TNPSC Thervupettagam

கான்கிரீட் அறிவோம்!

July 15 , 2021 1113 days 466 0
  • மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று வாழ்விடம். நமது காலத்தில் அதை உருவாக்குவதில் கான்கிரீட்டுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. கான்கிரீட் கட்டிடங்கள் நமது நாட்டின் தட்பவெப்ப நிலைக்கும் பொருளாதார நிலைக்கும் உகந்தவையாக இருக்கின்றன.
  • உலக அளவில் சிமென்ட் தயாரிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஆண்டொன்றுக்கு 23 கோடி டன். இவையெல்லாம் கான்கிரீட் பயன்பாட்டை ஊக்குவிக்கின்றன.
  • 1950-களில் கட்டிடங்கள் வலிமையோடு விளங்க வேண்டும் என்பது மட்டும்தான் பொறியாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. 1970-களில் கட்டிடங்கள் வலிமையுடன் விறைப்புத்தன்மையையும், வளையும் தன்மையையும் அளவாகப் பெற்றிருக்க வேண்டும் என்று கருதினார்கள்.
  • ஆனால், வலிமையோடும் விறைப்போடும் சிறப்பாக இருந்த கான்கிரீட் கட்டிடங்கள்கூட காலப்போக்கில் சிதையத் தொடங்கியதைக் கண்டார்கள். கான்கிரீட்டுக்கு இயற்கையின் தாக்கத்தை எதிர்கொள்ளத் தேவையான, நீடித்து உழைக்கும் திறன் இருக்க வேண்டும் என்று கண்டுகொண்டார்கள்.
  • எண்பதுகளிலிருந்து கான்கிரீட்டில் இந்த மூன்று தகுதிகளும் ஒருசேர அமைந்திருக்க வேண்டும் என்கிற புரிதல் உண்டானது. இந்தப் புரிதல் இயற்கை உணர்த்திய பாடம்.
  • இவற்றுள் முதல் இரண்டு தகுதிகளும் இருக்குமாறு கான்கிரீட் கலவையைக் கட்டமைப்புப் பொறியாளரால் வடிவமைத்துவிட முடியும். ஆனால், கான்கிரீட்டை நீடித்து உழைக்கும் திறனுடன் உருவாக்குவது பலரது ஒத்துழைப்பில் உள்ளது.
  • கான்கிரீட் என்பது பொறியியல்ரீதியாக உருவாக்கப்படும் ஒரு செயற்கைக் கலவை. சிமென்ட்டுடன் மணலையும் கருங்கல் ஜல்லியையும் சேர்த்துத் தண்ணீரைத் தாராளமாக ஊற்றிக் கலக்குவதால் மட்டும் கான்கிரீட் உருவாகிவிடுவதில்லை. தரமான கான்கிரீட் தயாரிப்பதில் சவால்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கான்கிரீட் கலவைக்கு வேண்டிய தண்ணீர்; அது தேவைக்கு அதிகமாக மிகுந்துவிடக் கூடாது.

கட்டிடங்கள் மூன்று வகை

  • கட்டிடங்களை அவற்றில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து மூன்று விதமாகப் பிரிக்கலாம்; கருங்கல் கட்டிடங்கள், செங்கல் கட்டிடங்கள், இரும்புக் கம்பிகளால் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் கட்டிடங்கள்.
  • கருங்கல் கட்டிடங்களின் வயது நான்கு இலக்கத்திலும், செங்கல் கட்டிடங்களின் வயது மூன்று இலக்கத்திலும், கான்கிரீட் கட்டிடங்களின் வயது இரண்டு இலக்கத்திலும் உள்ளன என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
  • முதல் வகைக் கட்டிடங்கள் முற்றிலும் இயற்கை வழங்கிய பொருட்களால் எந்த மாற்றமும் செய்யாமல் உருவாக்கப் பட்டவை. அவை நெடுங்காலம் உழைக்கின்றன. காலத்தை வென்று நிற்கின்றன.
  • இரண்டாம் வகைக் கட்டிடங்கள் சிறிய மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்ட பொருட்களால் கட்டப்பட்டவை. செங்கற்களின் தன்மை இயற்கையோடு ஒத்துப்போகிறது. அதில் பயன்படுத்தப்படும் மண் கலவை இயற்கையாகவே மணற்சத்தால் (silica) செறிவூட்டப் பட்டுள்ளது.
  • ஆதலால், செங்கல் கட்டிடங்கள் தம்மை இயற்கையின் தாக்கத்திலிருந்து ஓரளவு பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. ஆனால், மூன்றாம் வகைக் கட்டிடங்கள் முற்றிலும் செயற்கையான பொருட்களால் கட்டப்பட்டவை, அவற்றின் ஆயுள் குறைவாக உள்ளது.
  • ஆதலால்தான் கான்கிரீட் கட்டிடங்களை உருவாக்குவதில் அதிக கவனம் தேவைப் படுகிறது. கான்கிரீட் என்பது இயற்கையான பொருட்களுக்கு முற்றிலும் புதிய வடிவம் கொடுப்பதன் மூலம் உருவாகிற ஒரு செயற்கைப் பொருள்.
  • கான்கிரீட்டைப் போலவே அதில் பதிக்கப்படும் இரும்புக் கம்பிகளும் இயற்கையான பொருட்களைச் செயற்கையாக மாற்றுவதன் மூலம் உருவானவைதான். எந்த உலோகமும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், அது துருப்பிடிக்கத் தொடங்கிவிடும்.
  • இந்தப் போராட்டத்தில் வெல்கிற விதமாக கான்கிரீட் உருவாக்கப்பட வேண்டும். இந்த சவாலைப் புரிந்துகொண்டால் நீடித்து உழைக்கும் கட்டிடங்களைக் கட்ட முடியும்.

துரு எனும் வில்லன்

  • கம்பிகளை உள்ளே வைத்து கான்கிரீட்டைச் சுற்றிலும் வார்க்கும்போதும், கான்கிரீட்டானது கம்பியை நழுவாமல் இறுகப் பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
  • அதற்கு ஏதுவாகத்தான் முறுக்கப்பட்ட கம்பிகளைப் பயன்படுத்துகிறோம். மேலும், பதிக்கப் பட்ட இரும்புக் கம்பிகளுக்கு கான்கிரீட் ஒரு பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டும். கம்பிகளுக்கும் கான்கிரீட்டின் வெளிப்புறத்துக்குமான இடைவெளி (cover), வடிவமைப்பில் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும்.
  • அந்த இடைவெளி குறைந்தால் கான்கிரீட்டால் கம்பிகளுக்குப் போதிய பாதுகாப்பை அளிக்க முடியாது. கம்பிகளில் துருவேறத் தொடங்கும். கம்பிகள் துருப்பிடித்தால், அதன் செயல்திறன் குறையும்; மேலும் துருவுடன் சேர்ந்து கம்பியின் அளவு பெரிதாகும். இதனால், கம்பியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் கான்கிரீட் விரிசல்விட ஆரம்பிக்கும். இந்த விரிசல்கள் வழியாக நீரும் காற்றும் நுழையும்.
  • இதனால், கம்பி மேலும் வேகமாகத் துருப்பிடிக்கும். கட்டிடம் தனது வீழ்ச்சிக்கான பயணத்தைத் தொடங்கிவிடும். கான்கிரீட் பயன்பாட்டுக்கு வந்தவுடன் மூன்று பெரும் சவால்களை எதிர்கொள்கிறது. முதலாவதாக, பளுவைத் தாங்க வேண்டும்.
  • அடுத்ததாக, வெளிப்புறச் சூழலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கடைசியாக, உட்புறம் புதைக்கப்படுகின்ற கம்பியின் தாக்கத்திலிருந்தும் தப்பித்தாக வேண்டும். மாறாக, இப்படியான போராட்டம் கருங்கல் கட்டிடங்களுக்கோ செங்கல் கட்டிடங்களுக்கோ கிடையாது.

மாற்று இல்லாத கான்கிரீட்

  • எதிர்வரும் காலத்தில் கான்கிரீட்டுக்கு மாற்றாக வேறு ஒரு பொருள் அமைய வாய்ப்பில்லை. இப்படிப்பட்ட ஒரு பொருளை இதே விலையில் தயாரிப்பதும் சாத்தியமில்லை.
  • காலப்போக்கில் கான்கிரீட்டின் இடுபொருட்களில் மாற்றங்கள் வரலாம். ஆனால், கான்கிரீட் என்பது இன்னும் பல காலம் நிலைத்திருக்கும். இயற்கையின் வளத்தை அழித்து கான்கிரீட் தயாரிக்கப்படுகிறது.
  • இரும்புக் கம்பியும் அப்படியே. கான்கிரீட்டுக்கு இப்போதைக்கு மாற்று இல்லை. ஆகவே, இதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
  • கான்கிரீட் முறையாகக் கலக்கப்பட வேண்டும். தண்ணீரின் அளவு சரியாக இருக்க வேண்டும். ஊடுகம்பிகளைச் சரியான இடத்தில் வைக்க வேண்டும். கான்கிரீட்டானது கம்பிகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கம்பிகளில் துருவேற அனுமதிக்கக் கூடாது. தேவைக்கு அதிகமாகக் கம்பிகளைப் பயன்படுத்துவது தவறு. முறையாக நீராற்ற (curing) வேண்டும்.
  • இப்படியெல்லாம் செய்தால், கான்கிரீட்டின் ஆயுட்காலத்தை நிச்சயமாக நீட்டிக்க முடியும். இதற்கெல்லாம் இந்தியத் தரங்களின் பணியகம் (BSI) தேவையான வழிகாட்டு நூல்களை வெளியிட்டிருக்கிறது.
  • அதில் குறிப்பிடப்படும் நடைமுறைகளை உரிய பொறியாளர்களின் ஆலோசனையுடன் செயல்படுத்த வேண்டும்.
  • சிமென்ட்டும் கம்பியும் தயாரிப்பதில் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது; ஏராளமான கரியமில வாயு உற்பத்தியாகி, காற்று மாசுபடுகிறது.
  • இந்த உண்மை தெரிந்த பிறகும் நாம் உருவாக்கும் கான்கிரீட் தரக்குறைவானதாக இருக்குமென்றால், நாம் மிகப் பெரிய குற்றத்தை இழைத்தவர்களாகிறோம். நம் சந்ததியினருக்கு நீடித்து உழைக்கும் கட்டிடங்களை விட்டுச்செல்வது நம் பொறுப்பு.

நன்றி: இந்து தமிழ் திசை (15 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்