- கடந்த மாதம் ஊடகங்களில் இடம்பெற்ற இரண்டு செய்திகள் கவனத்துக்கு உரியவை: முதலாவது, வட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து பல மாவட்டங்கள் வெள்ளக் காடான செய்தி. அடுத்தது, மத்திய சுகாதார–குடும்பநல அமைச்சகம், ஜூலை 23 அன்று மக்களவையில் வெளியிட்ட ‘வெப்ப அலைகளால் ஏற்பட்ட இறப்புகள்’ குறித்த அறிக்கை. 2023 ஜூன் 30 நிலவரப்படி, இந்த ஆண்டு வெப்ப அலைகளால், 14 மாநிலங்களில் குறைந்தது 264 பேர் இறந்துள்ளனர் என்கிறது அந்த அறிக்கை. இரண்டுமே காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட ஆபத்துகள் என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.
- புவி வெப்பமாதல் குறித்தும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றியும் ஊடகங்களில் அடிக்கடி பேசப்படுகிறது. புவிவெப்பம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதால் பனிப்பாறைகள் உருகும்; கடல் மட்டம் உயரும்; நகரங்கள் மூழ்கும்; பேரிடர் பேரழிவு ஏற்படும் எனப் பூமிப் பந்துக்குப் பலதரப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் பூமியில் வாழும் மனிதர்களுக்கு என்னென்ன உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் என்பதை நாம் முழுமையாக உணர்ந்திருக்கிறோமா?
மாசுபடும் வளிமண்டலம்
- கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன் போன்ற பசுங்குடில் வாயுக்கள் வளி மண்டலத்தில் அளவுக்கு அதிகமாகச் சேரும்போது பூமி சூடாகிறது. இன்றைய மக்கள் தொகைப் பெருக்கம், நவீனத் தொழில்முறைகள், நிலக்கரி, பெட்ரோல், டீசல் எரிசக்தி வாகனங்கள், காடுகள் அழிக்கப்படுவது, நவீன வாழ்க்கைமுறை எனப் பலவும் பசுங்குடில் வாயுக்களின் அளவற்ற வெளியீட்டுக்குக் காரணமாகின்றன.
- இவற்றில் கரியமில வாயுதான் வளிமண்டலத்தில் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இப்படிப் பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்க அதிகரிக்க பூமியின் வெப்பமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அப்போது பூமியில் வாழும் உயிரினங்களின் மீது அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதிகரிக்கும் இதயநோய்கள்
- வளிமண்டலத்தில் 2.5 மைக்ரான் அளவுக்கும் குறைவாக உள்ள மிக நுண்தூசி (PM2.5) அதிகமானால், அது மனித ஆரோக்கியத்துக்கு ஆபத்து தரும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. உலக சுகாதார நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் இந்த மாதிரியான நுண்தூசி வரையறுக்கப்பட்ட அளவைவிட 16 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
- இதனால் ஆஸ்துமா, சுவாசத்தடை (COPD) உள்ளிட்ட பிரச்சினைகள் இரட்டிப்பாயிருக்கின்றன. இது ஒருபுறமிருக்க, இந்த நுண்தூசி இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட ரத்தக்குழாய் நோய்களையும் அதிகப்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் கடந்த ஆண்டில் இந்த இரண்டு நோய்களால் இறந்தவர்களில் 39% பேரின் உயிரிழப்புக்குக் காற்று மாசுதான் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது.
சந்ததிகளுக்கும் ஆபத்து
- காலநிலை மாற்றத்தால் பெருவெள்ளமும் புயல் போன்ற பேரிடர்களும் ஏற்படும்போது தெருக்களில் தண்ணீர் தேங்கும். அதனால் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்து டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற தொற்றுநோய்கள் இன்னும் பல மடங்கு அதிகமாகப் பரவும்.
- மேலும், இந்தத் தொற்றுகள் கர்ப்பிணிகளைப் பாதிக்குமானால், அவர்களுக்கு ரத்தசோகை ஏற்படும்; குறைப்பிரசவத்தில் குழந்தை பிறக்கவும் எடை குறைவாகப் பிறக்கவும் வாய்ப்பு உண்டு. இன்னும் சொல்லப்போனால், பிறவிக்குறை நோய்களுடனும் குழந்தைகள் பிறக்கலாம். ஆகவே, காலநிலை மாற்றத்தால் நம் சந்ததிகளின் ஆரோக்கியத்துக்கும் ஆபத்து காத்திருக்கிறது என எச்சரிக்கின்றனர் சூழலியலாளர்கள்.
ஆபத்தாகும் வெப்ப அலைகள்
- 2023 ஏப்ரலில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், இந்தியாவில் 90% இடங்கள் வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து தப்பிக்க முடியாது என்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது பிரபல மருத்துவ ஆய்விதழான ‘லான்செட்’டில் வெளி வந்துள்ள ஒரு புள்ளிவிவரம்.
- இந்தியாவில் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு, வெப்ப அலைகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை 55% அதிகரித்திருக்கிறது என்கிறது அந்தப் புள்ளிவிவரம். காரணம், வெப்ப அலைகளின் பாதிப்பைக் குறைக்க மக்கள் பெரும்பாலும் தண்ணீரில்தான் அதிக நேரம் செலவிடுவார்கள். அப்போது நீரினால் பரவும் நோய்கள் அதிகரிக்கும்.
தாக்கும் வழிகள்
- கடந்த காலத்தில் வெளிவந்துள்ள காலநிலை மாற்றம் சார்ந்து ஆரோக்கியம் இழந்தவர்கள் குறித்த தரவுகளை இந்தியச் சுற்றுச்சூழல்–சுகாதார அறிவியலாளர்கள் மதிப்பாய்வு செய்து ஒரு வரைபடத்தைத் தயாரித்தனர். அதில் மனிதர்களைத் தாக்கும் 375 வகை நோய்களில், 218 வகை நோய்கள் காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
- வழக்கத்தில், காலநிலை மாற்றம் நம் ஆரோக்கியத்தை இரண்டு வழிகளில் பாதிக்கிறது. முதலாவதாக, பேரிடரும் பேரழிவும் ஏற்படும்போது, அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே இடத்தில் நெருக்கமான சூழலில் வசிக்க வேண்டிவரும். அப்போது பொதுச் சுகாதாரம் அங்கு குறையும். சுத்தமான குடிநீருக்குத் தட்டுப்பாடு வரும். அவற்றின் விளைவால், எளிதில் நோய்க்கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாவார்கள்.
- இரண்டாவதாக, ஊட்டச்சத்துள்ள உணவு அவர்களுக்குப் போதுமான அளவு கிடைப்பதிலும் சிரமம் ஏற்படும். அப்போது ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும். இதனால், நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை அவர்கள் இழந்துவிடுவார்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கு இது அதிக ஆபத்தை ஏற்படுத்தும். இந்த ஆபத்துகளை எல்லாம் எதிர்கொள்ள நாம் தயாராகி விட்டோமா?
செயல்திறனுள்ள திட்டங்கள் தேவை
- காலநிலை மாற்றம் சார்ந்து மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைத் தடுக்க 2018இல் தேசிய அளவில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்படுத்த வேண்டும்; நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், பொதுச் சுகாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும்.
- ஆனால், சமீபத்தில் கனமழையும் வெள்ளமும் வட மாநிலங்களைப் புரட்டிப்போட்டபோது அந்த மாநிலங்கள் அவற்றை எதிர்கொண்ட விதம், அரசு இயந்திரங்களின் இயலாமையைக் காட்டியது. டெல்லியில் சில மருத்துவமனைகளுக்கு உள்ளே வெள்ளம் புகுந்ததால், நோயாளிகள் வெளியேற்றப்பட்ட அவலத்தையும் காண நேர்ந்தது. பல குடும்பங்கள் மேம்பாலங்களுக்கு அடியில் தங்கியதை ஊடகங்கள் காட்சிப்படுத்தின.
- அதனால், மத்திய அரசின் ‘காலநிலை மாற்றம் - மனித ஆரோக்கியத்துக்கான தேசிய செயல் திட்டம்’ (India's National Action Plan for Climate Change and Human Health) முழுவீச்சில் செயல்படுத்தப் படவில்லை என்பது பொதுவெளிக்குத் தெரியவந்தது.
- காலநிலை மாற்றத்தின் தீவிரம் இந்தியாவில் வெளிப்படத் தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில், பழைய திட்டங்களின் போதாமைகளைக் கண்டறிந்து, புதிய திட்டங்களை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். உதாரணமாக, கரிம உமிழ்வைச் சமாளிக்க மரங்கள் நடுவது முக்கியம்தான்.
- ஆனால், காடழிப்பைத் தடுக்க வேண்டியது அதைவிட முக்கியம். அதுபோல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆரோக்கியப் பாதிப்புகளை எதிர்கொள்ளச் சிறந்த திட்டங்கள் அவசியம் தான். அதேவேளை, அந்தப் பாதிப்புகளை மட்டுப்படுத்தும் விதமான செயல் திறனுள்ள முன் தடுப்புத் திட்டங்கள் தீட்டப்பட வேண்டியது அதைவிட முக்கியம்.
- அதற்கு, நாட்டில் பேரிடர், பேரழிவு ஏற்படும் களங்கள் எவையெவை, அதிகம் பாதிக்கப் படுபவர்கள் யார், எந்த மாதிரியான ஆரோக்கியப் பாதிப்புகள் ஏற்படும், எத்தனை பேருக்கு ஏற்படும் என்பது போன்ற தரவுகளைச் சேகரிக்க வேண்டும்.
- பிறகு, தேவையான மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் என்னென்ன, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது சிகிச்சைக்கா நோய்த் தடுப்புக்கா, நாள்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் எவையெவை என்பன போன்ற முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இது குறித்து மத்திய - மாநில அரசுகள், சூழலியலாளர்கள், சுகாதாரத் துறையினர், தன்னார்வ அமைப்பினர், கொடையாளர்கள் எனப் பலரும் கூடி விவாதிக்க வேண்டும்; காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளைத் தடுக்க அனைத்துத் தரப்பினருக்கும் தெளிவான வழி காட்டுதல்களைத் தர வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (11– 08 – 2023)