TNPSC Thervupettagam

காலம் நிகழ்த்தும் கபட நாடகம் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

December 10 , 2023 204 days 137 0
  • அக்டோபர் 7, 2023 அன்று தொடங்கிய ஹமாஸ் - இஸ்ரேல் யுத்தம், இரண்டு மாதங்கள் நீண்ட பின்பு 4 நாள் தாற்காலிகப் போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது. அமைதி முயற்சிகள், பேச்சுவார்த்தை, மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் என்று என்ன காரணம் சொல்லப்பட்டாலும் இம்மாதிரியான தாற்காலிகப் போர் நிறுத்தங்களின் நிகர லாபம் வேறொன்றுதான். மீண்டும் தொடங்கும்போது என்னென்ன புதிய உத்திகளைக் கையாளலாம், இன்னும் எப்படியெல்லாம் நெருக்கடி தரலாம் என்று இருதரப்பும் யோசித்துத் தெளிவதற்கான அவகாசம்.
  • ஏனெனில், ஒரு போர் நிறுத்தப்பட வேண்டுமென்றால் இருதரப்பிலும் அதற்கு ஆர்வம் இருக்க வேண்டும். இருதரப்புகளும் செய்த பிழைகளை எண்ணி சிறிதாவது வருந்த வேண்டும். இரு தரப்பிலும் ஓரளவாவது விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும். பகை போதும் என்ற எண்ணம் எங்கோ கண் காணாத தொலைவிலாவது இருந்தாக வேண்டும். இவை எதுவுமே இல்லாவிட்டாலும் கழுத்தை நெரிக்கும் அரசியல் நெருக்கடிகளாவது இருக்க வேண்டும்.
  • இஸ்ரேல் தரப்பில் இவற்றில் ஏதாவது ஒன்று உண்டா என்று முதலில் பார்க்கலாம்.
  • ஆர்வம். இது நிச்சயமாகக் கிடையாது. மே 14, 1948-ல் இஸ்ரேல் என்கிற தேசம் உருவான கணம் முதல் போரிட்டுக் கொண்டிருப்பது தனது பகுதி நேரப் பணி என்று முடிவு செய்த நாடு அது. இன்று வரை சிறிய பிணக்கு கூட இல்லாமல் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகள் செய்து வருகிறது. தன்னளவிலேயே இஸ்ரேல் வலுவான ராணுவத்தையும் மிகச் சிறந்த உளவுத் துறையையும் கொண்ட நாடு என்பதால் போரிடத்தான் அவர்களுக்கு விருப்பமே தவிர, நிறுத்துவதற்கல்ல.
  • இரண்டாவது, செய்த பிழைகள். அதற்கும் வாய்ப்பில்லை. தான் செய்வது பிழைதான் என்று இஸ்ரேல் எந்நாளும் ஒப்புக்கொள்ளாது. தான் வந்து அடைக்கலம் புகுவதற்கு உதவிய பாலஸ்தீன அரேபியர்களை முற்றிலுமாக அடித்து விரட்டுவதுதான் மனிதநேயம் என்று தீவிரமாக நம்புகிறவர்கள் அவர்கள்.
  • மூன்றாவது, விட்டுக் கொடுப்பதும் பகை வளர்த்தது போதும் என்று நினைப்பதும். இதற்கும் வாய்ப்பில்லை. பாலஸ்தீன அத்தாரிட்டி என்கிற தன்னாட்சிப் பிராந்தியத்துக்கு அனுமதியளித்ததே ஆகப் பெரிய விட்டுக் கொடுத்தல் என்று இஸ்ரேல் நினைக்கிறது. நாலு பைசாவுக்குப் பயனற்ற ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டு இஸ்ரேல் தரப்பில் கையெழுத்திட்ட இட்ஸாக் ராபினைக் கொன்றுதான் அவர்கள் அமைதியை நிலைநாட்டினார்கள் என்பதை மறக்க முடியாதல்லவா?
  • நான்காவது, அரசியல் நெருக்கடி. உலக நாடுகள் பல இஸ்ரேலைக் கண்டிக்கின்றன. ஐ.நா. கண்டிக்கிறது. மனித உரிமை ஆணையம் தொடர்ந்து இஸ்ரேலின் அத்துமீறல்களைச் சுட்டிக்காட்டுகிறது. அரபு நாடுகள் அனைத்தும் கண்டிக்கின்றன. இதெல்லாம் நெருக்கடி ஆகுமா என்றால் ஆகாது. ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நவீன உலகில் இன்னொரு நாட்டுக்கு உண்மையான நெருக்கடி என்ற ஒன்றைத் தரக்கூடிய வல்லமை அமெரிக்காவுக்கு மட்டுமே உண்டு. துணிந்து பிற நாட்டு விவகாரங்களில் தலையிட்டு, ஆனவரை குட்டையைக் குழப்பி, முடிந்த வரை சம்பாதித்துக் கொண்டு போகும் சாமர்த்தியம் அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாட்டுக்கும் கிடையாது. இஸ்ரேலைப் பொறுத்த அளவில் அமெரிக்கா என்பது அதன் பாசமிகு வளர்ப்புத் தாய். எனவே அதற்கு வாய்ப்பே இல்லை.
  • இதை ஆவேசத்தோடு மறுக்கலாம், நிராகரிக்கலாம், எதிர்க்கலாம். அதெல்லாம் ஏட்டளவில் மட்டுமே முடியும். கள நிலவரமும் கால நிலவரமும் வேறு. நாம் ஏற்றாலும் மறுத்தாலும் உண்மை அதுதான்.
  • ஹமாஸை அழிப்பது என்பது இஸ்ரேலைப் பொறுத்த அளவில் ஒரு தாற்காலிகச் செயல் திட்டம் மட்டுமே. பாலஸ்தீன மண்ணில் வசிக்கும் அத்தனை முஸ்லிம்களையும் மொத்தமாக விரட்டிவிட்டு அல்லது அழித்துவிட்டுப் பிராந்தியத்தை வலிமை பொருந்திய முழுமையான யூத நிலப்பரப்பாக ஆக்கிக் கொள்வதுதான் அவர்களது நோக்கம்.
  • கடந்த 75 ஆண்டுகளாகவும் அவர்கள் முயற்சி செய்வது இதற்குத்தான். மேற்குக் கரைப் போராளி இயக்கங்கள் அனைத்தும் துவண்டு, ஓய்ந்துவிட்ட நிலையில், பாலஸ்தீன அத்தாரிட்டி இனி பெரிதாக எதிர்த்து நிற்காது என்ற சூழலில், உயிருடனும் உயிர்ப்புடனும் இருக்கும் ஒரே இயக்கம் ஹமாஸ். அதாவது பாலஸ்தீனத் தரப்பில் இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே முட்டுக்கட்டை.
  • இதனால்தான் ஹமாஸ் தொடங்கிய இந்த 2023-ம் ஆண்டு போரை ஹமாஸை மொத்தமாக அழிப்பதற்கான சரியான வாய்ப்பாக இஸ்ரேல் கருதுகிறது. ஹமாஸ் என்ன செய்யப் போகிறது?
  • அது பெரிதல்ல. ஹமாஸ் என்ன செய்ய வேண்டும் என்பதில் இருக்கிறது, பாலஸ்தீனர்களின் எதிர்காலம்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்