TNPSC Thervupettagam

காலத்தைப் பொருள்கொள்ளல்

April 6 , 2024 91 days 84 0
  • We have failed to surmount the obstacle, as we were absolutely determined to do, but life has taken us round it, led us beyond it, and then if we turn round to gaze into the distance of the past, we can barely see it, so imperceptible has it become.” - Marcel Proust(‘In Search of Lost Time’, Vol. 5)
  • காலநிலை மாற்றம் இன்று காலத்தில் கைவைத்திருக்கிறது!
  • 21ஆம் நூற்றாண்டின் முதன்மைப் பிரச்சினையாக, உலக நிகழ்வுகள் ஒவ்வொன்றின் மீதும் தாக்கம் செலுத்திவரும் காலநிலை மாற்றம், உலக இயக்கத்தின் ஆதாரமான நேரம் – காலத்தில் (Time) அதன் விளைவுகளை நிகழ்த்தத் தொடங்கியிருக்கிறது.
  • காலநிலை மாற்றத்தின் விளைவுகளில் ஒன்றான புவி வெப்பமாதலின் காரணமாக, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு துருவப் பகுதியின் பனிப்பாறைகள் வேகமாக உருகிக்கொண்டிருக்கின்றன; இது உலகளாவிய கடல்மட்ட உயர்வுக்குவழிவகுக்கிறது.
  • இதன் பாதிப்புகள் சங்கிலித் தொடராக நீண்டுகொண்டிருக்க, அவற்றின் உப விளைவுகளுள் ஒன்று உலகளாவிய நேரம்காத்தல் அமைப்பில் (global timekeeping system) நிகழப்போவதாக ‘நேச்சர்’ ஆய்விதழில் வெளியாகியிருக்கும் டன்கன் ஆக்நியூ என்கிற கடலியல் ஆய்வாளரின் ஆராய்ச்சிக் கட்டுரை எச்சரிக்கிறது [Agnew, D.C. A global timekeeping problem postponed by global warming. Nature (2024). https://doi.org/10.1038/s41586-024-07170-0].
  • உலகளாவிய நேரம்காத்தல் அமைப்பு இன்று அணுக்கடிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. உலகெங்கும் உள்ள 80 நேர ஆய்வுமையங்களில் (time laboratories) அமைந்துள்ள 450 அணுக்கடிக்காரங்களில் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில், ஒருங்கிணைந்த உலகளாவிய நேரமானது (Coordinated Universal Time or UTC) கணக்கிடப்படுகிறது.
  • புவி அதன் அச்சில் ஒரு சுற்று வருவதற்கு எடுத்துக்கொள்ளும் விநாடிகளின் அடிப்படையில் நேரம் வரையறுக்கப்பட்டு வந்தது. அணுக்கடிக்காரங்களின் வரவுக்குப் பிறகு, விநாடிக்கான சர்வதேச வரையறை 1967இல் மாறியது.
  • இரண்டு ஸீஸியம் அணுக்களுக்கு இடையேயான குவாண்டம் அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு அணுக்கடிக்காரம் மூலம் விநாடிக்குப் புதிய வரையறை வழங்கப்பட்டது. நேரத்தைக் கடைப்பிடிப்பதில் துல்லியத்தைக் கொண்டுவரும்நோக்கில் இந்த வரையறை மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
  • கணினி யுகத்தின் தொடக்கம், இத்தகைய அடிப்படை மாற்றத்துக்குத் தேவையாக இருந்தது. எனினும், சூரியனையும் நட்சத்திரத்தையும் அடிப்படையாகக் கொண்ட – அதாவது புவியின் சுழற்சியோடு தொடர்புடைய – நேரக் கணக்கீட்டையே கப்பலோட்டிகள் பின்பற்றிவரலானார்கள்.
  • அணுக்கடிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகளாவிய நேரம்காத்தல் அமைப்பு செயல்படத் தொடங் கினாலும், புவியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட நேரக் கணக்கீட்டு முறைக்கும் அணுக்கடிக்காரத்துக்குமான ஒத்திசைவுக்கு, ‘லீப் நொடி’ என்கிற வழிமுறை அறிமுகமானது.
  • புவியின் சுழற்சி நிலையான ஒரு வேகத்தில் இல்லாத நிலையில், சுழற்சியில் ஏற்படும் மாறுபாடு நேரம்காத்தலில் விலக்கத்தைக் கொண்டுவரும்போதெல்லாம், அணுக்கடிக் காரத்தின் நேரத்துடன் ஒத்திசைவைப் பராமரிக்க, 1972 தொடங்கி வெவ்வேறு காலகட்டத்தில் இதுவரை 27 ‘லீப் விநாடி’கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • 2022இல் நடந்த எடை மற்றும் அளவீடுகளுக்கான பொது மாநாட்டில் (CGPM) முன்மொழியப்பட்ட தீர்மானத்தில், புவியின் சுழற்சி அடிப்படையிலான நேரம்,அணுக்கடிகார நேரம் என இரண்டு நேரத்துக்குமான அதிகபட்ச இடைவெளி (UT1 – UTC), 2035இல் அல்லது அதற்கு முன் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதை நடைமுறைப்படுத்தும் வழிமுறை குறித்து 2026இல் நடைபெறவிருக்கும் CGPMயின் அடுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
  • இந்த ஏற்பாடு – காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் – இன்று பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. புவி வெப்பமாதலின் காரணமாக, துருவங்களின் பனிப்பாறைகள் வரலாற்றில் முன்னெப்போதையும்விட மிகப் பெரிய அளவில் உருகிக் கொண்டிருக்கின்றன; இது கடல்மட்ட உயர்வுக்கு வழிவகுக்கிறது. உருகும் துருவப்பகுதி பனிப்பாறைகளின் நிறை (mass) தண்ணீராக நிலநடுக்கோட்டுக்கு (equator) நகர்கிறது.
  • இந்த நிலையானது புவியின் சுழற்சி வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆக்நியூவின் ஆய்வு கண்டறிந்துள்ளது. லீப் நொடியானது இதுவரை கூடுதலாக மட்டுமே ( 1) சேர்க்கப்பட்டு வந்த நிலையில், புவியின் சுழற்சி வேகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை அணுக்கடிக்கார நேரத்துடன் ஈடுகட்டி ஒத்திசைவுக்குக் கொண்டுவர நெகடிவ் லீப் நொடிக்கான (-1) தேவை எழக்கூடும் என அஞ்சப்படுகிறது.
  • இதுவரை இப்படி ஒரு நிலை ஏற்பட்டது இல்லை; உலகமே அணுக்கடிக்கார நேரத்தின் அடிப்படையில் இயங்கிவருவதால், நெகடிவ் லீப் நொடியைச் சேர்ப்பது என்னவிதமான பாதிப்புகளைக் கொண்டுவரும் என்கிற நிச்சயமின்மை சூழ்ந்திருக்கிறது.
  • நவீன உலகின் மிகப் பெரும் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு அணுக்கடிக்காரங்கள் அடித்தளமிட்டுள்ளன. GNSS, GPS போன்ற இடஞ்சுட்டல்செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு அடிப்படையான செயற்கைக் கோள்கள், அணுக்கடிக்காரத்தைக் கொண்டுதான்இயங்குகின்றன. நேரம்காத்தலின் உலகளாவிய ஒருங்கிணைவு, உலகிலுள்ள திறன்பேசிகள், கணினிகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தைக் கடைப்பிடிக்க வழிசெய்கிறது.
  • திறன்பேசி, இணைய நிறுவனம், வங்கி, பயணம் உள்ளிட்ட மனித வாழ்வுடன் பின்னிப் பிணைந்த விஷயங்களின் ஒத்திசைவு என்பது ஓர் ஒழுங்கை நிலவவைக்கிறது. ஆனால், உங்கள் திறன்பேசியின் நேரம் ஒன்றாகவும், ஒரு பொருளை வாங்குவதற்காக நீங்கள் பயன் படுத்தும் இணைய நிறுவனத்தினுடைய கணினியின் நேரம் ஒன்றாகவும், அந்தப் பொருளுக்குப் பணம் செலுத்தும் உங்கள் வங்கியின் கணினி நேரம் ஒன்றாகவும் என மூன்று வெவ்வேறு நேரத்தி உலகம் இயங்கினால் எப்படி இருக்கும் என ஒரு ‘நொடி’ கற்பனை செய்து பாருங்கள்!
  • அப்படியான ஒரு நிலையைத்தான் ஆக்நியூவின் ஆராய்ச்சி முன்கணித்திருக்கிறது; காலம் பற்றிய இதுவரையிலான நம் புரிதலை இத்தகைய அசாதாரண நிலை கேள்விக்கு உள்படுத்துகிறது.
  • ‘காலம்’ என்பதைக் குறித்துச் சிந்திப்பதற்கு இன்றியமையாதவையாகத் தான் கருதும் மூன்று நூல்களைப் பற்றிச் சிறு குறிப்பு ஒன்றைப் பேராசிரியர் ராஜன் குறை சில மாதங்களுக்கு முன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.
  • சற்றே வேறுபட்ட தத்துவ மரபுகளில் உருவான நூல்கள் என அவர் குறிப்பிடுபவை: Matter and Memory (1896) - Henri Bergson; Time and Narrative (1984) - Paul Ricoeur; Being and Time (1927) - Martin Heidegger. இந்த நூல்களில் இருந்து தான் எடுத்துக்கொள்ளும் முக்கியக் கருத்துகள் என அவர் சுட்டுபவை காலநிலை மாற்றத்தின் காலத்தில், ‘காலம்’ பற்றிய விரிவான பொருள்கொள்ளலுக்கு அழைப்புவிடுகின்றன.
  • ‘நினைவுசேகரமே இயற்பியல் வெளி, அதனுடன் பிணைந்துள்ள காலம் நம் தன்னுணர்வுக்குக் காரணம்,’ என்று பெர்க்சன் நூலை வாசிக்கும் ராஜன் குறை, ‘நினைவுசேகரம் கதையாடல்களின் வழியாகவே காலத்தைத் தன்வயப்படுத்துகிறது,’ என ரிகௌரின் நூலைப் பொருள்கொள்கிறார்.
  • ‘மரணம் என்கிற எல்லைக்கோடு உருவாக்கும் தன்னுணர்வே இருப்பு என்பதை வடிவமைக்கிறது’ என ஹைடெகரின் நூலுக்குக் குறிப்பு எழுதும் அவர், ‘இந்த மூன்றும் அகவயப்பட்ட நோக்குநிலைக்கே முக்கியத்துவம் தருவதாகத் தோன்றினாலும் உண்மையில் அப்படி அல்ல. புறவுலகு இல்லையென்றால் நினைவு எதனைச் சேகரிக்கும் என்று கேட்கிறார் பெர்க்சன்.
  • ஹைடெக்கரும் அங்கிருத்தல் என்கிற நிலையிலேயே இருப்பு குறித்த சிந்தனை தொடங்குவதை அறுதியிடுகிறார்’ என கருத்துகளைத் தொகுத்துக்கொள்கிறார்.
  • காலம் பற்றிய இந்தக் குறிப்புகளில் ஊடாடும் நினைவுசேகரம், தன்னுணர்வு, கதையாடல்கள், மரணம், இருப்பு போன்ற சொற்கள், காலநிலை மாற்றத்தின் காலத்தில் ‘கால’த்தின் பொருளுக்கு மறுவரையறையைக் கோரி நிற்கின்றன.
  • காலம் நம்மை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்பதல்ல, காலத்தை நாம் எங்கு கொண்டுவந்து நிறுத்தினோம் என்கிற வரி, ஒருவேளை ‘காலம்’ எழுதும் அதன் சுயசரிதையின் முதல் வரியாக இருக்கக் கூடும்!.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்