TNPSC Thervupettagam

காலநிலைப் புனைவு: தமிழ் இலக்கியம் என்ன செய்கிறது?

September 2 , 2023 450 days 285 0
  • இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சுத் தத்துவவியலாளரும் நாவலாசிரியருமான ழான்-பால் சார்த்ர், ‘இலக்கியம் என்றால் என்ன?’ என்கிற தலைப்பில் 1948இல் ஒரு கட்டுரை எழுதினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் எழுதப்பட்ட அக்கட்டுரை, அன்றாட அனுபவங்களைக் கடந்து, சமூகத்துடன் ஆழமான உறவில் ஈடுபடும் ஆற்றலைக் கொண்ட கலை வடிவமாக இலக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
  • அறிவொளிக் காலத்தின் முதன்மைத் தத்துவவியலாளர்களில் ஒருவரான இம்மானுவல் கான்ட்டின் ‘அறிவொளிர்தல் என்றால் என்ன?’ என்கிற கட்டுரையை விவாதிக்கத் தலைப்பட்ட தத்துவவியலாளர் மிஷெல் ஃபூக்கோ, ‘தத்துவம் என்றால் என்ன?’ என்கிற கேள்வியை, ‘இன்று தத்துவம் என்றால் என்ன?’ என்கிற கேள்வியாக மாற்றியதுதான் கான்ட்டின் முக்கியக் கொடை என்று கூறுகிறார். என்றென்றைக்குமான உண்மை என்பது, இன்றைய உண்மை என்கிற புதிய பரிமாணத்தை அடைகிறது. இத்தகு புரிதலின் விளைவுகள் மிக ஆழமானவை (ராஜன் குறை: ‘முதலீட்டியமும் மானுட அழிவும்’).
  • அந்த வகையில், ‘இலக்கியம் என்றால் என்ன?’ என்கிற கேள்வியை, ‘இன்று இலக்கியம் என்றால் என்ன?’ என்கிற பொருளில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. காலநிலை மாற்றத்தின் விளைவுகள், சமூக உறவுகள் உள்பட எல்லாத் தளங்களிலும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கத்தை இலக்கியம் எப்படி அவதானிக்கிறது; அதை எதிர்கொண்டு எப்படி எதிர்வினை ஆற்றுகிறது என்பதெல்லாம் ஆழமான ஆய்வுக்குரியவை.

அதிகம் தேவை

  • அறிவியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரின் எல்லைக்கு உள்பட்டதாகவே காலநிலை மாற்றம் சார்ந்த சொல்லாடல்கள் நீண்ட காலத்துக்கு இருந்துவந்திருக்கின்றன. நமக்கு அவர்களுடைய திறன்கள் தேவைதான். எனினும், [இன்று] இத்துறையை அளந்து பார்க்கும்போது கலைஞர்கள் நமக்கு அதிகம் தேவைப்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது’ என்கிறார் காலநிலைச் செயற்பாட்டாளர் மேரி ஹெக்லர்.
  • காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கற்பனை செய்ய நமக்கு உதவுவதில் எழுத்தாளர்கள் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என 18 ஆண்டுகளுக்கு முன்பே வாதிட்டவர் இயற்கை சார்ந்து முக்கிய நூல்களை எழுதிவரும் பிரிட்டிஷ் எழுத்தாளரான ராபர்ட் மெக்ஃபார்லேன். ‘எரியும் கேள்வி’ என்கிற தலைப்பில், 2005ஆம் ஆண்டு ‘தி கார்டியன்’ நாளிதழில் அவர் எழுதிய கட்டுரை, காலநிலை இலக்கியத்தின் தேவைக்கான ஒரு தொடக்கக் குரலாக ஒலித்தது.
  • அரை நூற்றாண்டுக்கு முன், உலகம் அழிந்துவிடுமோ என்கிற அச்சுறுத்தலை ஏற்படுத்திய, அணு ஆயுதத்துக்கு எதிர்வினையாக இயற்றப்பட்ட அபரிமிதமான இலக்கியத்தோடு இதை ஒப்பிட்டால், காலநிலை மாற்றத்துக்கு எதிராக எழுதப்பட்ட புனைவிலக்கியப் படைப்புகளின் போதாமை வெளிப்படையாகத் தெரிகிறது,’ என வருந்தியிருந்த அவர், ‘உண்மையில் வருங்காலத்தில் எழுத்தாளர்கள் காலநிலை மாற்றத்தைத் தங்கள் எழுத்தில் பேசுபொருளாக எடுக்காமலிருப்பது மிகவும் சிரமமே!’ என்று அக்கட்டுரையை முடித்திருந்தார்.

தார்மிகக் குரல்

  • மெக்ஃபார்லேனின் கேள்வியை மிகப் பரந்த தளத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நாவலாசிரியர் அமிதாவ் கோஷ் இலக்கியம், வரலாறு, அரசியல் ஆகிய தளங்களில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை ஆராய்வதில் வெளிப்படும் இயலாமை பற்றிய விசாரணையாக, ‘The Great Derangement: Climate Change and the Unthinkable’ (2016) என்கிற நூலை எழுதினார். அப்போதைய சூழலில், காலநிலை மாற்றம் சார்ந்த புனைவுகள் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே இருந்தன.
  • அந்தப் பின்னணியில், காலநிலை மாற்றம் பற்றி ஆராய்வதில் நவீன நாவல் எங்கு தவறுகிறது என்பதற்கான விடைகளைத் தேடிய அமிதாவ், ‘காலநிலை நெருக்கடி என்பது பண்பாட்டின் நெருக்கடி ஆகும்; அந்த வகையில் அது கற்பனைத் திறனின் நெருக்கடியும் ஆகும்’ என அறிவித்தார். ‘மனித வாழ்க்கையின் இருப்பையே அச்சுறுத்தும் விளைவுகளைக் கொண்டிருக்கும் காலநிலைப் பேரழிவு பற்றி பேச வேண்டிய தார்மிகக் கடமை எழுத்தாளர்களுக்கு இருக்கிறது’ என்றும் அவர் வலியுறுத்தினார்.
  • காலநிலை மாற்றத்துக்கு வரலாற்றுரீதியாக முதன்மைப் பங்களித்த மேற்குலக நாடுகளில், காலநிலைப் புனைவுகள் இன்று ஓர் அலையாக மேலெழுந்துவருகின்றன. காலநிலைப் புனைவு நூல்களுக்குத் தனி பட்டியல் போடும் அளவுக்கு, கடந்த சில ஆண்டுகளில் அந்த வகைமை விரிவடைந்திருக்கிறது. இதற்கு அமிதாவ் கோஷ், ஆரிஃப் அன்வர், சாத் ஹொசைன் போன்ற தெற்காசிய, தெற்காசியாவிலிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் பங்களிப்பு முதன்மையானது.
  • மேற்குலகில், குறிப்பாக ஆங்கில மொழியில், காலநிலைப் புனைவுகள் அதிகம் வெளிவரத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தகுந்த ஒன்றுதான். எனினும், காலநிலை மாற்றத்துக்கு வரலாற்றுரீதியாகப் பங்களிக்காத, ஆனால், அவற்றின் விளைவுகளை முதன்மையாக எதிர்கொண்டிருக்கும் வளர்ந்துவரும் தெற்காசிய, ஆப்ரிக்க நாடுகளின் எழுத்தாளர்கள், காலநிலைப் புனைவுகள் சார்ந்து எத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது கவனத்துக்குரியது.
  • உலக மக்களில் வெறும் 1% மட்டுமே உள்ள பெரும் செல்வந்தர்களின் கரிம உமிழ்வு, அடித்தளத்தில் உள்ள 50% மக்களின் கரிம உமிழ்வைவிட கடந்த 25 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்ஃபாம் அறிக்கை கூறுகிறது. தங்கள் வணிகத்தைக் கைவிட விரும்பாத புதைபடிவ எரிபொருள் பெருநிறுவனங்கள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் இருந்து புவியைக் காப்பாற்ற தனிநபர்கள் எப்படிப் பங்களிக்க முடியும் எனப் பசுமைக் கண்துடைப்புப் (greenwashing) பரப்புரைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றன.
  • அந்த வகையில், வர்க்கப் பாகுபாடு தொடங்கி பசுமைக் கண்துடைப்பு வரை காலநிலை மாற்றம் சார்ந்த ஏராளமான அம்சங்களை ‘இன்றைய இலக்கியம்’ கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
  • இந்தப் பின்னணியில், தமிழ் இலக்கியத்தின் முகமாகவும் தமிழ்நாட்டின் முன்னணி எழுத்தாளர்களாகவும் தங்களை அறிவித்துக்கொண்டவர்கள், காலநிலை மாற்றம் சார்ந்து எத்தகைய முயற்சிகளை எழுத்தில் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பது ஆய்வுக்குரியது.
  • இந்தக் கட்டுரையாளர் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பொருளில் எழுதிய ஒரு கட்டுரையை (‘உலகின் மாபெரும் பேரழிவை இலக்கியம் பேசுகிறதா?’: இந்து தமிழ் உயிர் மூச்சு, 13 ஜூலை 2019) வாசித்த ‘முன்னணி’த் தமிழ்க் கவிஞர் ஒருவர், ‘கிளைமெட் சேஞ்ச் எல்லாம் 30 வருஷத்துப் பழைய டெட் பாடி (dead body)... என்ன எழுதணும்னு எழுத்தாளனுக்கு யாரும் பாடம் எடுக்க முடியாது’ என்று கோபாவேசமாக எதிர்வினையாற்றினார். அவரைச் சமகாலத் தமிழ் இலக்கியத்தின் பிரநிதியாகக் கொண்டால், காலநிலை மாற்றத்தின் காலத்தில் தமிழ் இலக்கியத்தின் நிலை மிகப் பரிதாபமாக உள்ளது என்கிற முடிவுக்கே நாம் வரவேண்டும்.
  • தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த கரிசனம் நம்பிக்கைக்குரிய வகையில் தொடர்ச்சியாக மேம்பட்டுவருகிறது; உண்மையான அக்கறையுடன் அது சார்ந்த விழிப்புணர்வைப் பொது சமூகத்திடம் கொண்டுசெல்லும் செயற்பாட்டாளர்களும் எழுத்தாளர்களும் நம்மிடையே உண்டு.
  • காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட அதிதீவிர காலநிலை நிகழ்வுகள் தமிழ்நாட்டில் ஏற்கெனவே நிகழத் தொடங்கிவிட்டன. ஒரு பக்கம் நீள் கடலும் மறுபக்கம் நெடுமலையும் சூழ்ந்த தமிழ்நாட்டில், இலக்கியத்தையும் ஓர் அம்சமாகக் கொண்டு காலநிலை மாற்றம் சார்ந்த உரையாடலை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
  • தமிழ் இலக்கியத்தின் ‘முக’ங்கள் அதற்கு முகங்கொடுப்பார்களா?

நன்றி: தி இந்து (02 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்