TNPSC Thervupettagam

காந்தியைப் பேசுதல்: நவகாளியும் பிஹாரும்

September 11 , 2019 1904 days 793 0
  •  “ஒரு தரப்பினரின் மோசமான நடவடிக்கைகள் மற்றொரு தரப்பின் எதிர்நடவடிக்கைகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்திவிடாது. முஸ்லீம் லீகை மதப் பிரிவினைவாத சக்தி என்று சொல்லும் காங்கிரஸ் அதேபோன்ற மதப் பிரிவினைவாதத்தில் ஈடுபடுவது எப்படித் தகும்? பிஹாரில் உள்ள 14% முஸ்லிம்களை நசுக்குவதுதான் தேசியவாதமா?” என்று பிஹார் காங்கிரஸாரை நோக்கி கேள்வி எழுப்பினார் காந்தி.
  • 1946-ல் பாகிஸ்தான் என்ற தனிநாடு தங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்த ஜின்னாவின் முஸ்லிம் லீக் கட்சி நேரடி நடவடிக்கை நாளை ஆகஸ்ட் 16-ம் தேதி அனுசரிக்கப்போவதாக அறிவித்தது. ஜின்னாவின் அழைப்பை ஏற்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் அணிவகுப்பு நடந்தது. அது ஒருகட்டத்தில் வன்முறையாக வெடித்தது. கல்கத்தாவில் இந்துக்களின் வீடுகளும் கடைகளும் சூறையாடப்பட்டன. ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அதையடுத்து மறுநாள் இந்து மகாசபை இயக்கம் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் அதேபோன்ற வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். கல்கத்தாவே பற்றி எரிந்தது. எங்கு பார்த்தாலும் சடலங்கள். பிணந்தின்னிக் கழுகுகள் கல்கத்தாவை வட்டமிட்டன. இவ்வளவு கலவரத்துக்கும் இடையில் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் செயல்களும் நடக்காமல் இல்லை. இந்துக்களுக்கு முஸ்லிம் குடும்பங்கள் தஞ்சமளித்ததும், முஸ்லிம்களுக்கு இந்துக்கள் தஞ்சமளித்ததும் சற்றே நம்பிக்கையை ஏற்படுத்தியது.
  • அதேநேரத்தில், கல்கத்தாவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்காகப் பழிவாங்கும் நடவடிக்கையாக வங்கத்தின் நவகாளி பகுதியில் பெரும்பான்மையாக இருந்த இந்துக்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நிகழ்த்த ஆரம்பித்தனர். அங்கே நடந்த வன்முறை காரணமாகப் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் தங்கள் வீடுகளை இழந்து தப்பியோடினார்கள். இதைக் கேள்விப்பட்ட காந்தி மிகுந்த மனவேதனைக்கு உள்ளானார். காலமெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகத் தான் உழைத்ததெல்லாம் வீணாகப்போய்விட்டதா என்ற கலக்கம் அவருக்கு.
நவகாளி நோக்கி...
  • தற்போது தான் இருக்க வேண்டிய இடம் நவகாளிதான் என்று அவர் உணர்ந்தார். தன்னுடைய தொண்டர்களை அழைத்துக்கொண்டு அக்டோபர் இறுதியில் கல்கத்தாவுக்கு வந்துசேர்ந்தார். கல்கத்தாவுக்கு வந்து பார்த்தபோது அந்த நகரமே சுடுகாடுபோல அவருக்குத் தோன்றியது. கல்கத்தாவில் அவர் இருக்கும்போதே பிஹாரில் உள்ள பெரும்பான்மை இந்துக்கள் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது ஏவிய வன்முறை அவர் காதுக்கு வந்துசேர்கிறது. இத்தனைக்கும் பிஹாரில் நடந்துகொண்டிருப்பது காங்கிரஸின் அரசு என்பதுதான் அவரை இன்னும் வேதனைக்குள்ளாக்கியது. ஏனெனில், காங்கிரஸ் கட்சி இந்துக்கள், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியது என்று கருதியவர் காந்தி. பிஹார் வன்முறையானது பல இடங்களில் காங்கிரஸ்காரர்களின் ஆசிர்வாதத்துடன் நடந்திருக்கிறது என்பதைத்தான் அவரால் தாங்க முடியவில்லை. இருந்தும், தற்போது நவகாளி தன்னை அழைப்பதால் அங்கே முதலில் சென்று அமைதியை அங்கு நிலைநாட்டலாம் என்று முடிவெடுத்தார்.
  • நவகாளி என்பது பிரம்மபுத்திராவின் படுகையில் பெரும்பாலும் சதுப்புநிலமாக இருக்கும் பிராந்தியம். போக்குவரத்தே மிகக் குறைந்த அளவில்தான் அப்போது இருந்தது. அங்கே அமைதி யாத்திரையை காந்தி மேற்கொண்டபோது அவருக்கு வயது 77. பெரும்பாலும் வெறுங்காலுடனே அங்கு நடந்துசென்றார். போகும் இடங்களிலெல்லாம் அவருக்கு எதிர்ப்பும் வரவேற்பும் கிடைத்தது. ஒருகட்டத்தில், எல்லாத் தொண்டர்களையும் அழைத்துக்கொண்டு ஒன்றாகப் போவதை விட ஆட்களைப் பிரித்து வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பினால் நிறைய இடங்களில் அமைதி கொண்டுவருவது சுலபம் என்று முடிவெடுத்து தன்னுடன் இருந்தவர்களை வேறு வேறு கிராமங்களுக்கு அனுப்பினார்.
  • பெரும்பாலும் முஸ்லிம்கள் வீட்டிலேயே காந்தி தங்கினார். அவருடைய கூட்டங்களில் ஆரம்பத்தில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். காந்தியின் கூட்டங்களுக்குப் போகக் கூடாது என்று முஸ்லிம் லீக் தலைவர்கள் அச்சுறுத்தியதால் போகப் போகக் கூட்டம் குறையத் தொடங்கியது. எனினும், காந்தி நம்பிக்கையை இழந்துவிடவில்லை. அவர் போகும் கிராமங்களிலெல்லாம் அமைதியைக் கொண்டுவருவதற்கு அவரால் இயன்ற அளவு முயன்றார்.
நம்பிக்கை வெளிச்சம்
  • இதற்கிடையே வன்முறையின்போது களவாடப்பட்ட தங்கள் குலதெய்வச் சிலையை மீட்டு தங்கள் வீட்டிலேயே மறுபடியும் நிறுவ வேண்டும் என்று ஒரு இந்துக் குடும்பம் காந்தியிடம் வேண்டுகோளை முன்வைத்தது. காந்தியின் முயற்சியால் அதுவும் நடந்தது. அப்போது மூன்று முஸ்லிம்கள் காந்தியிடம் வந்து “நீங்கள் இந்தச் சிலையை மறுபடியும் இந்த வீட்டிலேயே நிறுவிவிட்டீர்கள். அதன் பாதுகாப்புக்கு நாங்கள்தான் இனி பொறுப்பு” என்றார்கள்.
  • வேறொரு கிராமத்தில் காந்தியின் தொண்டரும் முஸ்லிம் பெண்மணியுமான அம்துஸ் சலாம் உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற செய்தி காந்தியை எட்டியது. இந்துக்கள் பூஜையில் பயன்படுத்தும் மூன்று வாள்கள் வன்முறையின்போது திருடப்பட்டதாகவும், அதை மீட்கும் வரை தான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்றும் அம்துஸ் சலாம் அறிவித்தார். அவரது உண்ணாவிரதம் 25-வது நாளை எட்டியபோது அங்கு காந்தி வருகிறார். இரண்டு வாள்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ள வாள் கிடைத்தால்தான் உண்ணாவிரத்தை நிறுத்துவேன் என்று அம்துஸ் பிடிவாதமாக இருந்தார். எனினும், அங்குள்ள முஸ்லிம்களுடன் காந்தி பேசி சமரசத்துக்கு வந்ததால் அம்துஸ் தனது உண்ணாவிரத்தை நிறுத்திக்கொண்டார்.
  • மொத்தம் 114 நாட்கள் காந்தி நவகாளியில் இருந்தார். அங்கு நிலைமையை ஓரளவுக்குத்தான் அவரால் கட்டுப்படுத்த முடிந்தது. அதுவே பெரிய விஷயம்தான். பிஹாரில் நிலைமை எப்படி இருக்கிறது என்று அறிந்துகொள்ள அங்கு ஆட்களை அனுப்பியிருந்தார். நவகாளியைப் போலவே அங்கும் மோசமான வன்முறை நிகழ்ந்திருக்கிறது என்றும், காந்தி உடனடியாக பிஹாருக்கு வர வேண்டும் என்றும் அவர்கள் செய்தி அனுப்பியதைத் தொடர்ந்து காந்தி புறப்பட்டார்.
பிஹார் நோக்கி...
  • நவகாளியில் முஸ்லிம் லீக் கட்சியினரிடமிருந்து காந்திக்கு எதிர்ப்பும் அச்சுறுத்தலும் வந்ததுபோல் பிஹாரில் இந்து அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு வந்தது. நடந்த வன்முறைக்கு இந்துக்களைக் குற்றஞ்சாட்டக் கூடாது என்று எச்சரித்தார்கள். “சக இந்துக்களின் தவறுக்கு நான் ஆதரவாக இருப்பேன் என்றால் நான் என்னை இந்துவாக அழைத்துக்கொள்ள அருகதையற்றவனாவேன்” என்று பதிலளித்தார் காந்தி.
  • பிஹாரில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுவாசலை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளானார்கள். வன்முறையில் வங்கத்து முஸ்லிம்களுக்குத் தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்களில்லை என்று பிஹார் இந்துக்கள் காட்டியதுபோல இருந்தது. பிஹாருக்கு காந்தி வந்த பிறகு அதன் நல்விளைவாக மசூரி என்ற ஊரில் வன்முறையுடன் தொடர்புடைய 50 பேர் தாங்களாகவே காவல் நிலையத்தில் சரணடைந்தார்கள். காந்தி போகும் ஊர்களிலெல்லாம் முஸ்லிம்களுக்காக நிதி திரட்டினார். ஆண்களை விட பெண்கள்தான் அள்ளிக்கொடுத்தார்கள். காந்தியால் பிஹாரில் உள்ள நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்றாலும் அவர் வருவதற்கு முன்பிருந்ததை விட நிலைமையில் நல்ல மாற்றங்கள் தென்பட்டன.
  • நவகாளி, பிஹார் இரண்டிலுமே வெறுங்காலுடன் நடந்து காந்தி ஏற்படுத்திய மாற்றங்கள் அசாத்தியமானவை. இரண்டு பகுதிகளிலுமே அவர் கொல்லப்படும் சாத்தியம் இருந்தது. ஆனால், அவரோ ‘செய் அல்லது செத்துமடி’ என்ற எண்ணத்தில்தான் அந்த இடங்களுக்குச் சென்றார். இன்றும் வகுப்புக் கலவரங்கள் நடக்கும்போது அப்படிப்பட்ட ஒரு மனிதர் இல்லையே என்ற ஏக்கத்தை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (11-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்