- சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பயணிகள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டிருப்பது போக்குவரத்துத் துறையின் அலட்சியத்தைக் காட்டுகிறது. ஆம்னி பேருந்துகள் நகருக்குள் பயணிகளை ஏற்றி, இறக்கும் நிலையில், அரசுப் பேருந்துகளையும் தற்காலிகமாக அங்கிருந்து இயக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வலுத்திருப்பதை இந்தச் சாலை மறியல் உணர்த்துகிறது.
- சென்னை வண்டலூருக்கு அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பில் ரூ.394 கோடி செலவில் கட்டப்பட்ட, ‘கலைஞர் நூற்றாண்டுப் பேருந்துமுனையம்’ டிசம்பர் 30 அன்று திறக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும் என்று அரசு அறிவித்தது. தனியார் ஆம்னி பேருந்துகளையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க உத்தரவிடப்பட்டது.
- இதை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கும் வரை கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளை இயக்க அனுமதி கோரினர். மனுவை விசாரித்த நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளைப் பயன்படுத்தலாம் என்று உத்தரவிட்டது.
- இதையடுத்து, ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பணிமனைகளிலிருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது என்றும் நீதிமன்ற உத்தரவுப்படி சூரப்பட்டு, போரூர் சுங்கச்சாவடிகளிலிருந்து மட்டும் பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
- இதற்கிடையே, முடிச்சூரில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடத்தை ஏற்படுத்துவதற்கான பணிகள் ஏப்ரலில் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுவரை ஆம்னி பேருந்துகள் போரூர், சூரப்பட்டு, கோயம்பேடு வரை வந்து செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது; அரசுப் பேருந்துகள் மட்டும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் என்ற சூழல் மக்களுக்குக் கடும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டுமில்லாமல் இதன் மூலம், போக்குவரத்துத் துறையில் அரசு-தனியார் போட்டி சமநிலையற்றதாக ஆகிவிடும். தனியார் பேருந்துகளை ஊக்கப்படுத்துவதுபோலவும் ஆகிவிடும்.
- ஏற்கெனவே விடுமுறை நாள்கள், முகூர்த்த நாள்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து போதிய பேருந்து வசதிகள் இல்லை என்பதால்தான் பயணிகள் நள்ளிரவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வார விடுமுறை, முகூர்த்த நாள்களில் கூடுதல் பேருந்து வசதிகள் தேவைப்படும் என்பதை அரசு அதிகாரிகள் உணராதது நிலைமையைப் புரிந்துகொள்ளாத போக்கையே காட்டுகிறது.
- இதுபோன்ற குழப்பங்கள் தொடர்வது, பயணிகள் அலைக்கழிக்கப்படவும், கிளாம்பாக்கத்துக்குச் செல்வதற்குப் பதிலாக வலுக்கட்டாயமாக ஆம்னி பேருந்துகளை நாடும் நிலையையும் ஏற்படுத்தலாம். இதைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடும். எனவே, ஏப்ரல் வரை அரசுப் பேருந்துகளையும் ஆம்னி பேருந்துகள்போல இயக்குவது குறித்துப் போக்குவரத்துத் துறை பரிசீலிக்கலாம்.
- குறைந்தபட்சம் பாதிப் பேருந்து சேவைகளையாவது கோயம்பேட்டிலிருந்து இயக்கலாம். இது போக்குவரத்துத் துறை நஷ்டமடைவதிலிருந்தும் தடுக்கும். விமர்சனங்களைத் திறந்த மனதுடன் அரசு அணுக வேண்டும்; பயணிகளின் துன்பம் களையப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 02 – 2024)