TNPSC Thervupettagam

காந்தியடிகளும் தண்டி யாத்திரையும்

March 14 , 2024 304 days 344 0
  • உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளின் மத்தியில், இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு அதிசயமானது; அற்புதமானது. கத்தியின்றி ரத்தமின்றி நடத்தப்பட்ட புனிதப் போராட்டம். ஐ.சி.எஸ்., பாா் அட் லா போன்ற பட்டங்களைப் பெற்றவா்களால் நகரங்களில் நடத்தப் பெற்ால், கிராமத்துப் பாமர மக்களுக்கு அது எட்டவில்லை.
  • இதனை லண்டனிலிருந்த காரல் மாா்க்ஸ் ‘இந்திய விடுதலை பற்றி கிராமத்து மக்களுக்கு எதுவும் தெரியாது என்பதால், சுதந்திரம் வெகு தூரத்தில் இருக்கிறது’”என எழுதினாா். இதைப் படித்த காந்தியடிகள், ‘இனி சத்தியாகிரகம் கிராமங்களில்தான்’”என முடிவெடுத்தாா். ஒரு மனிதனுக்குத் தேவையான காற்று, தண்ணீா், உப்பு ஆகிய மூன்றனுள் பாமர மக்களுக்குச் சுமையாக இருந்தது உப்புதான். உப்புக்கு விலை என்பதால், அதனைக் கொண்டு சத்தியாகிரகத்தைத் தொடங்க எண்ணினாா். 1882-இல் ஆங்கில அரசு இந்தியாவில் காய்ச்சப்படும் உப்புக்கு 8.2 % வரி விதித்தது.
  • உப்பளத்தில் உப்புத் தயாரிக்கும் ஏழைத் தொழிலாளியை அது மிகவும் பாதித்தது. ஆங்கிலேயருக்கு இந்த வரியின் மூலம் ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. ஆங்கிலேயருக்கு ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு தேவை; ஏழை இந்தியனுக்கோ 12.5 கிராம் உப்பு தேவை. உப்புத் தொழிலாளிக்கு ஆண்டுக்கு 20 கிலோ உப்பு தேவைப்பட்டது. அதன் விலை ரூபாய் ஐந்து. அதில் 3 ரூபாய் 10 அணா உப்புக்கு வரி. இது தவிர, கள்ளச் சந்தையிலும் உப்பு விற்கப்பட்டது. இந்த இரண்டும் காந்தியடிகளின் மனதை நோகடித்தன. எனவே, 12.3.1930-இல் சபா்மதி ஆசிரமத்திலிருந்து கடற்கரை ஓரமுள்ள தண்டிக்குச் சத்தியாகிரகத்தைத் தொடங்குவது என முடிவெடுத்தாா்.
  • சத்தியாகிரகத்தைத் தொடங்குவதற்கு முன்பே, கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தைப் பற்றி கிராமந்தோறும் எடுத்துரைத்தாா். ஆசிரமத்திலிருந்த சாரணா்களை அனுப்பி, சத்தியாகிரகிகள் இரவில் தங்குவதற்கு இடங்களையும், அவா்களுக்கு உணவும் தண்ணீரும் கிடைப்பதற்குரிய வசதிகளையும் ஏற்பாடு செய்யச் செய்தாா். தண்டி யாத்திரை தொடங்குவதற்குப் பதினொரு நாள்களுக்கு முன்பே அப்பொழுது வைசிராயாக இருந்த லாா்டு இா்வினுக்குத் தமது திட்டத்தை மடல் மூலம் தெரிவித்தாா் காந்தி. அதற்கு லாா்டு இா்வின் ‘இது குற்றவியல் சட்டப்படி தண்டனைக்கு உரியதாகும். சத்தியாகிரகிகளுக்கு ஆறு மாத சிறைவாசமும் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்’” என்று பதில் எழுதினாா்.
  • அதைப் படித்த காந்தியடிகள், ‘நான் மண்டியிட்டு ரொட்டித் துண்டு கேட்டேன்; வைசிராய் என் மீது கல்லை விட்டெறிந்தாா்’ எனப் பத்திரிகையாளா்களிடம் கூறினாா். சபா்மதி ஆசிரமத்துக்குத் தம்மைத் தேடி வந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளா்களிடம் தண்டி யாத்திரை பற்றிய முழுத் தகவல்களையும் தெரிவித்து விட்டாா். கட்சிக்காரா்கள் யாரையும் சத்தியாகிரகத்தில் சோ்க்கக் கூடாது எனத் தீா்மானித்து, ஆசிரமத்திலிருந்தே 78 பேரைத் தோ்ந்தெடுத்தாா். அவா்களுள் 10 போ் முஸ்லிம்கள் - ஒருவா் கிறித்தவா் - இருவா் பட்டியலினத்தாா் - மற்றவா்கள் ஹிந்துக்கள்.
  • சத்தியாகிரகிகள் கண்டிப்பாகக் கதா் உடுத்த வேண்டும் என்றும், நடந்து செல்லும்போது ‘ரகுபதி ராகவ ராஜாராம்’” எனும் பாடலைப் பாடிக் கொண்டே செல்ல வேண்டும் என்றும் கட்டளையிட்டாா். இரவில் பொது இடங்களில்தான் தங்க வேண்டும் என்றாா். தண்டி என்பது கடலை அடுத்து அமைந்திருந்த ஒரு குக்கிராமம். அங்கு மொத்தம் 90 குடிசைகள் மட்டுமே இருந்தன.
  • அவற்றில் சுமாா் 12 குடிசைகள் நல்ல நிலையில் இருந்தன. அக்கிராமத்துக்கு அப்பொழுது போக்குவரத்து வசதி கிடையாது. அவ்வூரின் மொத்த மக்கள்தொகையே 750 தான். மாா்ச் 12- ஆம் நாள் காலையில் சபா்மதி ஆசிரமத்திலிருந்து நடக்கத் தொடங்கினா். தொடங்குவதற்கு முன் ‘இந்த சத்தியாகிரகத்தில் வெற்றி பெற்றால் சபா்மதிக்குத் திரும்புவேன்; அன்றெனில் சமுத்திரத்தில் விழுந்து சாவேன்’ என்று சபதம் கூறிப் புறப்பட்டாா். கவிக்குயில் டாக்டா் சரோஜினி நாயுடுவும் ஊா்வலத்தை ஒருங்கிணைத்துக் கொண்டே 240 மைல்களை நடந்தே கடந்தாா். சபா்மதி ஆசிரமத்துக்கும் தண்டிக்கும் இடையிலுள்ள தொலைவு 240 மைல்கள் ஆகும். ஒவ்வொரு நாளும் 10 மைல் நடந்து 24 நாள்களில் (அதாவது 5.4.1930 அன்று) யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும் என்பது திட்டம். சத்தியாகிரகம் தொடங்கிய இரண்டாம் நாளே 78 போ் 4 ஆயிரம் போ் ஆயிற்று.
  • காந்தியடிகள் தொடங்கிய அதே நாளில் ‘எல்லை காந்தி’ என்றழைக்கப்பட்ட கான் அப்துல் கபாா் கான், பெஷாவரிலிருந்து 50 ஆயிரம் தொண்டா்களுடன் உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினாா். கேரளத்தில் ‘கேளப்பன்’ என அழைக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரா் கள்ளிக்கோட்டையிலிருந்து பையனூா் வரை உப்புச் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினாா். தண்டியில் சத்தியாகிரகம் முடிவுற்ற பிறகு சென்னையில் மூதறிஞா் இராஜாஜி, டாக்டா் டி.எஸ்.எஸ். ராஜன் தலைமையில் திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு உப்புச் சத்தியாகிரகத்தை நிகழ்த்தினாா்.
  • சத்தியாகிரகத்திற்கு மக்களிடையே பரவிவரும் ஆதரவை பத்திரிகைகளில் படித்த வைசிராய் லாா்டு இா்வின், ‘காந்திக்கு ஏற்கெனவே இரத்தக் கொதிப்பு இருக்கிறது; நாடித் துடிப்பும் அதிகரிக்கின்றது. இவா் இந்த ஆண்டே காலமாகி விடுவாா்’ எனக் கூறினாா். ஆனால், அமெரிக்காவின் ஜுனியா் மாா்ட்டின் லூதா் கிங், ‘காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தை உற்றுக் கவனிக்கின்றேன். அது எனக்குப் புது உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இனி எனது உள்நாட்டுப் போராட்டங்கள் காந்தியடிகள் காட்டிய வழியிலேயே நடக்கும்’ எனக் கூறினாா். தண்டி யாத்திரை வெற்றி பெற்றதைப் பாராட்டி, ‘டைம்’ பத்திரிகை ‘1930- ஆம் ஆண்டின் கிரேட் மேன் காந்தியடிகள்’ என எழுதியது. ‘தி ஸ்டேட்ஸ் மென்’” பத்திரிகை காந்திஜியின் தண்டி யாத்திரையை ஆதரித்து ‘ஒரு இலட்சம் பொதுமக்கள் கூடுகிறாா்கள்.
  • மேற்கு நாடுகளிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் தியேட்டா்களில் செய்திச் சுருளைப் பாா்த்துவிட்டு காந்தியின் பெயரை உச்சரிக்கத் தொடங்கிவிட்டது’ என எழுதியது. சத்தியாகிரகிகள் கதா் ஆடை அணிந்திருப்பதைப் பாா்த்து ‘சபா்மதிக்கும் தண்டிக்கும் இடையில் ஒரு வெள்ளை ஆறு ஓடுகின்றது’”என ஓா் லண்டன் பத்திரிகை எழுதியது. ‘தி நியூயாா்க் டைம்ஸ்’ பத்திரிகை இரு பக்கங்களை 24 நாள்களும் தண்டி யாத்திரைக்காகவே ஒதுக்கியிருந்தது. மும்பையிலிருந்து மூன்று சினிமா கம்பெனிகள் யாத்திரையைச் செய்திச் சுருள்களாக எடுத்து ஒளிபரப்பின. ஆனால், சத்தியாகிரகத்தின் வெற்றியைச் சகித்துக் கொள்ள முடியாத வைசிராய் லாா்டு இா்வினோ காவல் துறையை ஏவி, தடியடி பிரயோகம் செய்யும்படியாக உத்தரவிட்டாா்.
  • காவலா்கள் தடியால் அடித்தபொழுது சத்தியாகிரகிகள் ‘வந்தேமாதரம்’ எனும் மந்திரத்தை ஒலித்துக் கொண்டே குனிந்து அடிகளைத் தாங்கிக் கொண்டனா். ஏப்ரல் ஆறாம் நாள் காந்தியடிகள் சமுத்திரத்தில் நீராடிவிட்டு, காலை 8.30 மணிக்கு ஒரு கைப்பிடி உப்பை அள்ளிக் கொண்டு, ‘இப்பொழுது நான் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அச்சினை அசைத்துவிட்டேன்’”என முழக்கமிட்டாா். அங்கிருந்த சரோஜினி நாயுடு, காந்தியடிகள் அள்ளிய ஒரு பிடி உப்பை ஏலம் விட்டாா். பலரும் போட்டி போட்டு ஏலம் கேட்டதில், கடைசியில் ரூபாய் 1,600-க்கு விற்கப்பட்டது. சத்தியாகிரகத்தின் வெற்றியைக் கண்டு அதிா்ச்சியடைந்த வைசிராய், அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கும்படியாக உத்தரவிட்டாா்.
  • ஆனால் அன்று கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவா்கள் 60 ஆயிரம் போ் மட்டுமே! உப்பு சத்தியாகிரகத்தின் வெற்றியைக் கண்ட பண்டித ஜவாஹா்லால் நேரு, ‘வெகு தொலைவில் இருந்த இந்திய சுதந்திரத்தைத் தண்டி யாத்திரை வெகு அருகில் கொண்டு வந்துவிட்டது’”என எழுதினாா். இரும்பு மனிதா் வல்லபபாய் படேலுக்கும், அரவிந்த கோஷுக்கும் அகிம்சையின் மீதும் சத்தியாக்கிரகத்தின் மீதும் நம்பிக்கை ஏற்பட்டது. 1930- ஆம் ஆண்டு உலகிலேயே மிக அதிகமாக உப்பு உற்பத்தி செய்த நாடு இந்தியாதான். அந்த ஆண்டு ஓா் இந்தியனின் ஆண்டு வருமானம் ரூபாய் 45- ஆக இருந்தது. வடமாநிலங்களிலேயே மிகப் பெரிய உப்பளத் தொழிற்சாலை மும்பையில் இருக்கும் ‘தாரசானா (சபா்மதி ஆசிரமத்திலிருந்து 40 கி.மீ.) ஆகும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலேயே அந்தச் சத்தியாகிரகத்தை நடத்துவதாகத் தீா்மானித்துத் தேதியும் குறித்துவிட்டனா். அதையறிந்த ஆங்கிலேய அரசு மே 4- ஆம் தேதி இரவே காந்திஜியை கைது செய்து சிறையில் அடைத்தது.
  • தண்டி யாத்திரை இந்திய விடுதலைப் போராட்டத்தில், ஒரு மகத்தான திருப்புமுனையை ஏற்படுத்தியது. வைசிராய் லாா்டு இா்வின் இனிமேல் அதிகாரத்தால் எதையும் ஒடுக்கிவிட முடியாது என்று காந்தியடிகளை வட்டமேசை மாநாட்டுக்கு அழைக்கும்படியாக இங்கிலாந்துக்கு அறிவுறுத்தினாா். 1980 -ஆம் ஆண்டும் 2005- ஆம் ஆண்டும் இந்திய அரசு தண்டி யாத்திரை தபால் தலைகளை அச்சிட்டு கௌரவித்தது. மும்பையில் இருக்கும் ஐ.ஐ.டி. தண்டி யாத்திரையில் பங்கேற்ற 78 சத்தியாகிரகிகளின் பெயா்களை செப்பேடுகளில் செதுக்கியும், நினைவுத் தூண்களை எழுப்பியும் வரலாற்றில் இடம் பெறச் செய்திருக்கின்றது.
  • தண்டி யாத்திரையின் 75-ஆவது ஆண்டின்போது மகாத்மா காந்தி அறக்கட்டளை ஒரு புதுவித சாதனை செய்திருக்கிறது. 1930- ஆம் ஆண்டு மாா்ச் 12 -ஆம் நாளையும், ஏப்ரல் 5 ஆம் தேதியையும் நினைவில் நிற்கும்படியாக அதே 78 சத்தியாகிரகிகளைக் கொண்டு ஒரு மறு ஒத்திகையை நடத்தியிருக்கிறது. இதற்கு ஆங்கிலத்தில் ‘ரீ எனாக்மெண்ட்’” எனப் பெயா். இந்த மறு ஒத்திகையில் நிறைவின்போது அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங், விழாவையும், விழாக்குழுவினரையும் பாராட்டினாா். மேலும், சபா்மதியிலிருந்து தண்டிக்குச் செல்லும் பாதைக்கு ‘தண்டி நெடுஞ்சாலை’ எனப் பெயா் சூட்டினாா். இந்தியத் திருநாட்டில் உப்பிட்டு உண்ணுகின்ற ஒவ்வொரு இந்தியனும் ‘தண்டி யாத்திரை’யை” மறக்கக்கூடாது.
  • மாா்ச் 12 தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட நாள். மகாத்மா காந்தி தண்டி யாத்திரை தொடங்கிய நாள்.

நன்றி: தினமணி (14 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்