- பிரிட்டனின் வேல்ஸில் ஆண்டுதோறும் மே-ஜூன் மாதங்களில் நடைபெறும் ‘ஹே இலக்கியத் திருவிழா’ (The Hay Festival), உலகின் முக்கியமான அறிவார்ந்த கூடுகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து வருகைதரும் பல்வேறு அறிஞர்கள், தங்கள் துறைசார்ந்த சமகாலப் பிரச்சினைகளை இங்கு விவாதிப்பார்கள். தத்துவத்தைப் பொறுத்தவரை, ‘நம் காலத்தின் தகிக்கும் தத்துவக் கேள்விகள் யாவை’ (https://bit.ly/PhilQues) என்பது இந்த ஆண்டின் விவாதப் பொருளாக அமைந்தது.
- இந்த விவாதத்தில், இரண்டு கேள்விகள் - காலநிலை மாற்றத்தின் பின்னணியில் - கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன: ஒன்று, ‘முதலாளித்துவம் காப்பாற்றத் தகுந்ததா?’; இரண்டு, ‘பெருந்தொற்று அடிப்படையாக / அடிப்படையில் நம்மை மாற்றிவிட்டதா?’ - இவை இரண்டும் தனித் தனிக் கேள்விகளாகத் தோன்றினாலும், உள்ளார்ந்து அணுகும்போது இரண்டும் ஒன்றுடன் ஒன்றுப் பின்னிப் பிணைந்தவை என்பதை நாம் உணர முடியும்.
- முதலாளித்துவப் பொருளியல் முறையின் இயங்குவிசையான சந்தையும் நுகர்வும் (market & consumption) புவியின் சூழலியல் அமைப்புகள் மீது ஏற்படுத்திய தாக்கம், கரோனா பெருந்தொற்றைப் போன்ற விலங்குவழி நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுத்தன. அவற்றின் விளைவுகளிலிருந்து நாம் இன்னும் முழுமையாக மீளவில்லை.
- மனிதச் செயல்பாடுகள் புவியில் ஆதிக்கம் செலுத்தும் இந்தப் புவியியல் சகாப்தத்துக்கு, ஆந்த்ரோபோசீன் (Anthropocene) என்கிற பெயரை அறிவியலாளர்கள் முன்மொழிந்துள்ளனர். சுமார் 12,000 ஆண்டுகளாக நிலவிவந்த ஹோலோசீன் (Holocene) என்கிற வெப்பநிலைக் காலகட்டத்தை, சமகாலத்தில் குறிப்பதற்கான சரியான பதம் இதுதான் என அவர்கள் வாதிடுகின்றனர். தற்போது புவியின் மீதான மனிதச் செயல்பாடுகளின் தாக்கம் திரும்பிச் செல்ல முடியாத நிலையை எட்டிவிட்டதாக அறிவியலாளர்கள் நம்பத் தலைப்படுகின்றனர் (Financial Times, 12.07.2023).
- 1945 ஜூலை 16 அன்று அதிகாலை 5.29 மணிக்கு, அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் நிகழ்த்தப்பட்ட முதல் அணு ஆயுதச் சோதனை, அறிவியல்-தொழில்நுட்பத்தின் நம்பமுடியாத சாத்தியங்களை மனிதகுலத்துக்குத் திறந்துவிட்டது; ஆந்த்ரோபோசீன் யுகத்தைத் தொடங்கிவைத்த ஒன்றாகவும் இந்நிகழ்வு கருதப்படுகிறது.
- இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இந்தக் காலகட்டத்தில்தான் புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாடு தீவிரமடையத் தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பனிப்போர் முடிவுக்கு வந்தது; உலகமயமாக்கலின் எழுச்சியுடன் முதலாளித்துவ அமைப்பு, உலகப் பொருளியல் நடைமுறையாகத் தன்னை வலுப்படுத்திக் கொண்டது. அது சமூக, சூழலியல் சிக்கல்களின் வேராக ஆழம்பெற்றதும் இந்தப் பின்னணியில்தான்.
- ‘முதலாளித்துவ வர்க்கத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ச்சியாக மேலும் மேலும் விரிவடைந்து செல்லும் சந்தை அவசியமாகும். இந்த அவசியம் முதலாளித்துவ வர்க்கத்தைப் புவிப்பரப்பு முழுதும் செல்லும்படி விரட்டுகிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று ஒட்டிக்கொள்ள வேண்டியதாகிறது. எல்லா இடங்களிலும் குடியேற வேண்டியதாகிறது.
- எல்லா இடங்களிலும் தொடர்புகளை நிறுவிக்கொள்ள வேண்டியதாகிறது’ என உலகமயமாக்கல் குறித்த மார்க்ஸ்-எங்கெல்ஸின் [‘கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை’ (1848)] சில்லிடச் செய்யும் முன்கணிப்பு இங்கு நினைவுகூரத்தக்கது. அந்த வகையில், மேற்சொன்னவை சமகாலத்தின் ‘தகிக்கும்’ தத்துவக் கேள்விகளாக மேலெழுந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை; காலநிலை மாற்றம் ஓர் தத்துவப் பிரச்சினையும்கூட என்பதையே அவை உணர்த்துகின்றன.
- ‘தத்துவம் என்பது காலாதீதமான உண்மைகளைப் பற்றியது என்று பரவலாக நினைக்கப்படுகிறது. ஆனால், தத்துவம் என்றால் என்ன என்கிற கேள்வியே காலத்தால், இன்னும் சொல்லப்போனால் வரலாற்றால் தீர்மானிக்கப்படுவது. கான்ட்டின் (Immanuel Kant) ‘ஒளிமயமாதல் (அகஒளி) பெறுதல் என்றால் என்ன?’ (What Is Enlightenment?) என்ற கட்டுரையை விவாதிக்கத் தலைப்பட்ட ஃபூக்கோ (Michel Foucault), கான்ட்டின் முக்கியக் கொடை, ‘தத்துவம் என்றால் என்ன?’ என்கிற கேள்வியை ‘இன்று தத்துவம் என்றால் என்ன?’ என்கிற கேள்வியாக மாற்றியதுதான் என்று கூறுகிறார். என்றென்றைக்குமான உண்மை என்பது இன்றைய உண்மை என்ற புதிய பரிமாணத்தை அடைகிறது.
- இத்தகு புரிதலின் விளைவுகள் மிக ஆழமானவை,’ எனத் தத்துவப் பார்வையின் தேவை குறித்து, ‘முதலீட்டியமும் மானுட அழிவும்’ (2008) நூலில் ராஜன் குறை விளக்குகிறார். மேலும், முதலாளித்துவத்தின் செயல்பாடுகளை ஆராயாமல், மானுட வாழ்வை முதலாளித்துவத்துக்கு மாற்றான புதிய தத்துவ அடிப்படையில் அமைக்காமல், மானுடத்தை அழிவிலிருந்து காப்பது சாத்தியமில்லை என்றும் அந்நூலில் அவர் தெரிவிக்கிறார்.
- இந்தப் பின்னணியில், இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க தத்துவவியலாளர்களில் ஒருவரான பிரான்ஸைச் சேர்ந்த ஃபீலிக்ஸ் கடாரி (Flix Guattari), 1989இல் வெளியிட்ட ‘தி த்ரீ எகாலஜீஸ்’ (The Three Ecologies) என்கிற நூல் பற்றிப் பேச வேண்டியது அவசியமாகிறது.
- காலநிலை மாற்றம் சார்ந்த சொல்லாடல்கள் மேற்குலகில் தொடக்க நிலையில் இருந்த அக்காலகட்டத்தில் இந்நூல் வெளியானது. முதலாளித்துவத்தின் உபவிளைவுகளான காலநிலை மாற்றம் உள்ளிட்ட சூழலியல் பிரச்சினைகளைத் தத்துவார்த்த ரீதியில் அணுகும் முன்னோடி நூல் இது. ‘சூழலியத்துவம்’ (Ecosophy – ecology + philosophy) என்கிற கருத்தாக்கத்தின் மூலம் சூழலியலையும் தத்துவத்தையும் கடாரி ஒன்றிணைக்கிறார். ‘மூன்று சூழலியல்’ என்று இதன் அடிப்படைக் கூறுகளாக அவர் பட்டியலிடுபவை: 1. சமூகச் சூழலியல் (Social ecology); 2. உளச் சூழலியல் (Mental ecology); 3. சுற்றுச்சூழல் சூழலியல் (Environmental ecology).
- உலகமயமாக்கல் அதிதீவிர மடைந்துவந்த 1950களுக்குப் பிந்தைய காலகட்டத்தின் தன்மையை, ‘தொழிற்சாலைக்குப் பிந்தைய முதலாளித்துவம்’ (Post-industrial Capitalism) அல்லது ‘ஒருங்கிணைந்த உலக முதலாளித்துவம்’ (Integrated World Capitalism) எனக் கடாரி பெயரிடுகிறார்.
- ஒருங்கிணைந்த உலக முதலாளித்துவம் வெகுமக்கள் ஊடகத்தைக் கருவியாகக் கொண்டு சமூக, பொருளாதார, பண்பாட்டு அமைப்பில் செலுத்தும் தாக்கம், மனிதர்களின் தன்னிலையை (subjectivity) ஆக்கிரமித்துள்ளது; திறந்த சந்தையின் உற்பத்தியோடு நேரடித் தொடர்புகொண்டிருக்கும் இந்த நிகழ்வு, சூழலியல் பிரச்சினைகளுக்கு எப்படி வழிவகுக்கிறது என்பதைக் கடாரி இந்நூலில் ஆராய்ந்திருக்கிறார்.
- புவியை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலியல் நெருக்கடி, ஒருங்கிணைந்த உலக முதலாளித்துவம் என்னும் புதிய வடிவிலான முதலாளித்துவ விரிவாக்கத்தின் நேரடி விளைவுதான் என்கிற கடுமையான விமர்சனத்தை இந்த நூலில் முன்வைக்கிறார் கடாரி. சமூக உறவுகள், மனிதர்களின் தன்னிலை ஆகியவற்றில் அதன் தாக்கத்தைச் சுற்றுச்சூழல் அக்கறை அடிப்படையில் விவாதித்திருப்பதன் மூலம் சூழலியலுக்கான வரையறையை அவர் விரிவுபடுத்தியுள்ளார்.
- காலநிலை மாற்றம் உலகளாவியத் தீர்வை வேண்டுவது என்பதால், வெறும் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை மட்டும் நம்ப முடியாது என்கிற வகையில், வரம்புகளற்ற-நவீன-ஒருங்கிணைந்த உலக முதலாளித்துவத்தைத் தாண்டிச் செல்வதற்கான வழிமுறைகளாக இந்த மூன்று சூழலியல்களின் இணைவை கடாரி வலியுறுத்துகிறார். ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் சமூக, உள, சுற்றுச்சூழல் சூழலியல்கள் இன்றைய சூழலியல் பிரச்சினைகளுக்கான தீர்வு சார்ந்த பிரகடனமாக முன்நிற்கின்றன.
நன்றி: தி இந்து (15 – 07 – 2023)