PREVIOUS
இந்திய ராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகளின் நீண்டநாள் கோரிக்கை அரசால் ஒருவழியாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது சுதந்திர தின உரையில், இந்திய ராணுவத்தில் பணி புரியும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி உரிமை வழங்கப்படும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு உச்சநீதிமன்றத்தின் கடுமையான வற்புறுத்தல்களைத் தொடர்ந்து இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது.
கடந்த 2003-இல் தில்லி உயர்நீதிமன்றத்திலிருந்து தொடங்கியது குறுகிய கால பணி வாய்ப்பு பெற்ற பெண் அதிகாரிகளின் போராட்டம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தில்லி உயர்நீதிமன்றம் அவர்களது கோரிக்கையின் நியாயத்தை அங்கீகரித்துத் தீர்ப்பும் வழங்கியது.
அதற்குப் பிறகும்கூட, குறுகிய காலப் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி வழங்கும் உத்தரவை அரசு பிறப்பிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தது. இப்போது உச்சநீதிமன்றத்தின் வற்புறுத்தல் அரசை முடி வெடுக்க வைத்திருக்கிறது.
பெர்மனன்ட் கமிஷன்
மத்திய பாதுகாப்பு அமைச்சகம், ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு "பெர்மனன்ட் கமிஷன்' என்கிற நிரந்தரப் பணி உரிமையை வழங்கும் அரசாணையை கடந்த வியாழக்கிழமை பிறப்பித்திருக்கிறது.
இதன்மூலம், இந்திய ராணுவத்தில் ஓரளவுக்கு பாலின சமநிலை ஏற்படும் என்கிற அளவில் பரவலான வரவேற்பு காணப்படுகிறது. இந்த அறிவிப்பு, ராணுவத்தில் பணி புரியும் பத்து பிரிவுகளில் உள்ள குறுகிய பணிக்கால பெண் அதிகாரிகளுக்குப் பொருந்தும்.
இதுவரை பத்தாண்டுகள் பணி அனுபவம் உள்ள குறுகிய பதவிக்கால ஆண் அதிகாரிகளுக்கு மட்டும்தான் நிரந்தரப் பணி உரிமை வழங்கப்பட்டு வந்தது.
அதன் காரணமாக முக்கியப் பொறுப்புள்ள தலைமைப் பதவிகள் பெண் அதிகாரிகளுக்கு மறுக்கப்பட்டன. அதனால் ஓய்வூதியமும் மறுக்கப்பட்டது. ராணுவத்தில் 20 ஆண்டுகள் அதிகாரிகளாகப் பணி புரிந்தால் மட்டுமே தலைமைப் பதவிகளும் ஓய்வூதியமும் சலுகைகளும் வழங்கப்படும் என்கிற நிலைமை பெண் அதிகாரிகளுக்கு பாதகமாக இருப்பதை அகற்றுவதற்கு அவர்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
1992-இல் ராணுவத்தில் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அப்போது 50 ராணுவப் பணியிடங்களுக்கு 1,800 பெண்கள் விண்ணப்பித்தனர்.
அதாவது ஒரு பணியிடத்துக்கு 36 பேர். இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 2018-இல், ஒரு இடத்துக்கு 1500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
மருத்துவர், செவிலியர் போன்ற மருத்துவப் பணிகளில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, ராணுவத்தில் அவர்களது பணி அனுபவம், நிரந்தரப் பணி உரிமைக்கு தடையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
14 ஆண்டுகளுக்கு குறைவாகவோ, அதிகமாகவோ பணியாற்றிய குறுகிய கால ராணுவப் பணியிலுள்ள பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பதவி அளிப்பதும் 20 ஆண்டுகள் பணியாற்ற அனுமதிப்பதும் இப்போது சாத்தியமாகியிருக்கிறது.
பாதுகாப்பு அமைச்சகம் அரசாணைக் கடிதத்தை வெளியிட்டிருக்கிறது என்பதாலேயே பிரச்னை முடிந்துவிடாது. உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் குறுகிய காலப் பணியிலுள்ள பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி வழங்குவது குறித்த நடைமுறை பிரச்னைகளை அரசு முன்வைத்தது.
பாலின சமத்துவம் என்பது அதிகாரிகள் அளவிலும் படித்தவர்கள் மத்தியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தாலும்கூட, சமுதாயத்தின் அடித்தட்டில் இன்னும்கூட மனப்போக்கு மாறவில்லை என்கிற எதார்த்தம் சுட்டிக்காட்டப்பட்டது.
ராணுவத்தில் பெரும்பாலான வீரர்கள் கிராமப்புற பின்னணி உள்ள அடித்தட்டு மக்கள் என்பதால், அவர்கள் பெண் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு பெறுவதை ஏற்க மறுப்பார்கள் என்கிற அச்சம் உயரதிகாரிகளுக்கு இருக்கிறது.
காலம் மாறிவிட்டது
முப்படைத் தளபதி விபின் ராவத்கூட பெண்களுக்கு ராணுவத்தில் கூடுதல் பொறுப்புகளும் உயர் பதவிகளும் வழங்குவது குறித்துத் தயக்கம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் சிலரும், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளால் ராணுவத்தில் பாலியல் பிரச்னைகள், வன்முறைகள் தலைதூக்கிவிடக் கூடாது என்கிற அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்திய ராணுவம், உலகின் வலிமையான ராணுவங்களில் ஒன்றாக இருக்கிறது என்பதும் எண்ணிக்கை அளவில் மிகப் பலம் பொருந்தியது என்பதும் உண்மைதான் என்றாலும்கூட, சில பலவீனங்களும் காணப்படுகின்றன.
இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் நிலையில் பற்றாக்குறை கடுமையாக நிலவுகிறது. 10,000க்கும் அதிகமான குறுகிய கால, நிரந்தர அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள்.
பெண் அதிகாரிகளின் எண்ணிக்கையும் கணிசமாக இல்லை; 40,825 பேரில் 1,653 பேர் மட்டும்தான் பெண் அதிகாரிகள்.
ராணுவத்தில் ஆள் சேர்ப்பு தொடர்ந்து நடத்தப்படுகிறது என்றாலும், உலகின் எல்லா நாடுகளைப்போலவே இந்தியாவிலும் ராணுவ அதிகாரிகள் பதவிக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.
இன்றைய நிலையில், இந்திய ராணுவத்தில் 3.89% மட்டும்தான் பெண்கள். கடற்படையில் 6.7%, விமானப்படையில் 13.2% பெண்கள் இருக்கிறார்கள்.
ஏனைய ராணுவ மருத்துவ சேவைகளில் பெண்கள் நிறையவே காணப்படுகிறார்கள். அரசின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுமானால், நேரடி மோதல்களில் பெண்கள் தலைமை தாங்கி படைகளை நடத்தும் பொறுப்பான பதவிகளை வகிப்பார்கள்.
காலம் மாறிவிட்டது; நாமும் நமது ராணுவமும் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது!
நன்றி: தினமணி (29-07-2020)