TNPSC Thervupettagam

காலம் வெளி கடந்த மனிதன்மறக்க முடியாத நாவல்

March 14 , 2024 304 days 226 0
  • மனித இனம் எத்தனையோ மகத்தான சிந்தனையாளர்களைக் கண்டிருக்கிறது. அந்த வரிசையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு வரலாற்றில் ஒரு தனிச் சிறப்புமிக்க இடம் உண்டு. இன்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் 145வது பிறந்தநாள். ஏன் ஐன்ஸ்டைன் இன்றும் கொண்டாடப்படுகிறார்? காரணம் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் வாழ்வு இந்த உலகத்தை அறிவியல்ரீதியாகவும், தத்துவார்த்தரீதியாகவும் பல்வேறு வழிகளில் மாற்றியது. 
  • சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் புகழ்பெற்ற வசனம் ஒன்று உண்டு, “நான் யாரோ பத்து பேர அடிச்சி டான் ஆனவன் கிடையாது. நான் அடிச்ச பத்து பேருமே டானுங்கதாண்டா” என்று. இவ்வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஐன்ஸ்டைனுக்குச் சிறப்பாக பொருந்தும். ஏனென்றால் ஐன்ஸ்டீன் ஏதோ ஒரு துறையில் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுப் புகழ்பெற்றவர் அல்ல.
  • அவர் வெளியிட்ட ஒவ்வொரு ஆராய்ச்சிக் கட்டுரையும் பல புதிய ஆராய்ச்சித் துறைகளை உருவாக்கின. அந்த ஒவ்வொரு ஆராய்ச்சித் துறையும் பல்வேறு புதிய கிளை ஆராய்ச்சித் துறைகளை இன்று உருவாக்கியிருக்கின்றன. அது மட்டுமல்ல ஒவ்வொரு ஆராய்ச்சிக் கட்டுரையும் ஏற்கெனவே இருந்த அறிவியல் சிந்தனையை மெருகேற்றியது மட்டுமல்லாமல் அதுவரை யாருமே யோசிக்காத கோணத்தில் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய புதிய அறிவியல் கண்ணோட்டத்தை நமக்கு வழங்கியது. இந்தச் சிந்தனைப் புரட்சிதான் மனித குலத்துக்கு அவர் வழங்கிய மாபெரும் பங்களிப்பு. 

இயற்பியலின் அதிசய ஆண்டு 1905 

  • இயற்பியல் வரலாற்றில் 1905ஆம் ஆண்டை ‘அதிசய ஆண்டு’ என்று அழைக்கிறார்கள். இயற்பியல் உலகைப் புரட்டிப்போடக்கூடிய நான்கு மிக முக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார் ஐன்ஸ்டைன். இந்தக் கட்டுரைகளை வெளியிடும்போது அவர் பேராசிரியரோ, பெரிய ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தவரோ அல்ல. சாதாரண காப்புரிமை அலுவலகத்தில் ஒரு மூன்றாம் நிலை காப்புரிமை எழுத்தராக பணிபுரிந்துவந்தார். 
  • முதல் ஆராய்ச்சிக் கட்டுரை ஒளியின் மிக முக்கியப் பண்பைப் பற்றியது.
  • இரண்டாவது கட்டுரை அணுக் கோட்பாட்டைப் பற்றியது. 
  • மூன்றாவது ஆராய்ச்சிக் கட்டுரை புகழ்பெற்ற சார்பியல் கோட்பாடு.
  • நான்காவது கோட்பாடு உலகப் புகழ்பெற்ற E=mc2 சமன்பாட்டைப்பற்றியது.
  • இந்த நான்கு கட்டுரைகளும் இருபதாம் நூற்றாண்டு அறிவியலின் திசையை மாற்றி அமைத்தன.

ஒளி என்பது அலையா துகளா

  • முதல் ஆராய்ச்சிக் கட்டுரை ‘ஒளி-மின் விளைவு’ பற்றியது. ஒளியானது பருப்பொருளோடு (அணுக்களோடு) மோதும்போது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிய கட்டுரை. ஒளியானது உலோக மேற்பரப்பில் படும்போது அம்மேற்பரப்பில் உள்ள எலக்ட்ரான்கள் மேற்பரப்பைவிட்டு வெளிவருகின்றன. இதுவே ஒளி மின் விளைவு. 
  • மேற்பரப்பில் படும் ஒளியின் நிறத்தை மாற்றும்போது வெளிவரும் எலக்ட்ரான்களின் ஆற்றல் மாறுவதைக் கண்டறிந்தார்கள், அதேபோல் மேற்பரப்பில் படும் ஒளியின் பொலிவுத்தன்மையை மாற்றும்போது வெளிவரும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை மாறுவதைக் கண்டறிந்தனர். இந்த நிகழ்வை அதுவரை இருந்த இயற்பியல் கோட்பாடுகளால் விளக்க முடியாமல் இருந்தது.
  • காரணம், அப்போது வரை ஒளி என்பது அடிப்படையில் அலை வடிவில் இருக்கிறது, அலையாகவே பருப்பொருளோடு வினைபுரிகிறது என்று கருதிவந்தனர். ஆனால், ஐன்ஸ்டைன் ஒளி என்பது அலைப் பண்பு மட்டுமல்லாமல் துகள் பண்போடும் இருக்கும் என்ற புதிய கோட்பாட்டை முன்வைத்தார். மேலும் ஒளியைத் துகளாக கருதினால் மட்டுமே ஒளி மின் விளைவின் ஆய்வு முடிவுகளை விளக்க முடியும் என்று நிரூபித்தார். 
  • ஒளி என்பது சிறு சிறு ஆற்றல் பொட்டலங்களாக இருக்கிறது. இந்த ஆற்றல் பொட்டலங்கள் துகள் போன்று இயங்குகின்றன. இந்த ஆற்றல் பொட்டலங்கள் ‘போட்டான்கள்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டான் துகள்கள் உலோக மேற்பரப்பில் இருக்கும் எலக்ட்ரான் துகள்களோடு மோதுகிறது. ஐன்ஸ்டைனுக்கு முன்பு வரை ஒளி அலைகள் எலக்ட்ரான்களோடு மோதுகிறது என்று நினைத்துவந்தனர்.
  • ஆனால், ஐன்ஸ்டைன் ‘போட்டான் துகளும் எலக்ட்ரான் துகளும் ஒன்றுடன் ஒன்று மோதும் நிகழ்வே ஒளிமின் விளைவு’ என்று விளக்கினார். அதுவரை ஒளி என்பது அலைப் பண்போடு மட்டுமே கொண்டிருக்கும் என்ற சிந்தனையை மாற்றி ஒளி என்பது அலைப் பண்பையும், துகள் பண்பையும் கொண்டிருக்கும் என்கிற புதிய அறிவியல் உண்மையை நிரூபித்தார். இந்த ஆய்வுக் கட்டுரைக்காக ஐன்ஸ்டைனுக்கு 1921ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னாளில் குவாண்டம் இயற்பியல் உருவாக்கத்திற்கு இந்தச் சிந்தனை முக்கிய பங்கு வகித்தது.

அணுவும் மூலக்கூறுகளும் நடைமுறை உண்மை

  • ஐன்ஸ்டைனுக்கு முன்பே ‘அணு’ என்ற கருத்தாக்கம் சில அறிஞர்களால் வலியுறுத்தப்பட்டிருந்தாலும் அப்போது வாழ்ந்த மிக முக்கியமான இயற்பியல் அறிஞர்களுக்கு ‘அணு’ என்ற கருத்தில் நம்பிக்கை இல்லை. அணு என்ற ஒன்று இருக்கவே முடியாது. அது உண்மையில் சில நிகழ்வுகளை விளக்குவதற்குப் பயன்படும் ஒரு கருத்தாக்கம்தானே தவிர அது உண்மையில் நடைமுறை யதார்த்தம் இல்லை என்று நினைத்துவந்தனர். ஐன்ஸ்டைன் 1905இல் வெளியிட்ட இரண்டாவது கட்டுரை ‘பிரவுனியன் இயக்கக் கோட்பாடு’ ஆகும். இது அணுக்கோட்பாடு பற்றியது. 
  • தண்ணீரில் சில மகரந்தத் துகள்களைத் தூவினால் அம்மகரந்தத்துகள்கள் அங்குமிங்கும் தண்ணீருக்குள் ஒழுங்கற்று ஓடியாடுகின்றன என்று தாவரவியலாளர் ராபர்ட் பிரவுன் 1827இல் கண்டறிந்தார். அவர் பெயரில் இந்த நிகழ்வு ‘பிரவுனியன் இயக்கம்’ என்று அழைக்கப்படுகிறது. 
  • ஏன் இந்த மகரந்தத் துகள்கள் ஒழுங்கற்று ஓடியாடுகின்றன என்பதற்கான கோட்பாட்டு விளக்கத்தை யாராலும் திருப்திகரமாக தர முடியவில்லை. ஐன்ஸ்டைன் இந்த ஆய்வுக் கட்டுரையில் “தண்ணீர் என்பது எண்ணற்ற அணுக்களால், மூலக்கூறுகளால் ஆனது. இந்த மூலக்கூறுகள் அங்குமிங்கும் ஓடியாடுகின்றன. இந்த மூலக்கூறுகள் மகரந்தத் துகள்கள் மீது தொடர்ச்சியாக மோதிக்கொண்டே இருப்பதால் மகரந்தத் துகள்களும் ஒழுங்கற்று ஓடியாடுகின்றன” என்று கூறினார்.
  • அது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இம்மகரந்தத் துகள்கள் சராசரியாக எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கும், அதன் மூலம் இந்த தண்ணீர் மூலக்கூறுகள் அளவையும் கோட்பாட்டுரீதியாகக் கணக்கிட்டார். நான்கு ஆண்டுகள் கழித்து ஜீன் பெர்ரின் என்பவர் ஆய்வகப் பரிசோதனை மூலம் ஐன்ஸ்டைன் கணக்கிட்டது சரி என்று நிரூபித்தார். இதன் மூலம் ‘அணுக்களும் மூலக்கூறுகளும்’ நடைமுறை உண்மை, அது கருத்தாக்கம் அல்ல என்று நிரூபணம் ஆனது. அதற்காக ஜீன் பெரினுக்கு 1926ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தனிச்சார்பியல் கோட்பாடு 

  • ஐன்ஸ்டைனின் மூன்றாவது கட்டுரை ‘சார்பியல் கோட்பாடு’ பற்றியது. இதுதான் ஐன்ஸ்டைனை மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர் என்ற நிலைக்கு உயர்த்தியது. நியூட்டனின் கோட்பாட்டின்படி காலம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதன்படி “சூரிய குடும்பத்தில் இருக்கும் நமக்கும், பிரபஞ்சத்தின் இன்னொரு மூலையில் இருக்கும் வேறொரு நட்சத்திரத்துக்கும் ஒரே மாதிரியான காலம்தான். அதேபோல் சும்மா உட்கார்ந்துகொண்டு இருப்பவரின் கையில் கட்டப்பட்டிருக்கும் கடிகாரமும், விமானத்தில் செல்லும் பயணியின் கையில் கட்டப்பட்டிருக்கும் கடிகாரமும் ஒரே நேரத்தைத்தான் காட்டும்.”
  • ஐன்ஸ்டைன் இந்தக் கருத்தை அடியோடு தகர்த்தார். காலம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றல்ல. அது ஒவ்வொருவரின் இயக்கத்தைச் சார்ந்தது என்று கூறினார். சும்மா உட்கார்ந்துகொண்டிருப்பரின் நேரமும், பேருந்தில் பயணிக்கும் ஒரு நபரின் நேரமும் வேறு வேறு என்று சொன்னார். அதாவது, ஒருவரின் பயணிக்கும் வேகம் அதிகமாக அதிகமாக அவரின் காலம் மிக மெதுவாக நகரும் என்றார். இது அக்காலத்தில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ஆச்சரியமாக இருந்தது.  
  • அதேபோல் காலமும் (time) வெளியும் (space) தனித்தனியானவை அல்ல. ஒன்றுக்கொன்று சார்ந்தவை. மேலும் காலம் மற்றும் வெளியைக் காலவெளி (space-time) என்றே இணைத்துப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். இவையெல்லாம் மனித குலம் மூவாயிரம் ஆண்டுகளாக நம்பிவந்த பொதுச் சிந்தனைக்கு எதிராக இருந்தது. அந்தக் காலத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த அறிவியல் அறிஞர்களால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆழமாக நம்பிவந்த பல்வேறு கருத்துகளின், கோட்பாடுகளின் ஆணிவேரை இது அசைப்பதுபோல இருந்தது. 
  • இந்தத் தனிச்சார்பியல் கோட்பாட்டின்படி (Special theory of relativity),
  • ஒளி மட்டுமே இந்தப் பிரபஞ்சத்தில் உச்சபட்ச வேகத்தில் பயணிக்க முடியும். அதாவது, வெற்றிடத்தில் விநாடிக்கு மூன்று லட்சம் கி.மீ. எந்த ஒரு பருப்பொருளும் இந்த வேகத்தில் பயணிக்க முடியாது.
  • வேகமாக செல்லும் ஒரு பொருளின் நீளம் குறையும். உதாரணத்துக்கு நீங்கள் ரயில் நிலையத்தில் அமர்ந்துகொண்டிருக்கிறீகள். உங்கள் கையில் ஒரு மீட்டர் அளவுகோல் இருக்கிறது. இப்போது இந்த ஒரு மீட்டர் அளவுகோலைப் புறப்பட இருக்கும் இரயிலின் உள்ளே அமர்ந்திருக்கும் ஒரு பயணியிடம் கொடுத்துவிடுங்கள். இப்போது ரயில் புறப்பட்டு வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. இப்போது அந்த ரயில் பயணியிடம் இருக்கும் அளவுகோலின் நீளம் உங்களைப் பொறுத்து ஒரு மீட்டர் அல்ல. அதற்கும் கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால், அந்த ரயில் பயணியைப் பொருத்து அந்த அளவுகோலின் நீளம் ஒரு மீட்டர்தான். அதாவது, நீளம் என்பதும் காலத்தைப் போலவே சார்புத்தன்மை உடையதுதான். 
  • உங்கள் பார்வையில் ஒரே நேரத்தில் நடக்கும் இரு நிகழ்வுகள் இன்னொருவரைப் பொருத்து வெவ்வேறு நேரத்தில் நடக்கும். ஒரே கண இரு நிகழ்வுகள் (simultaneous events) என்பதும் சார்புத்தன்மை உடையதுதான். 
  • வேகமாக செல்லும் ஒருவரின் காலம் மெதுவாக ஓடும். இரட்டைக் குழந்தைகளின் பிறந்தநாளில் ஒருவர் பூமியிலும், இன்னொருவர் விண்வெளிக்கும் சென்று சில ஆண்டுகள் பயணித்துச் சென்றுவந்தால் பூமியில் இருக்கும் இரட்டையர் விண்வெளிக்குச் சென்றுவந்த இரட்டையரைவிட வயது அதிகமாகிவிடுவார். காரணம் விண்வெளியில் வேகமாகப் பயணித்தவரின் காலம் மெதுவாக ஓடியதால்தான் அவருக்கு வயது ஆகும் வேகம் பூமியில் இருப்பவரைவிட மெதுவாக இருக்கிறது.  
  • வேகமாக செல்லும் பொருளின் நிறை அதிகமாகிறது.
  • மேலே கூறப்பட்ட அனைத்துக் கருத்துகளும் அக்காலத்தில் அனைவருக்குமே அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தன. ஆனால், கடந்த நூறு வருடமாக நடந்த பல்வேறு ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் ஐன்ஸ்டீன் கூறியதே சரி என்று நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. 
  • நீளம் குறைவதையும், காலம் மெதுவாக ஓடுவதையும், நிறை அதிகமாவதையும் நடைமுறையில் நாம் எங்குமே பார்த்ததில்லை. உண்மையில் இவையெல்லாம் நடக்கிறதா? என்று நமக்கு ஒரு கேள்வி எழலாம். ஆம், நடக்கிறது. பைக்கில் செல்லும் ஒருவரின் காலம் தரையில் நிற்பவரைப் பொருத்து மெதுவாக ஓடுகிறது. அவரின் நீளம் சுருங்குகிறது. நிறை அதிகரிக்கிறது. ஆனால், இவை எதையும் நம்மால் உணர முடியாது.
  • அதாவது, எந்தவொரு கருவியாலும் அளவிட முடியாத அளவுக்கு மிக மிகச் சிறியது. மேற்சொன்ன அனைத்தும் நாம் உணரும் அளவுக்கு, அதாவது அளவிடும்படி நடக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் நாம் ஒரு விநாடிக்கு ஒரு லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்க வேண்டும். நடைமுறை உலகில் பயணிக்கக்கூடிய அதிகபட்ச அளவு மணிக்கு 600 அல்லது 700 கி.மீ.தான். ஒளியைவிட இந்த வேகம் மிக மிகக் குறைவு என்பதால் நம்மால் இந்தச் சார்பியல் விளைவுகளை உணர முடிவதில்லை. பிறகு எப்படி ஐன்ஸ்டைன் உணர்ந்தார்?
  • முழுக்க முழுக்க கணிதரீதியாகவும், கோட்பாட்டுரீதியாகவும் சிந்தனைப் பரிசோதனை (thought experiment) மூலம் வெறும் பேப்பரையும், பென்சிலையும் வைத்துக்கொண்டு இக்கோட்பாடுகளை உருவாக்கினார். 

புகழ்பெற்ற சமன்பாடு

  • உலகம் முழுக்க அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு சமன்பாடு என்றால் இந்த E=mc2 சமன்பாடுதான். இங்கே E என்பது ஒரு பொருளின் மொத்த ஆற்றலைக் குறிக்கும். m- பொருளின் நிறை, c – ஒளியின் வேகம். இந்தச் சமன்பாட்டின்படி ஆற்றலும் நிறையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஆற்றலின் ஒரு வடிவம்தான் நிறை. நிறையின் ஒரு வடிவம்தான் ஆற்றல் என்ற புதிய சிந்தனையைக் கொண்டுவந்தார். மேலும் நிறையை ஆற்றலாக மாற்ற முடியும். ஆற்றலை நிறையாக மாற்ற முடியும் என்றும் கூறினார்.
  • அணுக்கரு ஆராய்ச்சித் துறைக்கு இந்தச் சமன்பாடுதான் அடிப்படை. நியூட்டன் கோட்பாட்டின்படி ஒரு பொருள் தரையில் ஓய்வு நிலையில் இருந்தால் அதற்கு ஆற்றல் என்பது இல்லை. ஆனால், ஐன்ஸ்டைனின் இந்தச் சமன்பாட்டின்படி “ஒரு பொருள் ஓய்வு நிலையில் இருந்தால்கூட அதற்குள் மிகப் பெரிய ஆற்றல் பொதிந்துள்ளது.” இதுவும் ஒரு புரட்சிகரமான சிந்தனை.
  • துரதிருஷ்டவசமாக இந்தச் சமன்பாடுதான் இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு செய்யவும் பயன்பட்டது. ஐன்ஸ்டைன் இதுகுறித்து மிகவும் வருந்தினார். “ஆட்சியாளர்களின் தவறு என்றாலும் எனது கண்டுபிடிப்பு இந்த அழிவுக்குப் பயன்பட்டதே” என்று மனம் வெறுத்தார். ஹிரோஷிமா, நாகசாகி நிகழ்வுக்குப் பிறகு மிகத் தீவிர அணுகுண்டு எதிர்ப்பாளராக மாறினார்.

இருபதாம் நூற்றாண்டின் அழகான சிந்தனை

  • ஐன்ஸ்டைன் வாழ்க்கையில் மணிமகுடமாகத் திகழும் ஒன்று இந்தப் ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’. அவரால் 1915ஆம் ஆண்டு இக்கோட்பாடு வெளியிடப்பட்டது. நியூட்டன் கோட்பாட்டின்படி பூமி சூரியனைச் சுற்றிவரக் காரணம் சூரியனின் ஈர்ப்பு விசை.
  • நிலா பூமியைச் சுற்றிவரக் காரணம் பூமியின் ஈர்ப்பு விசை. ஆனால், பொதுச் சார்பியல் கோட்பாட்டின்படி “ஈர்ப்பு விசை என்ற ஒன்றே இல்லை. நிறையானது தன்னைச் சுற்றி உள்ள வெளியை வளைக்கிறது, காலத்தை மெதுவாக ஓட வைக்கிறது. இது காலவெளி வளைவு (space-time curvature) என்று அழைக்கப்படுகிறது. விசை என்பது வெளியிலிருந்து கொடுக்கப்படுவதல்ல. மாறாக அது காலவெளி வளைவு என்ற இருத்தலியல் பண்பே (existential property)” என நிரூபித்தார்.
  • இந்தக் காலவெளி வளைவுதான் நமக்கு ஈர்ப்பு விசைபோல் தோன்றுகிறது. “மனித மூளையில் தோன்றிய ஆகச் சிறந்த அறிவியல் கருத்து இது என்றும் ‘இருபதாம் நூற்றாண்டின் அழகான சிந்தனை இது’ என்றும் அறிவியல் அறிஞர்கள் புகழ்கின்றனர். 
  • எடுத்துக்காட்டாக, சூரியன் தனது நிறையால் தன்னைச் சுற்றியுள்ள வெளியை (space) வளைக்கிறது. காலத்தை மிக மெதுவாக ஓட வைக்கிறது. சூரியனைச் சுற்றி உள்ள இந்த வளைந்த வெளியில் கோள்கள் நீள்வட்டப் பாதையில் செல்கிறது. நாம் பார்க்கும்போது சூரியன் கோள்களின் மீது விசை செலுத்துவதுபோல் தெரிகிறது. இப்படித்தான் ஒவ்வொரு பொருளும் தனது நிறைக்கேற்ப தன்னைச் சுற்றி உள்ள காலவெளியை வளைக்கிறது. இந்தப் பொதுச் சார்பியல் கோட்பாடு கோள்களின் இயக்கத்தை, விண்மீன்களின் இயக்கத்தை நியூட்டனின் ஈர்ப்புவிசைக் கோட்பாட்டைவிடத் துல்லியமாக விளக்குகிறது.
  • பொதுச் சார்பியல் கோட்பாட்டின்படி இன்னொரு ஆச்சரியமான கருத்து – ஒளியானது மிக அதிக நிறையுள்ள பொருளின் அருகே செல்லும்போது வளைந்து செல்லும். எடுத்துக்காட்டாக, சூரியனைத் தாண்டி இருக்கும் நட்சத்திரங்களின் ஒளி சூரியனுக்கு அருகில் வளைந்து செல்கிறது. இப்படி வளைந்துவருவதால் நாம் பார்க்கும் நட்சத்திரம் அதன் உண்மையான இருக்கும் இடத்தைவிட கொஞ்சம் தள்ளி நமக்குத் தெரிகிறது. 
  • இதை 1919ஆம் ஆண்டு ஆர்தர் எடிங்க்டன் ஒரு முழு சூரிய கிரகணத்தின் பரிசோதனை வாயிலாக நிரூபித்தார். இந்தப் பரிசோதனைக்கு முன்பு வரை ஐன்ஸ்டைன் அறிவியல் உலகில் மட்டுமே அதிகம் அறியப்பட்டிருந்தார். இந்தப் பரிசோதனையின் வெற்றிக்குப் பிறகு உலகம் முழுவதும் அனைத்துப் பத்திரிகைகளிலும் பேசப்படும் மனிதரானார்.
  • இந்தக் கோட்பாடுதான் கருந்துளை என்ற ஒன்றைக் கணித்தது. ஈர்ப்பு அலைகள் என்பது இருந்தே ஆக வேண்டும் என்றும் கணித்தார். 2015இல் ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அந்தக் கண்டுபிடிப்பாளர்களுக்கு இயற்பியல் நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் இந்தப் பொதுச் சார்பியல் கோட்பாட்டில்தான் தனது ஆராய்ச்சிகளைச் செய்தார். ஒரு ஆச்சரியமான தகவல் இன்று நாம் ஆன்ட்ராய்டு போனில் பயன்படுத்தும் ஜிபிஎஸ் பொதுச் சார்பியல் கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது. 
  • கடந்த நூறு வருடத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கோட்பாட்டைப் பின்பற்றி ஆய்வுசெய்த பலர் நோபல் பரிசு வாங்கியிருக்கிறார்கள். ஐன்ஸ்டைன் பிற்காலத்தில் ‘அனைத்தையும் பற்றிய கோட்பாடு’ (Theory of everything) உருவாக்க முயற்சித்தார். ஆனால், அவரால் அதில் வெற்றிபெற முடியவில்லை.
  • ஓப்பன்ஹைமர் கூறியபடிதான் இருந்தாரா ஐன்ஸ்டைன்?

அரசியலும் தத்துவமும் 

  • ஐன்ஸ்டைனை நாம் கொண்டாடக் காரணம் அவரது அறிவியல் சாதனை மட்டுமல்ல. அவர் மானுடத்தை நேசிக்கும் மனிதராகவும் விளங்கினார் என்பதால்தான். அவர் வாழும்போது உலகில் நடந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்க் குரல் எழுப்பினார். ஐன்ஸ்டைன் பிறப்பால் யூதராக இருந்ததால் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் ஜெர்மனியிலிருந்து தப்பி அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தார். ஆனால், அந்தச் சூழ்நிலையிலும்கூட அமெரிக்கர்கள் கருப்பின மக்களுக்கு எதிராக நடத்தும் கொடுமைகளைக் கடுமையாக கண்டித்தார். கட்டுரைகள் எழுதினார்.
  • நான் ‘கடவுள் நம்பிக்கை இல்லாத, ஆனால் ஆன்மீக உணர்வுள்ள மனிதன்’ என்று அடிக்கடி கூறுவார். முதலாளித்துவம் மனித குலத்துக்குச் செய்யும் தீங்கு குறித்து அதிகம் பேசினார். ‘ஏன் சோசலிஸம் வேண்டும்?’ என்பது அவரது முக்கியமான ஒரு கட்டுரை. 
  • உலகெங்கும் நடக்கும் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பினார். அவருக்குக் காந்தியமும் காந்தியையும் மிகப் பிடித்த ஒன்றாக பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை உலக ஒற்றுமைக்கு எவ்வாறு பாடுபட வேண்டும் என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். ஆயுதங்கள் தயாரிக்கும் நாடுகளை அவர் கடுமையாகக் கண்டித்தார். ஆயுத ஒழிப்புக்கு முன்வர வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது.
  • அவர் இறப்பதற்குச் சில மாதங்கள் முன்பு உலக நாடுகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் வலியுறுத்தி ‘ஐன்ஸ்டைன் - ரஸ்ஸல் உடன்படிக்கை’ என்ற ஒன்றை பெர்ட்ரண்ட் ரஸ்ஸலோடு சேர்ந்து உருவாக்கினார். 
  • அவரின் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்க உளவுத் துறையின் ரகசிய தொடர் கண்காணிப்பில் இருந்தார். அவரின் வீடும் அடிக்கடி சோதனை செய்யப்பட்டது. ஆனால், அவர் எதற்கும் அஞ்சாதவராக தொடர்ந்து அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பிவந்தார். இன்று பெரும்பாலான அறிவியல் அறிஞர்கள் ‘அறிவியல் ஆராய்ச்சி மட்டுமே எனது வேலை. நாட்டில் என்ன நடந்தாலும் எனக்கு கவலை இல்லை’ என்று நினைக்கிறார்கள். அவர்கள் ஐன்ஸ்டைனை நினைத்துப் பார்க்க வேண்டும். 

ஓப்பன்ஹெய்மர்: குவாண்டம் முரண்பாடுகளின் திரைப்படம்

  • மேலும் 1950க்குப் பிறகு ஐன்ஸ்டைனின் உடல்நலம் குறைந்துகொண்டேவந்தது. 1955 ஏப்ரல் 16ஆம் நாள் அவரது உடல்நிலை இன்னும் மோசமானது. அறுவை சிகிச்சை செய்தால் பிழைக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், ஐன்ஸ்டைன் அறுவை சிகிச்சைக்கு மறுத்துவிட்டார். “நான் எப்போது போக விரும்புகிறேனோ அப்போது போக விரும்புகிறேன். செயற்கைத்தனமாக நீட்டித்துக்கொள்ளும் வாழ்க்கை சுவையில்லாதது. நான் எனது பங்கை இவ்வுலகுக்கு அளித்துவிட்டேன். இது நான் விடைபெறுவதற்கான நேரம். அமைதியாக விடைபெறுகிறேன்” என்று கூறினார்.  
  • அடுத்த நாள் காலை ஏப்ரல் 17ஆம் நாள் தனது 76வது வயதில் உயிர் நீத்தார். அவரது உடல் மறைந்தாலும் அவரின் அறிவியல் கோட்பாடுகள் மனித குல வரலாற்றில் அழியா இடம்பெற்றிருக்கும். ஆம், ஐன்ஸ்டீன் காலம் கடந்து வாழும் மனிதர். காலம் வெளி கடந்து வாழும் மனிதர். உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் ஐன்ஸ்டைன்.

நன்றி: அருஞ்சொல் (14 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்