- ‘காலநிலைப் பிறழ்வின் தாக்கத்திலிருந்து விடுதலை’ என்பதை அடிப்படை உரிமையாகக் கோர முடியுமா? இந்திய அரசமைப்பில் குடிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான ‘உயிர்வாழும் உரிமை’ (பிரிவு 21), ‘சமத்துவ உரிமை’ (பிரிவு 14) ஆகிய இரண்டையும் மேற்கோள் காட்டி, இதை அடிப்படை உரிமையாக உச்ச நீதிமன்றம் நிறுவியுள்ளது.
- எம்.கே.ரஞ்சித்சிங் (எதிர்) இந்திய ஒன்றியம் வழக்கில் காலநிலை உரிமை குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு மார்ச் 2024 இல் வந்தது. அழிவின் விளிம்பிலுள்ள கானமயில்களின் (Great Indian Bustard) வாழிடத்தின் மீது மின்வடப் பாதை நிறுவக் கூடாது என ரஞ்சித்சிங் தொடுத்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
- காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்குத் தூய ஆற்றல் மாற்றுகளை நாடியே ஆகவேண்டிய இப்போதைய நிலையில் மின்வடப் பாதைகளைத் தவிர்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
- இதற்கு முன்னால், 1986இல் இது போன்ற மற்றொரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. மேத்தா (எதிர்) இந்திய ஒன்றியம், மேத்தா (எதிர்) கமல்நாத், விரேந்தர் கௌர் (எதிர்) ஹரியாணா அரசு ஆகிய மூன்று வழக்குகளில் ‘தூய்மையான சுற்றுச்சூழல், தூய்மையான காற்று, நீர், மண் இவற்றுக்கான மக்களின் அடிப்படை உரிமை’யை அவ்வழக்குகளின் தீர்ப்பு அங்கீ கரித்தது. இவற்றை நிலை குலைப்பது அரசமைப்புப் பிரிவு 21ஐ (உயிர்வாழும் உரிமை) மீறுவதாகும் எனவும் அந்தத் தீர்ப்பு குறிப்பிட்டிருந்தது.
காட்டுயிர்க் காவலர்:
- சட்ட இடையீடுகளின் மூலம் இந்தியாவின் பல்வேறு சூழலியல் சிக்கல்களுக்குத் தீர்வு பெற வழிவகுத்த காட்டுயிர்ச் செயல்பாட்டாளர் முனைவர் ரஞ்சித்சிங். 1961இல் இந்தியக் குடிமைப் பணியில் இணைந்த எம்.கே. ரஞ்சித்சிங் ஜாலா (1939) காட்டுயிர், இயற்கைப் பாதுகாப்புச் செயல்பாட்டாளர்.
- மத்திய பிரதேசத்தில் காடு, சுற்றுலாத் துறைச் செயலாளர் (1970-1973), காட்டுயிர் பாதுகாப்பு இயக்குநர் (1973-1975) போன்ற பல்வேறு முக்கியப் பதவிகளில் பணியாற்றினார். இந்தியாவின் காட்டுயிர் (பாதுகாப்பு) சட்ட (1972) வரைவை வடிவமைப்பதிலும், புலிகள் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கு வதிலும் முக்கியப் பங்காற்றினார்.
- இந்தியக் காட்டுயிர் பாதுகாப்பு பற்றியபல புத்தகங்களை எழுதியுள்ளார்.சூழலியல், காட்டுயிர் பாதுகாப்பு குறித்து ரஞ்சித்சிங் மேற்கொண்ட நீதிமன்ற இடையீடுகளால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள் கிடைத்துள்ளன. காலநிலை உரிமை குறித்த மார்ச் 2024 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அவற்றில் ஒன்று.
காலநிலை உரிமை:
- பன்னாட்டளவில் வெப்பநிலை உயர்வு, காலநிலைப் பிறழ்வு குறித்த அண்மைக் கால நீதிமன்ற நடவடிக்கைகள் காலநிலை உரிமை குறித்த நம் புரிதலை மேம்படுத்தி உள்ளன. வெப்பநிலை உயர்வின் பாதிப்பிலிருந்து மூத்த குடிகளின் உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
- வெரெய்ன் ஸ்வெய்ஷ் (எதிர்) சுவிட்சர்லாந்து அரசு வழக்கில் ஏப்ரல் 2024இல் வழங்கப்பட்ட இத் தீர்ப்பானது, ஐரோப்பிய மனித உரிமை உடன்படிக்கையின் பிரிவு 8ஐ (தனிநபர், குடும்ப வாழ்க்கைக்கான உரிமை) மேற்கோள் காட்டி, பசுங்குடில் வளி உமிழ்வைக் குறைக்கும்படி அரசுக்கு ஆணையிட்டது.
- பசுங்குடில் வளிக்கும் வெப்பநிலை உயர்வுக்கும் உள்ள தொடர்பை 2019இல் டச்சு உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது (நெதர்லாந்து அரசு (எதிர்) அர்ஜெண்டா அறக்கட்டளை வழக்கு). அனைத்து உறுப்பு நாடுகளும் காலநிலைக் கொள்கைகளை வகுத்துக்கொள்ள வேண்டுமென சர்வதேச பொருளாதார, பண்பாட்டு, வரலாற்று உரிமை உடன்படிக்கையின் 2, 8ஆவது பிரிவுகள் வலியுறுத்தியுள்ளன.
பன்னாட்டுச் சட்ட ஆவணங்கள்:
- 1993 மனித உரிமைச் சட்டத்தின்படி, மனித உரிமை என்பது ‘உயிருக்கு, சுதந்திரம், சமத்துவம், மனித மாண்புக்கான உரிமை’ ஆகும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பிரகடனம் (UDCHR), பன்னாட்டு குடிமை, அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR), பன்னாட்டுப் பொருளாதார, பண்பாட்டு, சமூக உரிமைகள் உடன்படிக்கை (ICECSR), பன்னாட்டு இனபேத ஒழிப்பு உடன்படிக்கை (ICRD), பன்னாட்டுப் பெண்களுக்கு எதிரான அனைத்துப் பேத ஒழிப்பு உடன்படிக்கை (CEDAW) உள்ளிட்ட அனைத்துப் பன்னாட்டு ஆவணங்களும் இந்தியாவில் செல்லத்தக்கவை.
- நம் நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கை அரசமைப்பின் 42ஆவது திருத்தத்தின் மூலம் (1976) நிறுவப்பட்டுள்ளது: ‘பிரிவு 48அ: நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்தவும், காடுகளையும் காட்டுயிர்களையும் பாதுகாக்கவும் அரசு பாடுபட வேண்டும். 51அ: சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் குடிநபர்களின் அடிப்படைக் கடமையாகும்’.
உரிமையை நடைமுறைப்படுத்தல்:
- காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாப்பு பெறும் அரசமைப்பு உரிமையை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று- காலப்போக்கில் நீதிமன்றம் வெளியிடும் தீர்ப்புகளை மட்டும் சார்ந்திருப்பது; இரண்டு, காலநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சமாளிப் பதற்கான ஒரு சட்டத்தை இயற்றுவது.
- காலநிலைச் சிக்கலின் எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு சட்டம் இந்தியாவில இல்லை. மேலை நாட்டுக்காலநிலைச் சட்டங்கள் பெரும்பாலும் கண் காணிக்கும் வகைமையிலேயே அமைந்திருக்கின்றன. அவர்களுடைய சூழலில் அது போதுமானது. உதாரணமாக, பிரிட்டனில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேசிய கரிமக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வகுத்து, கரிம உமிழ்வைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் வழிமுறை பின்பற்றப்படுகிறது.
- இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சூழலில் அவற்றை அப்படியே பின்பற்ற முடியாது. நமக்குத் தேவை ஒழுங்குபடுத்தும், துணைநிற்கும் சட்டங்கள். நீடிக்கும் நகரங்கள், கட்டுமானங்கள், போக்கு வரத்து வலைப்பின்னலுக்கு உகந்த,உள்ளூர்ச் சூழலுக்குத் தகவமைந்து கொள்ள உதவுகிற, காலநிலைக்கு நெகிழ்வான பயிரிடும் முறைகள், சமவாய்ப்புக்கான சட்டம்.
- இது குறித்து எழுதும் ‘நீடித்த எதிர்காலக் குழும’த்தின் ஆய்வாளர்களான நவ்ரோஷ் தூபாஷ் உள்ளிட்டோர், ‘பல்வேறு துறைகள், பகுதிகளை ஒருங்கிணைத்துச் செயல்படும் திறன் கொண்ட நிறுவனங்களை உருவாக்கி அதிகாரப்படுத்துவதன் வழியாக இது சாத்தியப்படலாம்’ என்கின்றனர் (தி இந்து, 7.7.2024).
- குறைந்த கரிம உமிழ்வும், காலநிலை சார்ந்த நெகிழ்வுத் தன்மையும் கொண்ட வளர்ச்சியை மையப்படுத்திய திட்டங்கள் இந்தியாவுக்குப் பொருத்தமானவை. இதன்படி ஒரு புறம் காலநிலையின் தாக்கத்தைக் குறைப்பது, மறுபுறம் அதன் பாதிப்புகளுக்குத் தகவமைத்துக் கொள்வது.
- கென்யா அவ்வாறான நடைமுறையைப் பின்பற்றுகிறது. நகர்ப்புறம், வேளாண்மை, நீர்வளம், ஆற்றல் உள்ளிட்ட பொருளாதாரத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் தழுவிய வளர்ச்சியை மையப்படுத்தும் முடிவுகளை எடுப்பது; அவற்றின் செயலாக்கம் ‘குறைந்த கரிம, காலநிலை நெகிழ்வுத்தன்மை’ என்கிற இலக்குக்கு அணுக்கமாக உள்ளதா என்பதைக் காலந்தோறும் மதிப்பீடு செய்து, திட்டங்களை மறுபரிசீலனை செய்வது.
- காலநிலைச் சிக்கலைக் கையாள் வதற்கான ஒரு சட்டம் எளிதில் செயல்படுத்த ஏதுவானதாக இருக்க வேண்டும். பல்வேறு அமைச்சகங்கள், சமூகத்தின் பல்வேறு தரப்புகள்/ முகமைகளைக் காலநிலைச் செயல் பாடுகளுக்கு ஒருமுகப்படுத்தும் நிறுவனங்கள், தரநிலைகள், திட்டநிரல்கள் போன்றவற்றை உருவாக்கியாக இருக்க வேண்டும்.
- காலக் கெடுவுடன் பயன்மிகுந்த செயல் இலக்குகளைத் தீர்மானிக்க/அறிக்கை வெளியிடத் துணைநிற்கும் அளவில் அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும், வெளிப்படையாக மக்கள் பங்கேற் பதற்கும், துறை வல்லுநர்களுடன் கலந்தாய்வுகள் மேற்கொள்வதற்கும் துணைபுரிய வேண்டும்.
- காலநிலை சார்ந்த நடவடிக்கை என்பது அரசின் செயல்பாடு களுக்குள் அடங்கிவிடுவதல்ல; அதில் வணிக - குடிமைச் சமூகத்தினர், பலதரப்புச் சமூகங்கள்- குறிப்பாகக் காலநிலைத் தாக்கத்தை நேரடியாக அனுபவிப்பவர்கள், ஆற்றல் மாற்றுகள், காலநிலை நெகிழ்வுதன்மை குறித்த துறைசார் நிபுணர்களின் பங்கேற்பும் வேண்டும். முடிவுகள் எடுப்பதில் அவர்களுக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 08 – 2024)