TNPSC Thervupettagam

காசமில்லா சுவாசம்

September 27 , 2023 471 days 288 0
  • உலகின் மக்கள்தொகையில் கால் பங்கு பேர் காச நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக 2022 உலக சுகாதார நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவிலிருந்து 2025-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக காச நோயை அகற்றுவது என்பது மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் இலக்கு. உலகளாவிய அளவில் ஐ.நா. சபை 2030-ஐ இலக்காக நிர்ணயித்திருக்கிறது.
  • சுகாதாரத் துறையின் 149-ஆவது நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை, காச நோய் ஒழிப்புத் திட்டத்தை தனியார் துணையை நாடாமல் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. காச நோய் ஒழிப்பு முயற்சியில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முழுமையான கண்காணிப்பும், முன்னேற்றம் குறித்த தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் நிலைக்குழு பரிந்துரைத்திருக்கிறது.
  • அரசின் காச நோய் கட்டுப்பாட்டு முயற்சிக்கான "நிக்ஷய் மித்ர' திட்டத்தின் மூலம் 58 சமூகப் பொருளாதார பாதிப்புகள் அகற்றப்படுகின்றன. அது மட்டுமே போதாது என்றும், பிரதமரின் "காச நோய் அகன்ற பாரதம்' திட்டம் மேலும் முனைப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கிறது நிலைக்குழு அறிக்கை.
  • "தனியார் அமைப்புகளுக்கு தங்களது பொறுப்புகளை வழங்குவதன் மூலம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அரசுத் துறையின் கவனம் குறைந்திருக்கிறது' என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் திரெüபதி முர்முவால் தொடங்கி வைக்கப்பட்ட "நிக்ஷய் மித்ர' திட்டத்தின் கீழ், தனி நபர்களாலோ, அமைப்புகளாலோ, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாலோ, நிறுவனங்களாலோ காச நோயாளிகள் தத்தெடுக்கப்பட்டு அவர்களது மருத்துவச் செலவும், நலனும் பேணப்பட வழிகோலப்பட்டது. அதன் விளைவாக அரசுத் துறைகள் தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க முற்படுகின்றன என்பதுதான் நிலைக்குழு முன்வைக்கும் குற்றச்சாட்டு.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் காச நோய்ப் பரவல் ஓரளவுக்கு கட்டுப்பட்டிருக்கிறது என்றாலும் கூட, அதன் தாக்கம் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் மீதும் காணப்படுகிறது. 15 முதல் 24, 25 முதல் 34 வயதுப் பிரிவினர் மத்தியில் சமீப காலமாக காச நோய் பாதிப்பு அதிகரித்து வருவது தெரியவந்திருக்கிறது. மக்கள்தொகையில் உழைக்கும் பிரிவினர் (18 முதல் 50 வயதினர்) ஆரோக்கியமாக இருப்பது அவசியம் என்பதால், இதை அசட்டையாக விட்டுவிடக் கூடாது என்கிறது அறிக்கை.
  • 2022 ஆய்வின்படி, இந்தியாவில் 44% மக்கள்தொகையினர் தேவையான ஊட்டச்சத்து இல்லாததால் குறைவான ஆரோக்கியத்துடன் காணப்படுகிறார்கள். அதனால்தானோ என்னவோ, ஆண்டுதோறும் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் காச நோயால் பாதிக்கப் படுகிறார்கள்.
  • 2022 செப்டம்பரில் "நிக்ஷய் மித்ர' என்கிற காச நோயாளிகளின் ஒப்புதலுடன் ஊட்டச்சத்து வழங்கும் இன்னொரு திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் காச நோய் மரணங்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசும் ஒரு திட்டத்தை அறிவித்தது. தமிழகத்தில் உள்ள காச நோயாளிகளில் 52% ஊட்டச்சத்து குறைவானவர்களாகவும், 25% கடுமையான ஊட்டச்சத்து குறைவானவர்களாகவும் காணப்பட்டனர். தமிழகத்திலேயே நிலைமை இப்படி என்றால், ஏனைய மாநிலங்களின் நிலைமை என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
  • 2018-இல் தொடங்கப்பட்ட "நிக்ஷய் போஷண் யோஜனா' என்கிற ஊட்டச்சத்து வழங்கும் திட்டம், காச நோயாளிகளுக்கு நேரடி மானியம் வழங்க உருவாக்கப்பட்டது. அதன்படி, நோயாளிகளின் சிகிச்சை காலத்தில் அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்குவதற்காக மாதம் ரூ.500 நேரடி மானியமாக வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாத மானியமான ரூ.500, போதுமான ஊட்டச்சத்து பெறுவதற்கு போதாது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • இந்திய காச நோய் அறிக்கை 2023-இன்படி, பதிவாகி இருக்கும் 24 லட்சம் காச நோயாளிகளில் 16 லட்சம் பேர் (66%) மட்டுமே "நிக்ஷய் போஷண் யோஜனா' திட்டத்தின் கீழ் ஒரு மாத மானியம் பெற்றிருக்கின்றனர். பலருக்கும் மானியம் வழங்கப்படவில்லை. அது மட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை என்பதிலிருந்து முறையான கண்காணிப்போ, கணக்கெடுப்போ இல்லை என்பது தெளிவாகிறது.
  • காச நோயின் மிக முக்கியமான காரணம், ஊட்டச்சத்து குறைவு என்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி காரணமாக காச நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துவிட்டது என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதனால், ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்படுவதன் மூலம் இந்தியாவில் 70% நோயாளிகள் குணமடைய ஏதுவாகும். அரசு புள்ளிவிவரத்தின்படி, 2020-இல் 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் காச நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
  • அரைகுறை மனதுடன் காச நோய் ஒழிப்புத் திட்டம் நடைபெறுவது ஆபத்தை விலைக்கு வாங்குவதாக அமையும். பாதிக்கப்பட்ட காச நோயாளி, தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஐந்து முதல் 15 பேருக்கு அந்த நோய்த்தொற்றை பரப்பக்கூடும். முழுமையாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் போனால், மற்றவர்களுக்கு நோய்த்தொற்றை வழங்குவதுடன், மருந்துக்குக் கட்டுப்படாத நோய்த் தீவிரத்தையும் எதிர்கொள்வார்கள். அதனால், நிலைக்குழுவின் பரிந்துரையை அரசு புறந்தள்ளக் கூடாது.

நன்றி: தினமணி (27 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்