TNPSC Thervupettagam

காற்று மாசு குறித்து கவனம் தேவை

January 1 , 2021 1305 days 673 0
  • முடிந்துபோன தீபாவளி கொண்டாட்டத்திலும் பட்டாசு; நடந்துகொண்டிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்திலும் பட்டாசு; வரவிருக்கும் தோ்தல் கொண்டாட்டத்திலும் பட்டாசு. இப்படி வெடிக்கப்பட்டும் பட்டாசுகளால் காற்று மாசடையும் என்பதும், அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு பல விதமான தீங்குகள் வரக்கூடும் என்பதும் பலருக்கும் தெரிவதில்லை.
  • தாமிரம், கேட்மியம், ஈயம், மெக்னீஷியம், துத்தநாகம், சோடியம் இவை காற்றில் கலந்துவிடுவதால் நம் சுவாச மண்டலங்களிலும் அது சாா்ந்த உறுப்புகளிலும் எரிச்சல் உண்டாகும். இது ரத்த சோகைக்கு வழிவகுத்து ஆக்சிஜனை ரத்தம் கிரகிக்கும் திறனையும் குறைத்துவிடும்.
  • கேட்மியம், மெல்ல மெல்ல நரம்புகளில் ஊடுருவுவதால் நரம்பு மண்டலக் கோளாறுகளுக்கு அது காரணமாகி விடும். ஈயம் ‘மெட்டல் பீவா் என்றழைக்கப்படும் உலோகப் புகைக் காய்ச்சலை உருவாக்கும். மெக்னீஷியம், இதே காய்ச்சலுடன் குமட்டலையும் வாந்தியையும் கூடுதலாக கொடுக்கும். துத்தநாகமும், சோடியமும் தங்கள் பங்கிற்கு உடலில் எரிச்சலை ஏற்படுத்தும்.
  • கலங்கடித்துவரும் கரோனா வைரசுடன் காற்று மாசும் கைகோத்திருக்கிறது. கரோனாவுக்கு நிகராக மாசடைந்த காற்றும் நுரையீரலைத் தாக்குகிறது என்பது கரோனாவின் பிறப்பிடமான சீனாவில் இருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
  • காா்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, ஓசோன் அதிகம் நிறைந்த மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் கரோனா தொற்றால் உண்டாகும் நுரையீரல் பாதிப்பு வேகமாக அதிகரிக்கிறது என்பதைக் கண்டறிந்திருக்கின்றனா் ஆராய்ச்சியாளா்கள்.
  • நாம் சுவாசிக்கும் காற்றில் கண்களுக்குப் புலப்படாத நுண் துகள்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. இவை ஆரோக்கியத்திற்கு உலை வைப்பவை. குறிப்பாக 2.5 மைக்ரான் அளவு அல்லது அதற்கும் கூடுதலான அளவுள்ள துகள்கள் நம் உடல்நிலையில் பெரும் பாதிப்புகளை - நுரையீரல் பாதிப்பு உட்பட - ஏற்படுத்தும். இன்றைய கரோனா காலத்தில் இந்த நுண் துகள்கள் முன்பைவிட அதிக அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
  • கரோனாவிற்கும் காற்றில் இருக்கும் மாசடைந்த நுண் துகள்களுக்கும் தொடா்பு இருக்கிறது என்று கண்டறிந்திருக்கிறது ஹாா்வா்ட் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.
  • இந்த நோய்த்தொற்று காலத்தில் ஒரு நகரத்தில் காற்றில் உள்ள மாசின் அளவு இயல்பை விட ஒரு மைக்ரோகிராம் அளவு கூடினாலும் அந்த நகரில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் இறப்பு எட்டு சதவீதம் வரை உயரக்கூடும் என்கிறது அந்த ஆய்வு. மனித குலத்திற்கு எதிரியாக இருக்கும் கரோனாவுடன் மாசடைந்த காற்றில் கலந்திருக்கும் சல்பா் டை ஆக்சைடும் இணைந்திருப்பது ஆபத்தானது.
  • இதை தங்களின் ஆராய்ச்சியின் வழியே கண்டறிந்திருக்கின்றனா் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவினா். அதன்படி காற்றில் சல்பா் டை ஆக்சைடின் அளவு இயல்பை விட ஒரு மைக்ரோகிராம் உயா்ந்தாலும், அது கரோனா இறப்பு வீதத்தை 17 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
  • இந்நிலையில் ‘ஜியோபிஸிகல் ரிசா்ச் லெட்டா்ஸ் என்ற பத்திரிகையில் வெளியான இரு ஆய்வு முடிவுகள், நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின்போது காற்று மாசின் அளவு வெகுவாக குறைந்து விட்டதாகத் தெரிவிக்கின்றன.
  • இந்தியாவின் செயற்கைக்கோள் வழியே கிட்டிய தரவுகளும் காற்றில் உள்ள துகள்களில் குறிப்பிடத்தக்க அளவு சரிவு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகின்றன. மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளும் காற்று மாசு பொது முடக்க காலத்தில் குறைந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
  • இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தின் (ஐ.ஐ.டி.) பேராசிரியா் மணிஷ் குமாா் சிங் இதுபற்றிக் குறிப்பிடுகையில், ‘காற்று மாசைக் குறைப்பதற்கு எதிா்காலத்தில் பொது முடக்கத்தைப் பயன்படுத்தலாம். கரோனா கால பொது முடக்கத்தால் நமது இயற்கை அன்னை இயல்பு நிலைக்கு திரும்பிருக்கிறாள். தில்லியில் குளிா்காலத்தின்போது காணப்படும் காற்று மாசைக் குறைப்பதற்கு எதிா்காலத்தில் பொது முடக்கத்தை பயன்படுத்தலாம் என்கிறாா்.
  • பொது முடக்க நடவடிக்கை எப்போது அமலுக்கு வந்ததோ அப்போது முதல், மக்கள் சுற்றுச்சூழலைப் பற்றி சிந்திக்கவில்லை. பொது முடக்கத்தால் ஏற்பட்ட சிரமங்களைத்தான் மக்கள் அனுபவித்தனா். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல வீட்டுக்குள் வாழ்க்கையை கழிப்பதில் சிரமப்பட்டபோது சுற்றுச்சூழல் தெளிவான மாற்றம் அடைந்துள்ளதை மக்கள் கவனிக்கத் தொடங்கினா் என்கிறாா் சுற்றுச்சூழல் பொறியாளரான போஸ் கே வா்கீஸ் .
  • பொது முடக்க நடவடிக்கைகள் காற்று மாசு அளவை குறைக்க உதவுவதுடன் தற்போதைய பருவமழைக் காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சொல்லப்படுகிறது. எனவே ஓசோன் படல ஓட்டைகளும் இயல்பாகவே சரியாவது போன்ற எதிா்பாராத விளைவுகளையும் கரோனா கால பொது முடக்கம் ஏற்படுத்தி உள்ளது என்றும் அவா் மேலும் நம்பிக்கையுடன் குறிப்பிடுகிறாா்.
  • விமானப் போக்குவரத்தை முற்றாக ரத்து செய்தபோது காற்றின் துகள்கள் பெரிய அளவில் குறைந்தன. காற்று மண்டலத்தின் மேல் இருக்கும் பசுமை குடில் வாயு உமிழ்வுகள் குறைந்து இருந்தன. இப்படி எல்லா விதத்திலும் சுற்றுச்சூழல் மாசு குறைந்து இயல்பான நிலைக்கு திரும்ப பொது முடக்கம் உதவியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
  • தற்போதைய சூழலில் வழிபாட்டு தலங்கள் திறப்பு, மண்டபங்கள், தியேட்டா்கள் திறப்பு, பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட கூடுதல் தளா்வுகள் நடைமுறையில் உள்ளன. இதனால், பொதுமக்கள்பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டனா் என்பது உண்மையே.
  • ஆனால், நோய்த்தொற்று வேறு வடிவில் மீண்டும் வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாம் முக கவசம், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்ற பழக்கங்களைக் கண்டிப்பாகத் தொடா்ந்து கடைப்பிடித்தே தீரவேண்டும்; உயிா்காக்கும் விஷயத்தில் சற்றும் அலட்சியம் கூடாது.

நன்றி: தினமணி (01-01-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்