- காசாவின் துயரம் முடிவுக்கு வரும் என்கிற நம்பிக்கையைத் தகர்க்கும் செய்திகள் மேற்கு ஆசியப் பிராந்தியத்திலிருந்து வந்தவண்ணம் இருக்கின்றன. அமெரிக்கா போன்ற வல்லரசுகள் இந்தப் பிரச்சினையில் காட்டும் இரட்டை நிலைப்பாட்டால் சிக்கல்கள் மேலும் மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
- இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்துவரும் நிலையில், 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல் - சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் - இஸ்ரேலுக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்டது.
- காசா மீதான இஸ்ரேலின் இரக்கமற்ற தாக்குதலில், இதுவரை 31,272 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பலர் பெண்களும் குழந்தைகளும்தான் என்பது வேதனையளிக்கும் விஷயம். எஞ்சியிருப்பவர்களில் பெரும்பாலானோர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
- இதற்கு மேலும் தப்பிச் செல்ல வழியில்லை என்கிற சூழலில் ரஃபா நகரில் தஞ்சமடைந்திருக்கும் பாலஸ்தீனர்களையும் விடாமல் குறிவைத்துக் கொன்றழிக்கிறது இஸ்ரேல் ராணுவம். ஒருபுறம், இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினரிடமிருந்து விடுவிக்கக் கோரி அவர்களது உறவினர்கள் போராடிவருகின்றனர். இன்னொரு பக்கம் அவர்களின் பெயரைச் சொல்லிப் பேரழிவை நிகழ்த்துகிறது இஸ்ரேல்.
- இதுவரை 24 லட்சம் பேர் வீடிழந்து அகதிகளாகியிருக்கிறார்கள். உணவு, குடிநீர், உடை, மருந்துகள் என அடிப்படைத் தேவைகள் கிட்டாமல் தவிக்கின்றனர். பல குழந்தைகள் பட்டினியில் வாடி இறக்கின்றனர். உயிரோடு இருக்கும் குழந்தைகளும் உலகிலேயே மிக மோசமான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காசா பகுதி பஞ்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
- ரமலான் நோன்பு திறந்த பின்னரும் போர் தொடர்வது பாலஸ்தீனர்களை இன்னும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. போர்நிறுத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பதால், பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றே தெரிகிறது. யேமனைச் சேர்ந்த ஹூதி குழுவினர் ஹைப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துபார்த்திருக்கிறார்கள்.
- ஈரானின் ஆதரவுடன் செயல்படும் இக்குழுவினர், காசா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இஸ்ரேலைத் தாக்குவதுடன் செங்கடலிலும், ஏடன் வளைகுடாவிலும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர். அந்த வகையில் காசா போர் ஏற்கெனவே அந்தப் பிராந்தியத்துக்கு வெளியே விரிவடைந்துவிட்டது.
- இந்தப் பிரச்சினையை ஆரம்பம் முதல் சர்ச்சைக்குரிய வகையில் கையாண்டுவந்த அமெரிக்கா, தற்போது இஸ்ரேலின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முயற்சிப்பதாகக் காட்டிக்கொள்கிறது. ஒருபுறம் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பும் அதிபர் ஜோ பைடன் அரசு, இன்னொரு புறம் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு உணவையும் நிவாரணப் பொருள்களையும் அனுப்புகிறது.
- இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலில், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றதாக இஸ்ரேல் முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் அந்த அமைப்புக்கு வழங்கிவந்த நிதியுதவியை நிறுத்தியிருந்தன. அது பொய்ப் புகார் எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து ஸ்வீடன், கனடா ஆகிய நாடுகள் நிதியுதவியை மீண்டும் வழங்க ஆரம்பித்திருக்கின்றன.
- இஸ்ரேலில் அரசியல்ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்துவரும் நெதன்யாஹுவும், அமெரிக்க அதிபர் தேர்தலை மனதில் வைத்து பைடனும் தங்கள் செல்வாக்கை வளர்த்தெடுக்க காசாவைப் பலிகொடுக்கின்றனர். சர்வதேசச் சமூகம் ஒன்றுபட்டுக் குரல் எழுப்பும் வரையில் காசாவின் கண்ணீர் வழிந்துகொண்டே இருக்கும் என்பதே நிதர்சனம்!
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 03 – 2024)