TNPSC Thervupettagam

காமராஜரின் 1954-1963: வழிகாட்டும் ஒரு தசாப்தம்!

July 15 , 2019 1941 days 1020 0
  • கல்வித் துறையில் இன்று தமிழகம் எட்டியிருக்கும் முதலிடத்துக்கு வித்திட்ட ஆட்சியாளர்களில் முதன்மையானவர் காமராஜர். மதிய உணவு, இலவசச் சீருடை, பள்ளிச் சீரமைப்பு இயக்கம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்களை காமராஜர் முன்னெடுத்தபோது, அவருடன் ஒன்பது ஆண்டுகள் உறுதுணையாக நின்று அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர் அப்போதைய கல்வித் துறை இயக்குநரான நெ.து.சுந்தரவடிவேலு. ‘நினைவு அலைகள்’ என்ற தலைப்பில் 3 பகுதிகளாக ஏறக்குறைய 2000-க்கும் மேற்பட்ட பக்கங்களில் வெளிவந்த சுந்தரவடிவேலுவின் தன்வரலாறு, காமராஜரை அறிந்துகொள்ள மட்டுமின்றி, இன்றைய அரசியல் சூழலில் அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களையும் நமக்கு உணர்த்துகிறது.
கோவிந்தராஜுலு
  • ராஜாஜி ஆட்சிக் காலத்திலும் பின்பு காமராஜர் ஆட்சிக் காலத்திலும் கல்வித் துறை இயக்குநராக இருந்த கோவிந்தராஜுலு, ஆந்திராவின் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அவரை அடுத்து யாரை இயக்குநராக நியமிப்பது என்ற கேள்வி எழுந்தபோது, இந்திய ஆட்சிப் பணித் துறை அதிகாரிகளை நியமிக்காமல், கல்வித் துறையின் மீது ஆர்வமுள்ள 42 வயது சுந்தரவடிவேலுவை நியமித்தார் காமராஜர்.
  • கல்வித் துறைக்குப் பொறுப்பேற்கும் அதிகாரி ஆட்சிப் பணித் துறை அதிகாரியாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும், அத்துறையில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்ற காமராஜரின் எதிர்பார்ப்புக்குப் பலன் கிடைத்தது.
  • ராஜாஜியின் ஆட்சிக் காலத்தில் கல்வித் துறையின் துணை இயக்குநராகப் பணிபுரிந்தவர் சுந்தரவடிவேலு. ராஜாஜியின் நன்மதிப்பு பெற்றவர் என்றாலும் அவரைத்தான் கல்வித் துறை இயக்குநராக நியமித்தார் காமராஜர்.
துறை மாற்றம்
  • ‘என்னை ஐயுறாமல் ஏழைப் பங்காளர்களில் ஒருவராகக் கண்டுகொண்டார்’ என்று நெகிழ்ந்திருக்கிறார் சுந்தரவடிவேலு. ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் சிறப்பாகச் செயல்படும் அதிகாரிகளையும்கூட துறை மாற்றம் செய்யக்கூடிய இன்றைய நிலையில், இதுவும்கூட காமராஜரிடம் கற்க வேண்டிய பாடம்தான்.
  • குலக்கல்வித் திட்டம் என்று அறியப்படும் அரை நாள் படிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே சுந்தரவடிவேலுவின் கருத்தாக இருந்தது. அதுகுறித்து அவர் அளித்த குறிப்பு முதல்வர் ராஜாஜியைச் சென்றடையாமல் இயக்குநர் அலுவலகத்திலேயே முடங்கிவிட்டது.

நன்றி: இந்து தமிழ் திசை (15-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்