காஷ்மீர் மக்களின் கனவு என்ன?
- ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இன்று (செப்டம்பர் 25) நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் கவனம் ஈர்த்திருக்கிறது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 ஆவது சட்டக்கூறு நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் நிகழும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் மட்டுமல்ல, முதல் கட்டத் தேர்தலில் வாக்களிக்க காஷ்மீர் மக்கள் காட்டிய ஆர்வமும், காஷ்மீர் அரசியல் களத்தில் தென்படும் மாற்றங்களும் இந்தக் கவன ஈர்ப்பின் முதன்மைக் காரணிகள். எப்படி இருக்கிறது காஷ்மீர் தேர்தல் களம்?
களத்தில் மோதும் கட்சிகள்:
- இந்தத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி), மார்க்சிஸ்ட் கட்சி, ஜம்மு - காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்திருக்கின்றன. மெஹ்பூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தனித்துப் போட்டியிடுகிறது (தேர்தல் முடிவைப் பொறுத்து காங்கிரஸ் கூட்டணியில் இணையக்கூடும் என்றும் பேசப்படுகிறது).
- எல்லோரையும் தாண்டி, பாராமுல்லா மக்களவைத் தொகுதி உறுப்பினரும் அவாமி இத்திஹாத் கட்சித் தலைவருமான இன்ஜினீயர் ரஷீத் இந்தத் தேர்தலில் மையப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறார். மக்களவைத் தேர்தலில் ஓமர் அப்துல்லாவைத் தோற்கடித்து ஆச்சரியப்படுத்திய ரஷீத், இந்தத் தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமி, மக்கள் மாநாட்டுக் கட்சி, அப்னி கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
- ரஷீதின் பிரச்சாரக் கூட்டங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு தேசிய மாநாட்டுக் கட்சிக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது. மக்களவைத் தேர்தலில் சிறையிலிருந்தபடியே போட்டியிட்ட ரஷீதுக்கு இந்தத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய இடைக்காலப் பிணை அளிக்கப்பட்டது எப்படி என ஓமர் அப்துல்லா கேள்வி எழுப்பியிருக்கிறார். ரஷீத், பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர் என்பது கவனிக்கத்தக்கது.
- கடந்த 30 ஆண்டுகளாகத் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுவந்த ஜமாத் - இ – இஸ்லாமி கட்சி இந்தத் தேர்தலில் தனது வேட்பாளர்களைச் சுயேச்சைகளாகக் களமிறக்குகிறது. காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தியில் கட்சியிலிருந்து விலகித் தனிக்கட்சி தொடங்கிய குலாம் நபி ஆசாத் இந்தத் தேர்தலில் தனித்துக் களம் காண்கிறார். சிறிய கட்சிகளான இவற்றின் நகர்வுகளின் பின்னணியில் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
- இவ்வளவுக்கும், 2015இல் ரஷீத் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது எம்எல்ஏ ஹாஸ்டலில் மாட்டுக்கறி விருந்து வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சட்டமன்றத்துக்குள்ளேயே பாஜகவினரால் தாக்கப்பட்டவர். 370ஆவது சட்டக்கூறு நீக்கப்பட்டதைக் கடுமையாக எதிர்த்துவரும் ரஷீத் தான் மோடியை எதிர்க்கும் திறன் கொண்ட தலைவர் என்று அக்கட்சியினர் வாதிடுகிறார்கள். கூடவே, காஷ்மீரின் பாரம்பரியக் கட்சிகளைவிடவும் ரஷீதின் கட்சிதான் காஷ்மீர் மக்களின் துயரங்களை நன்கு உணர்ந்துகொண்ட கட்சி; ரஷீதே நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்தான் என்றெல்லாம் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
- பல்வேறு காரணங்களால் தனது வெற்றிவாய்ப்பு குறித்த சந்தேகத்தில் இருக்கும் பாஜக, சிறிய கட்சிகளையும் சுயேச்சைகளையும் மறைமுகமாகப் பயன்படுத்திக்கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சட்டப்பேரவை அமைந்தால், குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் மீண்டும் காஷ்மீரைத் தங்கள் கைக்குள் வைத்துக்கொள்ள மத்திய அரசு நினைப்பதாக ஓமர் அப்துல்லா குறிப்பிட்டிருக்கிறார்; அப்படியான சூழல் உருவாவதைத் தடுக்கவே காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
- தேர்தலுக்கு முன்பே ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை வலியுறுத்திவந்தன. எனினும், அதைச் செய்யாமல், மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்னும் வெற்று வாக்குறுதியை வைத்து தேர்தலை நடத்துவதாக பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.
- காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் ஒரு மன்னர்போல நடந்துகொள்வதாக ராகுல் விமர்சித்திருக்கிறார். உள்ளூர் மக்களின் சொத்துக்கள், வணிக வாய்ப்புகள் வெளியாள்களுக்கு வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ், காஷ்மீர் பண்டிட்களை வைத்து அரசியல் செய்த பாஜக அவர்களுக்கு உதவ முன்வரவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறது. இதன் மூலம் இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்முவில் பாஜகவுக்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் முயல்கிறது.
- மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தைப் போலவே இந்தத் தேர்தலிலும் பாஜக, ஆர்எஸ்எஸ் மீதும் பிரதமர் மோடி மீதும் ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். கூடவே, முன்பைவிட பலம் குறைந்த நிலையில் பிரதமர் மோடி இருப்பதாகவும், பாஜக அரசு கொண்டுவரும் மசோதாக்களைத் தடுத்துநிறுத்தும் வலிமை எதிர்க்கட்சிகளுக்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார்.
வாத பிரதிவாதங்கள்:
- ஆட்சிக்கு வந்தால், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தைப் பெற்றுத்தர மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று ராகுல் வாக்குறுதி அளித்திருக்கிறார். அது எந்த அளவுக்கு நடைமுறைச் சாத்தியம் என்பது வேறு விஷயம். மறுபுறம், 370ஆவது சட்டக்கூறை மீண்டும் கொண்டுவருவது தொடர்பாகக் காங்கிரஸ் வெளிப்படையாக எதையும் பேசவில்லை. கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் அது இடம்பெறவில்லை. ஆரம்பத்தில் இவ்விஷயத்தில் அமைதி காத்த ஓமர் அப்துல்லா இப்போது மீண்டும் அதை வலியுறுத்தத் தொடங்கியிருப்பது காங்கிரஸுக்குச் சற்றே சங்கடத்தைக் கொடுத்திருக்கிறது.
- மறுபுறம், 370ஆவது - 35ஏ சட்டக்கூறுகளை மீண்டும் கொண்டுவர காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் விரும்புவதாகப் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேசியது பாஜகவின் புதிய அஸ்திரமாகியிருக்கிறது. இக்கட்சிகள் பாகிஸ்தானுக்கு ஆதரவானவை / பாகிஸ்தானின் ஆதரவு பெற்றவை என்று பாஜக குற்றம்சாட்டியிருக்கிறது. இவ்வளவுக்கும் கவாஜா ஆசிஃபின் கருத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று விளக்கமளித்திருக்கும் இரு கட்சிகளும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது என்றும் எச்சரித்திருக்கின்றன. எனினும், பாஜக இந்த அஸ்திரத்தை விடுவதாக இல்லை.
- இந்திய எல்லைக்குள் நுழைந்து ஆக்கிரமிப்பில் ஈடுபடும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கும் மத்திய அரசு, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பது ஏன் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபாரூக் அப்துல்லா எழுப்பியிருக்கும் கேள்வியும் பாஜகவுக்குச் சாதகமான அம்சமாகியிருக்கிறது. காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்றும் குடும்பக் கட்சிகள் - ஊழல் கட்சிகள் என்று பாஜக விமர்சித்துவரும் நிலையில், அவற்றில் ஒன்றான மக்கள் ஜனநாயகக் கட்சியின் கூட்டணி அரசில் பாஜக பங்கேற்றது ஏன் என்று ஃபாரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
- காஷ்மீரில் 40,000 பேரைப் பலிவாங்கிய பயங்கரவாதச் சம்பவங்களுக்கு தேசிய மாநாட்டுக் கட்சிதான் காரணம் என்று அமித் ஷா குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், காந்தஹார் விமானக் கடத்தல் சம்பவத்தில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை வாஜ்பாய் அரசு விடுவித்ததையும், மசூத் அசார் இந்தியாவில் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்திருக்கிறார் ஃபாரூக். கல்வீச்சு சம்பவங்களில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிப்பது தொடர்பாகவும், பாஜக – காங்கிரஸ் / தேசிய மாநாடு கட்சிகளுக்கு இடையே வார்த்தைப் போர்கள் நடக்கின்றன.
அமைதி திரும்புமா?
- செப்டம்பர் 18இல் நடந்த முதல் கட்டத் தேர்தலில் 61.11% வாக்குகள் பதிவானது அனைத்துத் தரப்பினரிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வாக்குப்பதிவு இது. பயங்கரவாதத் தாக்குதல்கள் அடிக்கடி நிகழும் புல்வாமா, அனந்த்நாக், சோஃபியான் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கணிசமான வாக்குப்பதிவு நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பகுதி மக்கள் பெரும்பாலும் தேர்தல்களைப் புறக்கணித்துவந்த நிலையில் இத்தகைய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
- காஷ்மீர் மக்கள் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருப்பதையே இது காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மாநில அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு - பாஜக சொல்லிக்கொள்வது போல- பயங்கரவாதச் சம்பவங்கள் முற்றுப்பெற்றுவிடவில்லை. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடவில்லை.
- குறிப்பாக, பல்வேறு பகுதிகளில் மிகக் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை நிலவுகிறது. பல தசாப்தங்களாக நிலவிவந்த பதற்றத்தால் சோர்வடைந்திருக்கும் காஷ்மீர் மக்கள், அமைதியான வாழ்க்கையை எதிர்நோக்கியிருக்கிறார்கள். மக்களிடம் நிலவும் மெளனத்தை அமைதி என்று தவறாகக் கருதிக்கொள்ளக் கூடாது என்று பிரிவினைவாத ஹூரியத் தலைவர் மிர்வாயிஸ் உமர் ஃபாரூக் கூறியிருக்கிறார். காஷ்மீர் மக்கள் மனதில் இருப்பது என்ன என்று அக்டோபர் 8இல் தெரிந்துவிடும்.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 09 – 2024)