- இந்தியாவில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான காவல் துறை பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மிக அதிகமான காவல் துறை காலியிடங்கள் உத்தரப் பிரதேசத்திலும், அதைத் தொடர்ந்து பிகார், மேங்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் காணப்படுகின்றன.
புள்ளிவிவரங்கள்
- 2018 ஜனவரி 1 நிலவரப்படி இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள அனுமதிக்கப்பட்ட காவல் துறைப் பணியாளர்களின் எண்ணிக்கை 24,84,170. ஆனால், 19,41,473 பணியாளர்கள்தான் காவல் துறையில் பணியாற்றுகிறார்கள்.
2017 ஜனவரி மாத நிலவரப்படி 38 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது என்றால், 2018-இல் அந்த எண்ணிக்கை 5.43 லட்சமாக அதிகரித்தது.
- அதே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட காவல் துறையினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்திருக்கிறது. முறையாகப் பணியிடங்கள் நிரப்பப்படாமல், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை ஏன் அதிகரித்துக் கொண்டிருந்தது என்பது குறித்து உள்துறை அமைச்சகம் சிந்திக்காதது வியப்பை ஏற்படுத்துகிறது.இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட காவல் துறையினரின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு 180 பேர் இருப்பதற்குப் பதிலாக 135 பேர்தான் இருக்கிறார்கள்.
- ஐ.நா. சபையின் பரிந்துரைப்படி, ஒரு லட்சம் பேருக்குக் குறைந்தது 222 காவல் துறையினர் இருக்க வேண்டும். இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அளவில்கூட காவல் துறையினர் இல்லாமல் இருப்பதற்கும், குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் நிச்சயமாகத் தொடர்பு உண்டு என்பதை மேலே குறிப்பிட்டபுள்ளிவிரவம் தெளிவுபடுத்துகிறது.
2017-இல் காவல் துறை நவீனமயமாக்கலுக்கு ரூ.25,000 கோடியை மத்திய அமைச்சரவை ஒதுக்கீடு செய்தது.
- சட்டம் - ஒழுங்கு மாநிலத்தின் பொறுப்பாக இருந்தாலும்கூட, காவல் துறை மேம்பாட்டுக்கு உதவ வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்பதை உணர்ந்து அந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- அதிகரித்து வரும் வன்முறையையும், குற்றங்களையும், பயங்கரவாத ஊடுருவல்களையும் எதிர்கொள்ளத் தேவையான தொழில்நுட்ப மேம்பாடு மாநில காவல் துறையினருக்கு தேவைப்படுகிறது என்பதில் எள்ளளவும் ஐயப்பாடில்லை. அதை உணர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் மத்திய அமைச்சரவையின் காவல் துறை நவீனமயமாக்கலுக்கு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு.
- மத்திய அரசின் ரூ.25,000 கோடி ஒதுக்கீட்டில், ஜம்மு - காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், நக்ஸல் பாதிப்புள்ள மாவட்டங்கள், பயங்கரவாதத் தடுப்பு உள்ளிட்ட உள்நாட்டுப் பாதுகாப்புப் பயன்பாட்டுக்காக சுமார் ரூ.10,000 கோடி தரப்பட்டது. மாநில காவல் துறையின் மேம்பாட்டுக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டது.
நவீனமயமாக்கம்
- காவல் துறை நவீனமயமாக்கலுக்கு மாநிலங்கள் 25% நிதி ஒதுக்கினால், மத்திய அரசு 75% நிதியுதவி அளிக்கும் என்பதுதான் அந்தத் திட்டத்தின் அடிப்படை.
காவல் துறை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ஒதுக்கீடு வழங்க முற்பட்டது என்பது மட்டுமல்லாமல், அவர்கள் நவீன ஆயுதங்கள் வாங்குவது, வாகனங்கள் வாங்குவது, நவீன தொலைத்தொடர்பு கருவிகள் வாங்குவது, தடய ஆய்வுக் கூடங்கள் மேம்படுத்துவது ஆகியவற்றுக்குத் தனியாக நிதி வழங்கவும் உள்துறை அமைச்சகம் உதவுகிறது.
- இந்தியாவிலுள்ள எல்லா காவல் நிலையங்களையும் தேசிய குற்ற புள்ளிவிவரத் துறையுடன் இணைப்பது மட்டுமல்லாமல் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், விசாரணை அமைப்புகள், ஆவண, புலனாய்வுத் துறை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கவும் சில திட்டங்களையும் உள்துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
- என்னதான் தொழில்நுட்ப ரீதியாகவும், நவீனமயமாக்கல் மூலமாக பலப்படுத்தினாலும், போதுமான அளவு காவலர்கள் பணியில் இல்லாமல் போனால், காவல் துறையின் செயல்பாட்டை மேம்படுத்துவது சாத்தியமாகாது. 2006-இல் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று, காவல் துறையின் செயல்பாடுகள் குறித்த வழிகாட்டுதலை தெளிவுபடுத்த மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
- காவலர்களின் செயல்பாடு, நியமனம் மற்றும் இடமாற்ற முடிவுகள், காவல் துறையினரின் ஒழுங்கீனம் குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் ஆகியவை முறைப்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அரசியல் தலைமை சில கண்துடைப்புகளுடன் அந்தத் தீர்ப்பை உதாசீனப்படுத்தியது என்பதுதான் உண்மை.
- குறைந்த எண்ணிக்கையில் காவல் துறையினர் இருக்கும் வரை முறையான விசாரணை செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்வது இயலாது. பெரும்பாலான வழக்குகள் போதுமான சாட்சி இல்லாமல் குற்றவாளிகள் தப்பிவிட அது வழிகோலும்.
காவல் துறையினரின் நியமனத்திலும் இடமாற்றத்திலும் ஊழலும், அரசியல் தலையீடும் இருக்கும்வரை அவர்களின் செயல்பாடுகள் தரமானதாகவும், பாரபட்சம் இல்லாமலும் இருக்காது.
பற்றாக்குறை
- குறைந்த எண்ணிக்கையிலுள்ள காவல் துறையினரை ஆட்சியாளர்கள் தங்களது பாதுகாப்புக்குப் பயன்படுத்துவது தொடரும் வரை அவர்களால் தங்களது அன்றாடக் கடமைகளை நிறைவேற்ற முடியாது.
- அதிகரித்து வரும் தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்களையும் குற்றங்களின் எண்ணிக்கையையும் எதிர்கொள்ளப் போதுமான பயிற்சியும் ஓய்வும் வழங்கப்படாமல் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. எல்லோருக்கும் இது நன்றாகவே தெரியும். இப்படியே தொடர்ந்தால், பாதுகாப்பற்ற சூழலை நோக்கி இந்தியா பயணிக்கும் என்பது மட்டும் உறுதி.
நன்றி: தினமணி (09-07-2019)