கவிதைக்காகவும், இரு முகநூல் பதிவுகளுக்காகவும் 2015 அக்டோபர் முதல் சிறைவாசம், வீட்டுச் சிறைவாசம் என்பதெல்லாம் சேர்த்துத் தொடர்ந்து சிறைக்காவலில்தான் அவர் இருந்திருக்கிறார். மேல் முறையீட்டுக்குப்பின் செப்டம்பர் 28, 2018ல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
  • தான் சிறைப்பட்டிருந்த வலிகளை விடக் கூடுதலான வலியும் தண்டனையும் அதிரடிக் கைது நடந்த அக்டோபர் 2015 முதல் இறுதியாக விடுதலையான செப்டம்பர் 2018 வரை, நீதிமன்ற நிபந்தனையால், அவரது கவிதை எதுவும் வெளியிடப்படாமல், வெளியுலகம் காணாமல் தன்னோடு சேர்ந்து சிறையிருக்க நேர்ந்ததுதான் என்கிறார் இப்பெண்கவிஞர், ஒரு பேட்டியில்.
  • ஆனாலும் அவர் மகிழ்ந்து புன்னகைத்திருக்க இனியதொரு காரணம் நிறைந்து நிற்கிறது. 2015 முதல் 2018 வரை அவரைச் சிறைப்படுத்திய அதிகாரம், அவர் எந்தக் கவிதைக்காகச் சிறைப்படுத்தப்பட்டாரோ அந்தக் கவிதையை - (“Resist My People, Resist Them” - ‘எதிர்த்து நில்லுங்கள் என் மக்களே, அவர்களை எதிர்த்து நில்லுங்கள்’) எதுவும் செய்யமுடியவில்லை. பதிவிடப்பட்ட நாள் முதல் அக்கவிதை இணையத்தில் வாகாக இருப்புக்கொண்டுள்ளது. லட்சக்கணக்கில் வாசகர்களால் அக்கவிதை காணப்பட்டு, வாசிக்கப்பட்டு,இணையவளத் தாராளத்தால் பதிவிறக்கமும் செய்யப்பட்டுப் பத்திரமாகியுள்ளது.

எழுத்தின் வலிமையை எவர் இழுத்துக் குறைக்க முடியும்?

  • ஒரு கவிதைக்காக டாரின் டட்டூர் சிறைப்படுத்தப்பட்டார். ஆனால் ஒருநூறு கவிதைகளுக்குமேல் சிறைப்பட்டிருந்த காலத்தில் எழுதிக் கையிற் கொண்டு வெளிவந்துள்ளார் அவர்!அவர் கவிதைகள் வெளியிடப்படத்தானே சிறைக்காலத்தில் தடையிருந்தது?
  • சிறைவிடுதலை பெற்ற பின், சிறையிலும், வெளிவந்த பின்னரும் எழுதிய கவிதைகள் பல தொகுப்புகளாக இதுவரை வந்துள்ளன. அவற்றுள் சில The Last Invasion, Nazareth: El Wattan Books, 2010; My Threatening Poem, Arabic, Tunis: Dyar Publishing and Distribution House, 2018; Threatening Poem – Memoir of a Poet in Occupation Prisons, English Version. Scotland: Drunk Muse Press, 2020; I Sing From the Window of Exile – English and Arabic. Scotland: Drunk Muse Press, 2023.
  • இன்னும் வரும். எவரடைக்க முடியும் கவிதையூற்றை?

நன்றி: தினமணி (12 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்