TNPSC Thervupettagam

காவல் துறையிடம் கல்வித் துறை கருத்து கேட்கலாமா?

December 13 , 2024 99 days 240 0

காவல் துறையிடம் கல்வித் துறை கருத்து கேட்கலாமா?

  • பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்தக் காவல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்பது பல்லாண்டுகளாக உள்ள விதிமுறை. பள்ளிகளிலும் பள்ளி நிகழ்ச்சிகளிலும் பேசுவதற்கு ஒருவர் வரலாமா கூடாதா என்பதையும் காவல் துறைதான் முடிவு செய்யும் என்பது புதிய விதிமுறை. பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள ‘கல்விசார்/ கல்வி இணை நிகழ்வுகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்’ இதைத்தான் மறைமுகமாக உணர்த்துகின்றன.

புதிய நடைமுறைகள்:

  • நீட், ஜேஇஇ முதலிய தேர்வு​களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளி​விழாக்கள், சுற்றுலாக்கள், முகாம்கள் போன்ற​வற்றுக்​காகப் பள்ளிக்குப் பேச வருபவர்களை அனுமதிப்​ப​தற்​கெனச் சில நெறிமுறைகள் நவம்பர் முதல் வாரத்தில் அனுப்​பப்​பட்​டுள்ளன.
  • அவற்றின்படி, கல்விசார் பணிகளுக்​காகச் சேவை மனப்பான்​மையோடு செயல்​பட்டு​வரும் அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் குறித்த முதன்மைப் பட்டியல், மாநிலப் பள்ளிக் கல்வி இயக்குநரால் பராமரிக்​கப்பட உள்ளது. மாவட்ட அளவிலும் மாவட்ட ஆட்சித்தலை​வரின் வழிகாட்டு​தலின்படி இதேபோல ஒரு பட்டியல் உருவாக்​கப்​படும். இப்பட்​டியலில் இடம்பெற்றுள்ள அமைப்புகள், 15 நாள்களுக்கு முன்னதாக விண்ணப்​பிக்க வேண்டும்.
  • நிகழ்ச்​சிகளில் பேசுவோரை முடிவு செய்வதற்காக மாநில அளவில் ஒரு குழுவும் மாவட்ட அளவில் ஒரு குழுவும் செயல்​படும். மாநிலக் குழுவின் தலைவராகப் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் இருப்​பார். மாவட்டக் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சித்தலைவர் இருப்​பார். மாவட்டக் காவல் கண்காணிப்​பாளர் உள்பட எட்டுப் பேர் இதன் உறுப்​பினர்கள். பட்டியலில் இல்லாத தொண்டு நிறுவனங்​களைச் சேர்ந்​தவர்கள் தங்கள் செயல்​திட்டம் பற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்​கலாம்.
  • குழந்தை​களின் ஒட்டுமொத்த ஆளுமையை வளர்ப்​ப​தற்கும் அவர்கள் முற்போக்கான அறிவியல் கருத்து​களையும் வாழ்க்கை நெறிகளையும் பெறுவதற்கும் ஏற்ற வகையில் பள்ளி​களில் நடைபெறக்​கூடிய நிகழ்ச்​சிகளை வரைமுறைப்​படுத்துவதே இதன் நோக்கம். எனினும், சென்னையில் இரண்டு அரசுப் பள்ளி​களில் மகாவிஷ்ணு என்பவர் சர்ச்​சைக்​குரிய வகையில் பேசியது, கிருஷ்ணகிரி தனியார் பள்ளி​களில் போலி என்சிசி முகாம்கள் நடத்திய சிலரால் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்​கப்​பட்டது ஆகிய இரண்டு சிக்கல்​கள்தான் இதன் பின்னணி எனப் புரிந்​து​கொள்ள இயலும்.

பாராட்​டத்தக்க அம்சங்கள்:

  • பள்ளிகள், யார் வேண்டு​மா​னாலும் நினைத்தபோது வந்து தங்கள் உணர்வு​களை​யெல்லாம் கொட்டிச் செல்வதற்கான இடம் அல்ல. மாணவர்களது உடல், மன நலனைக் காப்ப​தற்கான முதல் பொறுப்பு பள்ளிக் கல்வித் துறைக்கு இருக்​கிறது.
  • அதை இந்த வழிகாட்​டல்கள் உரக்கத் தெரிவிக்​கின்றன. முறைப்படி ஒப்புதல் பெற்றுப் பள்ளிக்கு வந்தவர்கள், தாங்கள் முன்வைத்த செயல்​திட்​டத்​துக்கு முரணாகப் பேசினால், அவர்கள் தொடர்பான நிகழ்ச்சியை நிறுத்​திவைக்கும் தலைமை ஆசிரியரின் அதிகாரம் உறுதிப்​படுத்​தப்​பட்​டுள்ளது.
  • சுற்றுலாக்​களில் பெற்றோர் பிரதி​நி​தியும் இடம்பெற வேண்டும் என்பது வலியுறுத்​தப்​படு​கிறது. மாணவர் நலன் விவகாரத்தில் இனியும் சறுக்கல் நேரக் கூடாது என்கிற கல்வித் துறையின் நோக்கம் பாராட்டுக்​குரியது. எனினும், அனுமதி பெறும் செயல்​முறையை இவ்வளவு சிக்கலானதாக மாற்ற வேண்டுமா என்பதே கல்வி ஆர்வலர்​களின் கேள்வி.
  • தனிநபர்கள் பலர் அரசுப் பள்ளி​களின் மேம்பாட்டுக்​காகச் செயல்​பட்டு​வரும் நிலையில், விதிமுறை​களில் தொண்டு நிறுவன அமைப்புகளை மட்டுமே அரசு முன்னிலைப்​படுத்து​வதும் அதிருப்தியை ஏற்படுத்​தி​யுள்ளது.

நெறிமுறை​களின் இன்னொரு பக்கம்:

  • தொண்டு நிறுவனங்​கள் பாரபட்​சமின்றி வாய்ப்​பளிக்​கப்​படுமா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. ஓர் ஆட்சியில் ஆதரிக்​கப்​படும் ஒரு தொண்டு நிறுவனம், இன்னொரு ஆட்சியில் புறக்​கணிக்​கப்​படலாம். மாணவர் நலனுக்​காகவும் சமூக நலனுக்​காகவும் பொது நிகழ்ச்​சிகளுக்குத் தங்கள் வளாகங்களை வழங்கும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. புதிய நெறிமுறைகள் இவற்றின் சுதந்​திரத்தைப் பறிக்​கக்​கூடும்.
  • தவறான சிலரைத் தவிர்ப்​ப​தற்​காகச் சரியான பல நபர்களை மறுக்கும் சாத்தியம் இந்த நெறிமுறை​களில் உள்ளதாகக் கூறும் கல்வி​யாளர் தா.நெடுஞ்​செழியன், “பள்ளிக் கல்வித் துறைக்கு நீண்ட அனுபவம் இருக்​கிறது. அதன்படி, இதுவரை பள்ளி​களோடு சேர்ந்து பணிபுரிந்து, ஆக்கபூர்வமான பங்களிப்பு​களைச் செய்துள்ளவர்கள் குறித்து ஒரு பட்டியலை உருவாக்​கலாம்.
  • அதில் இடம்பெற்​றவர்​களைப் பள்ளி நிகழ்ச்​சிகளுக்கு அழைக்​கலாம். புதிதாக வருபவர்களை விசாரித்து முடிவு செய்ய​லாம். இவர்களைப் பற்றிக் கருத்துக் கேட்கக் காவல் துறை வரைக்கும் பள்ளிக் கல்வித் துறை செல்ல வேண்டிய​தில்லை.
  • உயர்கல்​வியில் புதுவாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்குதல், மாணவி​களுக்குப் பொது சுகாதாரம் குறித்துக் கற்பித்தல், பாதுகாப்பான தொடுதல் - பாதுகாப்பற்ற தொடுதல் குறித்த விழிப்பு​ணர்வை ஏற்படுத்​துதல் போன்ற பல செயல்​பாடு​களுக்காகத் தன்னார்​வலர்கள் பலர் அரசுப் பள்ளிகளோடு தம்மை இணைத்​துக்​கொண்​டுள்​ளனர். காவல் துறையிடம் அனுமதி பெற்று​விட்டுத்தான் இவர்களைப் பள்ளிக்கு வரவழைக்க முடியும் என்பது இப்பணிகளுக்குத் தடை போடுவதாக அமையும்” என்கிறார்.
  • அரசுப் பள்ளி​களின் மேம்பாட்டுக்​காகச் செயல்​படும் ‘பொதுப்​பள்​ளிக்கான மாநில மேடை’ அமைப்பும், ‘தவறு நடக்காமல் பார்த்​துக்​கொள்வது, தவறு நடந்தால் அதை எவ்வாறு கையாள்வது ஆகியன குறித்து ஆசிரியர்​களுடன் விவாதித்து, பொறுப்பை உணர்ந்து சுயமான முடிவுகள் எடுக்க ஆசிரியர்​களுக்குச் சுதந்​திரத்தை வழங்கு​வதுதான் தற்போதைய தேவை. சுதந்​திரமான கல்வி​யியல் செயல்​பாட்டை முடக்கும் நெறிமுறைகளை அரசு திரும்பப் பெற வேண்டும்’ என வலியுறுத்​தி​ உள்ளது.

காவல் துறையின் தலையீடு:

  • தொண்டு நிறுவனங்கள் நிகழ்ச்சி நடத்த விண்ணப்​பித்த பின்னர், அவற்றுக்குக் காவல் துறை நுண்ணறிவுப் பிரிவினர் (IS-Intelligence Service) சான்று அளிப்பர். அதன் பிறகுதான் மாநில/​மாவட்டக் குழுவால் விண்ணப்​பங்கள் பரிசீலிக்​கப்​படும் என வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன. மனித உரிமை குறித்த கல்வியைப் பள்ளி மாணவர்​களுக்குக் கற்பித்த அனுபவம் கொண்ட ‘மக்கள் கண்காணிப்​பகம்’ (People’s Watch), இதற்குக் கண்டனம் தெரிவித்​துள்ளது.
  • “பள்ளி நிகழ்ச்​சிகளுக்கு எங்களைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்​களையோ, வழக்கறிஞர்​களையோ அழைக்க நுண்ணறிவுப் பிரிவினர் எப்படி முன்வரு​வார்கள்? மகாவிஷ்ணு பேச்சு ஏற்படுத்திய எதிர்மறை விளைவுக்குத் தீர்வாகப் பள்ளி​களைக் காவல் துறையின் கண்காணிப்​புக்கு உள்பட்ட இடமாக மாற்றுவது ஏற்கத்​தக்​கதல்ல. இது கருத்துச் சுதந்​திரத்தைப் பறிக்​கக்​கூடியது” என மக்கள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

எந்த ஜெயகாந்தன்?

  • குற்றம், சட்டம் சார்ந்தே சிந்தித்துப் பழக்கப்​பட்​டுள்ள காவல் துறைக்குச் சில வரம்புகள் உள்ளன. “நான் நள்ளிரவில் மேம்பாலத்தில் விரைவாகச் சென்று​கொண்​டிருந்​தேன். விசில் சத்தம் கேட்ட​தால், காரை நிறுத்​தினேன். அது பாலத்தின் சரிவு என்பதால் கொஞ்சம் தள்ளியே காரை நிறுத்த முடிந்தது. விசில் அடித்த போக்கு​வரத்துக் காவல் அதிகாரி ‘என்ன மேன் நீ... காரை நிறுத்​தாமல் போற?’ எனக் கேட்டார்.
  • அதற்கு நான் ‘Call me Mr. Jeyakanthan’ எனக் கூறினேன். அவர், ‘எந்த ஜெயகாந்​தன்?’ என்றார். ‘தமிழ்​நாட்டில் ஒரே ஒரு ஜெயகாந்​தன்தான் உண்டு. ஒரு காவல் அதிகாரியாக நீங்கள் தெரிந்​து​கொண்​டிருக்க வேண்டும்’ என நான் சொல்ல, அவர் சல்யூட் அடித்​தார்” என 1980களில் (‘சிந்​தையில் ஆயிரம்’) சென்னையில் தனக்கு நடந்த அனுபவத்தைப் பதிவுசெய்​துள்ளார் எழுத்​தாளர் ஜெயகாந்தன்.
  • எழுது​வதுடன் நிறுத்​திக்​கொள்​ளாமல், அரசியல் பங்கேற்பு உள்படப் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட அனுபவமும் ஜெயகாந்தனை அவ்வாறு பேச வைத்திருக்​கலாம். எனினும் ஜெயகாந்தன் யார் என அந்த அதிகாரி ஒரு சிறு உரசலுக்குப் பின்னர்தான் அறிந்​து​கொள்ள முடிந்தது. தகவல்​தொடர்பு நன்கு வளர்ந்​திருக்கும் இன்றைக்கும் காவல் துறையின் போக்கில் பெரிய மாற்றம் நிகழ்ந்​திருப்​ப​தாகக் கூற முடியாது.
  • அதன் அசாதா​ரணமான வேலைப்பளு அதற்கெல்லாம் அனுமதிப்​ப​தில்லை. இந்த நிலையில், கல்வித் துறையின் செயல்பாடு குறித்த முக்கியமான அதிகாரத்தைக் காவல் துறையிடம் ஒப்படைப்பது தீர்வாகுமா எனப் பள்ளிக் கல்வித் துறை பரிசீலிக்க வேண்டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 12 – 2024)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top