TNPSC Thervupettagam

காற்றின் வழி கரோனா

September 29 , 2020 1573 days 717 0
  • கரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது என்பதை ஒப்புக்கொள்ளும் வழிகாட்டும் நெறிமுறைகளை நோய்க் கட்டுப்படுத்தல், தடுப்புக்கான மையம்திருத்தி அமைத்துக்கொண்டிருக்கிறது; காற்றில் உள்ள துகள்களைச் சுவாசிப்பதால் இந்த வைரஸ் பிரதானமாகப் பரவுகிறது என்று இதன் மூலம் சுட்டிக்காட்டுகிறது.
  • மோசமான காற்றோட்டம் உள்ள, மூடிய இடத்தில் தொற்று உள்ள நபருடன் வெகு நேரம் இருந்தால் (5 மைக்ரானுக்கும் குறைந்த அளவுள்ள) காற்றுத் துகள்களால் வைரஸ் பரவல் ஏற்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் ஏராளமாகக் கிடைத்த பிறகு இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
  • வைரஸியலுக்கான வூஹான் மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நேச்சர்இதழில் பிப்ரவரியில் வெளியிட்ட கட்டுரையில் காற்றுவழிப் பரவல் என்ற உத்தேசத்தை முன்வைத்தனர்.
  • அதில் கரோனாவை அடையாளம் கண்டு விவரித்ததுடன், அந்த வைரஸ் தன்னைப் பிணைத்துக்கொள்ளும் ஏற்பியையும் உறுதிப்படுத்தினர்.
  • காற்று வழியாக கரோனா பரவும் சாத்தியத்தை அடையாளம் கண்டுகொள்ளதேசிய, சர்வதேச அமைப்புகளுக்கும் மருத்துவ சமூகத்துக்கும் 200-க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் திறந்த மடல் வெளியிட்ட பின் ஜூலை 9 அன்று உலக சுகாதார நிறுவனம், மூடிய இடங்களில் காற்று மூலம் கரோனா வைரஸ் பரவலாம் என்பதை அங்கீகரித்தது.
  • டைமண்டு பிரின்ஸஸ் கப்பலைத் தொடர்ந்து தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தேவாலயங்கள், சிறைகள், முதியோர் இல்லங்கள், ஆஸ்திரியாவின் பனிச்சறுக்கு விடுதிகள், அமெரிக்காவின் வாஷிங்டனில் ஒரு தேவாலயம் என்று மூடிய அமைப்பு கொண்ட பல இடங்களிலும் தொற்றுகள் பெருமளவு ஏற்பட்டுவருவதற்குச் சான்றுகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.
  • இப்படி இருக்கும்போது, உலக சுகாதார நிறுவனமும் நோய்க் கட்டுப்படுத்தல், தடுப்புக்கான மையமும் வெகு நாட்கள் இது சார்ந்து மக்களை எச்சரிக்கத் தவறியது மோசமான முன்னுதாரணம்.
  • இதை மறுப்பதற்கான தரவுகளைக்கூட அவை திரட்டவில்லை. உலகளாவிய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டும் நெறிமுறைகள் ஏதும் இல்லாத சூழலில், சில நாடுகள் தாங்களாகவே சில முடிவுகளை எடுத்திருக்கின்றன.
  • மூடிய இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளைத் தடை செய்திருப்பதன் மூலம் பெருமளவிலான தொற்றை அந்த நாடுகள் தவிர்த்திருக்கின்றன.
  • காற்றுத் துகள் வழியான பரவலைச் சற்று முன்னதாக அங்கீகரித்து சர்வதேச அமைப்புகள் எச்சரித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான தொற்றுகளைத் தவிர்த்திருக்க முடியும்.
  • டைமண்டு பிரின்ஸஸ் கப்பலைப் போலல்லாமல் இன்னொரு கப்பலில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்ததால் அவர்களில் கணிசமானோருக்குத் தொற்று ஏற்பட்டும்கூட அதில் 81% பேருக்கு அறிகுறியற்ற தொற்றுதான் ஏற்பட்டது.
  • மற்ற இடங்களிலும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்ததால் இதே மாதிரியான நிலை ஏற்பட்டிருக்கிறது. காற்றுத் துகள் வழியான பரவல் தற்போது உறுதிசெய்யப்பட்டிருப்பதால் கூட்டமான இடங்களையும் காற்றோட்டம் இல்லாத இடங்களையும் தவிர்க்க வேண்டும்.
  • காற்றுத் துகள் வழியாக ஆறு அடிகள் தாண்டிகூட இந்த வைரஸ் பரவுவது ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அல்லது அப்போதும்கூட தொற்றைத் தடுப்பதற்கான ஒரே வழி அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வதுதான்.

நன்றி: தி இந்து (29-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்