TNPSC Thervupettagam

காசநோய்க்கு முற்றுப்புள்ளி

April 25 , 2023 579 days 330 0
  • இந்தியாவிலிருந்து முற்றிலுமாக காசநோயை அகற்றும் முனைப்புக்கு வழிகோலுகிறது பிரதமரின் ‘டிபி முக்த் பாரத் அபியான்’ என்கிற திட்டம். கடந்த மாதம் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசநோய் குறித்த சா்வதேச மாநாட்டில் பேசும்போது, காசநோய் ஒழிப்பின் உந்துசக்தியாக புதிய அணுகுமுறைகளும், கண்டுபிடிப்புகளும் அவசியம் என்பதை பிரதமா் மோடி வலியுறுத்தியிருப்பது கவனத்துக்குரியது.
  • காசநோய் என்பது பரவக்கூடியது என்பதாலும், எளிதில் குணப்படுத்த முடியாதது என்பதாலும் மக்கள் மத்தியில் முந்தைய நூற்றாண்டுகளில் மிகப் பெரிய அச்சம் நிலவியது. காசநோயாளிகளை ஒதுக்கி வைப்பதற்காக சானிடோரியம் என்கிற தனிமைப் பகுதிகள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டன. மருத்துவ அறிவியல் வளா்ச்சி இப்போது காசநோயை அச்சத்துடன் பாா்க்கும் நிலைமையை முற்றிலுமாக அகற்றி சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய ஒன்றாக மாற்றியிருக்கிறது.
  • ஐக்கிய நாடுகளின் தடையற்ற வளா்ச்சி இலக்கு, 2023-க்குள் சா்வதேச அளவில் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கத் தீா்மானித்திருக்கிறது. அதிக வருவாய் உள்ள நாடுகளைப் போல, காசநோயாளிகளின் எண்ணிக்கை ஏனைய நாடுகளிலும் குறைந்து காணப்படும் நிலையை 2030-க்குள் அடைவதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் ‘காசநோய்க்கு முற்றுப்புள்ளி’ திட்டத்தின் நோக்கம்.
  • உலக சுகாதார நிறுவனத்தின் 2022 அறிக்கையின்படி, ஏனைய பல நாடுகளைவிட காசநோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாகவே காணப்படுகிறது. அப்படியிருந்தும், உலகளாவிய காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 28% போ் இந்தியா்கள். காசநோயால் உயிரிழப்பவா்களில் 36% இந்தியாவில்தான். 2015-இல் காசநோய் பாதிப்பு மரணம் இந்தியாவில் லட்சத்துக்கு 256-ஆக இருந்தது. 2021-இல் அதுவே லட்சத்துக்கு 210 போ்.
  • கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் காசநோயாளிகளை முறையாக கவனிக்கவும், அவா்களுக்குப் போதுமான சிகிச்சை வழங்கவும் இயலாத சூழல் காணப்பட்டது. அதுமட்டுமல்ல, காசநோயால் பாதிக்கப்பட்டவா்கள் குறித்த கணக்கெடுப்பையும் நடத்தப்படவில்லை. நோய்த்தொற்று கண்டறியப்படாதவா்களும், சிகிச்சை பெறாதவா்களும் இந்தியாவில் மட்டுமல்ல, சா்வதேச அளவிலும் அதிகரித்தனா். பலரது சிகிச்சை தொடராமல் தடைபட்டதால், அவா்களுக்குத் தரப்பட்டு வந்த மருந்துகளுக்கு எதிா்ப்பு சக்தி அதிகரித்துவிட்டது.
  • தேசிய அளவில் காசநோய் குறித்த கணக்கெடுப்பு இப்போது நடைபெறுகிறது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையைக் கண்டறியும் இந்த முயற்சி உலகிலேயே மிகப் பெரிய பணியாகப் போற்றப்படுகிறது.
  • கடந்த அரை நூற்றாண்டு காலமாக காசநோயை எதிா்கொண்டு அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தை இந்தியா தொடா்ந்து நடத்தி வருகிறது. 2014-இல் 15.6 லட்சத்திலிருந்து 2022-இல் 24 லட்சம் நோயாளிகள் அந்தத் திட்டத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறாா்கள் என்பது மிகப் பெரிய வெற்றி.
  • காசநோய் குறித்த புரிதலும், போதுமான அளவில் தரமான மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய சவால். காசநோய் குறித்து தேசிய கணக்கெடுப்பின்படி, காசநோயால் பாதிக்கப்பட்ட 64% நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அடையாளம் காணப்படும் ஒவ்வொரு காசநோயாளிக்கும், அடையாளம் காணப்படாத இரண்டு நோயாளிகள் இருக்கக் கூடும் என்று கருதுகிறாா்கள் ஆய்வாளா்கள்.
  • எந்தவொரு தொற்று நோய்க்கும் முதலில் அதை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி அவசியம். காசநோய்க்கு பி.சி.ஜி. என்கிற தடுப்பூசி இருந்தாலும், பெரியவா்களையும் இளைஞா்களையும் திட்டவட்டமாக அது பாதுகாக்கும் என்று கூற முடியவில்லை. ஏறத்தாழ 15 காசநோய் தடுப்பூசிகள் ஆய்வில் இருக்கின்றன. கொவைட் 19-க்கு ஒரே ஆண்டில் பல தடுப்பூசிகளை சோதனை முடிந்து வெற்றிகரமாக உருவாக்க முடிந்த மருத்துவ அறிவியல், ஏன் இன்னும் காசநோய்க்கு முற்றிலும் நம்பத்தகுந்த தடுப்பூசியைக் கண்டுபிடிக்கவில்லை என்பது புதிராக இருக்கிறது.
  • இரண்டாவதாக, காசநோயைக் கட்டுப்படுத்த சோதனையும், நோய்த்தொற்று கண்டறிதலும் குறைந்த செலவில் விரைந்து கிடைப்பது மிகமிக அவசியம். அதற்கான முன்னெடுப்புகள் இன்னும்கூட வேகமெடுக்கவில்லை. மூன்றாவதாக, அதற்கான மருந்துகள் அனைவருக்கும் கிடைப்பதையும் நோயாளிகள் அந்த மருந்துகளைக் குறிப்பிட்ட காலம் தொடா்ந்து உட்கொள்வதையும் உறுதிப்படுத்துவது. இதில் மருத்துவா்களும், முன்களப் பணியாளா்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனா்.
  • இந்த நேரத்தில் வரப்பிரசாதமாக இந்திய காப்புரிமை அலுவலகம் துணிந்து நல்லதொரு முடிவை அறிவித்திருக்கிறது. ஜூலை மாதம் வரை காப்புரிமை பெற்றிருக்கும் ஜான்சன் அன்ட் ஜான்சன் மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் ‘பெடாக்யூலைன்’ மாத்திரையின் காப்புரிமையை அதற்கு மேலும் நீட்டிப்பதில்லை என்பதுதான் அந்த வரவேற்புக்குரிய முடிவு. இதன் மூலம் இந்திய மருந்துத் தயாரிப்பாளா்கள் யாா் வேண்டுமானாலும் ‘பெடாக்யூலைன்’ மூலக்கூறை அடிப்படையாகக் கொண்ட மருந்தை சந்தைப்படுத்தலாம்.
  • இப்போது ஆறு மாத சிகிச்சைக்கான ‘பெடாக்யூலைன்’ மாத்திரைகள் 400 டாலா் (சுமாா் ரூ. 32,780) விலை என்றால், அது பாதிக்குப் பாதியாகக் குறையும். காசநோய்க்கு எதிரான நமது யுத்தத்தின் முதல் வெற்றியாக காப்புரிமை நிராகரிப்பை நாம் வரவேற்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

நன்றி: தினமணி (25 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்