TNPSC Thervupettagam

கிராம சபை மூலம் மதுவை ஒழிக்கலாம்!

July 9 , 2024 188 days 178 0
  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகின. ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அது தொடர்பாக நிறைய விவாதங்கள் நடைபெற்றன. இவற்றையெல்லாம் தாண்டி, குடிப் பழக்கத்தை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பதுதான் முக்கியமான கேள்வி.
  • ஏனென்றால் மதுவால் சீரழிந்த குடும்பங்கள் கொஞ்சமல்ல, அது இன்று அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஏழை மாணவிகள் வரை பரவிவிட்டது. குடும்பங்கள் சிதிலமடைகின்றன, பெண்கள் அமைதியின்றி வாழ வேண்டியுள்ளது. குழந்தைகளின் உளவியல் பாதிக்கப்படுகிறது. இவற்றை நம் கட்சிகள் அறியாமல் இல்லை. இருந்தும் அவை அனைத்தும் மக்கள் நலன் என்ற அடிப்படையில் இணைவதில்லை.
  • நம் அரசியல், கட்சி அரசியலாகவே இருக்கிறது. அது மக்கள் அரசியலாகச் செயல்படவில்லை. ஒருமித்த கருத்துடன் கட்சிகளைக் கடந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்ற கருத்தினை சில தலைவர்கள் பதிவுசெய்திருக்கின்றனர். இது அறிக்கையுடன் நின்றுவிடக் கூடாது. இதன் அடிப்படையில் கட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட்டால், அதுவே மக்கள் அரசியல்.
  • மதுவிலக்கு கொண்டுவந்தால் கள்ளச்சாராயம் பெருகும் என்றுகூட வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், மொத்தமாகவே குடிப் பழக்கத்தைத் தமிழ்நாட்டிலிருந்து அகற்ற வேண்டிய தேவை தற்போது உருவாகியிருக்கிறது. இதைச் செயல்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருக்கும் அதிகாரம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
  • உண்மையில், கிராமப் பஞ்சாயத்துக்கள் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்தே கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி மதுக் கடைகளை மூட முடியும். அதற்கு நம் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் முயல வேண்டும். கிராம சபையின் அதிகாரம் என்ன என்பதை கோவா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் (இவர் ஒரு ஏழை மீனவர்) உச்ச நீதிமன்றம்வரை சென்று நிறுவினார்.
  • உள்ளாட்சி அமைப்பு என்பது மக்களவைக்கு நிகரானது; கொடுக்கப்பட்ட அதிகார வரம்புக்குள் அது முடிவெடுத்தால் அதை எவராலும் மாற்ற முடியாது என்று தீர்ப்பைப் பெற்று, அவர் தன் கிராம சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை வெற்றியடைய வைத்தார்.
  • தமிழ்நாட்டிலும் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் கிராம சபையைக் கூட்டுவது பஞ்சாயத்துக்கு உள்பட்ட அதிகாரம்; மாவட்ட ஆட்சியரிடமிருந்து உத்தரவு வாங்க வேண்டியதில்லை என உயர் நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்கிவிட்டார். அவர் உத்தரவு வாங்கும்வரை நம் பஞ்சாயத்துத் தலைவர்கள் கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் முன்அனுமதி பெற வேண்டும் எனக் கூறி வாளாவிருந்தனர்.
  • இவர் உத்தரவு வாங்கிய பிறகுதான் கிராம சபையை எத்தனை முறை வேண்டுமானாலும் கூட்டலாம் என்று அறிந்து மகளிருக்கு, குழந்தைகளுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு என்று கிராம சபையைப் பஞ்சாயத்துத் தலைவர்கள் கூட்டுகின்றனர்.
  • குடும்பங்களின் வாழ்வாதாரம், பொருளாதார மேம்பாடு அனைத்தையும் கொண்டுவரச் செயல்பட வேண்டியது பஞ்சாயத்துக்கள்தான். ஆனால் ஏன் உள்ளாட்சிகள் அப்படிச் செயல்படவில்லை? கள்ளச்சாராயம் குடும்பத்தின் பொருளாதாரத்தை, அமைதியை அழிக்கும்போது செயல்பட வேண்டிய பஞ்சாயத்துக்கள் ஏன் செயல்படவில்லை என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.
  • இதற்கான தீர்மானத்தைக் கிராம சபையில் நிறைவேற்றிட வேண்டும். தீர்மானம் நிறைவேற்றிய பின்பும் மதுக்கடைகள் மூடவில்லை என்றால் குன்றக்குடி அடிகளார் நீதிமன்றம் சென்று தீர்ப்பைப் பெற்றதுபோல் பஞ்சாயத்துக்கள் தீர்மானம் நிறைவேற்றி அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். அரசு செவிசாய்க்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்லத் தயாராக வேண்டும்.
  • அரசியல் என்பதும், ஆட்சி என்பதும் மக்களுக்கானது, மக்களின் நலனுக்கானது. எனவே அரசியலை கட்சிக்கானது, அதிகாரத்தைப் பிடிப்பதற்கானது என்று கருதாமல் அது மக்களுக்கானது என்று மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி மக்கள் அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
  • மக்கள் நலனைப் புறக்கணித்துவிட்டு, கட்சி நலனும், அதிகார அரசியலும்தான் முதன்மையானது என்று எண்ணிச் செயல்பட்டால், மக்கள் அறம் பாடி இன்றைய அரசியலை அழிப்பார்கள். வருகின்ற கிராமசபைக் கூட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு 1,000 கிராமப் பஞ்சாயத்துக்கள் கிராமசபையில் மதுவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி நடைமுறைப்படுத்த முயன்றால் அதுவே இதற்கான முதல் படியாக இருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்