TNPSC Thervupettagam

காற்றிலிருந்து தண்ணீர்

December 26 , 2019 1844 days 798 0

காற்றிலிருந்து தண்ணீர்

  • தண்ணீர்த் தட்டுப்பாடு மிகுந்த இந்தக் காலத்தில் தண்ணீரை எந்தெந்த ஆதாரங்களில் இருந்தெல்லாம் உற்பத்திசெய்ய முடியும் என்ற முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதிதான் காற்றிலிருந்து தண்ணீரை எடுப்பதும்.
  • நாட்டிலேயே முதன்முறையாக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ‘காற்றிலிருந்து தண்ணீர் உற்பத்திசெய்யும் கருவி’ நிறுவப்பட்டிருக்கிறது. இதில் உற்பத்திசெய்யப்படும் தண்ணீரானது பாட்டிலுடன் ஒரு லிட்டர் ரூ.8-க்கு வழங்கப்படுகிறது, பாட்டிலைக் கொண்டுவந்தால் ஒரு லிட்டர் ரூ.5. மழை பெய்கிறதோ இல்லையோ காற்றில் ஈரப்பதம் எப்போதும் இருக்கும். அந்த ஈரப்பதத்திலிருந்துதான் இந்தக் கருவி தண்ணீரை உற்பத்திசெய்கிறது.
  • முதலில் காற்றை உள்வாங்கிக்கொள்ளும் இந்தக் கருவி அதிலுள்ள மாசுப் பொருட்களை அகற்றி சுத்தப்படுத்துகிறது. பிறகு, காற்றிலுள்ள ஈரப்பதத்தைத் தனியாகப் பிரிக்கிறது. தேவையான கனிமச் சத்துகளைச் சேர்த்ததும் குடிப்பதற்கேற்ற தண்ணீர் தயாராகிறது. இந்தக் கருவி ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் வரை தண்ணீரை உற்பத்திசெய்கிறது.
  • கூடிய விரைவில் இந்தத் திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவலர்களுக்கே கண்காணிப்பு

  • எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் ஊடுருவியிருக்கின்றன. கண்காணிப்புச் சமூகமாக நாம் மாறிவிட்டோம் என்பது ஒரு பக்கம் வருத்தமளிக்கும் விஷயம் என்றாலும், சில நேரங்களில் இந்த கேமராக்களுக்குத் தேவையும் ஏற்பட்டிருக்கிறது.
  • கேரளத்தில் காவல் துறையில் சேர்பவர்களுக்காக நடத்தப்படும் தேர்வுகளில் தற்போது கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
  • இதற்கு முன்பு நடந்த தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளின் எதிரொலியே இந்த நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது. பதிவுசெய்யப்பட்ட காட்சிகள் தேர்வு முடிந்து தரப்பட்டியல் வெளியாகி அது காலாவதியாகும் தேதிவரை வன்வட்டில் (Hard disk) சேகரித்து வைக்கப்படுமென்று தெரிகிறது. தேர்வுத்தாள் தயாரிப்பது, தேர்வு நடத்துவது, தேர்வுத் தாள்களைத் திருத்துவது எல்லாம் காவலர்களால் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இந்தத் தேர்வுகளின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்குக் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படவிருக்கின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (26-12-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்