காலநிலை மாற்றத்துக்கு முகங்கொடுக்கும் கடமை காவல் துறைக்கு இல்லையா?
- சமீப ஆண்டுகளாகக் காலநிலை மாற்றத்தால் நடந்தேறிக்கொண்டிருக்கும் தீவிர வானிலை நிகழ்வுகளைப் பூவுலகு எதிர்கொண்டு வருகிறது. ‘வரலாறு காணாத’ என்கிற சொற்றொடருடன் சேர்த்தே, அந்நிகழ்வுகள் செய்திகளாகப் பரவலாக நம்மை வந்தடைகின்றன.
- காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கும், அதன் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கும் தகவமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இன்னும் அவை பேரிடர் மேலாண்மை என்கிற குறுகிய கண்ணோட்டத்துடனேயே பெரும்பாலும் புரிந்துகொள்ளப்படுகின்றன. ஆனால், அதையும் தாண்டி, பிற துறைகளும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ளும் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியம். அவற்றில் காவல் துறையும் ஒன்று.
மாற்றத்துக்கான தேவை:
- பொதுவாகவே காவல் பணியின் அடிப்படை, குற்றங்களைத் தடுத்து, சட்டம் - ஒழுங்கைப் பேணி, சமூக நலனை நிலைநாட்டுவதே. ஆனால், அதன் பணிகளில் இயற்கை நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள், குறிப்பாக காலநிலை மாற்றம் பற்றிய உரையாடல்கள் இல்லை என்றே சொல்லலாம்.
- உதாரணத்துக்கு, காலநிலை மாற்றத்தின் விளைவுகளை மட்டுப்படுத்துதல், அவை தொடர்பான தகவமைத்தல் நடவடிக்கைகளில் காவல் துறையின் நேரடிப் பங்கு என்ன? குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் அவர்களின் நடவடிக்கைகள் என்ன? சமூகத்தில் இப்படியான கேள்விகள் எழுப்பப்படுவதில்லை.
- மாறாக, காலநிலை மாற்றத்தால் பேரிடர் ஒன்று நடந்து முடிந்த பிறகு, மக்களைக் காப்பாற்றுவதுதான் காவல் துறையின் முக்கியப் பணியாக பெரும்பாலும் இருக்கிறது. மறுபுறம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செயல்பாட்டாளர்களை முடக்குவது, அவர்களின் அறப்போராட்டங்களைத் தடுப்பது என்கிற வகையில்தான் காவல் துறை செயல்பட்டுவருகிறது.
- அந்த வகையில் அத்துறையின் எண்ணம், செயல்பாடு, செயல் திறன் ஆகியவை எவ்வாறு காலநிலை மாற்றம் தொடர்புடைய முன்னெடுப்புகளுக்கு உதவலாம் என்கிற விவாதம் இன்றியமையாதது. அவ்விவாதங்களே காலநிலை அவசரநிலைக்கு ஏற்பக் காவல் துறை தகவமைத்துக்கொள்ள வழிவகுக்கும்.
சமூகப் பிரச்சினை:
- மீட்பு - நிவாரணப் பணிகளைத் தாண்டி, காவல் பணிகள் சார்ந்து காலநிலை மாற்றம் கொண்டுவர இருக்கும் அபாயங்களும் சவால்களும் பலதரப்பட்டவை. அவற்றை எதிர்கொள்ளக் காவல் துறை தயாராக வேண்டும். ஏனெனில், காலநிலை மாற்றம் வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டும் அல்ல; அது ஒரு சமூகப் பிரச்சினை.
- காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் பல லட்சம் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும், வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அவற்றோடு நில்லாமல், தீவிர வானிலை நிகழ்வுகளால் வறட்சி, நிலம், காற்று / நீர் மாசுபாடு, தண்ணீர் / உணவுப் பற்றாக்குறை ஆகியவை ஏற்படும். இதன் தாக்கங்கள் மக்கள் குற்றச்செயல்களில் ஈடுபடவும் வாய்ப்பாக அமையும்.
- மேலும், தீவிரவாத அமைப்புகளின் பாதிப்புக்கு உள்ளான மக்களை அரசுக்கு எதிரான செயல்களுக்கும் பயன்படுத்தக்கூடிய சாத்தியங்களும் உருவாகும். காலநிலை மாற்றத்துக்கும், பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதற்கும் தொடர்பிருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
- அந்த இடர்ப்பாடுகள், மக்கள் அதிகமாக உள்நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்வதற்கான சாத்தியத்தை அதிகரிக்கின்றன. மனிதர்களுக்கு மட்டுமல்லாது, சுற்றுச்சூழலுக்கும் காட்டுயிர்களுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அவற்றுக்கு எதிரான குற்றங்களும்கூட அதிகரிக்கும். சட்டத்துக்குப் புறம்பாகக் கனிமம், தாதுக்கள் உள்பட மற்ற இயற்கை வளங்களும் சூறையாடப்படும்.
- இது சட்டம் - ஒழுங்கு நிலைமையில் கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்தும். அந்த வகையில், இவை யாவும் கற்பனையான பிரச்சினைகள் என்று நினைத்துக் கடந்துவிட வேண்டாம்; நம் உடனடி கவனத்தைக் கோரும் நேரடி உண்மைகள்.
மாற்றத்துக்கு என்ன வழி?
- காலநிலை மாற்ற நிகழ்வுகளால் வரவிருக்கும் இத்தகைய சமூக இன்னல்களினால் காவல் பணி மேலும் கடினமாகும். எனவே, காவல் துறையின் நிர்வாகக் கட்டமைப்பில் காலநிலை மாற்றம் தொடர்புடைய தகவமைப்பு மாற்றங்களை மேற்கொள்வது முக்கியம்.
- அந்த வகையில் ஆராய்ச்சி சார்ந்து பல பரிந்துரைகள் கொடுக்கப்பட்டாலும், அத்தகைய முன்னெடுப்புகளுக்கு எதிர்ப்பும் ஒத்துழைப்பின்மையும் உருவாகலாம். கடந்த 50 ஆண்டுகளில் காவல் துறையில் ஏற்பட்ட குறைந்த அளவிலான நிர்வாக மாற்றங்களே இதற்குச் சான்று!
- காலநிலை மாற்றத்தின் எதிர்பாராத தீவிர வானிலை நிகழ்வுகளைக் கையாண்டு, குறுகிய காலத்தில் ஏறக்குறையப் பழைய நிலைக்கு எவ்வாறு மீண்டெழுகிறோமோ அதுவே மீள்தன்மை. தனிநபர் மீள்திறன் என்பது பல நேரம் சமூகப் பொருளாதாரக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டது.
- ஆனால், அரசின் கட்டமைப்பான காவல் நிர்வாகத்தின் மீட்சி என்பது பன்முகத்தன்மை உடையது. ஓர் எதிர்பாராத நிகழ்வை எதிர்நோக்கி, ஆராய்ந்து, அதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தி, அதன் உதவியால் மீள்வது. காலநிலை மாற்றத்தால் வரவிருக்கும் ஆபத்து - சவால்கள் குறித்த குறைவான புரிதல், போதுமான தயார்நிலை இன்மை, பயிற்சியின்மை, பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் திறன் குறைவு ஆகியவை இதில் நேரடிச் சவால்களாக இருக்கின்றன.
- பொதுவாக, காவல் துறை, அதன் துணை அமைப்பான தீயணைப்பு - மீட்புத் துறை, பேரிடர் மீட்புப் படை ஆகியவை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை எப்படிக் கையாள்வது என்கிற திறனைப் பெற்றிருந்தாலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அத்திறன் மட்டுமே போதாது.
- எனவேதான் காவல் நிர்வாகத்தைக் காலநிலை மீள்தன்மைமிக்கதாக மாற்றுவது இன்றியமையாததாகிறது. அந்த வகையில், பயிற்சி - அன்றாடச் செயல்பாடுகளில் காலநிலை மாற்றம் குறித்த புரிதலை (Climate Literacy) உருவாக்குவது மிகவும் அவசியம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
- குற்றவியல் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயலாற்றக்கூடிய கட்டமைப்பை உருவாக்குதல், இடர் மதிப்பீடு - திட்டமிடல், கருவிகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், எதிர்பாராததை எதிர்நோக்கும் திறனை வளர்த்தல், மக்களுடன் இணைந்து பணியாற்றுவதை ஊக்குவித்தல் ஆகியன இது சார்ந்து முதன்மையானவை.
- கூடவே, காலநிலை மாற்றம் தொடர்புடைய சட்ட நடைமுறைகளை உருவாக்கி வலுப்படுத்துவது, சமூகக் காவல் பணியை ஊக்குவிப்பது, பிற அரசுத் துறைகளுடன் காவல் துறை இணைந்து செயலாற்ற, நிலையான இயக்க முறையை (Standard Operating Procedure) வடிவமைப்பதும் அவசியமாகிறது.
- அந்த வகையில், பன்னாட்டுக் குற்றப் புலனாய்வு அமைப்பும் (INTERPOL), போதைப்பொருள் - குற்றத்துக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பும் (UNODC) பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. காலநிலை மாற்றத்துக்கு இயைந்த இத்தகைய தகவமைப்புகளால், காவல் நிர்வாகத்தை மீள்தன்மை மிக்கதாக மாற்றுவதற்குச் சாத்தியக்கூறுகள் இருந்தாலும், இத்தகைய புதுமைகளை உடனடியாகச் செயல்படுத்துவது கடினம்தான்.
- இப்படியான மாற்றங்களை எளிமைப்படுத்தச் சமூக நலனைக் காப்பதும், இயற்கைப் பாதுகாப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்கிற எண்ணத்தைக் காவல் துறை பெறுவது அவசியம். அதை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசின் கடமை!
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 08 – 2024)