TNPSC Thervupettagam

கிராம சபையின் அதிகாரத்தை உள்ளபடி அறிந்திருக்கிறோமா?

December 17 , 2019 1808 days 896 0
  • மக்களுக்கு அதிகாரத்தை அளிப்பதே சுதந்திரமான ஜனநாயகம். நமக்கு இவ்வதிகாரத்தை வழங்கிட மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அளவில் மூன்றடுக்கு ஆட்சிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சியில் கிராமப் பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் உள்ளன. மூன்றடுக்குகளில் எது மக்களுக்கு நெருக்கமாக உள்ளதோ அதுவே மக்களுக்கு அதிகாரத்தை வழங்கும் அரசாக இருக்கும். இந்த வகையில் மத்திய, மாநில அரசுகளைவிட மக்களுக்கு மிக அணுக்கமாகவும், நெருக்கமாகவும் இருப்பது உள்ளாட்சி அமைப்புகளே.
  • உள்ளாட்சி என்பது மக்கள் தங்களது சிறிய அளவிலான சமூகத்தின் தேவைகளைத் தாங்களே தீர்மானித்து, நிறைவேற்றிக்கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் அமைப்புமுறையாகும். உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்கவும், கேள்விகள் கேட்கவும், நிராகரிக்கவும், சரிப்படுத்தவும், தேவையானதைக் கேட்டுப் பெறுவதற்குமான அதிகாரத்தைப் பஞ்சாயத்து ராஜ் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ளது.

எல்லோர்க்கும் பொறுப்பு உண்டு

  • மத்திய, மாநில அரசுகள்போலவே உள்ளாட்சி அமைப்புகளும் இடைவெளியின்றித் தொடர வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் தெரிவிக்கிறது. இதை உறுதிசெய்ய வேண்டியது மாநில தேர்தல் ஆணையத்தின் சட்டபூர்வமான கடமை. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்த ஆறு மாதங்களுக்குள் புதிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்படி நடக்காதபோது நீதிமன்றங்கள் தலையிட்டு தேர்தல் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். தேர்தல் நடத்துவது நீதிமன்றத்தின் பணியல்ல என்றாலும் உள்ளாட்சியை உறுதிசெய்யும் கடமையும் பொறுப்பும் அதற்குள்ளது. ஏனெனில், அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் பொறுப்பு நீதிமன்றங்களிடம் இருக்கிறது.
  • இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே உள்ளாட்சி அரசுகள் அமைந்திருக்க வேண்டிய தமிழகத்தில் அப்பட்டமாக அரசமைப்புச் சட்டம் மீறப்பட்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இதற்குக் காரணமாகவும் இருக்கிறது என்பது ஒருபுறமிருக்க, இந்தத் தாமதத்துக்கு நீதிமன்றங்களின் நடைமுறைகளும் ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டன. ஏதாவது ஒரு மாநிலத்தில் 3 ஆண்டுகள் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலைத் தள்ளிவைக்க நீதிமன்றங்கள் அனுமதித்திருக்குமா? உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதே நடைமுறை பொருந்தும் தானே? அரசியல் கட்சிகளும்கூடத் தங்களது அரசியல் அதிகாரங்களை விரிவுபடுத்தும் தளமாகவே உள்ளாட்சி அமைப்புகளைப் பார்க்கின்றனவே அல்லாமல் தேர்தல் தள்ளிப்போடப்பட்டதை அரசமைப்பு மீறலாக அவைகள் கருதவில்லை.

மக்களின் அதிகாரம்

  • பஞ்சாயத்து ராஜ் சட்டம் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள மக்களுக்கு ஒரு தனிச்சிறப்பான அதிகாரத்தை வழங்கியுள்ளது. அது கிராம சபை எனும் சக்தி. சட்டத்தை இயற்றும் அதிகாரமிக்க சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் உறுப்பினர்கள்தான் விவாதிக்க முடியுமே தவிர, குடிமக்கள் அவற்றில் பங்கேற்க முடியாது. ஆனால், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கேள்வி கேட்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்கியுள்ளது பஞ்சாயத்து ராஜ் சட்டம். நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மட்டுமல்ல, செய்த வேலைகளை, செய்யவுள்ள வேலைகளையும் பரிசீலனைக்கு உட்படுத்தும் அதிகாரத்தையும் வழங்கியுள்ளது.
  • கிராமத்தில் செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய் செலவும் கிராம சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். செய்யப்பட்ட, செய்யப்படும் ஒவ்வொரு வேலையும், திட்டமும் கிராம சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். தமது பஞ்சாயத்துப் பகுதியில் மக்களுக்காக என்னென்ன புதிய திட்டம் தேவை, என்னென்ன வேலைகள் வேண்டும் என்றெல்லாம் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியும். அவற்றைச் செய்யுமாறு ஊராட்சி ஆணையரையும், மாவட்ட ஆட்சியரையும் கேட்க முடியும். ஏன் செய்து தரவில்லை என்று காரணமும் கேட்க முடியும். அவர்களும் விளக்கம் அளித்தாக வேண்டும். இத்தகைய அதிகாரங்களைக் கொண்டிருக்கும் கிராம சபை, அதைவிட உச்சமாக ஊராட்சி மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்கும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது.

நிரந்தர அமைப்பு

  • இத்தகைய உச்சபட்ச அதிகாரத்தை மக்கள் கையில் எடுத்திருந்தால் கிராம நிர்வாகத்தை நல்லபடியாக நடத்தியிருக்க முடியும். கிராம சபை என்பது கால வரம்பு இல்லாத நிரந்தர அமைப்பு. கடந்த மூன்று ஆண்டுகளில், ஆண்டுதோறும் கட்டாயமாக நடத்தப்பட வேண்டிய நான்கு கட்டாய கிராம சபைக் கூட்டங்களோடு, வரவு - செலவுக் கணக்குகளைச் சமர்ப்பிக்கவும், திட்டங்களை நடத்திடவும் அவ்வப்போது ஓரிரு சிறப்புக் கிராம சபைக் கூட்டங்களும் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் நடந்துள்ளன. உடைந்த குடிநீர்க் குழாயை சரிசெய்ததற்கான செலவு, குடிநீர்த் தொட்டிக்கு பிளீச்சிங் தூள் வாங்கிய செலவு, சாலை போட்ட செலவு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளும் கிராமசபைக் கூட்டங்களில்தான் அங்கீகரிக்கப்படுள்ளன. கிராம சபையின் அங்கீகாரம் இல்லாவிட்டால் இச்செலவுகள் ஏற்கப்பட முடியாததாகக் கொள்ளப்படும்.
  • கிராம சபையின் வாயிலாக உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் இவ்வளவு அதிகாரம் செலுத்த முடியும் என்பதை அறிந்துள்ள அரசியல் கட்சிகள் தத்தமது தொண்டர்களை அதில் ஏன் ஈடுபடுத்தவில்லை என்பது புரியாத புதிரே. கட்சிகள் தத்தமது தொண்டர்களிடம் கிராம சபையின் அதிகாரம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கியிருந்தால், கிராம சபைக் கூட்டத்தில் முறையாகப் பங்கேற்க அறிவுறுத்தியிருந்தால், கிராமப் பஞ்சாயத்தின் நிலையை மாற்றி அமைத்திருக்கலாம். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை.

கட்சிகளுக்கு என்ன தயக்கம்?

  • கட்சித் தலைமைகளுக்கு பஞ்சாயத்து அரசின் செயல்முறைகள் தெரிந்திருக்கவில்லை என்று கூற முடியாது. ஆனால், கிராம சபை அமைப்பின் மீது பெரிய நம்பிக்கை இல்லாதது இந்த அலட்சியத்துக்கான காரணமாகக் கருத வேண்டியிருக்கிறது. பின் ஏன் அவை கிராம சபை அமைப்பைப் பயன்படுத்தவில்லை என்பது ஆய்வுக்குரியது. விளைவாக, பஞ்சாயத்து அரசின் ஆட்சி அதிகாரத்திற்காகத் தேர்தல்களில் போட்டியிடுபவர்களில் ஆகப் பெரும் பகுதியினர் கிராம சபையின் அதிகாரம் குறித்து அறிந்திராதவர்கள் என்பது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு முறைகூட கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களும்கூட, இன்று தமது கிராமத்தை நிர்வாகம் செய்வதற்காக மக்களிடம் அதிகாரத்தைக் கேட்டுப் போட்டியிடுகிறார்கள்.
  • சமூக அக்கறையுடன் பொதுப் பணிகளில் பங்கெடுத்துவரும் இளைஞர்களும்கூட கிராம சபையின் அதிகாரங்களைச் சரிவர உணர்ந்திருக்கவில்லை. ஒருவேளை, கிராம சபையின் அதிகாரங்களைக் கையாள்வதற்கு இவர்களைத் தயார்ப்படுத்தி
    யிருந்தால், கிராம சபைக் கூட்டங்களில் இன்னும் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கக்கூடும். சாலையோரத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக அனைத்து ஊராட்சிகளுக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் தள்ளுவண்டி வாங்கியதையாவது நிச்சயம் கேள்விக்குள்ளாக்கி இருப்பார்கள். உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற, பல லட்சங்கள் தேவைப்படும் நிலையும் பதவிகள் ஏலம் விடப்படும் நிலையும் உருவாகியிருக்காது.
  • கிராமங்கள் முழு அதிகாரம் மிக்கவையாக மாறத்தக்க அளவில் கிராம சபைகள் மேலும் அதிகாரப்படுத்தப்பட்ட வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, பஞ்சாயத்து ராஜ் சட்டம் வழங்கியுள்ள வாய்ப்பின் மூலம் கிராம மக்களே அதிகாரம் மிக்கவர்கள் என்ற புரிதலும், அந்த அதிகாரத்தை முறையாகக் கையாளப் பழகுவதும் இனியேனும் நடக்க வேண்டும். அப்போதுதான் ஊழலுக்கு வாய்ப்பில்லாத கிராம நிர்வாகத்தை மலர வைக்க முடியும்.
  • 1835-36 ல் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த சார்லஸ் மெட்காஃப் பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய கடிதத்தில், ‘கிராம சமூகங்கள் சிறு குடியரசுகள்போல் இருக்கின்றன. ஏறத்தாழ தங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொண்டிருக்கின்றன. எந்த வெளி உதவிகளும் தேவைப்படாத சுதந்திரமானவையாக இருக்கின்றன. (வெளியுலகில்) எந்தவொன்றும் நிகழாததுபோல் அவை நிலைத்து இருக்கின்றன. சாம்ராஜ்யங்கள் மாறிமாறி சரிந்தன, ஒரு புரட்சி போய் மற்றொரு புரட்சி வந்தது. ஆனால் கிராமங்கள் ஏதும் நடக்காதது போல் அப்படியே இருந்தன’.
  • இந்தியாவில் வலுவான உள்ளாட்சி மீண்டும் மலர வேண்டும். வாழும் கிராமங்கள் என்ற நம்மாழ்வாரின் கனவும், கிராம சுயராஜ்ஜியம் என்ற காந்தியின் கனவும் அதுதானே.

நன்றி: இந்து தமிழ் திசை (17-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்