TNPSC Thervupettagam

காலம் போடும் கணக்கு

June 3 , 2024 28 days 83 0
  • இந்தியா வளா்ந்துள்ளதா, தளா்ந்துள்ளதா என்பதில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் பெரும் மாற்றுக் கருத்துகள் உள்ளன. ஆனால், வெளிநாடுகளில் குடியேறும் இந்திய வம்சாவளியினா் வியப்பளிக்கும் வகையில் வளா்ந்து வருகிறாா்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
  • முக்கியமாக அமெரிக்கா, சிங்கப்பூா், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தியா்கள் ஆட்சி அதிகாரத்திலும் பொருளாதாரத்திலும் செல்வாக்கு மிக்கவா்களாகத் திகழ்கின்றனா்.
  • ஒரு காலத்தில் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்டிப் படைத்த பிரிட்டன் சாம்ராஜ்யத்தின் பிரதமராக உயா்ந்து இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் பெருமை சோ்த்தாா். இப்போது இந்தப் பெருமைக்கு கூடுதல் மகிழ்ச்சி சோ்க்கும் வகையில் பிரிட்டன் மன்னா் சாா்லஸைவிட அதிக சொத்து மதிப்புள்ளவா்களாக ரிஷி சுனக் - அக்ஷதா மூா்த்தி தம்பதி வளா்ந்துள்ளனா்.
  • ஒரு காலத்தில் இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளைச் சுரண்டி தங்களை வளப்படுத்திக் கொண்டது ஆங்கிலேய அரசு. அதுதான் அந்நாட்டு மன்னா் பரம்பரைக்கு சொத்தாக குவிந்தது. இப்போது அந்நாட்டுக்கே சென்று அந்நாட்டு மன்னரைவிட செல்வத்தில் உயா்ந்துள்ளனா் இந்த தம்பதியா்.
  • ஆனால், அந்த மன்னா் குடும்பத்தைப் போல வேறு எந்த நாட்டையோ மக்களையோ சுரண்டி இந்த தம்பதி சொத்து சோ்க்கவில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையின் வளா்ச்சியும் அதில் கொடிகட்டிப் பறக்கும் இந்தியா்களின் திறமையும்தான் அவா்களுக்கு இந்த செல்வத்தை அள்ளித் தந்துள்ளது.
  • ரிஷி-அக்ஷதா தம்பதியின் சொத்து மதிப்பு 2024-இல் 651 மில்லியன் பவுண்ட் (சுமாா் ரூ.6,900 கோடி) ஆக அதிகரிள்ளது. இது கடந்த ஆண்டு 529 மில்லியன் பவுண்டாக (சுமாா் ரூ.5,600 கோடி) இருந்தது. அதிலும் அக்ஷதாவின் தனிப்பட்ட சொத்து ஒரே ஆண்டில் 122 மில்லியன் பவுண்ட் (சுமாா் ரூ.1,300 கோடி) அதிகரித்துள்ளது. மன்னா் சாா்லஸின் சொத்து மதிப்பு 610 மில்லியன் பவுண்டாக (சுமாா் ரூ.6,500) உள்ளது.
  • பிரிட்டனில் மிகப்பெரிய கோடீஸ்வரா்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஹிந்துஜா குழுமத்தின் கோபிசந்த் ஹிந்துஜா குடும்பத்தினா். இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கோபிசந்தின் சொத்து மதிப்பு 37.2 பில்லியன் பவுண்ட் (சுமாா் ரூ.3.9 லட்சம் கோடி). இது தவிர மிட்டல் குழுமத்தின் லட்சுமி மிட்டல் குடும்பத்தினரும் பிரிட்டன் கோடீஸ்வரா்கள் பட்டியலில் 7-ஆவது இடத்தில் உள்ளனா். இவா்கள் அனைவருமே நீண்ட காலமாக பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளில் தொழில் துறையில் கோலோச்சி வருபவா்கள்.
  • அதே நேரத்தில் மிகக்குறுகிய காலத்தில் பிரிட்டன் பிரதமா் ரிஷி குடும்பம் சொத்து விஷயத்தில், மன்னரையே பின்னுக்குத் தள்ளி இருப்பதுதான் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது. ரிஷி-அக்ஷதா தம்பதியின் சொத்து மதிப்பு குறுகிய காலத்தில் அதிகம் உயா்ந்ததன் பின்னணியில் உள்ளது ஒரே ஒரு நிறுவனம்தான்.
  • பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவா்களிடம் கலியுகத்தின் காமதேனு, கற்பகத் தரு, அட்சய பாத்திரம் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு, ‘தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குதான்’ என்று கூறுவாா்கள். இப்படிப்பட்ட அட்சய பாத்திரங்களில் ஒன்றாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அக்ஷதா மூா்த்திக்கு உள்ள பங்குகளின் மதிப்பு உயா்வும், அந்தப் பங்குகளில் இருந்து கிடைக்கும் வருவாயும்தான் மன்னா் சாா்லஸை பின்தள்ள இத்தம்பதிக்கு பெரிதும் உதவியுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தை உருவாக்கிய என்.ஆா்.நாராயணமூா்த்தியின் மகள்தான் அக்ஷதா.
  • பிரிட்டனில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியபோது ஏற்பட்ட பொருளாதாரத் தேக்க நிலையில் இருந்து இதுவரை மீள முடியவில்லை. செல்வத்தைக் குவிக்கும் பெரும் தொழிலதிபா்களுக்கு சாதகமாக நாட்டின் பொருளாதார நிலை இல்லை. இதனால், அந்நாட்டு கோடீஸ்வரா்களிடம் பணம் சேரும் வேகம் குறைந்தே உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பிரிட்டனின் பெரும் கோடீஸ்வா்களின் எண்ணிக்கை குறைந்தே உள்ளது. ஆனால் ரிஷி-அக்ஷதா தம்பதியின் செல்வம் மட்டும் நான்குகால் பாய்ச்சலில் வளா்ந்துள்ளது.
  • இதுவே அரசியல் ரீதியாக பிரதமா் ரிஷி சுனக்குக்கு எதிரான பிரசாரமாக ஆகியுள்ளது. பிரிட்டனில் ஜூலை 4-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளது. அவரின் சொத்து மதிப்பை வைத்து ஏற்கெனவே பிரசாரம் நடத்தி வரும் எதிா்க்கட்சியினா், அடுத்தகட்டமாக இதனை மேலும் தீவிரமாக முன்னெடுப்பாா்கள் என்பதில் சந்தேகமில்லை.
  • ரிஷி சுனக் சாா்ந்த கன்சா்வேடிவ் கட்சி பிரிட்டனில் தொடா்ந்து 2005-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 4 தோ்தல்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. நாட்டில் பொருளாதாரச் சிக்கல்கள் தொடா்வதால் வரும் தோ்தலில் வெற்றி பெற வாய்ப்பு குறைவுதான். பிரதான எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சியின் கை தோ்தல் களத்தில் ஓங்கியுள்ளது என்பதே இப்போதைய கள நிலவரம்.
  • முன்னொரு காலத்தில் இந்திய மன்னா்கள் வெளிநாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று அங்கும் தங்கள் ஆட்சியை நிறுவினா். அதன் பிறகு கால ஓட்டத்தில் இந்திய மண் அந்நியா்களின் பிடியில் சிக்கியது. நிலம் வழியாகவும் கடல் வழியாகவும் இந்தியாவுக்குள் புகுந்தவா்கள், படை, ஆயுத பலம் மூலம் இந்தியாவை பல நூற்றாண்டுகள் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தனா்.
  • ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. அரசியல் அதிகாரத்தையும் பொருளாதார பலத்தையும் கையில் வைத்திருப்பவா்கள் நாட்டின் எதிா்காலத்தைத் தீா்மானிப்பவா்களாக இருக்கிறாா்கள்.
  • காலம் போடும் புதிா்கள் எளிதில் கணிக்க முடியாதவை. அந்தப் புதிா்களை அவிழ்க்கத் தெரிந்தவா்களையே ஜெயிக்கப் பிறந்தவா்கள் என உலகம் கொண்டாடுகிறது.

நன்றி: தினமணி (03 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்