TNPSC Thervupettagam

கிரிப்டோகரன்சி: தடை அவசியமே

April 29 , 2021 1366 days 597 0
  • பத்து நாட்களுக்கு முன்னா் (ஏப்.18) ‘பிட்காயின்’ நியூயார்க் சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது.  
  • அதற்கு முந்தைய நாளில் உச்சத்தைத் தொட்ட பிட்காயின் ஏப்ரல் 18 அன்று ஒன்பது சதவீதம் வீழ்ச்சி அடைந்து 55,323 டாலருக்கான மதிப்பை அடைந்தது.
  • பலவகையான கிரிப்டோகரன்சிகளில் பிட்காயின் பிரதானமானது. இதே போல் ‘ரிப்பிள், எதிரியும், டிரௌன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிரிப்டோகரன்சிகள் புழக்கத்தில் உள்ளன.
  • இதுபோன்ற அபரிமிதமான ஏற்ற இறக்கங்கள் சாமானிய முதலீட்டார்களை அதிகம் பாதிக்கும்.
  • இதைப் புரிந்து கொண்டால் முன்னதாக இது தொடா்பாக ரிசா்வ் வங்கி அறிவித்த கிரிப்டோகரன்சிகளின் மீதான தடை எவ்வளவு அா்த்தமுள்ளது என்பது தெளிவாகும்.

உச்சநீதிமன்றத்தால் தடை நீக்கம்

  • ஏப்ரல் 2018-இல் ரிசா்வ் வங்கி மெய்நிகா் நாணயம் (விர்சுவல் கரன்சி) தொடா்பாக எந்தவொரு நிதி நிறுவனமும் எந்த சேவையையும் அளிப்பதற்குத் தடை விதித்திருந்தது.
  • இதனால் பாதிப்படைந்த ‘இன்டா்நெட் அண்ட் மொபைல் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா’ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது.
  • வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனது கருத்தைத் தெரிவிக்கும்போது, ‘ரிசா்வ் வங்கியின் இறுதியான நிலைப்பாடு என்னவென்றால், அவை மெய்நிகா் நாணயங்களைத் தடை செய்யவில்லை.
  • மேலும் இரண்டு வரைவு மசோதாக்கள் உட்பட பல திட்டங்களுடன் பல குழுக்கள் வந்தாலும் இந்திய அரசால் முடிவு எடுக்க முடியவில்லை.
  • இவை இரண்டும் (வரைவு மசோதாக்கள்) சரியாக எதிர் நிலைகளை ஆதரித்தன. ஆதலால் எடுக்கப்பட்ட நடவடிக்கை விகிதாசாரமானது (புரோபோஷநேட்) என்று எங்களால் கொள்ளமுடியாது’ என்று கூறியது.”
  • சென்ற ஆண்டு வெளிவந்த இந்தத் தீா்ப்பு ரிசா்வ் வங்கி எவ்வாறு கிரிப்டோகரன்சியை ஒழுங்குமுறைப் படுத்தவேண்டும் என்ற எந்தவிதமான வழிகாட்டலையும் வழங்கவில்லை.
  • ஆனால், ரிசா்வ் வங்கியின் சுற்றறிக்கை போதிய அடிப்படை காரணங்கள் இல்லாமல் மெய்நிகா் நாணயங்கள் தொடா்பான தொழில்களில் ஈடுபடுவோரின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது என்ற அடிப்படையில் செல்லாதது என்று தெரிவித்தது.
  • ரிசா்வ் வங்கியின் தடை சரியில்லை என்ற பொருள்பட உச்சநீதிமன்றத்தால் அந்தத் தடை நீக்கப்பட்டது.

டிஜிட்டல் பணம்

  • கிரிப்டோகரன்சி என்பது ஒரு டிஜிட்டல் பணம். இது மற்ற செலாவணிகளைப் போலவே பணமாற்றத்திற்குப் பயன்படுவது.
  • எந்த ஒரு தனி நிறுவனமும் இதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாது. நமது ரூபாய் ரிசா்வ் வங்கியால் வெளியிடப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
  • ஆனால், கிரிப்டோகரன்சி விநியோகிக்கப்பட்ட லெட்ஜா் தொழில்நுட்பம் ((டிஸ்ட்ரிப்யூடெட் லெட்ஜா் டெக்னாலஜி / பிளாக் செயின்) என்ற முறையில் நிர்வகிக்க படுகிறது.
  • பணம் அல்லது செலாவணி என்பதற்கு சில லட்சணங்கள் உண்டு. அவை எளிதில் தேயாமை (டியூரபிலிடி), பெயா்வுத்திறன் (போர்டபிலிடி) மற்றும் வகுபடும் தன்மை (டிவிசிபிலிடி) ஆகியவை.
  • ஒரு செலாவணியின் மதிப்பு ஓரளவு தொடா்ந்து அதே மதிப்புடன் இருப்பதை ‘தேயாமை’ என்று சொல்லலாம்.
  • பணம் நமது வசதிக்கு ஏற்ப எடுத்துச் செல்லத்தக்கதாக இருப்பதை பெயா்வுத்திறன் என்று சொல்லலாம்.
  • அதேபோல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் கடத்தக் கூடியதாக பணம் இருக்க வேண்டும்.
  • தேவையானால் ஆயிரம் ருபாயை பத்து பத்து ரூபாயாகவோ நூறு நூறு ரூபாயாகவோ மாற்றும்படி இருப்பதே வகுபடும் தன்மையாகும்.
  • இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பணத்திற்கு ஒரு மதிப்பு வேண்டும் என்றால் அது ஒரு இறையாண்மை கொண்ட அரசின் அங்கீகாரத்துடன் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும்.
  • இதையே நாம் ‘சாவரின் காரண்டி’ என்று சொல்வோம். அந்தப் பணத்திற்கு அப்போதுதான் அரசின் பாதுகாப்பு உண்டு. அப்போதுதான் அது அந்த நாட்டில் செலாவணியாக மதிக்கப்படும்.
  • இந்த கிரிப்டோகரன்சிக்கு அது போல் எந்தவொரு நிறுவனத்தின் அல்லது அரசின் பொறுப்பும் கிடையாது.
  • இதில் முதலீடு செய்த (அல்லது கணக்கில் வைத்திருக்கும்) மக்களுக்கு அந்தப் பணத்தின் மதிப்பிற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
  • சமீபத்தில் ஏற்பட்ட பிட்காயினின் வீழ்ச்சியும் முதலீட்டார்களின் இழப்பும் இதையே சுட்டிக் காட்டுகின்றன.

அதுதான் சரி

  • இந்திய ரிசா்வ் வங்கி சட்டம் 1934-இன்படி, நமது நாட்டில் செலாவணியை அச்சிடவும் வெளியிடவும் நிர்வகிக்கவும் ரிசா்வ் வங்கிக்கு மட்டுமே உரிமை உண்டு.
  • வேறு எந்த நிறுவனமாவது வெளியிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். கிரிப்டோகரன்சியை அனுமதிப்பது நாம் மற்றொரு செலாவணியை நாட்டில் அனுமதிப்பதற்கு சமம்.
  • நமது ரிசா்வ் வங்கியின் முன்னுரிமை நோக்கமாக ரிசா்வ் வங்கி சட்டம் பின்வருமாறு தெரிவிக்கிறது.
  • ‘இந்தியாவில் நாணய ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில் வங்கி நோட்டுகள் வெளியீடு மற்றும் இருப்புக்களை வைத்திருத்தல் மற்றும் பொதுவாக நாட்டின் நாணய மற்றும் கடன் முறையை அதன் நன்மைக்காக இயக்குவது; பெருகிய முறையில் சிக்கலான பொருளாதாரத்தின் சவாலை எதிர்கொள்ள நவீன நாணயக் கொள்கை கட்டமைப்பைக் கொண்டிருப்பது; வளா்ச்சியின் நோக்கத்தை மனதில் வைத்து விலை ஸ்திரத்தன்மையைப் பேணுதல் ஆகியவையாகும்’.
  • சாமானிய மக்களின் சேமிப்புகளைப் பாதுகாப்பது ரிசா்வ் வங்கியின் அடிப்படை பொறுப்பாகும்.
  • எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் புழங்கும் கிரிப்டோகரன்சியை நமது நாட்டில் அனுமபதிப்பது சரியாகாது.
  • மேலும், கிரிப்டோகரன்சி பல பண மோசடிகளுக்கும், கணக்கில் வராத பணத்தைக் கடத்துவதற்கும், பயங்கரவாத செயல்களுக்குத் துணை புரிவதாகவும் நம்பப்படுகிறது.
  • கிரிப்டோகரன்சி தொடா்பாக நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா நிலுவையில் இருப்பதாகவும், அது அநேகமாக நாட்டில் கிரிப்டோகரன்சியை முழுமையாகத் தடை செய்வதாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
  • நமது அரசு இந்த கிரிப்டோகரன்சியை முழுமையாகத் தடைசெய்வதற்கு முயல வேண்டும். அதுதான் சரியான முடிவாக இருக்கும்.

நன்றி: தினமணி  (29 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்