- காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மழையளவின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறையை நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றன. மக்கள்தொகை வளர்ச்சியோடு, தொழில் - விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள அதீத வளர்ச்சியால், 2050இல் நீர்ப் பற்றாக்குறை கடுமையாக அதிகரிக்கக்கூடும் என மத்திய நீர்வள அமைச்சகம் எச்சரிக்கிறது.
- புதிய நீராதாரங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் சுருங்கிவருவதால், தற்போது பயன்பாட்டில் உள்ள சிறிய நீர்நிலைகளான குளம், ஏரிகளைப் புனரமைத்து, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குளங்களின் பயன்பாடு:
- குளங்களும் ஏரிகளும் தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரங்களாகப் பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 41,127 குளங்களின் நீர்க் கொள்ளளவு 347 ஆயிரம் மில்லியன் கன அடி (டிஎம்சி). இது இங்குள்ள அணைகளின் மொத்த நீர்க் கொள்ளளவைவிட அதிகம்.
- எனவே, குளங்களை மறந்துவிட்டு தமிழகத்தின் நீர்ப் பஞ்சத்தைத் தீர்த்துவிட முடியாது. குளங்கள் சிறியவை என்றாலும், அவை கொடுக்கும் நன்மைகள் பெரிது; அளவில் சிறியது என்பதால் நிர்வகிப்பதும் எளிது. பராமரிப்புச் செலவும் குறைவு.
- நீர் மேலாண்மை எளிது என்பதால், கடைமடை-மேல்மடை விவசாயிகளுக்கு இடையிலான சச்சரவுகள் பெரும்பாலும் கிடையாது. சிறு-குறு விவசாயிகளுக்கு முக்கிய நீர்ப்பாசனமாகக் குளங்கள் இருப்பதால், அவர்களின் வறுமையைக் குறைக்கிறது. மழை பொழியும் நேரத்தில் குளங்களில் நீரைச் சேமிப்பதால், நிலத்தடி நீர்ச்சுரப்பு அதிகரிக்கிறது.
இன்றைய நிலை:
- குளங்கள் தற்போது வேகமாக அழிந்துவருகின்றன. இதற்கு மழையளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மட்டும் காரணமாக இருக்க முடியாது எனத் தரவுகள் கூறுகின்றன. மழைநீரைக் குளத்துக்குக் கொண்டுசெல்லும் வாய்க்கால்கள், நீர் வரத்துப் பகுதிகளில் நடக்கின்ற தொடர் ஆக்கிரமிப்புகள், குளங்களை ஆண்டுதோறும் புனரமைக்காமல் இருப்பது, நீர்க் கொள்ளளவு குறைந்து, குளங்கள் மூலம் கிடைக்கும் பாசனப் பரப்பளவும் வேகமாகக் குறைந்துவிட்டது.
- குளங்கள் மூலம் 1960-61 இல் மொத்த இந்தியாபெற்ற பாசனப் பரப்பளவு 46.30 லட்சம் ஹெக்டேர்.இது 2021-22இல் 22.05 லட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்துவிட்டது. இதே காலகட்டத்தில், தமிழ்நாட்டின் குளத்து நீர்ப்பாசனப் பரப்பளவு 9.36 லட்சத்திலிருந்து 3.99 லட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்துவிட்டது.
- அதாவது, தமிழ்நாட்டின் மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் குளத்தின் பங்களிப்பு 38%இலிருந்து 13.68% ஆகக் குறைந்துவிட்டது. இதனால் குளத்துப் பாசனம் மூலமாகப் பயிர்ச்சாகுபடி செய்துவந்த விவசாயிகள் விவசாயத்தைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. சராசரி மழையளவைவிட அதிகம் மழைபெய்தஆண்டுகளில்கூடத் தமிழ்நாட்டில் குளத்துப் பாசனப் பரப்பளவு அதிகரிக்கவில்லை.
ஏன் குளங்கள் அழிகின்றன?
- குளங்கள் அழிந்துவருவதற்கு, வேகமான நகர வளர்ச்சி ஒரு முக்கியக் காரணம். நகரங்களுக்கு அருகிலுள்ள குளங்கள், ஏரிகளில் அரசுத் துறையின் கட்டிடங்கள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நாகரிக வளர்ச்சியால் சாக்கடை நீரைச் சுமக்கும் ஓடையாகப் பல பகுதிகளில் குளங்கள் மாற்றப்பட்டுவிட்டன.
- மத்திய அரசின்நீர்வளத்துக்கான நிலைக்குழுவால் (Standing Committee on Water Resources) 2012-13இல் வெளியிடப்பட்டுள்ள 16ஆவது அறிக்கை (Repair, Renovation and Restoration of Water Bodies), நகராட்சி - பஞ்சாயத்து அமைப்புகள் குளங்களை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறியுள்ளது.
- மத்திய அரசின் ஐந்தாவது குறு நீர்ப்பாசனக் கணக்கெடுப்பு அறிக்கை (Minor Irrigation Census, 2013-14), இந்தியாவில் மொத்தம் 5.92 லட்சம் குளங்கள், சிறிய நீர்நிலைகள் உள்ளதாகவும், இவற்றில் போதிய புனரமைப்பு இல்லாததால், தற்போது 72,853 நீர்நிலைகள் பயன்பாட்டில் இல்லை எனவும் தெரிவிக்கிறது.
- இதேபோன்று, மத்திய நீர்வள அமைச்சகம் 2023 இல் வெளியிட்ட நீர்நிலைகள் பற்றிய முதல் மொத்தக் கணக்கெடுப்பு அறிக்கை, மொத்தமாக 38,496 நீர்நிலைகள் (பெரும்பாலும் குளங்கள், குட்டைகள்) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. தமிழ்நாட்டில் மிக அதிகமாக 7,828 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் குளங்களின் நீர்க் கொள்ளளவு குறைந்து, அவற்றின் மூலம் கிடைக்கும் பாசனப் பரப்பளவு 1960-61 முதல் 2021-22 வரையிலான காலத்தில் 58% குறைந்துள்ளது.
செய்ய வேண்டியவை:
- காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில்கொண்டு, குளங்களைத் தூர்வாரிச் சீரமைத்து, மழைநீரைக் குளத்தில் சேமிப்பதற்கான நடவடிக்கைகளை அதிவேகமாக எடுக்க வேண்டும். நீர்ப் பிடிப்பு, நீர் வரும் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்துக்கு மழைநீர் தங்குதடையின்றிச் செல்ல வழிவகுக்க வேண்டும். மதுரை உயர் நீதிமன்றக் கிளை 2014 செப்டம்பர் 6இல் வெளியிட்டுள்ள தீர்ப்பை மதித்து, குளம், ஏரிகள் அமைந்துள்ள இடங்களில் வீடு, பிற கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.
- குளங்கள் உள்ளிட்ட சிறிய நீர்நிலைகளைப் புனரமைத்து மழைநீரின் கொள்ளளவை அதிகரிக்காத காரணத்தால், விவசாயம் - குடிநீர்த்தேவைக்காக நிலத்தடி நீர் தொடர்ந்து அதிகமாகச் சுரண்டப்படுகிறது.
- இதனால், இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் வெகு வேகமாகக் குறைந்துவருவதாக மத்திய அரசின் கீழ் இயங்கும் நிலத்தடி நீர் வாரியம் (Central Groundwater Board) மார்ச் 2020இல் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தமாக உள்ள 1,166 வருவாய் வட்டங்களில், 723இல் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதாக வாரியம் கூறியுள்ளது.
- கடந்த காலத்தில் தமிழ்நாடு அரசு முன்னெடுத்த குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், குளங்களின் உட்பகுதியிலுள்ள வண்டல் மண்ணைத் தூர்வாரி,நீரின் கொள்ளளவை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
- மழைநீர் குளத்துக்குத் தங்குதடையின்றி வந்துசேர்வதற்கு ஆக்கிரமிப்பால் அடைபட்டுள்ள நீர்வரத்து வாய்க்கால்களைச் சரிசெய்வதற்கு, குடிமராமத்துத் திட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே, நீர்க் கொள்ளளவை அதிகரிக்க முடியும். இதற்கு, குளங்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டியது அவசியம்.
- தற்போது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே குளங்கள் தூர்வாரிப் புனரமைக்கப்படுகின்றன. போதிய நிதி ஒதுக்கி புனரமைப்பு வேலைகளைக் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது அரசு செய்ய வேண்டும். கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் திட்டத்தின்கீழ் நீரைப் பாதுகாக்கும் முயற்சியில் சில பெரிய நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன. தனியார் நிறுவனங்களோடு அரசு கைகோத்தால், குளங்களின் ஒட்டுமொத்தப் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க முடியும்.
- தமிழ்நாட்டில் 40 ஹெக்டேர்களுக்கு மேல் பாசனப் பரப்பளவு உள்ள குளங்கள் பொதுப் பணித்துறையால் தற்போது மேலாண்மை செய்யப்படுகின்றன. பல்வேறு அரசு வேலைகளைச் செய்துவருகின்ற பொதுப் பணித் துறை, குளங்களை மேலாண்மை செய்ய முடியாமல் திணறுகிறது என்பது நிதர்சனம்.
- தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மைச் சட்டம் 2000 (சட்ட எண் 7/2006)-இல் கூறப்பட்டுள்ளவாறு, அனைத்துக் குளங்களையும் மேலாண்மை செய்யும் அதிகாரத்தை அவற்றைப் பயன்படுத்தும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
- காலநிலை மாற்றத்தால், மழை பொழியும் நாள்கள் எதிர்காலத்தில் குறையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது ஓர் ஆண்டில் தனிநபருக்குக் கிடைக்கும் இந்திய சராசரி நீரின் அளவைவிட (1,544 கன மீட்டர்) மிகவும் குறைவாக உள்ள தமிழ்நாட்டில் (750 கன மீட்டர்) நீர்ப் பஞ்சத்தை மேலும் அதிகரிக்கக்கூடும். அரசு விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது!
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 05 – 2024)