“மோகன் (காந்தி) இது எவ்வளவு வெட்கக்கேடானது. இன்று எனது சொற்பொழிவின் மையப்பொருளே நீங்கள்தான். எல்லோரும் மிகவும் ஒன்றிப்போய் என் உரையைக் கேட்டார்கள். ஆனால், அவர்கள் நீங்கள் உள்ளே வருவதைத் தடைசெய்துவிட்டார்களே!” என்று பேச ஆரம்பித்த சி.எஃப்.ஆண்ட்ரூஸுக்குக் கண்ணீர் மல்க ஆரம்பித்தது.
தென்னாப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலை (1914). அப்போது இந்தியாவிலிருந்து ஆங்கிலேய பாதிரியாரும் இந்தியர்களுக்கு ஆதரவானவருமான சி.எஃப்.ஆண்ட்ரூஸை சமரசப் பேச்சுவார்த்தைகளில் காந்திக்கு உதவுவதற்காக அனுப்பிவைக்கிறார் கோகலே. அப்போது காந்திக்கும் ஆண்ட்ரூஸுக்கும் ஆழமான நட்பு உருவாகிறது. இந்த நட்பு 1940-ல் ஆண்ட்ரூஸ் இந்தியாவில் மறையும் வரை நீடித்த ஒன்று.
கிறிஸ்தவத்தின் மீது பெரும் ஈர்ப்புகொண்ட காந்திக்கு ஒருநாள் ஆண்ட்ரூஸின் பிரசங்கத்தைக் கேட்பதற்கு ஆவல் மேலிடுகிறது. தேவாலயத்துக்குச் செல்கிறார்.
அங்கே ஆங்கிலேயர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட காரணத்தால் காந்தியை அங்குள்ளவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.
பிரசங்கம் முடிந்து வெளியில் வந்த ஆண்ட்ரூஸிடம் காந்தி இந்தத் தகவலைக் கூறுகிறார். காந்தியின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆண்ட்ரூஸ் கண்ணீர் மல்குகிறார், “மோகன் இது எவ்வளவு வெட்கக்கேடானது!”
யாரும் பார்த்திராத மேன்மையான போராட்டம்
ஆண்ட்ரூஸ் தென்னாப்பிரிக்காவில் இருந்த குறுகிய காலத்தில் கோகலேவுக்கு காந்தியைப் பற்றி ஒரு கடிதம் எழுதுகிறார்.
தென்னாப்பிரிக்காவில் “அவரது (காந்தியின்) வேலை முடிந்துவிட்டது, மிக மேன்மையாக செய்து முடிக்கப்பட்டிருக்கிறது… அவர் இங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டாக வேண்டும், அவருடைய நலனுக்காகவும் அவருடைய சமூகத்தின் நலனுக்காகவும். ஆமாம்! சமூகத்தின் நலனுக்காக: ஏனென்றால், அவர் இன்னும் இங்கே தங்கியிருந்தால் தனது ஆளுமையால் மற்ற எல்லோரையும் சிறியவர்களாக்கிவிடுவார்; அதன் பிறகு குறைந்தபட்சம் ஒரு தலைமுறைக்காவது இங்கு தலைவர்களே தோன்ற மாட்டார்கள்… இந்த உலகிலேயே மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் அவர்!... பல தசாப்தங்களாக யாரும் பார்த்திராத ஒரு மேன்மையான போராட்டத்தை மேற்கொண்டவர் அவர்…”
1914-ல் ஒரு ஆங்கிலேயர், அதுவும் இன்னமும் இந்தியா திரும்பியிராத காந்தியைப் பற்றி, எழுதியது அப்போதைக்குப் பொருந்தியதைவிட தீர்க்கதரிசனமாகவும் அமைந்ததுதான் சிறப்பு வாய்ந்தது.
முதல் சத்தியாகிரகப் போராட்டம்
தென்னாப்பிரிக்காவில் எட்டு ஆண்டுகள் சத்தியாகிரகப் போராட்டத்தின் முடிவில் மற்றுமொரு சமரசப் பேச்சுவாரத்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்துகொள்ள காந்தி சென்றார்.
ஜெனரல் ஸ்மட்ஸ் இந்த முறை நட்புணர்வோடும் திறந்த மனதுடனும் இருந்தார். இறுதியில் இரண்டு தரப்புக்கும் உடன்பாடு எட்டப்பட்டது. அந்த உடன்பாடு ‘இந்தியர்கள் நிவாரணச் சட்டம்’ என்ற பெயரில் கேப் டவுனில் உள்ள யூனியன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டாம் என்று ஜெனரல் ஸ்மட்ஸ் எல்லோரையும் கேட்டுக்கொண்டதற்குப் பின் 1914 ஜூலை மாதம் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியர்களுக்கு முழுமையான வெற்றி என்று இச்சட்டத்தைச் சொல்ல முடியாதுதான்.
சமரசப் பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பு விடாப்பிடியாக இருக்குமென்றால் அதன் எதிராளிக்கும் ஈகோ இருக்கும்; அதுவும் விட்டுக்கொடுக்காது என்பதை அறிந்தவர் காந்தி. ஆகவே, எதிராளியின் ஈகோவைக் கொஞ்சமாவது சமாதானப்படுத்தும் சமரசத்துக்கு உட்பட்டுத் தனக்குத் தேவையானதைக் கேட்டுப் பெறுவதும் சத்தியாகிரகத்தின் உத்தி என்று கருதினார்.
காந்தி பெற்றுத்தந்த கணிசமான அளவிலான வெற்றி பிற்காலத்தில் தென்னாப்பிரிக்கா முழுமைக்கும் பரவிய சமத்துவ விருட்சத்துக்கான விதைகளுள் ஒன்று.
தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்தான் காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம்.
சத்தியாகிரகத்தில் பெண்கள்
நீடித்த மனஉறுதி, தளராத நம்பிக்கை, எப்படிப்பட்ட வலியையும் இழப்பையும் தாங்கிக்கொள்ளும் குணம், மக்களுக்குப் போராட்டம் குறித்த முறையான வழிகாட்டல் கொடுத்து ஒன்றுதிரட்டல், எதிர்த் தரப்பை நட்புணர்வோடு அணுகுதல், எதிர்த் தரப்பின் இனத்திலிருந்தும் ஏராளமானோரை நண்பர்களாகச் சம்பாதித்துக்கொள்ளுதல் இவற்றால் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் இறுதியில் வெற்றி பெற்றது.
பெண்களும் பெருமளவில் கலந்துகொண்ட முன்னுதாரணமான போராட்டம் அது. சாதி, மத, மொழி ஏற்றத்தாழ்வுகளைத் தூக்கியெறிந்துவிட்டு நடந்த போராட்டம்.
இப்படி இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முன்னோட்டமாக, சிறு வகைமாதிரியாக அமைந்தது தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்.
கோட்பாட்டளவில் இருந்த சத்தியாகிரகத்தை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்ப்பதற்குக் கிடைத்த சிறியதொரு களமாக தென்னாப்பிரிக்கா இருந்தது.
காந்தியும் கஸ்தூர்பா அம்மையாரும்
“நான் தென்னாப்பிரிக்காவில் செய்ததெல்லாம் என் அதிகாரத்துக்கெதிராகத் தன்னளவில் என் மனைவி அனுசரித்த சத்தியாகிரக விதிகளை நான் தேசம் முழுமைக்கும் விரிவாக்கியதேயல்லாமல் வேறு அல்ல” என்று காந்தி பின்னாளில் குறிப்பிட்டிருப்பார்.
அவரது சத்தியாகிரகப் போராட்டத்தின் நதிமூலங்களில் ஒருவராக மட்டுமல்லாமல் உறுதுணையாகவும் கஸ்தூர்பா இருந்தார்.
தனது குடும்பத்தையே அந்தப் போராட்டத்தில் காந்தி களமிறக்கினார். இப்படி பல காரணங்களால்தான், “என் வாழ்க்கையின் மிகச் சிறந்த பகுதியாக நான் கருதுவது எனது தென்னாப்பிரிக்கக் காலகட்டத்தையே” என்று பின்பொருமுறை காந்தி குறிப்பிட்டார்.
போராட்டத்தில் எளியோர்
தென்னாப்பிரிக்காவிலும் காந்தியின் போராட்டங்களில் உறுதுணையாக இருந்தவர்களில் 99 சதவீதத்தினர் அங்குள்ள ஏழை இந்தியர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களுமே.
ஒரு போராட்டத்துக்குத் தேவையான தார்மீக நியாயம் ஏழை எளியோரிடம் மட்டுமே இருக்கிறது என்பதை அறிந்தவர் காந்தி.
அதனால்தான், தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் ஏழை எளியோரைத் தனது போராட்டத் தளபதிகளாக ஆக்கினார்.
காந்திக்குப் பின்னால் நின்ற மக்கள் தங்களை அப்படியே ஒப்புக்கொடுத்துவிட்டார்கள். ஏழை எளியோரிடமிருந்து காந்திக்கு இயல்பாகக் கிடைத்த இந்த நன்னம்பிக்கை தொடர்ச்சியான செயல்பாடுகளுக்குப் பிறகே பணக்கார, படித்த இந்தியர்களிடமிருந்து காந்திக்குக் கிடைத்தது.
புறப்பாடும் வருகையும்
சிறிய களத்திலிருந்து பெரிய களம் நோக்கிச் செல்வதற்காக தென்னாப்பிரிக்காவிலிருந்து ஜூலை 18, 1914-ல் காந்தி புறப்பட்டார். இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து இந்தியாவுக்குக் கிளம்பிய காந்தி ஜனவரி 9, 1915-ல் பம்பாயை வந்தடைந்தார். இந்தியாவில் காந்தி யுகம் தொடங்கிய நாள் அது!