- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான கிராமி விருது விழாவில் இந்தியாவுக்குப் பெருமைமிகு தருணம் அமைந்தது. ‘சிறந்த ஆல்பம்’ பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக் குழுவின் ‘திஸ் மொமென்ட்’ என்கிற ஆல்பத்துக்கு கிராமி விருது வழங்கப்பட்டது.
- இந்த இசைக்குழுவில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான ஜான் மெக்லாஃப்லின், உஸ்தாத் ஜாகிர் உசேன், சங்கர் மகாதேவன், செல்வ கணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சக்தியில் ‘உலக இசை’
- உலகெங்கும் இயங்கும் இசைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் விதமாக, அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி, பல்வேறு பிரிவுகளின்கீழ் திறமைமிகு இசைக்கலைஞர்களை அங்கீகரித்து இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
- 1967இல், சித்தார் கலைஞர் ரவிசங்கர் இந்தியாவிலிருந்து முதல் கிராமி விருதை பெற்றார். அவரைத் தொடர்ந்து ஜூபின் மேத்தா, ‘விக்கு’ விநாயக்ராம், ஏ.ஆர் ரஹ்மான், தன்வி ஷா, ரிக்கி கேஜ் ஆகியோர் கிராமி விருதுகளை பெற்றுள்ளனர்.
- இந்த ஆண்டு விருது பெற்ற ‘சக்தி’ இசைக்குழு 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மேற்கத்திய இசையுடன் இந்தியப் பாரம்பரிய இசையை இணைப்பதுதான் ‘சக்தி’ இசைக்குழுவின் ஸ்டைல்.
- 1970களில் ஜாஸ் இசைக்கலைஞர் ஜான் மெக்லாஃப்லின், தபலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் ஆகியோர் இணைந்து ‘சக்தி’ என்கிற இசைக்குழுவைத் தொடங்கினர். இக்குழுவோடு வயலின் இசைக்கலைஞர் சங்கர், கடம் வித்வான் ‘விக்கு’ விநாயக்ராம் இணைய ‘உலக இசை’ எல்லைகள் கடந்து சங்கமித்தது.
- ஒரு சில ஆண்டுகள் முனைப்புடன் இயங்கி வந்த சக்தி இசைக்குழு, சில காரணங்களால் 1978இல் நிறுத்தப்பட்டது. பிறகு சக்தியைச் சேந்த இசைக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் தத்தமது துறைகளில் சாதிக்கத் தொடங்கினர். இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1997இல்தான் சக்தி மீண்டும் உயிர்பெற்றது.
46 ஆண்டுகளில் முதல் முறை
- ஜான், ஜாகிர் உசேன் ஆகியோருடன் துடிப்பான இசைக் கலைஞர்களும் கைகோத்தனர். பாடகர், இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன், ‘விக்கு’ விநாயக்ராமின் மகன் இசைக்கலைஞர் செல்வ கணேஷ், மாண்டலின் னிவாஸ் ஆகியோர் சக்தியில் இணைந்தனர்.
- 90களின் இறுதியி லிருந்து அடுத்த பத்தாண்டுகளில் ‘உலக இசை’ பிரிவில் கவனிக்கத்தக்க இடத்தைப் பெற்றது சக்தி இசைக்குழுவின் படைப்புகள்.
- 2014இல் மாண்டலின் னிவாசஸ் மறைவால் மீண்டும் ஒருமுறை சக்தி இசைக்குழு சுணங்கியது. சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் 2020இல் சக்தியின் நால்வரான ஜான், உசேன், சங்கர் மகாதேவன், செல்வ கணேஷ் ஆகியோருடன் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் சேர்ந்தார்.
- கரோனா புராஜெக்ட்டாகத் தொடங்கியதுதான் ‘திஸ் மொமென்ட்’ ஆல்பம் பணி. எட்டு இசைத்துணுக்குகளைக் கொண்ட இந்த ஆல்பம், சக்தியின் 46 ஆண்டுகள் வரலாற்றில் முதல் முறையாக ஸ்டூடியோ வெளியீடாகக் கவனம் பெற்றது.
- சக்தியில் இயங்கும் ஐவரின் இசை நுட்பமும் ஒன்றோடு மற்றொன்று வேறுபாடு கொண்டிருப்பவை. எனினும் அவற்றை ஒரே கோட்டில் பயணிக்கச் செய்யும் வித்தையில் தேர்ந்தவர்களான ஜானும் உசேனும் ‘திஸ் மொமென்ட்’ ஆல்பம் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றினர்.
- மேற்கத்திய இசை, இந்திய இசை எனப் பிரித்து பார்க்கப்படும் வியாபாரச் சூழலில் நேரெதிர் துருவங்களில் பயணிக்கும் இசையை ஒன்றிணைப்பது சவாலான காரியமே. கடந்த 50 ஆண்டுகளாக ‘உலக இசையை’ ஒன்றிணைத்து திறம்பட படைப்புகளை உருவாக்கிவரும் சக்தி இசைக்குழுவால் “மேற்கு, கிழக்கு இசைகளுக்கு இடையேயான பாலம் வலுவடைந்துள்ளது” என மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் கடம் வித்வான் ‘விக்கு’ விநாயக்ராம்.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 02 – 2024)