- மீண்டும் அதே காட்சிகள்… காற்றுவெளி எங்கும் அதே கேள்விக்குறிகள். உழுகுடிகளின் இதயத்தைப் பிசையும் அந்தக் கேள்விகள்: ‘குறுவைக்குத் தண்ணீர் கிடைக்குமா? ஜூன் 12 மேட்டூரில் தண்ணீர் திறப்பது வெறும் சம்பிரதாயம் மட்டும்தானா?’
வாக்கு தவறிய கர்நாடகம்
- குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்துக்கு ரூ.75.95 கோடியைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. உழவர்கள் உற்சாகமாகப் பணிகளைத் தொடங்கினர். மிகக் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டு, அதுவும் முறைப்பாசனமாக மாற்றப்பட்டு, இப்போது தலைமடையின் நாவே வறண்டு விட்டது.
- இயற்கைப் பேரிடர்களில் சாகுபடியில் இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் குறுவைப் பயிர்க் காப்பீட்டுத் திட்டமும் தமிழ்நாட்டில் இல்லை. இதோ தண்ணீர் எனத் தமிழகத்துக்கு ஆசை காட்டி சொற்பமாகத் தந்தது கர்நாடகம்.
- அதேவேளையில், மேகேதாட்டு தடுப்பணைக்கான தொடக்கப் பணிகளை 60 நாள்களில் முடிக்க தம் வனத் துறையினருக்குக் காலக்கெடு நிர்ணயித்திருக்கிறது. ஆம்! வாசனைப் பூக்களைத் தருவதாகச் சொல்லிவிட்டுக் கூந்தலை மொட்டையடிக்கிறது கர்நாடகம். காவிரி நடுவர் மன்றமோ உச்ச நீதிமன்றமோ சொல்லாத 66.85 டி.எம்.சி. நீரைத் தடுக்கும் அரண் கோட்டையை 12,948 ஏக்கர் சுற்றளவில் மேகேதாட்டுவில் உருவாக்குகின்றனர். தண்ணீர் தாகத்தால் தமிழகம் தத்தளிப்பதைப் பார்க்க அவ்வளவு ஆர்வம் போலும்!
கோடரியின் தேவை
- காவிரிப் பிரச்சினையில், சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பின் அணுகுமுறையும் விசித்திரமாக உள்ளது. தன் பெயரே தனக்கு மறந்துபோன வனாந்திரத்தின் கற்பனைக் கதாபாத்திரங்களாக உறவாடுகின்றனர். மத்திய நீர்வளத் துறை அமைச்சர் தமிழக நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்தும், தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியும் கோரிக்கை விடுக்கின்றனர்.
- மத்திய அரசின் அணுகுமுறையால் காவிரிப் பிரச்சினையில் தங்களுக்கு ரத்தக் கொதிப்பு எகிறுவதாக 03.09.2012 அன்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைக்கூட அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தாமதித்தது. இந்திய அரசமைப்புச் சட்டத்தை மத்திய அரசு மீறுவதாகக் கூறி, உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டது. மத்திய அரசின் தாமதம், பரிகாரம் காண்பதை மேலும் கடினமாக்கிவிட்டது. நகத்தால் கிள்ளாததைக் கோடரி கொண்டு தான் வெட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே குறிப்பிட்டது.
இறைஞ்சும் உயர் அமைப்புகள்
- இவையெல்லாம் தமிழக அரசு அறிந்ததுதான். தமிழக அரசின் முயற்சிகளில் மத்திய அரசின் வினையும் வெளியில் வந்துவிட்டது. மத்திய நீர்வளத் துறை அமைச்சர் விஸ்வேஸ்வர் துது நாடாளுமன்றத்தில் கொடுத்த பதில் இதை உணர்த்துகிறது.
- காய்ந்த பயிர்களுக்குக் குடத்தில் தண்ணீரைத் தெளித்து, இங்கு பாசனம் நடைபெறுகிறது. மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியமும் தபால் போக்குவரத்து நடத்திக் கொண்டிருக்கின்றன. 04.07.2023 கடிதம் மூலம், பிலிகுண்டுலுவில் சரியான நேரத்தில் நிர்ணயிக்கப் பட்ட நீரை வழங்க காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசைக் கேட்டுக் கொண்டது.
- காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவோ 14.07.2023 இல் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்துக்குத் தர வேண்டிய நீரின் அளவை முறையாக வழங்க வேண்டும் எனக் கர்நாடகத்தைக் கேட்டுக்கொள்கிறது. நீதிமுறை உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்குப் பதில் மன்றாடுவதும் இறைஞ்சுவதுமாக உயர் அமைப்புகள் செயல்படுகின்றன.
- கர்நாடக அரசு இதற்கெல்லாம் மசிந்ததே இல்லை. இப்போதும்கூட கர்நாடக அணைகளில் 90%க்கு மேல் நீர் இருப்பு உள்ளது. கபினி, ஹேமாவதி மட்டும் அல்ல, கிருஷ்ணா நதியின் குறுக்கே உள்ள துங்கபத்ரா அணை உள்ளிட்டவற்றிலும் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. பற்றாக்குறை காலத்தில் நீரைப் பகிர்வது குறித்து நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. சேமிக்க எந்த வகையும் இல்லை என்றால்தான் கர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் தருகிறது.
- இந்த மழையிலும் கபினி அணைக்குத் தண்ணீர் வரத்து விநாடிக்கு 20,749 கன அடி. தமிழகத்துக்குத் தரப்பட்டதோ வெறும் 3,333 கன அடி. கிருஷ்ணராஜசாகரில் கிடைத்த விநாடிக்கு 29,525 கன அடியிலான நீரில் 5,297 கன அடியைத்தான் கர்நாடகம் திறந்தது. தமிழகத்தில் ஒருவருக்கு 1 லிட்டர்தான் தண்ணீர் கிடைக்கும் என்றால், கர்நாடகத்தின் அளவோ 2.7 லிட்டர்.
சர்வதேசப் பிரச்சினை
- மத்திய, மாநில அரசுகள் காவிரி மேலாண்மை வாரியத்தைச் செயல்பட வைத்திருக்க வேண்டும். தனது தீர்ப்பை அமல்படுத்த செயலுறுத்தும் அமைப்புகள் இல்லாவிட்டால், உத்தரவு வெறும் காகிதத் தாளில்தான் இருக்கும் என்று காவிரி நடுவர் மன்றம் தன் இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டதை நினைவில் கொள்ள வேண்டும்.
- காவிரி மேலாண்மை வாரியம் பாசன மாநிலங்களில் உள்ள 8 அணைகளின் சாவிகளையும் கையகப் படுத்தி நீர் மேலாண்மையை ஒழுங்குபடுத்த வேண்டும். ஆனால், அந்தத் திசையில் ஓர் அடிகூட நகரவில்லை.
- பற்றாக்குறை காரணமாக மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு இப்போது தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு உலக அளவில் தீமையை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியம் கவலைப்படுகிறது. உலக மக்கள்தொகை 800 கோடி என்றால், அவற்றுள் 300 கோடியினரின் முதன்மை உணவு அரிசி.
- சர்வதேச அளவில் 5.54 கோடி டன் அரிசி ஏற்றுமதியாகிறது என்றால், அதில் இந்தியாவின் பங்கு 2.22 கோடி டன். 140 நாடுகளுக்கு இந்தியா அரிசி ஏற்றுமதி செய்கிறது. எனவே, காவிரிப் படுகையில் அரிசி உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்றால், அதில் தலையிட வேண்டிய கூடுதல் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.
- இப்படி ஒரு சூழலில், தமிழக அரசு வந்த மாட்டையும் கட்டாமல், போன மாட்டையும் தேடாமல் அலட்சியமாக நடந்துகொள்கிறது. தமிழகத்துக்குக் கர்நாடகம் தர வேண்டிய தண்ணீர் அளவு 177.25 டி.எம்.சி. என்று உச்ச நீதிமன்றம் இறுதிப்படுத்தியது. 2020-2021இல் 211.315 டி.எம்.சியும், 2021-2022இல் 281.058டி.எம்.சியும், 2022-2023இல் 667.487டி.எம்.சியும் கர்நாடகத்திலிருந்து தமிழகத் துக்குக் கிடைத்தது.
- அது கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்கிய உரிமைத் தண்ணீர் அல்ல; உபரி நீர். எனினும், அந்தத் தண்ணீர் எங்கே போனது? 2018 தவிர, தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கடலில் கலக்கும் நீரின் அளவு 259 டி.எம்.சி. என்று டி.எஸ்.விஜயராகவன் குழு கூறுகிறது.
அரசு செய்ய வேண்டியது
- இன்றைய அரசியல் சூழலில், கர்நாடக அரசிடம் தமிழக அரசு தமது அரசியல் தொடர்பின் வழியாக அழுத்தம் கொடுக்க முடியும். மற்றொருபுறம் நீதிமன்றத் தீர்ப்புகளைக் கர்நாடகம் பின்பற்ற தமிழக அரசு நீதித் துறை அமைப்புகளையும் அணுக வேண்டும்.
- மேகேதாட்டுக்குத் தடை கோரி 18.011.2014, 16.02.2018, 30.11.2018 உள்ளிட்ட தேதிகளில் தமிழக அரசின் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழக அரசு இதைத் துரிதப்படுத்த வேண்டும். கூட்டாட்சி அமைப்பைக் காப்பாற்றவாவது மத்திய அரசு இதில் தலையிட வேண்டும். தண்ணீர் என்கிற நீலத் தங்கத்தைக் களவாடும் கர்நாடகத்தின் முயற்சியைத் தடுக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (10– 08 – 2023)