- பூமியில் எல்லா இடங்களிலும் காற்று இருக்கிறது. இந்தக் காற்று எப்படி உருவாகிறது என்று கேட்டால், மரங்கள் அசைவதால்தான் காற்று வீசுகிறது என்பார்கள். ஆனால், அது உண்மை அல்ல.
- காற்று உருவாவதில்லை. அது ஏற்கெனவே நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்துள்ளது. அவற்றை நாம் பார்க்க முடியாது. உணரத்தான் முடியும். வளிமண்டலத்தில் காணப்படும் ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் ஆகிய வாயுக்களின் கலவையைத்தான் நாம் காற்று (Air) என்கிறோம். இந்த வாயுக்களின் நகர்வைத்தான் காற்று வீசுவதாகக் (Wind) கூறுகிறோம்.
- உண்மையில் காற்று வீசுவதற்குக் காரணம் சூரியன்தான். சூரியனின் வெப்பம் நம் பூமியைத் தாக்குகிறது. ஆனால், இந்த வெப்பம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக விழுவதில்லை. நமது பூமியின் பரப்பில் இருக்கும் மலை, கடல் உள்ளிட்ட பலவற்றின் காரணமாகச் சமனற்ற நிலையில் வெப்பம் பரவுகிறது.
- இதில் வெப்பம் அதிகமாக விழும் பகுதிகளில் உள்ள வாயுக்கள் அடர்த்தி இழந்து மேல் நோக்கி நகர்கின்றன. இதனால், அந்த இடத்தில் குறைந்த காற்றழுத்தம் (Air Pressure) ஏற்படுகிறது. அதே நேரம் வெப்பம் குறைவாக விழும் பகுதிகளில் வாயுக்களின் அடர்த்தி அதிகரித்து கீழ் நோக்கி நகர்கின்றன. இதனால், அந்தப் பகுதிகளில் காற்றழுத்தம் அதிகரிக்கிறது.
- ஒரு பகுதியில் உள்ள வாயுக்கள் கீழ் நோக்கி அழுத்தப்படும்போது அது இயல்பாகவே அருகே உள்ள குறைந்த அழுத்தம் நிலவும் பகுதிக்குத் தள்ளப்படும் அல்லவா? அவ்வாறு தள்ளப்படும்போது ஏற்படும் விசையைத்தான் நாம் காற்று வீசுவதாகக் கருதுகிறோம்.
- எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் பலூனை நன்றாக ஊதி அதன் முனையைத் திறந்தால் உள்ளே அழுத்தப்பட்ட காற்று வெளியே அழுத்தம் குறைவான பகுதிக்குப் பீறிட்டு வருகிறது அல்லவா? அதேபோலத்தான் நமது சுற்றுப் பரப்பிலும் நிகழ்கிறது.
- ஏன் வாயுக்கள் வெப்பத்தைப் பொறுத்து மேலேயும் கீழேயும் நகர வேண்டும்?
- வாயுக்கள் என்பவை மூலக்கூறுகளால் (Molecules) உருவானவை. இந்த மூலக்கூறுகள் வெப்பத்துக்கு உள்ளாகும் போது முதலில் அவை ஒன்றைவிட்டு இன்னொன்று விலகி ஓடுகின்றன. இதனால், அவற்றின் அடர்த்தி குறைவதால் மேல் நோக்கிச் செல்கின்றன. இதுவே வாயுக்கள் குளிரும்போது அவற்றின் மூலக்கூறுகள் மீண்டும் ஒன்றோடு இன்னொன்று அருகில் வருவதால், அவற்றின் அடர்த்தி அதிகரித்து கீழ் நோக்கி நகர்கின்றன.
- பொதுவாகப் பூமியின் நிலநடுக்கோட்டுக்கு (Equator) அருகேயுள்ள பகுதிகளில் அதிக வெப்பம் உள்வாங்கப் படுவதால் அங்கே காற்றழுத்தம் குறைவாக இருக்கும். ஆனால், வட, தென் துருவங்களில் சூரிய வெப்பம் குறைவாக விழும் என்பதால் அங்கே காற்றின் அழுத்தம் அதிகமாக இருக்கும். இதற்காகத் துருவங்களில் உள்ள வாயுக்கள்தாம் நிலநடுக்கோட்டுக்கு நகர்ந்து வந்து காற்றாக வீசுவதாகக் கருதிவிட வேண்டாம்.
- உலகம் முழுவதும் உள்ள காற்றின் உருவாக்கத்துக்குப் பூமியின் சுழற்சிக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. ஒரு பகுதியில் உருவாகும் காற்று பூமியின் சுழற்சி காரணமாகப் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கிறது. இதை நாம் கொரியாலிஸ் விளைவு (Coriolis effect) என்கிறோம்.
- இதுபோல் காற்றின் அழுத்தம், வெப்பம், பூமியின் சுழற்சி, பூமியின் சாய்மானம் ஆகியவை எல்லாம் இணைந்துதான் காற்றின் திசையையும் அதன் வீரியத்தையும் முடிவு செய்கின்றன. இவற்றின் விளைவுதான் நம் மீது வீசும் காற்று மனதை வருடும் தென்றலாக இருக்க வேண்டுமா, மனிதர்களையே தூக்கிச் செல்லும் புயலாக இருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கிறது.
- கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்கியிருக்கிறீர்களா? சென்னை மெரினா கடற்கரையில் மரங்களே கிடையாது. பிறகு எப்படி அவ்வளவு வேகமாகக் காற்று வீசுகிறது? இதற்கான விடையும் மேலே சொன்ன விளக்கத்தில்தான் இருக்கிறது.
- சூரிய வெப்பம் நிலத்திலும் கடலிலும் விழும்போது அதன் தாக்கம் சரிசமமாக இருக்காது. சூரிய வெப்பத்தின் தாக்கம் நிலத்தில் அதிகமாக இருக்கும் என்பதால் அங்கே இருக்கும் வாயுக்கள் மேல் நோக்கி நகர்ந்துவிடும். அதே நேரம் வெப்பத்தின் தாக்கம் நீரில் குறைவாகத்தான் இருக்கும் என்பதால் அங்கே காற்றழுத்தம் அதிகரிக்கும். இப்போது அங்கே இருக்கும் வாயுக்கள் நிலத்தை நோக்கித் தள்ளப்படும்போது அது காற்றாக வீசுகிறது.
- அடுத்தமுறை யாராவது கேட்டால், மரம் அசைவதால் காற்று வீசவில்லை, காற்று வீசுவதால்தான் மரம் அசைகிறது என்பதை உறுதியாகச் சொல்லிவிடுங்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 09 – 2023)