TNPSC Thervupettagam

காஷ்மீர் மக்களின் நம்பிக்கை தகர்ந்துவிடக் கூடாது

December 28 , 2023 359 days 271 0
  • காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் ராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எல்லைப் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், உள்ளூர் மக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க வேண்டிய அவசியம் குறித்த விவாதத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்மு பகுதியில் அமைந்திருக்கும் பூஞ்ச் மாவட்டத்தின் டேரா கி கலி-பஃப்லியாஸ் சாலை பகுதியில், டிசம்பர் 21 அன்று ராணுவ வாகன அணிவகுப்பின்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
  • ஜெய்ஷ்--முகமது பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பாகக் கருதப்படும்பாசிஸத்துக்கு எதிரான மக்கள் முன்னணி’ (பிஏஎஃப்எஃப்) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக்காகப் பழங்குடி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 15 பேர், டிசம்பர் 22 அன்று அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், அவர்களில் மூன்று பேர் உயிரிழந்தது தெரியவந்தது. மூவரும் சித்ரவதை செய்யப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டிப் போராட்டம் நடத்தினர். சித்ரவதைக் காட்சிகள் அடங்கியதாகக் கூறப்படும் காணொளிகளும் இணையத்தில் பரப்பப்பட்டன.
  • இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக ராணுவம் தெரிவித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, அரசுப் பணி வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. அதேவேளையில், பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கை என்னும் பெயரில், அப்பாவிகள் பாதிக்கப்படுவதாகக் காஷ்மீர் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது சட்டக்கூறு 2019ஆகஸ்ட் 5 அன்று நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாத அமைப்புகளில் சேரும் உள்ளூர் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
  • எனினும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து வனப் பகுதிகள் வழியே பயங்கரவாதிகளின் ஊடுருவல் நடப்பதாகக் கூறப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே அமைந்திருக்கும் பீர் பஞ்சால் பகுதியில்தான் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்கள் அமைந்திருக்கின்றன. அடர்ந்த வனப் பகுதிகள் அமைந்திருக்கும் அங்கு பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் குறைந்திருந்தாலும் ராணுவத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களும் உயிரிழப்புகளும் தொடரவே செய்கின்றன.
  • 2021 முதல் இதுவரை ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் 33 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒட்டிய வனப் பகுதிகளில், பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பது ஒருவகையில் எதிர்மறையான விளைவுகளுக்கும் வித்திட்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் வசிக்கும் தங்கள் உறவினர்களுடன் தொடர்பில் இருந்துவந்த எல்லைப் பகுதி பழங்குடி மக்கள், எல்லை அருகே பயங்கரவாதிகளின் நடமாட்டம் தென்பட்டால், அதுகுறித்து ராணுவத்தினருக்குத் தகவல் தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
  • எனினும், தடுப்பு வேலி உள்ளிட்ட கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்திருக்கும் அம்மக்கள், ராணுவத்தினருக்கு முன்பு போல் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஊடுருவல்கள் குறித்த உளவுத் தகவல்களைப் பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற சிக்கலான சூழலில், அப்பாவிப் பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையிலான சம்பவங்கள் இனியும் நிகழக் கூடாது. காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து சர்வதேச அரங்கில் இந்தியா மீது பழிசுமத்திவரும் பாகிஸ்தான், இதுபோன்ற சம்பவங்களை வைத்து ஆதாயம் தேட முயலும் என்பதையும் மனதில் கொண்டு காஷ்மீர் நிர்வாகம் செயல்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்