காலநிலை மாற்றமும் தீவிர பாதிப்படையும் பெண்களும்
- காலநிலை மாற்றத்தினால் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் தீவிர வானிலை நிகழ்வுகள், வெப்ப அலை, காற்று மாசு போன்றவை சர்வதேச அளவில் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக வயது, பாலினம், பொருளாதாரம் சார்ந்து காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருவதாக ஐக்கிய நாடுகள் அவையின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
- காலநிலை மாற்றத்தின் விளைவால், வளரும் நாடுகளில் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்துக்குக் கூடுதல் நெருக்கடிகள் ஏற்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் (COP28), 2050க்குள் காலநிலை மாற்றத்தினால் 15.8 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்; அதில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருப்பார்கள் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், ஆண்களுடன் ஒப்பிடுகையில் காலநிலை மாற்றத்தினால் பெண்கள் அதிகமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
அல்லலுறும் பெண்கள்:
- காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் முதன்மையாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். உலகளவில் தங்கள் பொருளாதாரத் தேவைகளுக்காக விவசாயம் போன்ற இயற்கை வளம் சார்ந்த தொழில்களையே பெண்கள் பெரும்பாலும் நம்பி உள்ளதே இதற்குக் காரணம்.
- வெள்ளம், வறட்சியினால் விவசாயம் பாதிக்கப்படும்போது அதைச் சார்ந்துள்ள பெண்களும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். விவசாயம் மட்டுமல்லாமல் சமூகம், பொருளாதாரம், பாலினம், வாழ்வாதாரம், உடல்நலம், குடும்பம், கல்வி போன்ற பல்வேறு காரணிகள் சார்ந்தும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
- இன்றைக்கும் பெரும்பாலான நாடுகளில் குடும்பத்துக்காக உணவு, தண்ணீர், எரிபொருளை ஏற்பாடுசெய்வது-பாதுகாப்பது பெண்களின் பொறுப்பாகவே உள்ளது. அதுவும் குறைந்த - நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் விவசாயத் தொழிலாளர்களாக இருக்கும் பெண்கள், தங்கள் குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காகக் கடினமாக உழைக்கவும் வேண்டியிருக்கிறது.
- இயற்கைப் பேரிடர்களால் அப்பெண்களின் தொழில் பாதிக்கப்படும்போது, அவர்கள் கூடுதல் பணிச் சுமைக்கு ஆளாகிறார்கள். இதனால் பிழைப்புத் தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயரும் சூழலுக்கும் தள்ளப்படுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தினால் இடம்பெயர்ந்தவர்களில் 80% பேர் பெண்களே என ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
- பொருளாதாரத் தேவைக்காக இடம்பெயரும்போது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது; குறிப்பாக, ஆண் குழந்தைகளைவிடப் பெண் குழந்தைகள் அதிகமாகப் பள்ளி இடைநிற்றலுக்கு உள்ளாவதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் (United Nations High Commissioner for Refugees) தெரிவிக்கிறது.
விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் பெண்கள்:
- உலகளவில் உணவு உற்பத்தியில் 50 முதல் 80% வரை பெண்களின் பங்களிப்பு உள்ளது. ஆனால், நில உடைமையாளர்களாக 10 சதவீதத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலான பெண்களே இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. ‘தேசியக் குடும்ப நல ஆய்வு-5’ சார்ந்த அறிக்கை, இந்தியாவில் பெண்களைவிட ஆண்கள் அதிகம் சொத்து வைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறது.
- அந்த அறிக்கையின்படி ஆண்களில் 62.5%, பெண்களில் 42.3% பேர் சொந்தமாக வீடு வைத்துள்ளனர்; 43.9% ஆண்களும், 31.7% பெண்களும் தங்கள் பெயரிலோ அல்லது மற்றொரு நபருடன் கூட்டாகவோ நிலத்தை உடைமையாக வைத்துள்ளனர். இதன் காரணமாகக் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் ஆண்களைவிடக் கூடுதலான பெண்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் சாத்தியமும் அதிகரிக்கிறது.
தண்ணீரைத் தேடி:
- காலநிலை மாற்றத்தினால் நன்னீரில் கடல் நீர் கலக்கும் நிகழ்வு அதிகமாகியுள்ளது. அதுவும் கடலோர மாவட்டங்களில் வறட்சிக் காலங்களில் தண்ணீருக்காக நெடுந்தொலைவு நடந்து செல்லும் பெண்களுக்குக் கருச்சிதைவு, கரு உருவாவதில் தாமதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. வறட்சிமிக்க பகுதிகளில் வசிக்கும் பெண்கள் தண்ணீரைத் தேடியே பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவதால் மனதளவிலும், உடலளவிலும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.
- இந்தியாவில், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் காலநிலை மாற்றத்தினால் தொடர்ச்சியாக உருவாகும் உணவுப் பஞ்சத்தால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நபர்கள், ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைக் கடத்துதல், பாலியல் வன்கொடுமை செய்தல் போன்ற குற்றங்களை இழைக்கின்றனர்.
- மறுபக்கம், காலநிலை மாற்றப் பாதிப்பானது குடும்பங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தீவிரமடைய வைப்பதுடன், குழந்தைத் திருமணங்களை அதிகரிக்கச்செய்வதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு, காலநிலை மாற்றமானது சுற்றுச்சூழல் நெருக்கடியாக மட்டும் அல்லாமல், சமூக நெருக்கடியாகவும் உருமாறியுள்ளது.
திட்டமிடல் வேண்டும்:
- காலநிலை மாற்றத்தினால் புவியின் ஆண்டு சராசரி வெப்பநிலை இயல்பைவிட 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. 2040ஆம் ஆண்டுக்குள் இந்த வெப்பநிலை அதிகரிப்பு 1.5 டிகிரி செல்சியஸாக மாறக்கூடும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துவருகின்றனர்.
- இதனால், புவியில் உயிரினங்கள் வாழ முடியாத சூழல் உருவாகலாம்; இதைக் கருத்தில் கொண்டே 2015இல் பாரிஸ் உடன்படிக்கையில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, சீன நாடுகளின் மோதல் போக்கு, போர்கள் போன்றவற்றால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் உரிய வகையில் எடுக்கப்படவில்லை.
- காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை உலக நாடுகள் ஒருங்கிணைந்து முன்னெடுத்து, விளிம்புநிலை மக்களின் துயரைப் போக்குவது காலத்தின் அவசியத் தேவை!
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 10 – 2024)