TNPSC Thervupettagam

காஸாவின் ராஜாக்கள் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

December 4 , 2023 405 days 225 0
  • மேற்குக் கரையில் மம்மூத் அப்பாஸ் படுகிற பாடுகளைப் பார்த்தோம். பாலஸ்தீன அத்தாரிடியை ஸ்டேட் ஆஃப்பாலஸ்தீனாக லெட்டர்பேடில் மாற்றிக் கொண்டாலும் இக்கணம் வரை இஸ்ரேல் வைத்ததுதான் அங்கே சட்டம். உலக நாடுகள் உதவினால்தான் வருமானம். ஏதோ பிழைப்பு ஓடுகிறது என்றால் அதற்கு ஒரே காரணம், முன்போல இஸ்ரேலுடன் மல்லுக்கட்டுவதில்லை; போர் தொடங்குவதில்லை; அவ்வளவு ஏன், இன்னொரு இண்டிஃபாதா என்று கூட சிந்திப்பதில்லை. இப்படியே நல்ல பிள்ளையாக இருந்தால் ஐ.நா.வின் உறுப்பினர் அந்தஸ்து கிடைத்து, அதைக் கொண்டு சுதந்திர பாலஸ்தீனப் பிரகடனம் செய்யலாம், அப்போது அமெரிக்கா உட்பட யாரும் அதனை பலமாக எதிர்க்க மாட்டார்கள் என்று அவர் நினைக்கிறார்.
  • மறுபுறம் காஸாவில் என்ன நடக்கிறது என்றும் பார்க்க வேண்டுமல்லவா?
  • என்றுமே அங்கே ஹமாஸின் கைதான் மேலோங்கியிருக்கும் என்றாலும், 2007-ம்ஆண்டு முதல் ஃபத்தாவின் நிழல் கூடஇல்லாத அளவுக்கு சுத்தமாக அடித்துத் துரத்திவிட்டார்கள். பாலஸ்தீன அத்தாரிடிக்கும் காஸாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அங்கே நடப்பது தனி ஆட்சி, தனி அரசு, தனி சட்டங்கள், தனி கஷ்டங்களும் கூட.
  • ஹமாஸ் ஏன் அன்றைக்கு அவ்வளவு உக்கிரமாக ஃபத்தாவைப் பகைத்துக் கொண்டு அடித்துத் துரத்தியது என்ற வினாவுக்கு இன்று விடை தேடி பயனில்லை. பல நாடுகளில் விடுதலை இயக்கங்களுக்கிடையே சகோதர சண்டை ஏற்பட்டு, அடித்துக் கொண்டு பிரிவதும் பிரிவதால் பலம் இழப்பதும், பலமிழப்பதால் லட்சியத்தில் பின்னடைவு உண்டாவதும் நடப்பதுதான். பாலஸ்தீனும் விலக்கல்ல.
  • இருக்கட்டும். நாம் காஸாவைக் கவனிப்போம். 2006 பொதுத் தேர்தலில் ஹமாஸ்வென்றது தெரியும். பிறகு ஆட்சி பிடுங்கப்பட்டது தெரியும். அதன் தொடர்ச்சியாக காஸாவை அவர்கள் முற்றிலுமாக ‘கையகப்படுத்தி’, அங்கிருந்து ஃபத்தா, பி.எல்.ஓ. தொடர்புடைய அத்தனை பேரையும் வெளியேற்றிவிட்டுக் கதவை இழுத்து மூடிவிட்டார்கள். எக்கேடு கெட்டு ஒழியுங்கள். இனி நாங்க காஸா மக்களை மட்டும் கவனித்துக் கொள்கிறோம்.
  • ஆனால், அது அத்தனை சுலபமான பணியாக இருக்கவில்லை. ஏற்கெனவே ஹமாஸ் என்று சொன்னாலே உலக நாடுகள் உதவ மறுக்கும் சூழல். தப்பித் தவறி யாராவது உதவுகிறார்கள் என்று தெரிந்தாலே அமெரிக்கா எச்சரிக்கை அனுப்பிவிடும். இந்நிலையில் ஓர் இயக்கமாக இருந்து மக்கள் பணி செய்த போது கிடைத்து வந்த ரகசிய உதவிகளையே, ஆட்சியாளர்களாக இருந்து அரசு நடத்த ஆரம்பித்த போதும் அவர்கள் நம்பியிருக்க வேண்டியதானது.
  • என்ன பிரச்சினை என்றால், இயக்கம் செயல்படவும் இயக்கம் மூலம் மக்கள் பணிசெய்யவும் நிதி உதவிகொஞ்சம் முன்னப்பின்ன இருந்தால் போதும்.இன்றைக்கு இல்லை, அப்புறம் பார்க்கலாம் என்று கையை விரித்தாலும் யாரும் ஏனென்று கேட்க மாட்டார்கள். ஆனால் ஆட்சியாளர்களாகப் பதவியில் உட்கார்ந்து கொண்டு, சம்பளம் கிடையாது; வேலை பார் என்று சொன்னால் யார் பார்ப்பார்கள்? சரி பார்க்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் எத்தனை காலத்துக்கு?
  • காஸாவில் நிறுவப்பட்ட முதல் ஹமாஸ்அமைச்சரவையை இஸ்மாயில் ஹனியாதான்வழி நடத்தினார். குறைந்தபட்ச அமைச்சர்கள், குறைந்தபட்ச அரசு செயலாளர்கள், குறைந்தபட்ச செலவினங்கள் என்பது திட்டத்தின் முதல் அம்சமாக இருந்தது. அதன்படி அரசு துறையில் உள்ள தேவையற்ற பிரிவுகளை முதலில் கலைத்துவிட நினைத்தார்கள்.
  • எது தேவையற்ற பிரிவு? சுற்றுலாத் துறை தேவையில்லை என்றுஇஸ்மாயில் ஹனியா சொன்னார். காஸாவுக்குயார் வருகிறார்கள்? அல்லது வருவார்கள்? வாய்ப்பே இல்லை. அப்படி இருக்கும் போது தண்டத்துக்கு ஒரு சுற்றுலாத் துறை, அதற்கு ஒரு செயலாளர், அவருக்குக் கீழே நூற்றுக்கணக்கான பிராந்தியப் பணியாளர்கள். வேண்டாம், கலைத்துவிடு.
  • இரண்டாவது தகவல் தொடர்புத் துறை. என்ன பெரிய தகவல் தொடர்பு? யாருடன் தொடர்பு கொள்ளப் போகிறோம்? இஸ்ரேல் அரசுடனா அல்லது ஃபத்தாவுடனா? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. எனவே அந்தத் துறையைக் கலைத்துவிட்டு தகவல் தொடர்பு அலுவலகம் என்று பத்தடிக்குப் பத்தடி ஆபீசாக்கிவிட்டார்கள். ஒரே ஒரு நபர் ஊழியர்.
  • ஹமாஸ் கலைத்த துறைகள் இப்படி என்றால் தானாக கலைந்த துறை ஒன்று உண்டு.அது, வெளியுறவுத் துறை அமைச்சகம். ஃபத்தாவை முற்றிலும் அகற்றி, காஸாவைஅவர்கள் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதுமே அந்தப் பிராந்தியத்தில் இருந்த வெளிநாட்டு தூதரகப் பிரதிநிதிகள் மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். இனி காஸாவுடன் எந்தவிதமான தூதரக உறவும் இல்லை என்று அன்றைக்குச் சொல்லாத நாடுகள் வெகு சொற்பம்.
  • சரி போனால் போய் கொள் என்று ஹமாஸும் அமைச்சகத்தைக் கலைத்துவிட்டு ஒரு சில அதிகாரிகளை மட்டும் பணியில் வைத்திருக்க முடிவு செய்துவிட்டார்கள்.

நன்றி: தி இந்து (04 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்