கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?
- கிரிப்டோ கரன்சி என்பது மெய்நிகர் செலாவணி. பிளாக்செயின் தொழில்நுட்பம்தான் இதன் உயிர். அதாவது, கணினி வலையமைப்புகள் மூலம் நடக்கும் இதன் ஒவ்வொரு பரிமாற்றமும் வங்கிகளில் லெட்ஜர்களில் பதியப்படுவதைப் போலவே பதிவாகும். இதை அரசோ, மையப்படுத்தப்பட்ட ஆணையம் போன்ற அமைப்போ வெளியிடுவதில்லை. தனியார் வெளியிடும் நாணயமாகவே கருதலாம். எனவே அரசுகளின் தலையீடும், மதிப்பைக் கூட்டி அல்லது குறைக்கும் செயல்களும் இதில் இருக்காது.
கிரிப்டோ கரன்சியை யார், எதற்குப் பயன்படுத்துகிறார்கள்?
- தொழில், வர்த்தகத் துறையினர், லாப வேட்கை மிக்க முதலீட்டாளர்கள், பங்குத் தொழிலில் ஈடுபடுவோர் இதைப் பயன்படுத்துகின்றனர். தாங்கள் பெற்ற பொருளுக்கு அல்லது சேவைக்கு கிரிப்டோ கரன்சி மூலம் நேரடியாகப் பணம் செலுத்திவிடுகின்றனர்.
கிரிப்டோ கரன்சிக்கு ஏன் இந்த வரவேற்பு?
- வங்கிகளைப் போல சேவைக் கட்டணம் அதிகம் இல்லை, பணம் செலுத்தத் தாமதமாவதும் இல்லை. யாருக்குச் சென்று சேர வேண்டுமோ அவர்களுடைய கணக்கில் நேரடியாகச் சேர்த்துவிட முடிகிறது. லாபம் சம்பாதிக்க விரும்பும் முதலீட்டாளர்கள், கிரிப்டோ கரன்சிக்கு சந்தையில் அன்றைக்கு என்ன மதிப்பு என்று பார்த்து வாங்கினால், பிறகு விரும்பியபோது விற்கலாம் அல்லது மதிப்பு நன்றாக உயர்ந்துவிட்டால் விற்று லாபம் சம்பாதிக்கலாம்.
இதை ஏன் கூடாது என்கிறார்கள்?
- கிரிப்டோ கரன்சியை யார் வெளியிடுகிறார்கள், யார் வைத்திருக்கிறார்கள் என்பது தெரிவதில்லை. மேலும் இதை யார், யாருக்காக கொடுக்கிறார்கள் என்பதும் ரகசியம். எனவே போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், இதர சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் நாட்டுக்கு எதிராக சதிசெய்யும் தேச விரோதிகளுக்கும் இந்தப் பரிமாற்ற முறை உதவக்கூடும் என்பதால் கூடாது என்கிறார்கள். மேலும், அரசுகளுக்கு அப்பாற்பட்ட ஓர் அதிகாரத்தின் கீழ் நாணயப் பரிமாற்றம் செல்வது அரசுகளின் இறையாண்மைக்கான சவாலாகவும் பார்க்கப்படுகிறது.
அரசுகள் ஏன் இதை வரவேற்பதில்லை?
- ஒவ்வொரு அரசும் மத்திய வங்கி மூலம் நாட்டின் செலாவணி மதிப்பு, பரிமாற்றம், அச்சிடல் போன்றவற்றைப் பராமரிக்கின்றன. அரசுகளின் நிதி, பொருளாதார, செலாவணிக் கொள்கைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. நாட்டின் பணப் பரிமாற்றத்தில் பெரும் பகுதி அதன் கட்டுப்பாட்டுக்குள் வராத கிரிப்டோ கரன்சிகள் மூலம் நடந்தால் அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் அவற்றின் திட்டங்களும் கொள்கைகளும் நாளடைவில் பயனற்றுப் போகவும் வாய்ப்புகள் உண்டு.
- ஒரு நாட்டுக்கு விரோதமான இன்னொரு நாடு இதை குயுக்தியாகப் பயன்படுத்தி தொழில், வர்த்தகத் துறைகளை நாசப்படுத்தவும் வாய்ப்புகள் ஏற்படலாம். இதேபோல, இதைக் கையாளும் தனியாரும் நிகழ்த்தலாம். எனவே இவை 100% நேர்மையாகவும் லாபகரமாகவுமே இருக்கும் என்றும் கூறிவிட முடியாது.
- உதாரணத்துக்கு பிட் காயின் என்ற கிரிப்டோ கரன்சி 2017 டிசம்பரில் ஒன்று 17,738 டாலர்களாக இருந்தது. அதற்கடுத்த மாதங்களில் 7,575 டாலர்களாக சரிந்தது. எனவே இது ஊக வியாபாரிகளின் முதலீடாகவும் திகழ்கிறது. 2021 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் சந்தையில் உள்ள கிரிப்டோ கரன்சிகளின் மொத்த மதிப்பு 85,890 கோடி டாலர்கள். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் புழக்கத்தில் உள்ளன.
கிரிப்டோ கரன்சிகள் மொத்தம் எத்தனை, நம்பகமானவையா?
- உலகில் இப்போது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் உள்ளன. இவற்றில் நூற்றுக்கும் குறைவானவை மட்டுமே நல்ல நிறுவனங்களால் முறையாகப் பராமரிக்கப்படுபவை. எனவே இதன் நம்பகத்தன்மை பற்றிக் கூறுவதற்கு இதை யார் நிர்வகிக்கிறார்கள் என்பது அறிவது அவசியம். சீட்டு நிதி நிறுவனங்கள் நல்லதா, கெட்டதா என்பதைப் போலத்தான் இதுவும்.
- நேர்மையாளர்கள் குறைந்த லாபத்துக்கு இதை முறையாக நடத்தினால் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படாது. முதலீட்டாளர்கள் பேராசைப்பட்டு அதிக வட்டி கிடைக்கிறது என்று அதிகம் முதலீடு செய்தால் இரவோடு இரவாக ஊரைக் காலி செய்யும் சீட்டு நிதி நிறுவனங்களைப் போன்ற கிரிப்டோ கரன்சிகளும் உண்டு.
கிரிப்டோ கரன்சிகளைத் தடை செய்வது நல்லதா?
- இந்தியாவில் இப்போது ஒன்றரைக் கோடிப் பேர் இதைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. இந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றுவிட்ட இதைத் தடைசெய்வது வெற்றிகரமாக அமையாது என்றே பலரும் கூறுகின்றனர். மேலும் இது செலாவணி மதிப்பு மாற்றம், பணவீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்படாத பொது நடைமுறையாக இருப்பதாலும் இதன் கணினி வலையமைப்பு எளிதில் அரசுகளால் ஆராயத்தக்கதாக இருப்பதாலும் இவற்றை முற்றாகத் தடைசெய்ய வேண்டிய தேவையும் இல்லை. அரசு, இதைப் பயன்படுத்துவோர் ஆகிய இரு தரப்பினரின் நன்மைகளையும் கருதி இதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதே நல்லது.
கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்காற்றுவது என்றால் என்ன?
- கிரிப்டோ கரன்சிகளைக் கையாளும் நிறுவனங்களைப் பதிவுசெய்ய வைப்பதும், அதில் முதலீடு செய்கிறவர்களின் முகவரி – வங்கிக் கணக்கு போன்ற விவரங்களைத் தருமாறு கேட்டுப் பெறுவதும், பரிமாற்றங்களை வெளிப்படையாக நடத்துமாறு அறிவுறுத்திக் கண்காணிப்பதும் ஒழுங்காற்று நடைமுறைகளாகும். அதற்காக சட்டமியற்றுவது, தேவைப்படும் நேரங்களில் நீதிமன்றங்கள் மூலமே நடவடிக்கை எடுக்கவும் உதவும்.
- ஒரு சில துறைகளில் கிரிப்டோ கரன்சி பயன்பாட்டால் அதைப் பயன்படுத்துவோருக்கு மட்டுமல்லாது, நாட்டுக்கும் நன்மை ஏற்படும் என்றால் அந்த வாய்ப்பைக் கெடுத்துக் கொள்ளாமலிருக்க ஒழுங்காற்றுவது அவசியம். அது மட்டுமின்றி, அரசு ஒரேயடியாகத் தடை என்று கூறிவிட்டாலும் அரசுக்குத் தெரியாமல் அது நிகழ்ந்தால் அதைக் கண்டுபிடிப்பது மேலும் இடராகிவிடும்.
- பூரண மதுவிலக்கு என்று அறிவித்து கள்ளச் சாராயத்துக்குக் கதவைத் திறந்துவிடுவதைவிட, பர்மிட் வாங்கிக்கொண்டு குடிக்கலாம் என்று அறிவித்து விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பர்மிட் கொடுத்துவிட்டு அந்த பர்மிட் மூலமும் வருவாய் பெறுவதைப் போலவே இது.
கிரிப்டோ கரன்சி என்பது சர்வதேசச் செலாவணி வரலாற்றில் அடுத்தகட்டமா?
- உலகம் தோன்றிய காலத்திலிருந்து சர்வதேச வாணிபமும் நடந்துவருகிறது. பண்டங்களும் சேவைகளும் ஏதோ ஒரு கணக்கில் பரிமாறிக்கொள்ளப்பட்டுவருகின்றன. இதில் பொது முறையையும், யாரும் யாரையும் ஏய்க்காமல் இருக்கவும் செலாவணி முறை கொண்டுவரப்பட்டு பணம் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு எல்லா நாடுகளுக்கும் பொதுவாக பெரிய வல்லரசின் செலாவணி செல்லத்தக்க நடுநாயகமான நாணயமாக ஏற்கப்பட்டது. ஒவ்வொரு நாடும் அதன் வளம், வருவாய்க்கு ஏற்ப செலாவணிகளைத் தாளாக அச்சிட்டன, உலோக நாணயங்களாக உருவாக்கின. இவற்றின் மதிப்புக்கு ஆதாரமாக அரசின் தங்கம், வெள்ளி கையிருப்பு கொள்ளப்பட்டது. எனவே செலாவணிகளின் புழக்கம் இப்போது அடுத்த கட்டத்துக்கு நகர்வது தவிர்க்க முடியாதது.
நன்றி: அருஞ்சொல் (01 - 12 - 2021)