TNPSC Thervupettagam

காப்பீடு காப்பாற்றுமா?

January 20 , 2025 4 days 49 0

காப்பீடு காப்பாற்றுமா?

  • லூய்ஜி நிக்கோலஸ் மாஞ்சியோனே (Luigi Mangione) 26 வயது இளைஞர். இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா இத்தாலியிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர். 2023-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் ட்ரூ கார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். செயற்கை நுண்ணறிவு துறையில் மிகவும் நாட்டம் கொண்டவர். இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட இவர், டிசம்பர் 9-ம் தேதி அல்டூனாவில் இயங்கி வரும் மெக்டொனால்ட் உணவகத்தில் கைது செய்யப்பட்டார்.

கைதுக்கான காரணம் என்ன?

  • அமெரிக்காவின் யுனைடெட் ஹெல்த்கேர் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (CEO) பிரையன் தாம்ஸன் நியூயார்க் நகரில் டிசம்பர் 4-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்ச வழக்கில்தான் லூய்ஜியை போலீஸார் கைது செய்தனர். இவர் மீது 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நீதிமன்ற விசாரணை நடந்து வருகிறது. லூயிஜ் ஏன் கொலை செய்தார் என்பது குறித்த ஒரு காணொலியும் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

கொலைக்கான காரணம் என்ன?

  • லூய்ஜி தனது கைப்பட எழுதிய கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு கைது செய்ததாக, நியூயார்க் நகர காவல் ஆணையர் கூறுகிறார். அதில் அவர், `இந்த சம்பவத்துக்கும் அது பொதுவெளியில் ஏற்படுத்திய அதிர்ச்சிக்கும் நான் மன்னிப்புக் கேட்கிறேன். ஆனால் இது செய்யப்பட்டே ஆக வேண்டும்.
  • இதற்குக் காரணம் `பேராசை பிடித்த இந்த `ஒட்டுண்ணிகள்’ தான். உலகிலேயே அதிக செலவு ஆகக்கூடிய சுகாதாரப் பாதுகாப்பு முறையை அமெரிக்கா கொண்டுள்ளது. அமெரிக்கர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதை விட இந்த நிறுவனங்களின் வருமானமும் லாபமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது’ என காப்பீட்டு நிறுவனங்களைச் சாடியிருக்கிறார்.
  • உயிருக்கோ, உடைமைக்கோ, ஆரோக்கியத்துக்கோ எதிர்பாராதவிதமாக ஏதேனும் ஊறு நேருமெனில் அப்போது ஏற்படக்கூடிய செலவை ஈடுகட்டும் வகையில் பாதுகாப்புக்காவும், முன்னெச்சரிக்கையாவும் சாமானிய மக்கள் காப்பீடு எடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகும் போது அதற்கு ஈடாக பணம் கேட்டு குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் விண்ணப்பிக்கையில் அவை ஏதோவொரு காரணத்தினால் கேட்ட தொகையை விட குறைவாகவோ அல்லது முழுவதுமோ நிராகரித்து விடுகின்றன. இதனால் வெறுப்படைந்த சாமனியர்களில் ஒருவராகத்தான் நாம் லூய்ஜியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

தாமதம், மறுப்பு, துறப்பு…?

  • இந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் கண் டெடுக்கப்பட்ட காலியான வெடியுறையில் `தாமதம், மறுப்பு, துறப்பு (delay, deny and depose)’ என்கிற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்தத் தந்திரத்தைத் தான்காப்பீட்டு நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவது போல இது இருந்தது.
  • காரணம், இதே பெயரில் அதாவது, தாமதம், மறுப்பு, நியாயப்படுத்தல் (Delay, Deny, Defend – Why Insurance Companies Do Not Pay Claims and What You Can Do About It) என்கிற பெயரில் 2010-ம் ஆண்டு ஜே.எம். ஃபைன்மென் (Jay M. Feinman) காப்பீட்டு நிறுவனங்கள் எப்படியெல்லாம் பாலிசிதாரர்களின் உரிமைக்கோரலை மறுக்கின்றன, இழுத்தடிக்கின்றன, அதன் மூலம் அந்நிறுவனங்கள் எவ்வளவு லாபம் சம்பாதிக்கின்றன என்பது குறித்து எழுதியிருந்தார்.
  • இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இந்த நூல் அமோகமாக விற்பனையாகிறது. அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் அதிகம் என்பதால் பெரும்பாலானவர்கள் காப்பீடு எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால் உடல் ஆரோக்கியமோ, உடைமையோ பாதிப்புக்குள்ளாகும்போது இந்நிறுவனங்கள் பாலிசிதாரர்கள் இழப்பீடு கோரி விண்ணப்பிக்கும் மனுவை அவ்வளவு எளிதாக ஏற்பதில்லை (delay), அப்படியே ஏற்றுக் கொண்டாலும் வேண்டிய தொகையை வழங்குவதில்லை (deny), அப்படி மறுப்பதற்கான காரணங்களையும் சட்டரீதியாக நியாயப்படுத்தி (defend) அதில் வெற்றியும் பெற்று வருகின்றன.
  • சில நிறுவனங்கள் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து விடுவதுமுண்டு. இதனால் இந்நிறுவனங்களின் வருமானம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் சாமானியர்கள் ஒரு கையறுந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
  • லூய்ஜி இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டாரா, இல்லையா எனத் தெரியவில்லை. ஆனால் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சாமானியர்களிடையே அவருக்கான ஆதரவு அதிகரித்து வருவது அவர் பயன்படுத்தும் சமூக ஊடகங்களின் வாயிலாகத் தெரிய வந்திருக்கிறது. X தளத்தில் அவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை இப்போது 5 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

இந்தியாவில் நிலைமை என்ன?

  • இந்தியாவைப் பொருத்தவரை எந்தவொரு பெரிய காப்பீட்டு நிறுவனமும் அதனுடைய உரிமைக்கோரல் தீர்வு விகிதத்தை (Claim Settlement Ratio) 95 சதவீதத்துக்கு மேலாகவே காட்டி வருகின்றன. ஆனால் IRDAI அமைப்பின் சமீபத்திய அறிக்கை மூலம் ஹெல்த் இன்சூரன்ஸைப் பொறுத்தவரையில் உரிமைக்கோரல் நிராகரிப்பு விகிதம் 2023-ம் ஆண்டை விட 2024-ல் 19% அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
  • அதாவது, ரூ26,000 கோடி அளவுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் உரிமைக்கோரலை நிராகரித்திருக்கின்றன. அதுபோல மக்களிடையே காப்பீடு எடுக்கும் வழக்கமும் குறைந்து வருகிறது. 2022-23-ம் ஆண்டில் ஆயுள் காப்பீடு மற்றும் இதர காப்பீடுகளின் ஊடுருவல் (penetration) 4% தான். அரசு வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் சுமார் 55 கோடி பேர் இணைந்திருக்கிறார்கள்.
  • எனவே, இப்போது சாமானியர்களின் முன் இருக்கும் பிரச்சினை காப்பீடு எடுத்தாலும் தேவைப்படும் போது அது நமக்கு ஆபத்பாந்தவனாக வந்து உதவிசெய்யுமா? அப்படி உதவி செய்தாலும் எந்த அளவுக்கு உதவி செய்யும் என்பதுதான். இல்லை அமெரிக்காவைப் போல நிராகரிப்பு அதிகரித்து சாமானியர்களை கையறு நிலைக்குக் கொண்டு செல்லுமா?

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்