TNPSC Thervupettagam

காற்று மாசு நிம்மதிப் பெருமூச்சு எப்போது

November 16 , 2023 423 days 236 0
  • இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தலைநகர் டெல்லி, அதைச் சுற்றியிருக்கும் மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள் கடுமையான காற்று மாசுப் பிரச்சினையை எதிர்கொண்டுவருகின்றன. பொதுவாகவே வாகனப் போக்குவரத்து, கட்டுமானப் பணிகள் போன்றவை காற்று மாசடையக் காரணமாகின்றன என்றாலும், ஆண்டின் இறுதிப் பகுதிகளில் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேச மாநிலங்களில் அறுவடைக்குப் பிறகு பயிர்க் கழிவை எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டம் காற்று மாசை அதிகரித்துப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும், தீபாவளிப் பண்டிகைக் காலங்களில், பட்டாசுப் புகையும் காற்று மாசை நாடு முழுவதும் மிகப் பெரிய பிரச்சினையாக மாற்றிவிடுகிறது.
  • அறுவடைக்குப் பிறகு பயிர்க் கழிவுக்குத் தீ வைப்பதைத் தடுக்குமாறு டெல்லி அருகில் உள்ள மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எனினும், விவசாயிகள் பயிர்க் கழிவைக் காலியிடங்களில் கொட்டி தீ வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர்; இதைக் கண்காணித்துத் தடுப்பது மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. இது மக்களின் சுகாதாரத்தைப் படுகொலை செய்யும் நடவடிக்கை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் தலைமையிலான அமர்வு கண்டித்திருக்கிறது. அதேபோல், நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ஒட்டுமொத்த இந்தியாவிலும் பேரியம் சார்ந்த பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதித்திருக்கிறது.
  • பட்டாசு வெடிப்பதன் காரணமாகத் தீபாவளி நாளன்று (நவம்பர் 12) டெல்லி, நொய்டா, குருகிராம், லக்னோ, அகமதாபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இந்த ஆண்டு காற்று மாசு உச்சம் தொட்டதாகப் புணேவில் உள்ள ‘தி செஸ்ட் ரிசர்ச் ஃபவுண்டேஷன்’ அமைப்பின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தீபாவளிக்கு மறுநாள் காலை, டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI), 420-ஐத் தொட்டதாக ஐக்யூஏர் நிறுவனம் கண்டறிந்துள்ளது. காற்றுத் தரக் குறியீட்டில், 400-500 அளவானது ஆரோக்கியமாக உள்ளவர்களுக்குக்கூட சுவாசத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஆபத்தான ஒரு நிலையாகவும் உள்ளது; 150-200 அளவானது ஆஸ்துமா, நுரையீரல்-இதயப் பிரச்சினை உள்ளவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது; 0-50 மட்டுமே பிரச்சினை இல்லாத அளவு என வரையறுக்கப்பட்டிருக்கிறது.
  • சமீப காலமாகத் தீவிரமடைந்துவரும் காற்று மாசு, பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாசக் கோளாறு, நுரையீரல் தொற்று, ஆஸ்துமா தொடங்கி புற்றுநோய் வரை கடும் பாதிப்புகளைக் காற்று மாசு ஏற்படுத்துகிறது. காற்று மாசின் விளைவால் இந்தியர்கள் தங்கள் ஆயுள்காலத்தில் சராசரியாக 5.3 ஆண்டுகளை இழப்பதாக சிகாகோ பல்கலைக்கழகத்தின் ‘எனர்ஜி பாலிசி இன்ஸ்டிடியூட்’ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மக்களின் ஆரோக்கியத்தில் மட்டுமல்லாமல், பொருளாதார இயக்கத்திலும் தாக்கம் செலுத்தும் காற்று மாசுப் பிரச்சினைக்கு, தொலைநோக்குடன் கூடிய ஒருங்கிணைந்த தீர்வுகள் அவசியம். தற்போது ஒரு சில நகரங்களின் பிரச்சினையாக மட்டுமே உள்ள காற்று மாசு, பரவலாக எல்லா நகரங்களின் பிரச்சினையாகவும் மாறிவிடாமல் இருக்க, நீண்ட கால நோக்கிலான தீர்வுகளை அரசு முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

நன்றி: இந்து தமிழ் திசை (16 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்