- கார்ல் ஷ்மிட் (Carl Schmitt, 1888-1985), சென்ற வாரம் விவாதித்த மாக்கியவெல்லியைவிட சர்ச்சைக்குரிய சிந்தனையாளர். அதற்கு ஒரு முக்கியக் காரணம் - ஜெர்மானியரான அவர், ஹிட்லரின் நாஜிக் கட்சியை ஆதரித்ததுதான். அது ஏதோ தற்செயலாக நடந்தது என்று கூற முடியாதபடி, அவருடைய அரசியல் தத்துவமும் சுதந்திரவாத மக்களாட்சித் தத்துவத்தைத் தீவிரமாக விமர்சிப்பது மேலும் சிக்கலை உண்டாக்குகிறது.
- ஆனாலும் அவருடைய சில கருத்தாக்கங்கள் நம்முடைய நிகழ்கால அரசியலைப் புரிந்து கொள்ள உதவும் சாத்தியத்தை மறுக்க முடியாது. அவருடைய புகழ்பெற்ற நூல், நூறாண்டுகளுக்கு முன் வெளியான ‘The Concept of the Political’ (1923). மிகச் சிறிய நூலான இது, ஆழமான கோட்பாட்டுப் பார்வைகள் சிலவற்றை ரத்தினச் சுருக்கமாகத் தொகுத்துக் கூறுவதால், இன்றளவும் இந்நூலுக்கான விளக்கங்கள், விரிவுரைகள் எழுதப்படுவதுடன் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது.
- இந்த நூலின் தலைப்பைத் தமிழில் எழுதுவதிலேயே ஒரு சிக்கல் இருக்கிறது. காரணம், ஆங்கிலத்தில் பொலிடிகல் (political) என்ற சொல் பொதுவாக உரிச்சொல்லாகப் புழங்கும். பாலிடிக்ஸ் (politics) என்ற சொல் பெயர்ச்சொல்லாகப் புழங்கும். ஆனால், ஷ்மிட் நூலின் தலைப்பில் ‘பொலிடிகல்’ என்பது பெயர்ச்சொல்லாக வழங்குகிறது.
- அதனைத் தொடர்ந்து பாலிடிக்ஸ், பொலிடிகல் இரண்டுமே ஆங்கிலத்தில் கல்விப்புல எழுத்தில் பெயர்ச்சொற்களாகப் பாவிக்கப்படுகின்றன. இரண்டு சொற்களுக்கும் உள்ள அர்த்தங்கள் வேறுபடுகின்றன. ‘பாலிடிக்ஸ்’ என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரத்தைக் குறிப்பதாகவும், ‘பொலிடிகல்’ என்பது அந்த ஒழுங்கை மீறிய முரண்களின் செயல்பாட்டைக் குறிப்பதாகவும் அர்த்தப்படுகிறது.
- தமிழில் பெயர்ச்சொல், உரிச்சொல் இரண்டாகவும் நாம் ‘அரசியல்’ என்ற வார்த்தையைத்தான் உபயோகிக்கிறோம். உதாரணமாக, பொலிடிகல் பார்ட்டி (political party) என்பதை அரசியல் கட்சி என்கிறோம். இதனால் ‘பொலிடிகல்’ என்பதைப் பெயர்ச்சொல்லாக நாம் தமிழில் கூற புதிய கலைச்சொல்லை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.
- இப்போதைக்கு அதை முரணரசியல் என்று வைத்துக்கொள்வோம். அதாவது, பாலிடிக்ஸ் (politics) என்பது அரசியல்; பொலிடிகல் (political) என்பது முரணரசியல். ஷ்மிட்டின் நூலின் பெயரை நாம் ‘முரணரசியல் என்ற கருத்தாக்கம்’ என எடுத்துக்கொள்ளலாம்.
- அரசியலின் ஊற்றுக் கண் எது? - மனித சிந்தனைப் புலங்கள் பலவும் ஒரு முக்கிய வேறுபாட்டைக் கவனப்படுத்துவதில்தான் சூல் கொள்வதாக ஷ்மிட் சுட்டிக்காட்டுகிறார். உதாரணமாக, அறம் சார்ந்த சிந்தனை என்பது நன்மைக்கும் தீமைக்குமான வேறுபாட்டிலிருந்து கிளைக்கிறது. அழகியல் என்பது அழகுக்கும் அவலட்சணத்துக்குமான வேறுபாட்டிலிருந்து கிளைக்கிறது. பொருளாதாரம் என்பது லாபத்துக்கும் நஷ்டத்துக்குமான வேறுபாட்டிலிருந்து கிளைக்கிறது.
- அப்படியானால், அரசியலைச் சூல் கொள்ளும் வேறுபாடு என்பது என்ன என்ற கேள்வியை எழுப்பு கிறார் ஷ்மிட். அவருடைய புகழ்பெற்ற விடை என்னவென்றால் நட்புக்கும் பகைக்கும் இடையிலான வேறுபாடே அரசியலைச் சூல் கொள்கிறது என்பதுதான். அதாவது, நண்பர்களையும் எதிரிகளையும் வேறுபடுத்துவதுதான் அரசியலின் மூலாதாரம்.
- தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு நண்பரோ எதிரியோ இருப்பது அரசியலாகாது. பொதுவாழ்வில் நண்பராகவோ எதிரியாகவோ இருப்பதுதான் அரசியல். அதாவது, நண்பர்களாக விளங்கும் ஒரு குழுவினருக்கு எதிரியாக இன்னொரு நண்பர்கள் குழு விளங்க வேண்டும். அப்படிப் பொதுமைப்படுத்தப்பட்ட நட்பும் பகையும்தான் அரசியலை உருவாக்க முடியும். அப்படி எதிரெதிரான அணிகள் உருவாவதை நாம் முரணரசியல் எனக்கொண்டால் அதுவே அரசியலின் அடிப்படை.
முரணரசியலின் அடிப்படை என்ன?
- இரண்டு குழுக்களுக்கு இடையே முரண் தோன்றுவதற்குக் காரணம் எதுவாக வேண்டு மானாலும் இருக்கலாம். ஆனால், அந்தக் காரணங்களையும் கடந்ததாக அந்த முரண் மாறும்போதுதான் அது அரசியலின் தோற்றுவாயாக மாறும். உதாரணமாக, எதிரி தீயவராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; நண்பர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும் என்பதுமில்லை.
- அதேபோல வேறுபட்ட சமூக அடையாளங்களான மதமோ மொழியோ இனமோ பொருளாதார நலன்களோ முரணின் தோற்றுவாயாக இருந்தாலும், முரணின் இயக்கம் அந்தத் தொடக்கநிலைக் காரணங்களைக் கடந்து செல் லும்போதுதான் அரசியல் பிறக்கும் என்கிறார் ஷ்மிட். அதாவது, முரண், தூய அரசியல் முரணாகப் பரிணமிக்க வேண்டும்.
- போரும் பொது ஒழுங்கின் அமைதியும்: எதிரிகள், பகைமை என்று சொல்லும்போது அது போருக்கு இட்டுச்செல்லுமா என்ற கேள்வி எழும். போரின் சாத்தியம் இல்லாவிட்டால், முரணரசியல் என்பதோ அரசியல் என்பதோ சாத்தியமில்லை என்பதே ஷ்மிட்டின் பதில்.
- அதாவது, முரணரசியல் போரில்தான் முடிய வேண்டும் என்பதில்லை. ஆனால், போரின் சாத்தியம் இல்லாமல் முரணரசியல் உருவாகாது. நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதும், எதிரியின் உயிரைப் பறிப்பதும் உச்சபட்ச சாத்தியங்களாக விளங்கும்போதுதான் முரணரசியல் இயக்கம் கொள்கிறது என்று கருதுகிறார் ஷ்மிட்.
- சுதந்திரவாதச் சிந்தனை சட்டதிட்டங்களுக்கு உள்பட்ட ஒரு பொது ஒழுங்கை உருவாக்க முயல்கிறது. அதில் அனைவரும் கூடி உருவாக்கும் அரசமைப்புக்கு உட்பட்டு எல்லா முரண்களையும் விவாதித்தும், பேரம் பேசியும் தீர்த்துக்கொள்ளும் முறைகள் வகுக்கப்பட்டு, அமைதி நிலவ வேண்டும் என்ற எண்ணம் முன்வைக்கப்படுகிறது. அப்படியான ஒரு மக்களாட்சிச் சமூகத்தில் அரசு என்பதன் இறையாண்மை என்னவாகிறது என்ற கேள்வியை எழுப்புகிறார் ஷ்மிட்.
- இறையாண்மை என்பது ஒரு புள்ளியில் குவியாமல், சட்டத்தின் ஆட்சியாகவும், மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியாகவும் பரவி, சுயாட்சி வடிவங்கள் ஏற்படுகின்றன என்பதை அவர் கேள்விக்கு உட்படுத்துகிறார். அப்படியான சமூகங்களிலும் எந்த ஒரு நெருக்கடி நிலையிலும் இறையாண்மை என்பது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் என்றும், எல்லா சட்டங்களையும் மீறி விதிவிலக்குகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் என்றும் ஷ்மிட் கூறினார்.
- தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பெரும்பான்மைக்காக முரண்பட்டு மோதுவதையும், அரசமைக்கும் கட்சிகள் சட்டங்களை வளைக்க முற்படுவதையும், பல்வேறு சமூகக் குழுக்களும் தொடர்ந்து உரிமைகளுக்காகப் போராடுவதையும் நாம் கவனத்தில் கொள்ளும்போது, முரணரசியல் (political) என்ற கருத்தாக்கம் அரசியலை விளங்கிக்கொள்ள உதவுவதை உணர முடியும். பல்வேறு சமூக முரண்களின் அணியாக்கங்களே நமது அரசியல் கட்சிகள்.
நன்றி: இந்து தமிழ் திசை (31 – 07 – 2023)