- ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விகி தொழிலாளர்களுக்குத் தனி நல வாரியம் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. கிக் பொருளாதாரம் என்று அழைக்கப்படும் இது போன்ற பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு, விபத்துக் காப்புறுதி, சுகாதாரக் காப்புறுதி போன்றவை இல்லை.
- இவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களைக் கண்காணிக்கவும் முறைப்படுத்தவும் அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தொழிலாளர் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். எரிபொருள் விலை அதிகரித்திருக்கும் நிலையிலும், தங்களுக்கு உரிய முகவர் கட்டணம் அதிகரிக்கப் படுவதில்லை, தினசரி இலக்குகள் எட்டப்படாவிட்டால் ஊக்கத்தொகை உள்படத் தங்களுக்கு வழங்கப்படும் பிற பலன்கள் குறைக்கப்பட்டுவிடுகின்றன என்று இத்தொழிலாளர்கள் தொடர்ந்து முறையிட்டுவருகின்றனர்.
- பேசிய சம்பளம் வழங்கப்படாதது, ஏற்கெனவே வாங்கிய சம்பளம் குறைக்கப்பட்டது எனப் பல இன்னல்களை இவர்கள் எதிர்கொள்கின்றனர். இந்தத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்தும் தருணங்களில், அவற்றை நிறைவேற்றித் தருவதாக நிறுவனம் சார்பில் வாய்மொழி உத்தரவாதம் அளிக்கப்படுவது, சில வேளைகளில் சிறிய அளவிலான பலன் கிடைப்பது என்பதுதான் இதுவரையிலான நிலவரம். இதில் மாற்றம் வர வேண்டும் என்று இந்தத் தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.
- பெருந்தொற்றுக்கால வேலையிழப்புகளின் காரணமாக ஏராளமானோர் இந்தத் துறையில் கிடைக்கும் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர்; அதில் பொறியியல் பட்டதாரிகள்கூட உண்டு. வேலை கிடைக்காத இளைஞர்கள் பலர், தங்கள் கல்வித் தகுதி, அதுவரை பார்த்துவந்த வேலை என எல்லாவற்றையும் தற்காலிகமாகவாவது நினைவிலிருந்து அகற்றிவிட்டு, இந்தத் துறையில் பணிபுரியத் தொடங்கினர்.
- திமுகவைப் பொறுத்தவரை இவ்விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே அக்கறை காட்டிவருகிறது. 2020 ஆகஸ்ட் மாதம், கரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், சம்பளக் குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக 10,000க்கும் மேற்பட்ட ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்தொற்றுக் காலத்தில் உயிரைப் பணயம் வைத்து உணவு விநியோகப் பணியைச் செய்தவர்களுக்கு, பொது முடக்கக் கட்டுப்பாடுகளை வைத்தே சம்பளம் குறைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
- அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், இவ்விஷயத்தில் முதலமைச்சர் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இத்துறையின் மீதான முதல்வரின் தொடர் அவதானிப்பின் விளைவாக, இந்த நடவடிக்கையைப் பார்க்க முடியும்.
- 77ஆவது சுதந்திர நாளையொட்டி சென்னை கோட்டையில் கொடியேற்றிவிட்டு ஆற்றிய உரையில், “நேரத்தின் அருமை கருதிப் பணியாற்றும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலன்கருதி நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்” என்று முதல்வர் அறிவித்தது அந்த அக்கறையின் வெளிப்பாடுதான்.
- அதேவேளையில், இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் தொழிலாளர்களாகவே இன்னமும் வகைப்படுத்தப்படவில்லை என்பதால், தொழிற்சங்கம் அமைத்துத் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கான தகுதியைப் பெற முடியவில்லை என இந்தியத் தொழிற்சங்கங்களின் மையமான சிஐடியு சுட்டிக்காட்டியிருக்கிறது.
- வெறுமனே நல வாரியம் அமைப்பதையும் தாண்டி, இந்தத் தொழிலாளர்களுக்குச் சட்டப் பாதுகாப்பும், தொழிலாளர் உரிமையும் வழங்கப்படுவது அவசியம் என்றும் சிஐடியு வலியுறுத்துகிறது. இதுதொடர்பான அனைத்து அம்சங்களையும் கவனமாகப் பரிசீலித்து உறுதியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
நன்றி : இந்து தமிழ் திசை (22– 08 – 2023)