TNPSC Thervupettagam

காவலர்களின் தனிமனித உரிமைகளுக்கும் மதிப்பளிப்போம்

June 30 , 2021 1128 days 444 0
  • கரோனா இரண்டாவது அலையால் கடந்த மே மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 47 காவலர்கள் உயிரிழந்திருப்பது வருத்தத்துக்குரியது. அவர்களில் பெரும்பாலானவர்கள் 55 வயதைக் கடந்தவர்கள்.
  • இணைநோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் காவலர்கள், கரோனா தொற்றால் கடுமையான பாதிப்புக்குள்ளாவதும் உயிரிழப்பதும் அதிகமாக இருக்கிறது.
  • பெருந்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளில் முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றும் காவலர்களில் இணைநோய்கள் பாதிப்புள்ளவர்களுக்கும் ஓய்வு வயதை நெருங்குபவர்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டியது அவசியம்.
  • நோய்த் தடுப்பு நடவடிக்கையில் காவலர்களின் பங்களிப்புகள் பாராட்டப்படும் அதே நேரத்தில், அவ்வப்போது நிகழ்ந்துவரும் காவல் துறை அத்துமீறல்கள் கண்டிக்கத் தக்கவையாகவும் இருக்கின்றன.
  • சில நாட்களுக்கு முன்பு சேலம் ஆத்தூர் அருகே வாகனச் சோதனையின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவரைக் காவலர் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
  • கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரும் சித்ரவதைகளுக்கு ஆளாகி இறந்தனர்.
  • அதன் ஓராண்டு நிறைவு நினைவுகூரப்படும் நேரத்தில் ஆத்தூர் சம்பவமும் அதன் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
  • விசாரணைகளின்போதும் வாகனச் சோதனைகளின்போதும் காவல் துறையினர் அதிகார துஷ்பிரயோகத்தில் இறங்குவது எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாதது. அதுவும் குற்ற நடவடிக்கையாகவே கருதப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.
  • அதே நேரத்தில், கரோனா போன்ற ஒரு நெருக்கடிக் காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாது முன்களத்தில் நின்று பணியாற்றும் காவலர்களைப் பொதுச் சமூகம் கண்ணியத்தோடு நடத்த வேண்டும் என்பதும் நியாயமானதொரு எதிர்பார்ப்பு.
  • ஆத்தூர் சம்பவத்தை அடுத்த சில நாட்களில், வத்தலக்குண்டு அருகே பணியில் இருந்த இரண்டு காவலர்களைக் குடிபோதையில் ஆறு இளைஞர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
  • சேலம் கொண்டலாம்பட்டியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த ஒரு காவலரை உள்ளூர் அரசியல் பிரமுகர் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டிக் கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
  • காவல் துறையினரின் அதிகார துஷ்பிரயோகத்தைக் கண்டித்துக் கொதித்தெழும் பொதுச் சமூகம், அவர்கள் கண்ணியக் குறைவுக்கு ஆளாகும்போது மௌனித்தே இருக்கிறது.
  • வழக்கமான நாட்களில் நடக்கும் வாகனச் சோதனைகளுக்குச் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவை காரணங்களாக இருக்கும்.
  • தற்போது நோய்ப் பரவல் தடுப்பும் ஒரு முக்கியமான காரணமாகச் சேர்ந்திருக்கிறது. அதன் நோக்கத்தைப் பொதுமக்கள் புரிந்துகொள்வதோடு மதிப்பளிக்கவும் வேண்டும்.
  • தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் சமீபத்தில் விபத்துக்கு ஆளாகி இதயத் துடிப்பு நின்றுபோன ஒருவருக்கு, முதலுதவி செய்து இதயத்தை மீண்டும் இயங்கவைத்த காவலர் கலீல் நாடு முழுவதும் பாராட்டப்பட்டார்.
  • இதயப் புத்துயிர் முறை பயிற்சி பெற்றவர் கலீல். சீருடைப் பணிகளின் சேவைகளை விரிவுபடுத்துகையில் காவலர்-பொதுமக்களின் உறவு இன்னும் இணக்கமாக வாய்ப்புள்ளது என்பதையும் காவல் துறை உயரதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 - 06 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்