TNPSC Thervupettagam

காஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்?

August 7 , 2019 1938 days 926 0
  • சுதந்திர இந்தியாவுடன் இணைந்ததிலிருந்தே காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் தூக்கத்தைக் கெடுக்கும் விவகாரம் ஆனது. காஷ்மீர், ஜம்மு, லடாக் என்று மூன்று தனித்தனி அடையாளங்களையும் கலாச்சாரங்களையும் கொண்ட பிராந்தியங்களின் தொகுப்பான காஷ்மீர் மக்கள் அடிப்படையில் சுதந்திர காஷ்மீரை விரும்பியவர்கள். நிர்வாகரீதியாக மட்டும் அல்லாமல், பொருளாதாரரீதியாகவும் இந்தியாவுக்கு காஷ்மீர் எப்போதும் சுமையாகவே இருந்திருக்கிறது. எனினும், இரு தரப்புகளும் தவிர்க்க முடியாமல் இணைந்து செயலாற்றுவதற்கான நிர்ப்பந்தம் புவியரசியல் சார்ந்து உருவானது. இன்றைய வடகிழக்கிலும்கூட எல்லை நாட்டுப் பயங்கரவாதம் புவியரசியல் காரணமாகவே பல மாநிலங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாகும் சூழல் உருவானது. ஆனால், காலப்போக்கில் புதிய அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்து பணியாற்றும் இணக்கமும் உருவாகி வளர்ந்தது.
  • ஜம்முவிலும் லடாக்கிலும் அத்தகைய மனநிலை மேம்பட்டுவந்தாலும்கூட காஷ்மீர் பள்ளத்தாக்கில் அப்படியான சூழல் உருவாகாமல்போனதில் பாகிஸ்தானுக்கு முக்கியமான பங்குண்டு. பாதுகாப்பற்ற எல்லைப் பகுதியை எளிதில் உடைத்துக்கொண்டு பாகிஸ்தான் தொடர்ந்து ஏவிவந்த பயங்கரவாதம் இந்தியாவுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்துவந்தது.

காஷ்மீர் விவகாரம்

  • கடந்துவந்த காலங்களில் காஷ்மீரிகளின் இதயங்களை வெல்ல முடியாமல்போனதில் டெல்லியை இதுவரை ஆண்டுவந்த அனைத்து அரசுகளுக்குமே பங்கு உண்டு.எப்படியும் முடிவுறாமல் இழுத்துக்கொண்டே செல்லும் காஷ்மீர் விவகாரம் ஒரு தீர்வை நோக்கிக் கொண்டுசெல்லப்படுவது, அந்த மாநிலத்தோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டின் நலனோடும் சம்பந்தப்பட்டதாகவே இருந்தது. ஆனால், இன்றைய பாஜக அரசு எடுத்திருக்கும் முடிவு எந்த வகையில் தீர்வை நோக்கி இட்டுச்செல்லும் என்பதே கேள்வியாக உருவெடுத்திருக்கிறது. மத்திய அரசு எடுத்திருக்கும் இப்போதைய முடிவானது காஷ்மீரில் மட்டும் அல்லாது கூட்டாட்சித் தத்துவம், நாடாளுமன்ற ஜனநாயகம், பன்மைத்துவம் ஆகியவற்றின் மீதும் நெடுங்காலத்துக்கான விளைவுகளை உண்டாக்கும்.
  • ஒரு மாநிலத்தின் வரலாற்றையே மாற்றும் விவகாரம் தொடர்பிலான சட்டத்தை சம்பந்தப்பட்ட மாநில மக்களை, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்றத்தை ஆலோசனை கலக்காமலேயே நிறைவேற்றியிருப்பது சுதந்திர இந்தியாவில் இதுவரை நிகழ்ந்திராதது. சில முடிவுகள் சரியானதாகக்கூட வரலாற்றின் போக்கில் அமையலாம்; அரசின் முடிவை லடாக் மக்கள் வரவேற்றிருப்பதை இங்கே சுட்டிக்காட்டலாம். ஆனால், அப்படியான முடிவும்கூட மக்களையும் கலந்தாலோசித்து எடுப்பதே முறை. நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவர்கள், அன்றைய சூழல் கருதி வலுவான மத்திய அரசு தேவை என்று நினைத்தார்கள்; அதேசமயம், தேச ஒருமைப்பாட்டுக்கு மொழி, மதச் சிறுபான்மையினருடன் கலந்து பேசி, இணக்கத்தின் வழியிலேயே எந்த முறைமைக்கும் தீர்வு காண்பது என்ற வழிமுறையே நீடித்து உதவும் என்றும் உணர்ந்து கையாண்டார்கள். குடியரசுத் தலைவரின் உத்தரவு இந்த அரசின் போக்கைத் துல்லியப்படுத்துகிறது; தனக்குத் தானே எல்லாமுமாக இருந்து செயல்படுவது எனும் பாதையை அது தேர்ந்தெடுத்திருக்கிறது. ஒருவேளை, இன்றைய நிலைமையின் கட்டாயமாகக்கூட இருக்கலாம்.

கூட்டாட்சி

  • அரசமைப்பு வழிகாட்டிய கூட்டாட்சி ஏற்பாடுகளை ‘மாநில அமைச்சரவையே இல்லாத நிலையில் அந்த மாநிலத்துக்காக ஆளுநரே செயல்பட முடியும்; ஜம்மு - காஷ்மீரைப் பொறுத்தவரையில் மத்திய அரசு செய்யும் எந்த மாற்றத்துக்கும் அவரால் ஒப்புதல் தர முடியும்; அவருடைய ஒப்புதல் அடிப்படையில், ஜம்மு - காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கிய 1954-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் உத்தரவை நாடாளுமன்றத்தின் வழி இப்போதைய குடியரசுத் தலைவரின் ஒப்புதலால் ரத்துசெய்ய முடியும்’ என்று அர்த்தப்படுத்திக் கடக்கும் முறைமையானது மாநிலங்களின் உரிமை மற்றும் அதிகாரத்தைத் துச்சமாகக் கீழே தள்ளி மிதிப்பதாகும் என்று கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
  • மேலும், மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்கு தொடர எவராவது முற்பட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாமலேயே மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கவும் அவற்றை மத்திய ஆட்சிப் பகுதியாகவும் உருமாற்ற அரசமைப்பின் எந்த சட்டக் கூறு வழிசெய்கிறது என்ற கேள்வி எழக்கூடும். ஜனநாயகத்தின் முன் அந்தக் கேள்வி எளிதில் புறந்தள்ளத்தக்கதல்ல.
  • ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயன்படுத்துவதற்காக குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை மாற்றுவதற்கான அரசியல் சட்டப்பிரிவு ஏற்பாடுகள் சரியே என்று 1961-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது உண்மைதான். ஆனால் அதை, இவ்வாறான அதிரடி மாற்றங்களுக்கும் பயன்படுத்தலாமா என்பது விடை காணப்பட வேண்டிய கேள்வி.

சம அந்தஸ்து

  • இந்தியாவின் எல்லா மாநிலங்களும் சம அந்தஸ்து கொண்டவையாக என்றேனும் ஒருநாள் மாற வேண்டியது அவசியம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் அதிகாரம் குறைந்த ஒரு ஒன்றியப் பிரதேசமாக அது மாற்றப்பட்டிருப்பது எந்த வகையிலும் சமப்படுத்தல் என்று சொல்ல முடியாது. ஒருவேளை, இன்றைய சூழல் கருதி முதல் கட்டமாக ராணுவம் உள்ளிட்ட மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து, நிலைமை ஓரளவு சீரான பிறகு முழு அந்தஸ்து பெற்ற மாநிலமாக மாற்றலாம் என்றும் டெல்லி நினைத்திருக்கலாம்.
  • காஷ்மீர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு எனும் மக்களின் நோக்கம் நிறைவேற ஒரு அரசு துணிச்சலாகவும் துடிப்போடும் செயலாற்றுவது மிக முக்கியம். இப்போதைய மாற்றங்களோடு தன் வேலையை மத்திய அரசு முடித்துக்கொள்ள முடியாது. காஷ்மீரில் யாரும் நிலம் வாங்கலாம் என்ற முக்கியமான மாற்றத்தின் அடிப்படையில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளிட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்ற அதன் வாதங்களை நிறுவும் நடவடிக்கையை அது தொடர வேண்டும்.
  • முன்னேற்றம்தான் பயங்கரவாதத்துக்கு எதிராகச் செயல்படக்கூடிய சிறந்த ஆயுதம்; வேலைவாய்ப்புகள் உருவாகி பொருளாதாரம் மேம்படும்போது அண்டை நாட்டின் பல்வேறு விதமான தூண்டுதலுக்கு இலக்காகி பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் காஷ்மீர் இளைஞர்கள் ஆக்கபூர்வமான பாதைக்குத் திரும்புவார்கள் என்ற வாதம் எதிர்காலத்தில் எடுபடுமானால் அதைவிட மகிழ்ச்சிக்குரிய மாற்றம் வேறில்லை.
  • இதையெல்லாம் தாண்டி, மத்திய அரசு எடுத்திருக்கும் இந்தத் தடாலடி முடிவு, முடிவற்ற பள்ளத்தாக்கின் பாதையை எங்கே கொண்டுபோய்விடும் என்பதைக் காலம்தான் சொல்லும்!

நன்றி: இந்து தமிழ் திசை(07-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்