- கரோனா பெருந்தொற்று நகர்ப்புறங்களில் பரவத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் அங்கு குறைந்தபட்ச சிகிச்சை வசதிகளாவது இருந்தன. இரண்டாவது அலை தற்போது கிராமங்களிலும் வேகமாகப் பரவிவருகிறது.
- தேசியத் தலைநகரமான டெல்லியும் தொழில் தலைநகரமான மும்பையும்கூட கரோனா சிகிச்சைக்குத் தடுமாறி நிற்கும் காட்சிகளைப் பார்க்கும்போது, மருத்துவக் கட்டமைப்பில் ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் கிராமப்புறங்கள் இந்தப் பரவலை எப்படி சமாளிக்கப் போகின்றன என்று நினைத்துப் பார்ப்பதே பேரச்சத்தை நோக்கி இட்டுச் செல்கிறது.
- இந்தியாவில் உள்ள மொத்தம் 734 மாவட்டங்களில் 310 மாவட்டங்கள் (ஏறக்குறைய 42%) பரிசோதனைகளில் கண்டறியப்படும் மொத்தத் தொற்றுகளின் தேசிய சராசரி அளவான 21% -ஐக் காட்டிலும் அதிகத் தொற்று அளவைக் கொண்டுள்ளன.
- ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் நிலையில் உள்ள 13 மாநிலங்களில் நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமங்களில்தான் அதிகத் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
- தொற்றுக்கான பரிசோதனைகளைப் பொறுத்தவரை, நோய் அறிகுறிகள் உள்ளவர்களே பெரிதும் பரிசோதனைகளைச் செய்துகொள்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, பெரும் எண்ணிக்கையிலான தொற்று கணக்கிலேயே வருவதில்லை.
சந்தைகளின் அவல நிலை
- 2020-21 நிதியாண்டில் வழக்கத்துக்கு மாறாக, வேளாண் துறை 3% வளர்ச்சி பெற்றிருந்தது. பொதுமுடக்கக் காலகட்டத்தின்போது வேளாண் துறைச் செயல்பாடுகளுக்கு விலக்கு அளித்திருந்ததன் சாதகமான விளைவு இது.
- ஆனால், நாடு தழுவிய பொதுமுடக்கத்தின் விளைவாகக் கிராமப்புறத் தொடக்க நிலைச் சந்தைகளுக்கும் நகர்ப்புற நுகர்வு மையங்களுக்கும் இடையிலான அளிப்புச் சங்கிலி அறுபட்டுப்போனது.
- இந்த முறை கிராமப்புறங்களில் பரவ ஆரம்பித்திருக்கும் கரோனா, உள்ளூர் அளவிலான கொள்முதல் சந்தைகளையே கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலை, உணவுப் பொருட்களின் விலை உயர்வை நோக்கியும் இட்டுச்செல்லலாம்.
- இந்தியாவின் கிராமங்களைப் பொறுத்தவரை அவை பெரும்பாலும் ஏழெட்டுக் குடும்பங்களின் விரிவான வடிவங்கள்தான்.
- எனவே, வீட்டில் தனித்திருத்தல் என்பதும் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுவது என்பதும் நடைமுறையில் முழுவதுமாகச் சாத்தியமாவதில்லை.
- ஒரு கிராமத்துக்கும் அருகில் இருக்கும் மற்றொரு கிராமத்துக்கும் இடையிலான தொடர்பும் இவ்வாறு உறவுமுறைகளால் பின்னப்பட்டதாகவே இருக்கிறது.
- நெடுஞ்சாலையிலிருந்து நேரடியாக இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கிராமமும் தனது பக்கவாட்டில் உள்ள மற்ற கிராமங்களுடன் இப்படி இடைவெளியற்ற தொடர்புகளைப் பேணிவருகையில் ஊரடங்குகளின் நோக்கம் கிராமப்புறங்களில் எட்டப்படுமா என்பது சந்தேகம்தான்.
தத்தளிக்கும் கிராமங்கள்
- கங்கையில் மிதந்துவரும் பிணங்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் குலைநடுங்க வைத்திருக்கின்றன. நிச்சயமாக, உத்தர பிரதேசத்தைப் போலவோ பிஹாரைப் போலவோ தமிழ்நாடு மிகவும் பலவீனமான கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை.
- இந்தி பேசும் இவ்விரண்டு மாநிலங்களின் மக்கள் நெருக்கமும் நோய்ப் பரவலின் வேகத்துக்கு ஒரு முக்கியக் காரணம். குறிப்பாக, உத்தர பிரதேசக் கிராமங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்ததற்கு அங்கு நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலும் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது.
- தமிழகத்தைப் பொறுத்தவரையில், நான்கைந்து ஊர்களை மையமாகக் கொண்டு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன.
- பெரும்பாலான சுகாதார நிலையங்களில் வாரம் ஒரு முறையாவது அங்கு வரும் நோயாளிகளிடம் கரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், நகரங்களைப் போல கிராமப்புறங்களில் தொற்றுக்கு ஆளானவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் பரிசோதிப்பதில்லை.
- அது சாத்தியமும் இல்லை. ஒரு கிராமத்தில் தொற்று கண்டறியப்பட்டால், அது அதிவேகத்தில் மொத்தக் கிராமத்துக்கும் பரவுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
கூட்டுச் செயல்பாட்டில் விரிசல்
- கடந்த ஆண்டு கரோனா காரணமான பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது நகரங்களிலிருந்து கிராமங்களுக்குத் திரும்பியவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வது இயல்பாக இருந்தது.
- அவர்களிடம் தொற்று உறுதிசெய்யப்பட்டால் உடனடியாகக் கிராமச் சுகாதார அதிகாரிகள், வருவாய்த் துறை அலுவலர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டுத் தொற்றுப் பரவல் கண்காணிக்கப்பட்டது.
- ஆனால், தற்போது மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் வருவாய்த் துறைக்கும் இடையிலான கூட்டுச் செயல்பாட்டில் விரிசல் விழுந்திருக்கிறது.
- சட்டமன்றத் தேர்தலையொட்டி கரோனா தொடர்பான பணிகளிலிருந்து விலகிய வருவாய்த் துறை அலுவலர்கள் அதன் பிறகு அதன் பக்கம் திரும்பவே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
- கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கிராமப்புறங்களின் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் வரைக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், தடுப்பூசி போடுவது தொடங்கிப் பரிசோதனைகள் நடத்துவது வரை சுகாதார நிலைய அதிகாரியாகப் பொறுப்பில் இருக்கும் மருத்துவரின் மீது ஏற்றப்பட்டிருக்கும் சுமைகள் அதிகம்.
- பணியில் இருக்கும் மருத்துவரே, தினந்தோறும் தடுப்பூசி போடப்படும் நிலவரங்களைப் பதிவுசெய்து அனுப்ப வேண்டும் என்பது மற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கான சிகிச்சை பெற வருபவர்களுக்குத் தேவையற்ற காலதாமதத்தையும் உருவாக்குகிறது.
கிராமங்களுக்கான வியூகம்
- தமிழகத்தைப் பொறுத்தவரையில், கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்குமான இடைவெளி மிகவும் குறைவு. ஐம்பது கிமீ தொலைவுக்குள் இரண்டு நகரங்களாவது இருக்கின்றன.
- அந்தத் தொலைவுக்குள்ளேயே இரண்டு பேரூராட்சிகளாவது இடம்பெறுகின்றன. எனவே, கிராமப்புறங்களில் கரோனா பரவலைத் தனித்துக் கண்டறிவதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டியதும் உடனடி அவசியம்.
- தினந்தோறும் மாலை 6 மணிக்கு மாநில அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை தினசரி தொற்று விவரங்களை மாவட்டவாரியாக வெளியிட்டுவருகிறது.
- அவற்றில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சென்னைப் பெருநகரம் என்று எளிதில் கண்டுகொள்ளலாம். ஆனால், மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரையில் கண்டறியப்பட்டுள்ள தொற்றானது நகர்ப்புறத்திலா அல்லது கிராமப்புறத்திலா என்று அறிவது இயலாத ஒன்று.
- எனவே, தினசரி கரோனா நிலவர அறிக்கையில் மாவட்டந்தோறும் நகர்ப்புறம், கிராமப்புறம் என்று வகைப்பாட்டைப் பின்பற்ற வேண்டியது அவசியம். ஏனெனில், கிராமங்களில் தொற்றுப் பரவலுக்கான வாய்ப்பும் சிகிச்சைக்கான அணுகுமுறையும் மிகவும் தனித்த அம்சங்களைக் கொண்டவை.
நன்றி: இந்து தமிழ் திசை (18 - 05 – 2021)