- பரவலாக எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே, முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானுக்குத் திரும்பியிருக்கிறார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் ஜனவரியில் பொதுத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவா் நாடு திரும்பியிருப்பது வியப்பை ஏற்படுத்தவில்லை.
- கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) தலைமையிலான கூட்டணி ஆட்சி, அவரது இளைய சகோதரா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையில் நடந்து வருகிறது. அந்த ஆட்சி அமைந்தது முதலே நவாஸ் ஷெரீஃபின் வருகை எதிர்பார்க்கப்பட்டது; அது இப்போது உண்மையாகியிருக்கிறது.
- ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பிரதமா் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீஃப் 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விலக நேரிட்டது. அதைத் தொடா்ந்து, லண்டனில் சொகுசு குடியிருப்பு வாங்கிய குற்றச்சாட்டு தொடா்பாக பாகிஸ்தானில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் நவாஸ் ஷெரீஃபுக்கு 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அதே ஆண்டு டிசம்பரில் மற்றொரு ஊழல் குற்றச்சாட்டு தொடா்பாக மற்றொரு நீதிமன்றம் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
- இந்த இரு ஊழல் வழக்குகளின் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் தற்போது அனுமதி அளித்திருக்கிறது. நாடு திரும்பிய ஒரே வாரத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டில் அவரது தண்டனை ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது. அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டால், நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிட நவாஸ் தகுதி பெற்று, அவரது பிஎம்எல்-என் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கவும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.
- பாகிஸ்தான் வரலாற்றில் மூன்று முறை பதவி வகித்த ஒரே பிரதமா் நவாஸ் ஷெரீஃப்தான். வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தோ்தலில் வெற்றி பெற்று 4-ஆவது முறையாகப் பிரதமா் ஆகும் எண்ணத்துடன்தான் நவாஸ் நாடு திரும்பியிருக்கிறார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
- ‘யாரையும் பழிவாங்க விரும்பவில்லை. நாட்டின் மோசமான பொருளாதாரச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து, வளா்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல விரும்புகிறேன்’ என, நாடு திரும்பியவுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நவாஸ் தெரிவித்திருக்கிறாார். அவருக்கு முந்தைய, பிந்தைய ஆட்சிகளைவிட அவரது ஆட்சியில் பொருளாதாரம் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது என்பதை மக்கள் உணராமல் இல்லை.
- ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் லண்டன் சென்று சிகிச்சை பெற நவாஸ் ஷெரீஃப் சார்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது. அதைத் தொடா்ந்து, மனிதாபிமான அடிப்படையில் அவா் நாட்டைவிட்டு வெளியேற இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் 2019 அக்டோபரில் அனுமதி அளித்தது.
- நீதிமன்ற அனுமதியின்பேரில் லண்டனுக்குச் சென்ற நவாஸ் ஷெரீஃப், அனுமதி காலம் முடிந்தும் அங்கேயே தங்கிவிட்டார். அவரைத் தப்பியோடிய குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. இருப்பினும் இரு ஊழல் வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இப்போது அவா் நாடு திரும்பியுள்ளார்.
- நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தண்டனையும் விதிக்கப்பட்ட நவாஸ் நாடு திரும்பும் வகையில் அவரது பிஎம்எல்-என் கட்சியால் பாகிஸ்தானின் சட்டக் கட்டமைப்பு அடியோடு தகா்த்தெறியப்பட்டுவிட்டது என்று பிரதான எதிர்க்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி விமா்சித்திருக்கிறது. ஆனால், பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில் இதுபோன்று பல முன்னுதாரணங்கள் உள்ளன.
- பாகிஸ்தான் ராணுவத்தின் ஆசியுடன்தான் நவாஸ் ஷெரீஃப் நாடு திரும்பியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ராணுவத்தின் ஆசியுடன்தான் ஆட்சி அமைக்கவோ, ஆட்சியில் நீடிக்கவோ முடியும் என்பது பாகிஸ்தானில் எழுதப்படாத சட்டம். இதற்கு முன்பு நவாஸ் ஷெரீஃபும், இம்ரான் கானும் ஆட்சிக்கு வந்ததும், ஆட்சியை இழந்ததும் ராணுவத்தின் விருப்பு வெறுப்பின் அடிப்படையில்தான்.
- ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை காரணமாக நாடாளுமன்றத் தோ்தலில் இம்ரான் கான் போட்டியிடுவது கேள்விக்குறியாகத் தெரிகிறது. ஜனவரியில் நடைபெறவுள்ள தோ்தலில் நவாஸின் பிஎம்எல்-என் கட்சி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு இடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது.
- பாகிஸ்தானின் பொருளாதாரம் சீா்குலைந்து நாடு திவால் நிலைக்குச் சென்றுவிட்டது. அதனால், தோ்தலில் பொருளாதார மீட்புதான் இருகட்சிகளின் பிரதான பிரசாரமாக இருக்கும். ‘கடந்த 1990-இல் தன்னுடைய ஆட்சியில் பின்பற்றிய பொருளாதாரத் திட்டத்தைப் பின்பற்றிருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது’ என நவாஸ் கூறுவதை மக்கள் ஏற்பதைப் பொறுத்து தோ்தலின் முடிவு இருக்கக் கூடும்.
- நவாஸ் ஷெரீஃப் வருகை, பிரதான எதிா்க்கட்சித் தலைவரான இம்ரான் கான் சிறையில் இருப்பது என பெரும் அரசியல் பரபரப்புக்கு இடையே இன்னும் இரண்டே மாதங்களில் நாடாளுமன்றப் பொதுத் தோ்தலைச் சந்திக்க இருக்கிறது பாகிஸ்தான். இந்த முறை நவாஸுக்கு ஆதரவு அளிக்க ராணுவம் முடிவு செய்துவிட்டது போன்ற தோற்றம் காணப்படுவதால், தோ்தல் முடிவை ஓரளவுக்கு முன்கூட்டியே ஊகிக்க முடிகிறது. பாகிஸ்தானில் ஜனநாயகம் என்பது ராணுவத்தின் கைப்பாவையாகவும், ராணுவம் என்பது மத அடிப்படைவாதிகளின் தலையாட்டி பொம்மையாகவும் இருப்பதில் இப்போதைக்கு மாற்றம் ஏற்படப்போவதில்லை.
நன்றி: தினமணி (28 – 10 – 2023)