TNPSC Thervupettagam

காப்பாற்றப்படுமா கடல் வணிகம்

February 8 , 2024 340 days 307 0
  • முந்தைய காலங்களில் நாடுகளுக்கிடையேயான பயணம் என்பது கடல்வழிப்பயணமாகவே இருந்து வந்துள்ளதுகுறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஆசிய நாடுகளுக்குக் கப்பல்களின் மூலம் அனுப்பப்படும் பொருட்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்து ஆப்பிரிக்க கண்டம் முழுவதையும் சுற்றிவந்து, அதன் பிறகே இந்தியப் பெருங்கடலுக்குள் நுழையமுடிந்தது. இதன் காரணமாக அப்பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்கான கால அளவும், எரிபொருள் செலவும் மிகவும் அதிகரித்தே இருந்தன.
  • மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் விதமாக அமைக்கப்பட்ட சூயஸ் காலவாய் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பயன்பாட்டிற்கு வந்த பிறகு மேற்குலக நாடுகளையும் ஆசிய நாடுகளையும் கடல் வணிகத்தால் இணைப்பது எளிதாகி விட்டது. இதன் காரணமாக, கப்பல் மூலம் பொருட்களை அனுப்பி வைப்பதற்கான காலமும், பொருட்செலவும் குறைந்தன.
  • தற்காலத்தில், மனிதர்களின் வெளிநாட்டுப் பயணம் என்பது வான்வெளிப்பயணமாகவே மாறியுள்ளது. சொகுசுக் கப்பல்களில் இன்பச் சுற்றுலா செல்பவர்களையும், சிறிய கப்பலகள் அல்லது பாய்மரப்படகுகளில் சாகசக் கடற்பயணம் மேற்கொள்ளுபவர்களையும் தவிர்த்துப் பார்த்தால், கடல்வழிப் போக்குவரத்து என்பது முழுவதும் வர்த்தகம் சார்ந்ததாகவே மாறியுள்ளது.
  • அதே சமயம், மீன்வளம் அதிகமாக இருக்கக் கூடிய இடங்களைத் தேடி நெடுந்தூரம் கடற்பயணம் செய்து மீன்பிடிப்பதும் வழக்கத்தில் உள்ளது. இந்திய மீனவர்கள் மட்டுமின்றி, இலங்கை, மலேசியா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீனவர்களும் அரபிக்கடலில் நெடுந்தூரம் பயணித்து கிழக்கு ஆப்பிரிக்காவை ஒட்டிய கடற்பகுதிகளிலும், அரபு நாடுகளின் அருகிலுள்ள கடற்பகுதிகளிலும் மீன்பிடித்து வருகின்றனர்.
  • மேற்கண்ட கடல்வழிகளில் பயணிக்கின்ற மீன்பிடிக் கப்பல்களும், வணிகக் கப்பல்களும் கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உட்படுவதுண்டு. குறிப்பாக, ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள சோமாலியா நாட்டைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சமீபகாலங்களில் வெகுவாக அதிகரித்து வந்திருக்கிறது.
  • இந்திய கடற்படையைப் பொறுத்தவரை இவ்வாறு கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்படுகின்ற கப்பல்களில் உள்ள மீனவர்கள் அல்லது பணியாளர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களைக் காப்பாற்றி வருகின்றனர். சமீபத்தில் கூட இலங்கை, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை கடற்கொள்ளையர்களிடமிருந்து நமது நாட்டுக் கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது.
  • கடந்த சில தினங்களுக்கு முன்பாக சந்தாயக் என்ற புதிய கப்பலை இந்திய கடற்படையில் இணைத்துக் கொண்ட நிகழ்வில் பேசியுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடமாடும் கடற்கொள்ளையர்களை இனியும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், அவர்களை ஒழிப்பதற்கு மேலும் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீன்பிடிக் கப்பல்களிலும், வணிகக் கப்பல்களிலும் செல்பவர்களுக்கு ராஜ்நாத் சிங்கின் அறைகூவல் மிகுந்த ஆறுதலையும் நம்பிக்கையையும் தரக்கூடியதாகும்.
  • இதே போன்று, தமிழக மீனவர்களை அவ்வப்பொழுது வழிமறித்துத் தாக்குகின்ற இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களையும் நமது இந்தியக் கடற்படை வீரர்கள் ஒடுக்டுவது அவசியம்.
  • கடல் வணிகம் சார்ந்த கப்பல்கள் கடற்கொள்ளையர்களால்  தாக்கப்படுவது ஒருபுறம் இருக்க, பல்வேறு நாடுகளில் இயங்கும் தீவிரவாதக் கும்பல்களின் தாக்குதலுக்கும் அவை இலக்காவது சமீப காலத்தில் அதிகரித்துள்ளது.
  • குறிப்பாக, இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையிலான சண்டை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பின்பு, யேமன் நாட்டைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாகப் பயணிக்கும் வணிகக் கப்பல்களை ட்ரோன் மூலம் அடிக்கடி தாக்கி வருகின்றனர்.
  • லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல் தீவிரவாத இயக்கத்தினர் ஹமாஸýக்கு ஆதரவாக இஸ்ரேல் படைகள் மீது அவ்வப்பொழுது தாக்குதல் நடத்துவது போன்று யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள நாடுகளிலிருந்து வருகின்ற வணிகக் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர். இவ்வாறு தாக்குதலுக்குள்ளான சில கப்பல்களை இந்தியக் கடற்படை பத்திரமாக மீட்டு வந்துள்ளது.
  • மேலும், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் ராணுவத்தினரும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அவ்வப்பொழுது தாக்குதல் நடத்தி வருவதுடன் அவ்வமைப்பினர் ஏவும் ட்ரோன்களை வழிமறித்து அழிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
  • ஆயினும், ஹூதி அமைப்பினரின் எதிர்பாராத தாக்குதல்களால் அச்சமுற்றுள்ள வணிகக் கப்பல்களின் உரிமையாளர்கள் செங்கடல் - சூயஸ் கால்வாய் வழியாகத் தங்களின் கப்பல்களை இயக்குவதற்குத் தயங்குவர் என்பது நிதர்சனம்.
  • உலக அளவில் நடைபெறும் கடல் வணிகத்தில் பதினைந்து சதவீதம் அளவிற்குச் செங்கடல் மார்க்கமாகச் செல்லும் வணிகக் கப்பலகள் மூலம் நடைபெறுகின்றது. ஆனால், ஹூதி கிளர்ச்சியாளர்களின் டிரோன் தாக்குதல் விட்டு விட்டுத் தொடர்வதால், ஆசிய பிராந்தியத்தில் இருந்து பயணிக்கும் வணிகக் கப்பல்கள் பழையபடி ஆப்பிரிக்க கண்டம் முழுவதையும் சுற்றிக் கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதைக் குறித்துப் பரிசீலிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
  • இதனால் செங்கடல் - சூயஸ் கால்வாய் மார்க்கமாக நடைபெறும் வணிகம் குறைந்து கொண்டே வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி மட்டுமே நாற்பத்தைந்து சதவீதம் குறைந்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
  • இந்நிலையில், வணிகக் கப்பல்களைத் தாக்குகின்ற கடற்கொள்ளையர்களையும், தீவிரவாதக் குழுக்களையும் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை உலகநாடுகள் அனைத்தும் எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

நன்றி: தினமணி (08 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்