TNPSC Thervupettagam

காவலன் காவான் எனின்... - பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு

February 18 , 2021 1425 days 585 0
  • கடந்த ஓர் ஆண்டில் அச்சு ஊடகங்களில் மிக அதிகமாகத் தலையங்கம் எழுதப்பட்ட பிரச்னைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வாகத்தான் இருக்கும். பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்வதற்கு எதிரான கண்டனங்களுக்குப் பிறகும்கூட, அது குறித்து நடவடிக்கை எடுக்காமல் மத்திய - மாநில அரசுகள் மெளனம் காப்பது மக்கள் மன்றத்தின் மனக் கொதிப்பை மேலும் அதிகரிக்கிறது.
  • இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து ஜுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. டீசல் விலையும் அதேபோல குதித்து எழுகிறது. இவை இரண்டும் போதாதென்று சமையல் எரிவாயு உருளையின் விலையும் அதிகரித்திருக்கிறது.
  • பல மாதங்களாக முடக்கப்பட்டிருக்கும் மானியத்தை மீண்டும் வழங்குவது குறித்து முடிவெடுக்காத நிலை ஒருபுறம் தொடரும்போது, சமையல் எரிவாயு உருளையின் விலையை 50 ரூபாய்க்கும் அதிகமாக அதிகரித்து, சாமானிய மக்களின் தலையில் தாளாத பாரம் ஏற்றப்பட்டிருக்கிறது.
  • ஆண்டு வருவாய் ரூ.10 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு மத்திய அரசு எரிவாயு உருளை மானியம் வழங்கி வந்தது. கரோனா பாதிப்புக்கு முன்பு 2020 ஏப்ரல் மாதம் எரிவாயு உருளை விலை ரூ.772-ஆக இருந்தபோது ரூ.238.77 மானியமாக வழங்கப்பட்டது.
  • அந்த மானியம் படிப்படியாகக் குறைந்து இப்போது மானியம் வழங்கப்படுவதில்லை என்கிற நிலைமையில் விலையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பது சாமானியர்களால் சகித்துக் கொள்ள முடியாத அதிர்ச்சி.
  • கடந்த டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ரூ.660-ஆக இருந்த எரிவாயு உருளை விலை, மாத இறுதியில் ரூ.710-ஆக உயர்ந்தது. ஜனவரி மாதம் ரூ.25 அதிகரித்தது என்றால், இப்போது பிப்ரவரியில் ரூ.52.50 உயர்ந்து, ரூ.787.50-ஆக உயர்ந்திருக்கிறது.
  • கடந்த எட்டு நாள்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு இதற்குக் காரணமாகக் கூறப்பட்டாலும், இந்த அளவுக்கு அதிகமான விலை உயர்வுக்கு உண்மையான காரணம், பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் மத்திய - மாநில அரசு வரிகள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. சில மாநிலங்களில் 61% வரை பெட்ரோல், டீசல் மீது வரிகள் விதிக்கப்படுகின்றன.
  • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த நேரத்தில், விலை குறைந்தபோதெல்லாம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளை அதிகரித்து தனது வருவாயைப் பெருக்கிக் கொண்டது.
  • சிறப்பு அதிகரித்த சுங்க வரியாக ரூ.11, சாலை கட்டமைப்பு கூடுதல் வரியாக ரூ.18, வேளாண் மேம்பாட்டு கூடுதல் வரியாக ரூ.2.5 என்று மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளை விதித்து கச்சா எண்ணெய் விலை குறைவின் பயனை மக்களுக்கு வழங்காமல் தனதாக்கிக் கொண்டது.
  • 2014 மே 16-இல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தபோது சர்வதேச கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 106 டாலர். இப்போது சர்வதேச கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 59 டாலர். அப்போது ரூ.71.41-ஆக இருந்த பெட்ரோல் விலை இப்போது பாதிக்குப் பாதியாகி இருக்க வேண்டும். ஆனால், ரூ.106-ஐ கடந்தும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இது என்ன நியாயம் என்பதை ஆட்சியாளர்கள்தான் விளக்க வேண்டும்.
  • சீனாவில் ரூ.51.06, அமெரிக்காவில் ரூ.45.06, பிரேஸிலில் ரூ.61.77 என்று பெட்ரோல் விலை இருக்கும்போது இந்தியாவில் மட்டும் மக்கள் மீது கடும் வரிவிதிப்பை சுமத்தி விலை உயர்வுக்கு வழிகோலியிருப்பது எந்தவிதத்திலும் நியாயமாகத் தெரியவில்லை.
  • எதிர்க்கட்சியில் இருக்கும்போது மானியத்தை அதிகரித்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று போராடிய பாஜக, இப்போது பெட்ரோல், டீசல் விலையில் சர்வதேச முதலிடத்தை இந்தியாவுக்கு பெற்றுத் தந்து பெருமை தேடித் தந்திருப்பது வினோதத்திலும் வினோதம்.
  • இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியைக் குறைப்பதில் முந்தைய மன்மோகன் சிங் அரசு கவனம் செலுத்தத் தவறியதுதான் இப்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டில் அர்த்தமில்லை.
  • இப்போது ஆறு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, எப்போதோ இருந்த ஆட்சியின் குறைபாடுகளை இப்போதைய பிரச்னைக்கு காரணம் கூறுவது நகைப்பை வரவழைக்கிறதே தவிர, விலை உயர்வை நியாயப்படுத்துவதாக இல்லை.
  • இந்தியா 2019 - 20-ஆம் ஆண்டில் தனது கச்சா எண்ணெய் தேவையில் 85%-க்கு மேல் இறக்குமதி செய்தது என்றும், எரிவாயு தேவையின் 53% இறக்குமதி செய்தது என்றும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
  • பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை அதிகரிப்பது, இயற்கை எரிவாயு உற்பத்தி 6.3%-லிருந்து 15%-ஆக உயர்த்துவது, எரிசக்தி உற்பத்தி என்று அடுத்த 10 ஆண்டுகளில் 40% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக இருக்கும் என்றெல்லாம் தொலைநோக்குத் திட்டங்களை பிரதமர் பட்டியலிட்டிருக்கிறார்.
  • அதை வரவேற்கும் அதே நேரத்தில், இப்போதைய விலை உயர்வைக் குறைப்பதற்கான வழிவகைகளை மத்திய அரசு செய்யத் தவறுகிறது என்கிற குறைபாட்டை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
  • பெட்ரோல், டீசல் விலை உயர்வு விலைவாசி உயர்வுக்கும் வழிகோலும் என்பதை சொல்லியா தெரியவேண்டும். இப்படி விலை உயர்ந்தால், வீடுகளில் உலை கொதிக்காது, அதற்கு பதிலாக ஒட்டுமொத்த மக்கள் மன்றமும் கொதித்தெழும்...!

நன்றி: தினமணி  (18-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்