TNPSC Thervupettagam

காவல் துறை என்ன செய்கிறது

July 25 , 2022 745 days 415 0
  • அண்மையில், தமிழ்நாட்டில் ஒரு பள்ளி மாணவியின் மர்ம மரணம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்துள்ளது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு இது போன்ற எத்தனையோ வன்முறைகளை நாடு சந்தித்துள்ளது. ஆட்சியில் இருப்பவர்களின் அலட்சியத்தால்தான் சில நேரங்களில் புழுவும் பூதமாகி விடுகிறது.
  • ஆட்சிக் கட்டில் என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. புலிவால் பிடித்த கதைதான். எப்போதும் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. எல்லாம் முடிந்த பிறகு ஆறுதல் கூறுவதால் என்ன பயன்? எவ்வளவு தொகை கொடுத்தாலும் இழந்த உயிருக்கு அது ஈடாகுமா?
  • கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 12}ஆம் வகுப்பு படித்து வந்தார். ஜூலை 13 அன்று மாடியில் இருந்து கீழே விழுந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.
  • ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாமல் பெற்றோர் தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் நான்கு நாட்கள் தொடர்ந்து போராடியும் மாவட்ட நிர்வாகம் அதனைக் கண்டு கொள்ளவில்லை. அதன் பின்னர் தொடங்கிய அமைதிப் போராட்டம் வன்முறையாக மாறியது. காவல்துறையின் தாக்குதலினால் போர்க்களமாக மாறியது. வன்முறைக் கும்பல் பள்ளியையே சூறையாடியது.
  • இந்த நிகழ்வில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விடியோ பதிவுகளை வைத்து 329 பேரை கைது செய்துள்ளனர். அத்துடன் பள்ளியின் நிர்வாகி, செயலர், முதல்வர், பள்ளி ஆசிரியைகளையும் கைது செய்துள்ளனர்.
  • பள்ளியில் நடந்த வன்முறைப் போராட்டத்தால் ஏற்பட்ட அழிவு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முன்பாகவே சூழ்நிலைகளை ஆராய்ந்து மாவட்ட நிர்வாகம் அமைதியை ஏற்படுத்தி யிருக்க வேண்டும். இப்போது குதிரைகள் ஓடிப்போன பிறகு லாயத்தை பூட்டியுள்ளது காவல்துறை.
  • பிள்ளையை இழந்த பெற்றோருக்கு நீதி கிடைத்திருந்தால் நிலைமை சீரடைந்திருக்கும். நீதி கேட்டு நான்கு நாட்கள் நடந்த போராட்டம் வன்முறையை நோக்கிப் போய் விட்டது. என்றாலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
  • மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த பெற்றோர், உடலை வாங்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதற்கிடையில்தான் பெரும் கலவரம் வெடித்தது. தமிழகம் எப்போதும் அமைதிப் பூங்காவாகவே இருந்து வருகிறது என்று ஆட்சியாளர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அந்தப் பெருமைக்கு இந்த நிகழ்வால் களங்கம் ஏற்பட்டுள்ளது.
  • சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் காவல்துறையும், அதற்கு வழிகாட்டும் உளவுத்துறையும் தமிழக அரசின் கையை விட்டுப் போய்விட்டதோ என்று ஊடகத்துறையினர் கேள்வி எழுப்பினர். இந்த வன்முறைக்கு உளவுத்துறையின் மெத்தனமும் ஒரு காரணமாகும் என்று கூறப்படுகிறது.
  • மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஆளும் ஆட்சி என்று பெருமை பேசுகிறார்கள். மக்கள் வாக்கே மகேசன் வாக்கு என்றும் கூறுகிறார்கள். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் மக்களது கருத்துக்கு மதிப்பளிப்பது இல்லை என்பதுதான் உண்மை. மக்களின் கருத்தறிந்து சட்ட திட்டங்களை செயல்படுத்துவதும் இல்லை.
  • ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் அவர்கள் நினைப்பதை மக்கள் மீது திணிக்கும் போக்கே நிலவுகிறது. வாக்களித்த மக்களை மறந்து விடுகின்றனர். சுயநலமே மேலோங்கி நிற்பதால் அங்கு பொதுநலம் மறைந்து விடுகிறது. தங்களது உயர்வுக்காக எதைச் செய்யவும் தயங்குவது இல்லை. வன்முறை பிறக்கும் இடமும் அதுதான்.
  • அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த "அக்னிபத்' என்னும் ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் திட்டமாகும். இது ராணுவத்தில் சேர காத்திருந்த இளைஞர்களுக்கும் மிகப் பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. இதுவரை ராணுவப் பணி என்பது நிரந்தரமானதாகவே இருந்து வந்தது. இனி இது ஒப்பந்த அடிப்படையில் நான்கு ஆண்டுகள் மட்டுமே என்றால் எப்படி இருக்கும்? அதன்பிறகு வீட்டுக்கு வந்துவிட வேண்டும். ஓய்வூதியமும் கிடையாது. ஒட்டுமொத்தமாக ஒரு தொகை மட்டும் கொடுக்கப்படும்.
  • இந்தத் திட்டம் பல்லாயிரம் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கி விட்டது. இரண்டு ஆண்டுகளாக ராணுவத்தில் ஆள் எடுப்பு நடக்கவில்லை. அதற்கு முன்னால் நடந்த ஆள் எடுப்பில் கலந்து கொண்ட இளைஞர்களில் சிலர் தேர்வுகளில் வெற்றி பெற்று பணி நியமன உத்தரவுக்காகக் காத்திருக்கின்றனர். அவர்கள் மறுபடியும் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என்ன நியாயம்?
  • வடமாநில இளைஞர்களின் கோபம் வன்முறையாக வெடித்தது. பல மாநிலங்களில் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். பல மாநிலங்களில் முழு அடைப்பும் நடந்தது. ரயில்கள் எரிப்பு முதலிய வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன. அந்தக் கலவரம் அடங்க பல நாட்களாயின.
  • "அரசாங்கத்தை எதிர்த்து வன்முறையில்லாத புரட்சியே இருக்க முடியாது; அப்படி ஒரு புரட்சி நடந்ததாக வரலாறு கண்டதில்லை என்று நீங்கள் சொல்லக்கூடும். சரி, அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை' என்று அண்ணல் காந்தியடிகள் கூறியுள்ளார்.
  • இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் அமைதி வழியில் அகிம்சை வழியில் நடந்தது என்றாலும், ஒரு சில வன்முறைச் சம்பவங்களும் நிகழாமல் இல்லை. கோகலேவின் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் "மிதவாதிகள்' என்றும், திலகர் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் "தீவிரவாதிகள்' என்றும் சுதந்திரப் போராட்ட வரலாறு கூறுகிறது.
  • மாவீரன் பகத் சிங் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவனே தவிர வன்முறையாளன் இல்லை என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அடிமைப்பட்டிருந்த நாட்டில் ஆங்கிலேயர்கள் செய்த அராஜகம் அவனைப் போன்ற இளைஞர்களைத் தூண்டிவிட்டது.
  • லாகூர் சதி வழக்கில் கர்த்தார் சிங் சாராபா தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டதும் ஜாலியன்வாலா பாக்கில் நிரபராதியான மக்களை பீரங்கி ஏந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்திய கொடுமையும், பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் தாக்கப்பட்டு, பிறகு மரணம் அடைந்ததும் வன்முறையில்லையா? இந்த வன்முறையை எப்படி எதிர் கொள்வது?
  • 1927 ஏப்ரல் 8 அன்று தில்லி சட்டப்பேரவையில் குண்டு வீசப்பட்டது. குண்டு வீசிய பகத் சிங்கும், பி.கே. தத்தும் வெளியிட்ட அறிக்கை, "காது கேளாதவர்களுடன் பேசும்போது உரக்கத்தான் பேச வேண்டியிருக்கிறது' என்று குறிப்பிடுகிறது.
  • திருப்பூர் குமரன் போல கொடியைக் காக்க அடிபட்டு இறந்தவர்களும் இருந்தனர். வாஞ்சிநாதன் போல பழி தீர்த்தவர்களும் இருந்தனர். .. சிதம்பரனார், .வே.சு. ஐயர், மகாகவி பாரதியார், சுப்பிரமணிய சிவா இவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்றே அறியப்பட்டார்கள்.
  • அரசியல் வன்முறைகளைப் போலவே இப்போது சமூக வன்முறைகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. தேசம் விடுதலையடைந்த 75}ஆவது ஆண்டில் இருக்கிறோம். நாடு முன்னேறிக் கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மக்கள்தொகையில் சீனாவை விஞ்சி உலகில் முதல் இடம் பிடிக்கப் போகிறது. எல்லாம் சரி, இந்திய மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் நிலை என்ன? பணிபுரியும் அலுவலகங்கள், படிக்கும் கல்வி நிலையங்கள் எங்கும் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தெருவில் தனியாக நடந்து போக முடியவில்லை. இதுதான் தியாகிகள் பெற்றுத் தந்த சுதந்திரத்தின் விளைவா?
  • 2020}ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பெண்கள் மீதான வன்கொடுமைகள் 46 % அதிகரித்துள்ளது. குடும்பத்தில் கணவன் அல்லது உறவினர்களால் நடத்தப்படும் கொடுமையான தாக்குதல்களும் இதில் அடங்கும்.
  • தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகத்தின் 2019 புள்ளிவிவரத்தின்படி நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 10 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் 87 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் ஏதேனும் ஓரிடத்தில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்.
  • முற்காலத்தில் பெண்கள், ஜாதி, சமய, இன வாரியாகப் பிரிந்து அடிமைப்பட்டுக் கிடந்தனர். தொன்றுதொட்டு வந்த மூடநம்பிக்கையின் காரணமாக இளமைத் திருமணம், கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறுதல் இவை எல்லாம் அவர்களை ஊமைகளாக்கி விட்டன. அவர்களை மீட்டு எடுப்பதற்கு சமூக சீர்திருத்த இயக்கங்கள் கடுமையாகப் போராடின.
  • காலம் மாறியது. ஆனாலும், பெண்களின் நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. அவர்கள் மீது புதிய புதிய வடிவங்களில் வன்முறைகள் ஏவப்படுகின்றன. காவல்துறையும் சட்டங்களும், பணத்துக்கும் பதவிக்கும்தான் துணை போகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு யார்தான் துணை?
  • உலக அளவில் பெண்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது என்கிற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
  • பெண்களும், பெண் குழந்தைகளும், அவர்கள் சமூகத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வன்முறைக்கு ஆளாகின்றனர். அடிமட்ட தொழிலாளியிலிருந்து அதிகாரி வரை விதிவிலக்கு இல்லை. காவல்துறை பெண் அதிகாரிகளும் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர்.
  • அடிமைப்பட்ட நாட்டில் அந்நிய ஆட்சியின் கொடுங்கோன்மையை எதிர்த்து நடந்த வன்முறைகளை "புரட்சி' என்று நியாயப்படுத்த முடியும். விடுதலை பெற்ற நாட்டில் வன்முறைகள் தொடர்வதை எப்படி அனுமதிக்க முடியும்? பாதிக்கப்பட்டவர்களின் கோபமே வன்முறையாக மாறுகிறது. ஆட்சியாளர்களின் கையில் இருக்கும் காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?

நன்றி: தினமணி (25 – 07– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்