TNPSC Thervupettagam

காட்டழிப்பை நிறுத்தாமல் எதுவுமே செய்ய முடியாது - ஒளிப்படக் கலைஞர் செந்தில் குமரன் பேட்டி

March 30 , 2022 860 days 377 0
  • ஒளிப்படக் கலைக்கு உலக அளவில் வழங்கப்படும் மிக முக்கியமான விருதுகளுள் ஒன்றான ‘வேர்ல்டு பிரெஸ் ஃபோட்டோ’ விருதுக்கு ஆசியப் பிராந்தியத்திலிருந்து தேர்வாகியிருக்கும் நால்வருள் மதுரையைச் சேர்ந்த செந்தில் குமரனும் ஒருவர்.
  • மேலும், இந்த விருதின் உலக அளவிலான பிரிவுக்கான பரிசீலனையிலும் செந்தில் குமரனின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.
  • நேஷனல் ஜியாகிரபிக் சொஸைட்டியின் ‘எமெர்ஜிங் எக்ஸ்ப்ளோரர் விருது’ உள்ளிட்ட 20 சர்வதேச அங்கீகாரங்கள் இவருக்குக் கிடைத்திருக்கின்றன.
  • ‘நேஷனல் ஜியாகிரபிக்’, ‘இந்தியா டுடே’ உள்ளிட்ட இதழ்களில் இவருடைய படங்கள் பிரசுரமாகியிருக்கின்றன. ஆவண ஒளிப்படக் கலைஞரான செந்தில் குமரனுடன் உரையாடியதிலிருந்து…

இந்தப் பயணம் எப்படித் தொடங்கியது?

  • சிறு வயதிலிருந்து எனக்குக் காட்சிக் கலையில் விருப்பம் அதிகம் என்பதால் ஒளிப்படக் கலைத் துறைக்கு வந்தேன்.
  • நானாகவேதான் கற்றுக்கொண்டேன். ஒளிப்படங்கள் சார்ந்து பயணங்கள் செல்வதற்கும் படச்சுருள்கள் வாங்குவதற்குமான செலவுகளுக்காக நான் 2001-ல் தொழில்முறையில் ஒளிப் படங்கள் எடுத்துத்தரத் தொடங்கினேன். சிறிய விளம்பர நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தினேன்.
  • இந்தியாவில் பல இடங்களுக்கு நான் மேற்கொண்ட பயணங்கள்தான் சமூகம் பற்றியும் மக்களைப் பற்றியும் புரிந்துகொள்ள உதவின. இதன் தொடர்ச்சியாகத்தான் நான் எடுத்த ஒளிப்பட வரிசைகளும் அமைந்தன.
  • 2005-06 வாக்கில் ஜல்லிக்கட்டு தொடர்பான ஒளிப்பட வரிசை. பிறகு திருநங்கைகள், மனிதக் கழிவை மனிதர்கள் அகற்றும் அவலம், சர்க்கஸ் போன்றவற்றைப் பற்றிய ஒளிப்பட வரிசைகளை உருவாக்கினேன்.

மனிதர்கள்-விலங்குகள் எதிர்கொள்ளல் தொடர்பான படங்களை எடுப்பதில் எப்போது ஈடுபட ஆரம்பித்தீர்கள்?

  • முதுமலையைச் சேர்ந்த கலைவாணன் என்றொரு கால்நடை மருத்துவருடன் 2012-ல் வால்பாறைக்குச் சென்றேன். ஊருக்குள் ஒரு புலி, உடம்பு முழுக்கக் காயங்களுடன் வந்திருந்தது.
  • அதைப் பிடித்து, மறுநாள் காட்டுக்குள் விடுவதாகத் திட்டம். அந்த ஒட்டுமொத்தச் செயல்பாட்டையும் ஒளிப்பட ஆவணமாக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். புலியோ உடல்நிலை குன்றி இறந்துவிட்டது. அப்போது எனக்குள் நிறைய கேள்விகள் எழுந்தன.
  • இந்தியாவிலேயே மிக முக்கியமான வனப் பாதுகாப்புச் செயல்பாட்டாளரும், ‘யானை மனிதர்’ என்று அழைக்கப்படுபவருமான அஜய் தேசாயும் அப்போது என்னுடன் இருந்தார்.
  • மனிதர்கள்-விலங்குகள் எதிர்கொள்ளல், வனப் பாதுகாப்பு போன்றவற்றை எப்படிப் பார்ப்பது என்றெல்லாம் அவர் எனக்குச் சொல்லித்தந்தார்.
  • அவருடன் நான் 10 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். அவருடைய 35 ஆண்டுகால அனுபவங்களை நான் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது பெரிய வாய்ப்பு.
  • கடந்த 10 ஆண்டுகளாக மனிதர்கள்-புலிகள் எதிர்கொள்ளல் தொடர்பாக இந்தியா முழுவதும் 12 புலிகள் காப்பகங்களில் ஒளிப்பட ஆவணமாக்கலில் இயங்கிவந்திருக்கிறேன்.
  • வனங்களின் மையப் பகுதியில் உள்ள 60 கிராமங்களுக்குச் சென்று, மனிதர்கள்-புலிகள் எதிர் கொள்ளல் தொடர்பாக ஒளிப்பட ஆவணமாக்கல் செய்திருக்கிறேன்.
  • இதனால் விலங்குகள் தரப்பு, மக்கள் தரப்பு, வனத் துறையினர் தரப்பு, அரசுத் தரப்பு என்று அனைத்துத் தரப்புகளின் கோணத்தையும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
  • வனவுயிர் பாதுகாப்பாளர்கள் எல்லாம் பழங்குடியினர் மீதுதான் தவறு என்பார்கள். செயல்பாட்டாளர்கள் எல்லாம் புலிகள் காப்பகங்கள் பழங்குடியினருக்கு எதிராக இருக்கின்றன என்பார்கள்.
  • வனத் துறையினரைப் பார்த்தால் அவர்கள் விலங்குகள், மக்கள் இரண்டு தரப்புகளையும் ஒரே சமயத்தில் காப்பாற்ற வேண்டும்.
  • இந்த அனைத்துக் கோணங்களும் எனக்கு 10 ஆண்டு அனுபவத்தில் கிடைத்தன.

மனிதர்கள்-விலங்குகள் எதிர்கொள்ளலுக்கு முக்கியக் காரணம் என்ன?

  • காடுகளுக்கு ஓரமாக உள்ள மக்கள் வனப் பகுதிகளை ஆக்கிரமித்ததுதான் இதற்குக் காரணம் என்று பலரும் நினைக்கிறார்கள். வயல்கள், ஆக்கிரமிப்பு போன்றவை மூன்று சதவீதம்தான்.
  • 84% காட்டழிப்புக்குக் காரணம் சுரங்கங்கள்தான். சுரங்கம் ஏன் தேவையாக இருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் நகர்ப்புற வளர்ச்சியும் உலகமயமாக்கலும் இருக்கின்றன.
  • நாம் பயன்படுத்தும் உலோகங்கள், கைபேசி, கணினி போன்ற சாதனங்களில் இருக்கும் கனிமங்கள் எல்லாமே காடுகளில் உள்ள சுரங்கங்களிலிருந்துதான் பெறப்படுகின்றன.
  • நாம்தான் இதற்கெல்லாம் நேரடியான காரணம் என்பதைப் பிரதானப்படுத்திக் காட்ட வேண்டும் என்றுதான் நான் முயன்றுகொண்டிருக்கிறேன்.

இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?

  • காட்டழிப்பை நிறுத்தாமல் எதுவுமே செய்ய முடியாது. 2010-12 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 1,700 புலிகள் இருந்தன. இப்போது 3,000-க்கும் மேற்பட்ட புலிகள் இருக்கின்றன.
  • ஆனால், காடுகளின் பரப்பளவு 2010-ஐவிடத் தற்போது மிகவும் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அன்று இருந்த காடுகளைவிட இப்போது உள்ள காடுகளின் ஓரங்களில் இடையூறுகள் அதிகமாகிவிட்டன.
  • இந்தியாவில் உள்ளவற்றில் கிட்டத்தட்ட 29% புலிகள், பாதுகாக்கப்பட்ட வனமையப் பகுதிகளுக்கு (core zone) வெளியில்தான் இருக்கின்றன.
  • ஆக, காட்டின் பரப்பளவை அதிகப்படுத்தாமல் புலிகளை மட்டும் அதிகப்படுத்துவது என்பது மிகவும் தவறான விஷயம்.
  • இருக்கும் காடுகளையாவது இனிமேல் அழிக்காமல் பார்த்துக்கொள்வது, காட்டுயிர்களுக்கு வழித்தடங்களை ஏற்படுத்துவது போன்றவைதான் தீர்வுகள்.
  • ஆனால், நாம் வழித்தடங்களை ஏற்படுத்தாமல் சுற்றிவளைத்துவிடுகிறோம். அணைகள், ரயில் பாதைகள் என்றெல்லாம் இடையூறுகளை ஏற்படுத்திவிடுகிறோம். இப்படிப்பட்ட சூழல் மனிதர்கள்-புலிகள் எதிர்கொள்ளலுக்குத்தான் வித்திடும்.

விவசாயிகள் - யானைகள் எதிர்கொள்ளலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

  • யானைகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயரும் இயல்புடையவை. இந்தியாவில் அவற்றின் வழித்தடங்கள் 84% ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
  • அதனால் திசைமாறி விவசாய நிலங்களுக்கு வந்து கரும்பு, நெல், சோளம் போன்ற பயிர்களைத் தின்கின்றன. அந்தப் பயிர்களின் சுவை அவற்றுக்குப் பிடித்துப்போனதால், காட்டுக்குப் போக வேண்டிய அவசியமில்லாமல் அங்கேயே தங்கிவிடுகின்றன.
  • இதனால் ஏற்படும் எதிர்கொள்ளலில் ஒன்று மனிதர்கள் சாகிறார்கள், இல்லையென்றால் யானைகள் சாகின்றன.
  • பெருவிவசாயிகளெல்லாம் தங்கள் நிலங்களைச் சுற்றி சூரிய மின்சக்தி வேலிகள், நீள்குழிகள் போன்ற பாதுகாப்புகளை அதிக செலவில் ஏற்படுத்திக்கொள்வார்கள்.
  • ஒன்றரை ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்கள் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு இதற்கெல்லாம் வசதி இருக்காது. ஆறு மாத உழைப்பை யானைகள் அழித்துவிடக் கூடுமோ என்று அஞ்சி, சூரிய மின்வேலி அல்லாமல் வழக்கமான மின்வேலிகளை வைத்துவிடுகிறார்கள்.
  • இதனால் யானை செத்தாலும் அவர்களுக்குத்தான் பிரச்சினை. இன்னொரு புறம் யானைகளால் தாக்கப்பட்டு இறப்பவர்களும் வாட்ச்மேன்கள், ஏழை விவசாயிகள் போன்றோர்தான்.
  • நாம் அந்தக் கோணங்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது. முக்கியமாக, விலங்குகள் பாதுகாப்பு என்பதை மட்டும் மனதில் கொண்டு நாம் செயல்பட்டால், மக்களின் மனநிலை விலங்குகளுக்கு எதிரானவர்களாக மாறிவிடும்.
  • பிறகு, நம்மால் விலங்குகளைக் காப்பாற்ற முடியாது. விலங்குகளிடம் உள்ளூர் மக்கள் மூர்க்கமாக நடந்துகொள்ள நேரிடும்.

வேர்ல்டு பிரெஸ் ஃபோட்டோ விருது குறித்துச் சொல்லுங்கள்...

  • ஒளிப்படங்களுக்கு உலக அளவில் வழங்கப்படும் உயரிய விருது இது. இந்த விருதைப் பெறுவது என்னுடைய 20 ஆண்டுக் கனவு. இந்த ஆண்டு விருதுக்கான வகைமையை விரிவுபடுத்தினார்கள்.
  • உலக அளவில் ஆறு பிராந்தியங்களாகப் பிரித்தார்கள். நான் 30 படங்கள் கொண்ட ஒரு ஒளிப்பட வரிசையை அனுப்பியிருந்தேன். எனக்கு விருதுக் குழுவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது.
  • நான் எடுத்த ஒளிப்படங்கள், அதன் மையப்பொருள் ஆகியவற்றுக்கும் எனக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றிக் கேட்டார்கள்.
  • என்னுடைய திட்டப் பணிகள் எல்லாம் என்னுடைய சொந்தச் செலவில் மேற்கொண்டவை; மேலும், நானும் உள்ளூர் நபர் என்பதால் மனிதர்கள்-விலங்குகள் எதிர்கொள்ளலில் உள்ளூர் மக்களின் நிலையை, சிக்கல்களை நன்கு அறிந்தவன். இந்த இரண்டு விஷயங்களும் எனக்குச் சாதகமாக ஆயின.

நன்றி: தி இந்து (30 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்