TNPSC Thervupettagam

கிரேக்கம் தலை நிமிர புதிய அரசு உழைக்கட்டும்

July 16 , 2019 2006 days 950 0

 

  • கிரேக்க நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் ஐரோப்பிய மையவாத அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு நிம்மதியைத் தந்திருக்கிறது. நிலையான, தொடர்ச்சியான அரசுக்கும் நிர்வாகத்துக்கும் வழியேற்பட்டிருக்கிறது என்பதே நிம்மதிக்குக் காரணம்.
ஐரோப்பிய நாடுகளில்…..
  • ஐரோப்பிய நாடுகளில் நடந்த தேர்தல்களில் பெரும்பாலும் மக்களிடம் செல்வாக்கு பெற்ற வலதுசாரிக் கட்சிகளே பெரிதும் வெல்கின்றன. பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 300 இடங்களில் 158 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையிலான இடதுசாரிக் கட்சியான சிரிசா கட்சிக்கு 86 இடங்கள் கிடைத்துள்ளன. ஐரோப்பாவில் அரசுகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டுள்ள ‘டைஎம்25’ கட்சியின் கிரேக்கக் கிளையான ‘மெரா25’, சிப்ராஸ் கேட்டால் அரசு அமைக்க ஆதரவு தரக்கூடும்.
  • இந்தக் கட்சியின் தலைவர் முன்னாள் நிதியமைச்சர் யானிஸ் வரோவ்ஃபக்கிஸ். இக்கட்சி 9 இடங்களில் வென்றுள்ளது. நாடாளுமன்றத்தில் அரசியல் சமநிலை நிலைத்தன்மை என்பதற்கு இன்னொரு பரிமாணம் இருக்கிறது. கடந்த பொதுத் தேர்தலில் மூன்றாவது இடம்பெற்றிருந்த ‘கோல்டன் டான்’ கட்சியை மக்கள் இத்தேர்தலில் நிராகரித்துவிட்டார்கள். இக்கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானதாகும்.
  • ஆக, தேர்தல் மூலம் நிறைய செய்திகளைச் சொல்லியிருக்கின்றனர் கிரேக்க மக்கள்.
அகதிகள்
  • கிரேக்க நாட்டுக்குள் நுழைய ஏராளமான அகதிகள் காத்துக் கிடக்கின்றனர், புதிதாக ஏராளமானோர் குடியேறிக்கொண்டிருக்கின்றனர். இவ்விரண்டும் கிரேக்கத்துக்குப் பெரிய பிரச்சினைகளாகிக் கொண்டிருக்கின்றன. எனவே, எந்தவித சார்பும் இல்லாமல் நடுநிலையில் நடக்க வேண்டிய கடமை ஆளும் புதிய ஜனநாயகக் கட்சிக்கும் சிரிசா என்ற எதிர்க்கட்சிக்கும் இருக்கிறது. பொருளாதாரம் சாதகமாக இருக்கும் நிலையில் பதவியேற்றிருக்கிறார் மிட்சோடாகிஸ். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் சர்வதேச நாடுகள் அளித்த நிதியுதவியால்தான் அதன் பொருளாதாரத்தால் மீள முடிந்தது. கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு நாடு உள்ளானது.
  • வங்கி நிர்வாகத் துறை கிட்டத்தட்ட நொறுங்கிவிழும் அளவுக்கு இருந்தது. ஐரோப்பாவின் ஒற்றைச் செலாவணி மண்டலத்திலிருந்து கிரேக்கம் வெளியேற்றப்படலாம் என்ற அளவுக்கு அச்சம் நிலவியது. இப்போது ஈரோ செலாவணி நிலைப்படுத்தப்பட்டு, வலுப்பெற்றுவிட்டது.
  • எனினும், நிலைமை நன்றாக இருக்கிறது என்று கூறிவிட முடியாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 2% மட்டுமே. பொருளாதாரச் சீர்திருத்தங்களால் மக்கள் மிகவும் வேதனைப்படுகின்றனர். ஒரு காலத்தில் கிரேக்கத்தின் ஓய்வூதியத் திட்டம் மிகவும் தாராளமாக இருந்தது.
  • இப்போது கல்விக்கும் சுகாதாரத்துக்கும்கூட நிதி ஒதுக்கீடு கடுமையாக வெட்டப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே அதிகபட்சமாக கிரேக்கத்தில்தான் வேலையில்லாத் திண்டாட்டம் 18% ஆக இருக்கிறது. ஆகையால், சரிவிலிருந்து முழுமையாக நாட்டை மீட்கப் பெரும் நடவடிக்கைகள் வேண்டும். புதிய அரசின் உழைப்பு அதற்கு வழிவகுக்கட்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (16-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்